பிரியமானவர்களே!

பரிசுத்த வாரத்தின் மூன்று முக்கியமான நாட்களில், மீட்பின் வெள்ளிக்கிழமை தான் நம் மனத்தை மிகவும் கவர்ந்து இழுக்கும் நாள்.

காலையிலிருந்து நடக்கின்ற ஆராதனைகள், மூன்று மணிக்கு நடைபெறும் திருச்சிலுவை ஆராதனை, தொடர்ந்து வரும் சிலுவைப்பாதை, என எல்லா நிகழ்ச்சிகளும், நம் மனத்திற்கு மிகுந்த கவலையையும், பக்தி உணர்வையும் தூண்டி எழுப்பும். ஆண்டின் எந்த நாட்களுமே தெய்வத்தை நினைக்காத கிறிஸ்தவனும், இந்த நாளில் அவரை நினைக்கவும், அவரோடு இருக்கவும் மனம் கொள்வான்.


"சக்தி வாய்ந்த மரணம் "


இயேசுவின் வாழ்க்கையில் நடந்த, எல்லா நிகழ்ச்சிகளிலும், அவருடைய மரண நிகழ்ச்சியே மிகவும் சக்தி வாய்ந்தது. அவருடைய உயிர்ப்பில் கூட நடவாத ஆச்சரியமான காரியங்கள் அவருடைய மரணத்தில் நடந்தன.

“இதோ! ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. நிலம் நடுங்கியது. பாறைகள் வெடித்தன. கல்லறைகள் திறக்கவே, துஞ்சிய பரிசுத்தர்களின் உடல்கள் பல எழுந்தன. அவர் உயிர்த்தெழுந்த பின், இவர்கள் கல்லறையை விட்டு திருநகருக்கு வந்து பலருக்குத் தோன்றினார்கள். (மத் 27:51-53).


"நெஞ்சைத் தொட்ட மரணம்"


இந்த அளவு, படைப்பையே அதிரவைக்கும் அவரது மரணம், மனிதனின் நெஞ்சைத் தொடுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், நம் நெஞ்சைத் தொட்ட இயேசுவின் மரணம், நம் “வாழ்க்கையை” தொட வேண்டும்.

சிலுவைப்பாதையில், பதினான்கு ஸ்தலங்களையும் நினைவு கூருகிறோம். மீட்பின் “வெள்ளிக்கிழமையை”, “துக்க – வெள்ளி” ஆக்குகின்றோம். இவ்வாறு, நினைவு கூர்வதாலும், துக்கிப்பதாலும் எழும் பயன் என்ன? இந்த துக்கமும், நினைவு கூர்தலும், இயேசுவின் மரணத்திற்கும், நமக்குமிடையே ஒரு பாலமாக அமைய வேண்டும். இயேசுவின் பாடுகளிலும், மரணத்திலும், நம்மை பங்கு கொள்ளச்செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும், இயேசுவினுடைய பாடுகளை நினைத்து, அவருடைய மரணத்தை எண்ணி துக்கிப்பது, ஒரு நல்ல செயல் தான். ஆனால், அந்த துக்கம், அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இரண்டாம் கட்டம் நம்மை வாழ்க்கையின் மாற்றத்திற்கு தூண்ட வேண்டும்.


"அவதார தெய்வத்தின் மரணம் "


இயேசுவின் பாடுகளும், மரணமும் ஒரு இடத்தில், ஒரு காலத்தில் ஒரு முறை நடந்து முடிந்த நிகழ்ச்சி அல்ல. அப்படி ஒரு முறை நடந்து முடிகிற நிகழ்ச்சிகளை, மட்டும் தான், நினைவு கூரவும், துக்கிக்கவும் முடியும். ஆனால், இயேசுவின் பாடுகளும் மரணமும், எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் நித்தம் நடக்கும் நிகழ்ச்சிகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மரியாளுக்கு மகனாகப் பிறந்து, முப்பத்து மூன்று ஆண்டுகள் வாழந்து, யூதர்களால் கொலை செய்யப்பட்ட இயேசுவைப் பற்றி நினைப்பதில், நமக்கு அதிக பயன் இல்லை. ஒருவர் கொலை செய்யப்படுதலும், இறத்தலும், உலகத்தில் எப்போதும், எங்கும் நடைபெறுகின்ற ஒரு சாதாரண மரண நிகழ்ச்சியே.


