மூன்றாவது வார்த்தை (யோவா 19:26,27)“அம்மா! இவரே உம் மகன்…

இவரே உம் தாய்”Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


இன்று இயேசுவின் பரிசுத்த பாடுகளை நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இயேசு சிலுவiயில் தொங்கும் போது, சொன்ன ஏழு வார்த்தைகளில் மூன்றாவது வார்த்தையை இப்போது தியானிப்போம்.


I. யோவானைப் பற்றியும் - மரியாளைப் பற்றியும் சில வரிகள் :


1. யோவான்


யோவான் என்ற பெயருக்கு “கடவுளின் கிருபை” என்பது பொருள். இவர் செபதேயு என்பவருடைய கடைசி மகன். இவருடைய சகோதரர் யாக்கோபு. இவருடைய தாயின் பெயர் சலோமி (மாற் 16:1, மத் 27:56).


இவர் ஆதிசபையில் பேதுருவோடு மிகவும் தொடர்புடையவர் (லூக் 8:51, 9:28, தி.தூ 1:13). இவருடைய தாய் சலோமி, மரியாளின் சகோதரியாக இருக்கலாம் (யோவா 19:25). இவருடைய பெற்றோர் வசதி படைத்தவர்கள். இவருடைய தந்தை ஒரு கடல் தொழிலாளி. இவருடன் பல வேலையாட்கள் இருந்தனர் (மாற் 1:20). இவருடைய தாய் தம் செல்வத்தைக்கொண்டு இயேசுவுக்கு பணி செய்தவர் (லூக் 8:3, மாற் 15:40). இவர் யோவான் ஸ்நாபகருடைய சீடனாக இருந்தார். (யோவா 1:35-37).


பேதுரு தம் சகோதரன் அந்திரேயாவை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது போலவே, யோவானும் தன் சகோதரன் யாக்கோபை அறிமுகப்படுத்தியிருப்பார். இயேசு அவரை அழைத்த போது, தன் தொழிலையும், பெற்றோரையும் விட்டு இயேசுவுக்கு பின்னே சென்றார். (மாற் 1:19-20). யாக்கோபும், யோவானும் “இடியின் மக்கள்” என்று அழைக்கப்பட்டவர்கள் (மாற் 3:17).


இவர் எதிலும் தீவிரவாத குணமுடையவர். இயேசுவை பின்பற்றாமல், அவருடைய நாமத்தில் புதுமை செய்தவரை தடுத்தார் (லூக் 9:54). இயேசுவை, உலக அரசராக நினைத்து, அவருடைய நாமத்தில் புதுமை செய்தவரை தடுத்தார். (லூக் 9:49). இயேசுவை ஏற்றுக் கொள்ளாத சமாரிய நகரத்தை அழித்துப் போடத் துடித்தார். (லூக் 9:54). இயேசுவை, “உலக அரசராக” நினைத்து, அவருடைய அருகில் இருக்க ஆசைப்பட்டார் (மத் 21:21, மாற் 10:37). இயேசுவோடு எந்த துன்பமும் பட தயாராயிருந்தார். (மத் 20:20).


இயேசுவின் பணியில் மற்ற அப்போஸ்தலர்களை விட யோவானுக்கு சிறப்பிடம் இருந்தது. உதாரணமாக, யோவான், பேதுரு, யாக்கோபு ஆகிய மூன்று பேரும் இயேசுவின் மூன்று முக்கியமான பணிகளில் உடனிருக்க அனுமதிக்கப்பட்டனர்.


1. யாயீரின் மகளை உயிர்ப்பித்த போது (மாற் 5:37).


2. உருமாற்றத்தின் போது (மாற் 9:3).


3. பாஸ்கா உணவு தயாரிக்க அனுப்பிய போது (லூக் (லூக் 22:8).


இறுதி உணவில் இயேசுவின் மார்போடு சாய்ந்திருந்தவர் (யோவா 13:23). இயேசுவின் உயிர்ப்பை சந்திக்க கல்லறைக்கு முதலில் ஓடியவர் (யோவா 20:2,8). திபேரியா கடலருகே சீடரோடு உயிர்த்த இயேசுவை சந்தித்தவர் (யோவா 21:1). எல்லா அப்போஸ்தலரையும் விட மிகவும் முதிர்ந்த வயதுவரை வாழந்தவர் யோவா (21:23).


ஆதி சபையில் :


 • பேதுருவோடு நெருக்கமாயிருந்து பணியாற்றினார். யூதர்கள் அளித்த எல்லா நெருக்கடிகளிலும் பேதுருவோடு உடனிருந்தவர் (தி.தூ 4:13, 5:33, 40).

 • யூதர்கள் மலைத்து போகும் வண்ணம் பிரசங்கம் பண்ணியவர் (தி.தூ 4:13)..