"எசாயா முன்னுரைத்த மரணம் "


ஆனால், இயேசுவின் மரணம் அதுவல்ல. அவரது மரணத்தைப் பற்றி, எசா 53-ல் வாசிக்கிறோம். “மெய்யாகவே, அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார். நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார். நம்மை நலமாக்கும் தண்டனை, அவர் மேல் விழுந்தது. அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்” (எசா 53:4)

“ஆடுகளைப் போல், நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். கால்போன வழியே ஒவ்வொருவரும் போனோம். நம் அனைவருடைய அக்கிரமங்களையும், ஆண்டவர் அவர் மேல் சுமத்தினார். அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கரை கொண்டவர் யார்? அவர்களுடைய அக்கிரமங்களை தாமே சுமந்து கொண்டார். ஏனெனில், சாவுக்குத் தன் ஆன்மாவை கையளித்தார். பாவிகளுள் ஒருவனாய் கருதப்பட்டார். ஆயினும் பலருடைய பாவத்தை தாமே சுமந்து கொண்டு, பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்” (எசா 53:12).


"பாவத்தின் தண்டனையான மரணம் "


அப்படியென்றால், இயேசு மனித குலத்தை மீட்க வந்த தெய்வம் என்பதும், அவருக்கு மரண தண்டனை வழங்கியது மனித குலத்தின் பாவம் என்பதும், மிகவும் தெளிவாகிறது.

நம்முடைய பாவம் தான் இயேசுவினுடைய பாடுகளுக்கும், மரணத்திற்கும் காரணமென்றால், அந்த பாவம் இருக்கும் வரையில், இயேசுவுக்கு பாடுகளும், மரணமும் அன்றாட நிகழ்ச்சிகளே.

யூதர்களுடைய பொறாமை, கொலைவெறி, நன்றியின்மை, பேராசை, பிலாத்துவின் அநியாய தீர்ப்பு, கோழைத்தனம், அக்கிரமம், அனைத்துமே உலகத்தின் பாவ உருவினுடைய நிழல்களே. அந்த பாவத்தின் நிஜங்கள் இன்று நம் ஒவ்வொருவரிடமும் தான் காண முடிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நம்முடைய பாவத்தின் நிழல்கள் சிலுவைப்பாதையின் பதினான்கு ஸ்தலங்களை உருவாக்கியது என்றால், இன்று நாம் அன்றாடம் செய்யும் பாவங்கள் இயேசுவுக்கு பாடுகளையும், மரணத்தையும் நித்தம் தந்து கொண்டிருக்கிறன.

 

 

"தொடரும் மரணம்"


அப்படியென்றால், சிலுவைப்பாதையை நினைவுகூர்தலும், இயேசுவின் மரணத்தை துக்கித்தலும், எந்த அளவுக்கு அர்த்தமுள்ள நிகழ்ச்சிகள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேஷத்தனம் தான் பரிசுத்த வார நிகழ்ச்சிகளா? அல்ல. திருச்சபை அதைவிட, மேலான ஒன்றை பரிசுத்த வார திருச்சடங்குகளில் எதிர்பார்க்கின்றது. அவை, நம் வாழ்க்கையை தொடும் காரியங்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் சீரகெட்ட பாவ ஜீவியத்தினால், நாம் உண்டாக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதை வாசிக்கும் என் அன்பான சகோதரனே! சகோதரியே! உன் வாழ்க்கையிலே, இயேசுவுக்கு மீண்டும் ஒரு சிலுவைப்பாதையை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வாயா?


"13-ம் ஸ்தலம்"


இயேசுவின் சிலுவைப்பாதையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி உண்டு. அதை சிலுவைப்பாதையின் பதின்மூன்றாம் ஸ்தலத்திலே தியானிக்கிறோம். (லூக் 23:53). பொதுவாக, இந்த நிகழ்ச்சி நம்முடைய கண்ணுக்கும் படாமலேயே போய் விடுகிறது.

அரிமத்தியா ஊர் யோசேப்பு என்பவர், இயேசுவை சிலுவையிலிருந்து இறக்குகிறார். இதற்கு முந்திய பன்னிரண்டு ஸ்தலங்களிலும், இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதற்காக, அனேக காரியங்கள் நடைபெறுகின்றன. அதில் அனேக மக்களும் ஈடுபடுகின்றனர். அவை எல்லாம், இயேசுவை சிலுவையில் அறைவதற்காக, ஆனால், இயேசுவை சிலுவையிலிருந்து இறக்குவதோ, ஒரு சிறிய நிகழ்ச்சியாக அமைகிறது. அதில் ஈடுபட்டவரும் ஒரே ஒருவர் தான்.

ஆனால், இந்த பதிமூன்றாம் ஸ்தலம் தான் இன்று முக்கியமாக கருதப்பட வேண்டும். இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கும் நிகழ்ச்சி தான் இன்று அவசியமாக நடைபெற வேண்டும்.


"சிலுவையில் அறையும் வெள்ளி"


இந்த உலகில், இயேசுவை சிலுவையில் அறைகின்ற நிகழ்ச்சி, எங்கு பார்த்தாலும் நடக்கின்ற ஒன்று. அவரை சிலுவையில் அறைய, அனேக ஆயிரம் மக்கள், திட்டமிட்டு முனைப்போடு செயல்படுகின்றனர். இன்னும் கூர்ந்து கவனித்தால், இந்த உலகமே, சிலுவை பாதையின் பனிரண்டு ஸ்தலங்களையும், இரவும் பகலும் நிகழ்த்தி காட்டுகிறது.

அநியாயம், அக்கிரமம், கொள்ளை, கொலை, வஞ்சகம், சூழ்ச்சி, என எங்கும் கொலை வெறியின் கொக்கரிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், உள்ளும், புறமும், அவரை சிலுவையில் அறையும் என்ற வெறிகுரல் எதிரொலித்து கொண்டே இருக்கிறது. இயேசுவுக்கு சிலுவையின் பாடுகளும், மரணமும் இன்னும் தீர்ந்த பாடில்லை.


"சிலுவையிலிருந்து இறக்கும் வெள்ளி "


அவரை சிலுவையிலிருந்து இறக்க, வெகு சிலரே முயல்கிறார்கள். அதற்கு, அசாத்திய துணிச்சலும், ஆண்டவர் மீது ஆழ்ந்த அன்பும் வேண்டும். கோழைத் தனங்களும், சுயநலங்களும் மலியும் போது, காட்டிக் கொடுத்தலும், மறுதலித்தலும் குறையாது அல்லவா.

இயேசுவை சிலுவையிலிருந்து இறக்க இன்று ஆள் வேண்டும். இந்த உலகை ஆசீர்வதித்த கரம், சிலுவையில் அறையப்பட்டுள்ளது. இந்த உலகை நடத்திச் சென்ற கால்கள் சிலுவையில் அறையப்பட்டுள்ளன. இந்த உலகை கனிவோடு பார்க்கும் சிரம், முள்ளால் அறையப்பட்டுள்ளது. இந்த உலகை அன்பு செய்த இதயம், ஈட்டியால் துளைக்கப்பட்டுள்ளது. இந்த உலகுக்கு அப்பமான உடல் சாட்டையால் கிழிக்கப்பட்டுள்ளது.

 

 

"நித்தம் தொங்கும் இயேசு"


ஒரு முறை நடந்த நிகழ்ச்சியே மிகவும் கொடுமையானது. ஆனால், நித்தம் இதே நிகழ்ச்சி நடக்கிறதென்றால், இதை என்னவென்று சொல்வது.

இரவுக்கு வெளிச்சம் தரும் மின்விளக்கு அணைந்ததென்றால், கதிகலங்கி போகிறோம். ஆனால், உலகுக்கே வெளிச்சமாகும் சூரியனே அழிந்து விட்டால், உலகநிலை என்னவாகும்.

இந்த நிலை மாற, சிலுவைப்பாதையின் பதின்மூன்றாம் ஸ்தலம் உதயமாக வேண்டும். அரிமத்தியா ஊர் யோசேப்பு நித்தம் பிறக்க வேண்டும். அந்த யோசேப்பு நீயும் நானும் தான்.

வியாதியோடு, வருத்தங்களோடு, நெருக்கடிகளோடு, பிரச்சனைகளோடு, அமைதியின்றி இயேசுவிடம் அலைமோதி வருகிறது இன்றைய உலகம். ஆனால், அந்த துன்பங்களை தீர்க்கும் கரம், சிலுவையிலேயே அறையப்பட்டுள்ளது. அதை இந்த உலகம் கவனிக்கவில்லை. எனவே தான் வியாதி, துன்பம், துயரம் எதுவும் தீர்ந்த பாடில்லை.


"கீழே இறக்கும் பணியால் மீட்பு "


இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி, அவர் மீண்டும் இந்த உலகத்தின் வீதிகளிலே சுதந்திரமாக நடமாட வழி செய்வோம். அங்கே, அப்பங்கள் பலுகும், தண்ணீர் இரசமாகும், சீறும் புயல் நிற்கும், முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், தொழுநோயாளி நலமடைவான், இறந்தவன் உயிர்ப்பான். ஆனால், அதற்குமுன், இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட வேண்டும். அரிமத்தியா ஊர் யோசேப்பு பிறக்க வேண்டும்.


"பாவபரிகாரமும் - 13-ம் ஸ்தலமும்"


பாவபரிகாரம் ஒன்றே, 13-ம் ஸ்தலத்தை உருவாக்க முடியும். எந்த பாவம், முதல் 12 ஸ்தலங்களை உருவாக்கியதோ, அந்த பாவம் அழிக்கப்பட வேண்டும்.

இன்று, இதை வாசிக்கும் எனது அன்பு சகோதரியே! சகோதரனே! அதை உன்னால் செய்ய முடியும். நீயே அந்த அரிமத்தியா ஊர் யோசேப்பு ஆகலாம். உன்னால் அந்த 13-ம் ஸ்தலத்தை உருவாக்க முடியும்.

உன்னால் கசையடிபட்டு, உன்னால் தீர்ப்பிடப்பட்டு, உன்னால் முள்முடி தரிக்கப்பட்டு, சிலுவை சுமந்து, கீழே விழுந்து எழுந்து, அநியாயமாக சிலுவையில் அறையப்பட்டு, ஈட்டியால் குத்தப்பட்டு, நிந்திக்கப்பட்ட இயேசுவை, நீயே சிலுவையிலிருந்து இறக்க வேண்டும்.

இன்று அந்த 13-ம் ஸ்தலத்தின் நாள். என் பாசமிகு சகோதரனே! சகோதரியே! இயேசுவை சிலுவையிலிருந்து இறக்க முயல்வாயா? அது அவருக்காக அல்ல. ஆனால் உனக்காக, இந்த உலகுக்காக.

உன் வியாதியை நீக்க, உன் பிரச்சனையை தீர்க்க, உன் இல்லத்தில் குடியிருக்க, உன்னை தம் பிரசன்னத்தினால் நிரப்ப, நீ இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கு.

 

 

"இயேசுவா – பரபாசா"


உன் பாவத்திற்காக நீ மனம் வருந்துவாயானால், கண்ணீர் வடிப்பாயானால், உன் பாவத்தை நீ முற்றாக வெறுப்பாயானால், உன்னால் இயேசுவை சிலுவையிலிருந்து இறக்க முடியும். இயேசுவை நித்தம் சிலுவையில் அறைய உனக்கு, துணையாக இருந்த இந்த உலகத்துக்கு, உன்னில் இருக்கும் துற்குணங்களுக்கு, மனதார விடை கொடு.

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று கூறும் உன் அற்ப உலக நாட்டங்களை அறுத்தெறிந்து விடு.

என் நேசர் உன்மீது கொண்ட அன்பை எண்ணிப்பார். மனம் கசிந்து அழு. “எனக்கு இயேசு போதுமே” என்று அவருடைய தழும்பேறிய பாதங்களை இறுக பற்றி கொள். பரிசுத்தத்தை நாடு. இறைவிருப்பங்களுக்கு ‘ஆமென்’ சொல். அல்லும் பகலும் அவருடைய வசனங்களை தியானி. அவரது பிரசன்னத்தை நாடு.

இவ்வாறு நீ செய்வாயாகில், ஜீவனுள்ள தேவன், சிலுவையினின்று இறங்கி வருவார். “மரித்தேன் ஆனால் சதாகாலமும் ஜீவிக்கிறேன்” என்றவர் சிலுவையிலிருந்து இறங்கி, வந்து, உன் இல்லத்திலே, உன்னோடு வாசம் செய்வார்.


"யோசேப்பாக மாறு"


அரிமத்தியா ஊர் யோசேப்பு துணிவுள்ளவர். செல்வாக்குள்ளவர் கடவுள் அரசை எதிர்பார்த்து இருந்தவர். மிகுந்த தியாக சிந்தனையுள்ளவர், நல்லவர், நீதிமான். தீமைக்கு இணங்காதவர். இயேசுவின் சீடர் (லூக் 23:50,51). இதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

யோசேப்பிடம், வேதம் கண்ட இத்தனையும் இன்று உன்னோடிருப்பின், நீயும் இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கலாம்.

ஒரு வேளை என் சகோதரமே! நீ ஏற்கனவே பரிசுத்தத்தின் பாதையில் இருக்கிறாயா, நீ ஏற்கனவே மனம் திரும்பி, ஆவிக்குள் ஜீவிக்கிறாயா, அப்படியிருந்தால் கூட, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கும் பொறுப்பு உனக்கும் உண்டு. உனக்காக அல்ல, இது இந்த உலகுக்காக.

அரிமத்தியா ஊர் யோசேப்பு, இயேசுவை சிலுவையில் அறைந்தவர் அல்ல. ஆனாலும், தமது மக்கள் இழைத்த அந்த அநியாயத்திற்கும், தாமே பரிகாரம் செய்தவர். ஆவரை சிலுவையில் அறைந்தவர்கள் பாவிகள். அவரை இறக்கியவர் யோசேப்பு. (லூக் 23:53).


"பிறர் அறைந்தவரை நீ இறக்கு "


மிகுந்த பரிசுத்தத்திலும், வேத சத்தியத்திற்குள்ளும் ஜீவித்து, ஆவியால் வழிநடத்தப்படும் என் சகோதரனே! சகோதரியே! ஒரு வேளை இன்று, இயேசுவை சிலுவையில் அறைவது நீயல்ல. ஆனால், உன் அண்ணனாக இருக்கலாம், அல்லது அப்பா, அம்மா, கணவன், மனைவி, சகோதரிகள், அண்டை வீட்டார், நண்பர்கள், இன்னும் உன் வாழ்வை சார்ந்த யாரகாவும் இருக்கலாம். அவர்கள் தம் வாழ்வால், வார்த்தையால் நித்தம் இயேசுவை சிலுவையில் அறைவதை நீயே காண்கிறாய். அந்த இயேசுவை சிலுவையிலிருந்து, இறக்கி விட நீ என்ன செய்கிறாய்?

நீ காணும் இந்த உலகம் நித்தம், உன் கண் முன்னாலேயே இயேசுவை சிலுவையில் அறைகிறதே. ஆவரை இறக்கி விட நீ என்ன செய்தாய்? “அவர்கள் அறைந்தார்கள் அவர்கள் இறக்கட்டும்” என்று நீ சொல்லி விட முடியுமா. அப்படி யோசேப்பு எண்ணியிருந்தால், 13-ம் ஸ்தலம் உருவாகியிருக்காதே. இந்த உலகத்தின் மீட்புக்காக உழைக்கின்ற எனது அருமை சகோதரனே! உனக்கும் அந்த கடமை உண்டல்லவா. இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கு.

சிலுவை பாதையின் முதல் 12 ஸ்தலங்களையும் கொண்டு நிறைந்திருக்கும் இந்த உலகில், 13-ம் ஸ்தலத்தை உருவாக்குவோமா.

அரிமத்தியா ஊர் யோசேப்பாக நாம் மாறும் நாள் தான், இந்த உலகம் எதிர்பார்க்கும் மீட்பின் நாள். ஆமென்.

 

"உதட்டால் தொட்டவன் - உள்ளத்தால் தொடவில்லை” – யூதாஸ்


பழுதற்ற ஆட்டுகுட்டியின் இரத்தம், குற்றமற்றது என்பதனை, யூதாஸ் தன் வாயாலேயே அறிக்கையிட்டான் - மத் 27:4. தெற்கு யூதேயாவின் கேரியோத் என்னுமிடம் தான் யூதாசின் பிறந்த ஊர். இவன் தந்தையுடைய பெயர் சீமோன். யூதாஸ் காரியோத்து என்றால் “தேவனின் துதி” என்பது பொருள்.


"யூதாசை பற்றி"


 • இயேசுவின் அருகில், அவரது நிழலில் இருந்தும், இவன் எவ்வளவோ பரிதாபத்துக்குரிய விதத்தில் இறந்தான்.

 • “பண ஆசை” இயேசுவை காட்டிக்கொடுக்கக் கூட தயங்காது. அது, வஞ்சக முத்தமிடவும் துணியும்.

 • “மனம் வருந்துதல்” மட்டும் மீட்பைத் தராது. “திரும்பி வருதல்” தான் மீட்பைத்தரும், என்பதற்கு அவன் வாழ்வே சான்று.

 • வாய்ப்புகள் பல கொடுக்கப்பட்ட பிறகும் “மனம் திரும்பாமல்” போனான்.

 • கிறிஸ்துவை விற்று பணமாக்கத் துணிந்தான். அப்பணம், அவன் தலைமுறையினருக்கு கூட உதவவில்லை - தி.பா 109:9.

 • அப்போஸ்தல பதவி கூட, அவனுக்குப் பரலோகம் செல்ல உதவியாக துணை நிற்கவில்லை.

 • ஒரு வேளை இவன் ஞானஸ்நானம் கூட பெற்றிருக்கக் கூடும். அப்போஸ்தலனல்லவா? அப்படியானால், அந்த சடங்கும் அவனைக் காப்பாற்றவில்லை.

 • உலகப் பண ஆசை, கல்லறை தோட்டத்தை தான் பரிசளிக்கும்.

 • அவன் பெயரோ “தேவனின் துதி” ஆனால், வாழ்வும் சாவுமோ “சாத்தானின் துதி”.

இவ்வாறு யூதாசை வரலாறு பரிகசிக்கிறது. கிறிஸ்துவுக்கு அருகாமையில் இருப்பதாக கூறும் நம்மை, நாளைய உலகம் என்ன கூறும்? உதட்டிலே “துதி”யோடும், உள்ளத்திலே “சதி”யோடும் வாழும் யூதாசுக்களா நாம்?


"நியாயமற்ற விசாரணைகள்"


கிறிஸ்துவின் குற்ற விசாரணைகள் பல நிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.

 • குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பது நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம் - யோவா 11:50, மாற் 14:1, 14:15 .
 • பொய் சாட்சிகளை ஏற்படுத்தினர் - மத் 26:61.
 • குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை - லூக் 22:67-71.
 • ஆலோசனை சங்கம் இரவில் கூடியதே, அவர்களது சட்டப்படி தவறு - மத் 26:63-66.
 • தலைமை குருவை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்ப்பிட்டது அநியாயம் - மத் 26:63-66.
 • நீதிமன்ற அறையில் கூடித் தான் தீர்ப்பிட வேண்டும் - லூக் 22:54.

"கை கழுவும் பிலாத்துக்கள்"


நீதி இருக்கையில் அமர்ந்திருந்த பிலாத்து, மக்கள் கூட்டத்தின், “உரத்த குரலுக்கு” முன் தன் பெலனை இழந்தான். தண்ணீரால், “தம் கைகளைக் கழுவி,” இவ்வாறு கூறினான். “இந்த நீதிமானின் இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன்” - மத் 27:24. இவ்வாறு அவன், “மக்களை திருப்திபடுத்தினான்” - மாற் 15:15.

அநீதியின் இரத்தப்பழி, ஆசாரத்தால் தீர்ந்து போகுமா? கை கழுவும் சடங்கு எப்போது பலன் கொடுக்கும் என்று வேதம் கூறுகிறது (காண் இ.ச. 21:1-9). கை கழுவியதால், குற்றமில்லாதவரை, கொலை செய்த பிலாத்து, குற்றமற்றவனாகி விடுவானோ?

அவன் கழுவியது, “குற்றமில்லாமையை அல்ல” - தி.பா 26:6. மாறாக, அவன் “நீதியை” கை கழுவினான், “தன் மனசாட்சியை” அவன் கைகழுவினான். மக்களின் “பிரீதியை” கைபிடித்தான், தன் “பதவியை” காப்பாற்றினான். ஏனென்றால், காலச் சரித்திரத்தில், அவனது “அநியாய தீர்ப்பு”, கண்ணீரால் எழுதப்பட்டுள்ளது.

நீதிமானாம் கடவுளின் நீதியிருக்கை முன், இந்த “பிலாத்துக்கள்” நிற்க வேண்டிய நாள் நிச்சயம் உண்டு. அன்று “குற்றமற்றவன்” என்று கடவுள் தீர்ப்பிட வேண்டுமானால், அவர்கள் தங்களை அநீதியிலிருந்து விடுவிக்க, தங்கள் “பதவிகளை கை கழுவட்டும்” – தலையே விலை போனாலும், நீதியை விலை பேசாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

பண மூட்டைகளால் உண்டாகும் தீர்ப்புக்களும், அதிகார அரசியலால் உண்டாகும் தீர்ப்புகளும், பலரை திருப்திப்படுத்த உண்டாகும் தீர்ப்புக்களும், மலிந்துவிட்ட இந்நாட்களில், பிலாத்துக்கள் அனேகர் நீதிமன்றத்தை ஆளுகின்றனர். இவர்கள் குற்றமற்றவர்களை தண்டித்து, தாங்கள் குற்றவாளிகளாகின்றனர். கிறிஸ்துவின் ஆட்சியில், “பிலாத்துக்களும்”, அநீதிபதிகளும்” தீர்ப்பிடப்படுவது நிச்சயமல்லவா?


"ஆடையை கிழித்த தலைமைக்குரு"


தலைமை குருவாக நியமிக்கப்படுவோருக்கு சில சிறப்பு ஒழுங்குகள் உள்ளன. அவர்கள் துயரத்தினாலோ, கோபத்தினாலோ, தங்கள் ஆடையை கிழிக்கக் கூடாது - லேவி 21:10. முதல் தலைமை குருவான ஆரோன், தமது இருபுதல்வர்களையும், ஒரே நேரத்தில் இழந்த போதும் கூட, இத்தகையை செயல் அனுமதிக்கப்படவில்லை - லேவி 10:6.

ஆனால், இங்கு ஒரு தலைமைக்குரு, தமது ஆடைகளைக் கிழிக்கிறார். இதற்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

ஆரோனின் முறையிலான குருத்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மெல்கிசேதேக்கின் முறையிலான குருத்துவத்தை ஏற்க, இயேசு வந்துவிட்டார். தற்காலிக குருத்துவம், நித்திய குருத்துவத்துக்கு முன் கிழிந்து போகிறது. உண்மை உருவத்துக்கு முன், நிழலானது விலகிச் செல்கிறது - எபி 7:20-28.

தேவாலயத் திரைச் சீலை மேலிருந்து கீழாக கிழிந்தது போல, தலைமைக் குருவின் ஆடை கிழிப்பும் ஆயிற்று.


"இயேசு குற்றமற்றவரே"


 • பழி பாவமில்லாதவரைக் காட்டிக் கொடுத்து பாவம் செய்தேன் - மத் 27:4 – யூதாசு.
 • அந்த நேர்மையாளரின் வழக்கில், நீர் தலையிட வேண்டாம் - மத் 27:19 - பிலாத்துவின் மனைவி.
 • இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை - லூக் 23:4 – பிலாத்து.
 • பாவமறியாதவர் - 2கொரி 5:21 – பவுல்.
 • அவர் பாவம் செய்யவில்லை - 1பேது 2:22 – பேதுரு.
 • அவரிடத்தில் பாவமில்லை - 1யோவா 3:5 – யோவான்.


 

 

My status

 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

 

 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

 

 

X


ஆடைகளை உரிதல்

 

 

XI


சிலுவையில் அறைதல்

 

 

XII


 

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

XIII


தாயின் மடியில்

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

XIV


கல்லறையில் இயேசு

 

 

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 

 

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com