 • பிலிப்புவினால் மனம் திருப்பப்பட்ட சமாரிய மக்களை, பேதுருவோடு சேர்ந்து யோவானும் தலையில் கை வைத்து அபிஷேகித்தார்.

 • தன் மன மாற்றத்தில் 14 ஆண்டுகளுக்கு பின், பவுல் யோவானை பற்றி கூறும் போது, யோவான், “ஜெருசலேம் சபையின் தூண்” என்று கூறுவார் (கலா 2:9).

 • இறுதியாக, பாத்மோஸ் என்ற தீவில் தங்கியிருந்து வெளிப்பாடு ஆகமத்தை எழுதினார் (வெளி 1:9).


II. இயேசுவின் தாய் மரியாள் :


மரியாள் என்ற பெயர் எபிரேயத்தில், “மிறியாம்” என்றும், கிரேக்கத்தில் “மறியம்” என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மூல வார்த்தை, எகிப்து மொழியின் “மாரியே” என்று சொல்லிலிருந்து வருவது, இதன் பொருள். “பிரியமான” அல்லது “பிரியமானவர்” என்பது ஆகும்.


வேதத்தில், இந்த பெயரைக் கொண்ட அனேகர் வருவதைக் காண்கிறோம். வேதத்தில் மரியாளைப் பற்றி சொல்லப்படும் பகுதிகள் மிகவும் சுருக்கமானவையே.


இயேசுவின் பிறப்பு பகுதி :


வானதூதர் மரியாளை சந்திக்க வந்த போது, மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னுமிடத்தில் வசித்து வந்தாள். அவள் யோசேப்பு என்ற ஒரு தச்சனுக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டவள் (லூக் 1:26). மரியாள், தாவீதின் பரம்பரையில் பிறந்தவள் என்று அறிகிறோம். ஏனெனில், இயேசு தாவீதின் குலத்தில் பிறந்தவராகவே வேதம் கூறுகிறது (உரோ 1:3, தி.தூ 2:30, 2தீமொ 2:8). மேலும் இயேசுவின் தலைமுறை அட்டவணையை லூக்கா தரும் போது, மரியாளிடமிருந்து அதை ஆரம்பித்தார் (லூக் 3).


இயேசுவின் பிறப்பு பற்றிய பகுதியை நற்செய்தி ஆசிரியர்கள் எங்கிருந்து பெற்றிருப்பார்கள் என்று கேட்டால், அது மரியாளிடமிருந்து தான் இருக்கும் என்று கூறலாம். ஏனெனில், இயேசுவின் தாய் மரியாள், ஆதிசபையின் அப்போஸ்தல குடும்பத்தில் பல்லாண்டுகள் வாழ்;ந்தவர். இவர் யோவான் ஸ்நாபகருடைய தாயான எலிசபெத்துக்கு உறவினள் (லூக் 1:36). யோவா 19:26, 27 நிறைவேறும் வண்ணமாக, லூக் 2:3,5-ல் “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவும்” என்று சிமியோனால் ஏற்கெனவே கூறப்பட்டிருந்தாள்.


மூன்றாவது வார்த்தையும் - ஆவியின் கனியும் :

இந்த பின்னணியில் நாம் பார்க்கும்போது, சிலுவையில் இயேசு கூறிய மூன்றாவது வார்த்தையிலே “தயவு” என்ற ஆவியின் கனி வெளிப்படுகிறது.


மூன்றாவது வார்த்தையும் - நல்ல ஆயனும் :

இயேசு, தன் ஆட்டுக்குட்டிகளுக்காக தன் உயிரையே கொடுக்க வந்த நல்ல மேய்ப்பன் (யோவா 10:11). நல்ல மேய்ப்பனின் பெரிய குணங்களில் ஒன்று “தயவு, அக்கரை, கரிசனை, இரக்கம் போன்றவை. தன்னுடைய கஷ்டத்திலும்,


ஆடுகளை கஷ்டப்படாமல் காப்பது, நல்ல மேய்ப்பனின் தன்மை. ஆடுகள் வாழ, தன் வாழ்வையே அழித்துக் கொள்வது நல்ல மேய்ப்பனின் தன்மை (யோவா 10:14,15).


சிலுவையில் - நல்ல மேய்ப்பன் :


சிலுவையில் இயேசு கூறிய மூன்றாவது வார்த்தையில் இயேசு தான் தன் ஆடுகளுக்காக தயவும், இரக்கமும், அக்கரையும் கொண்ட நல்ல மேய்ப்பன் என்பதைக் காட்டினார்.


தாயைப் பற்றிய தயவு :

 • இயேசுவின் தாய், தமக்கு உடலும் இரத்தமும் தந்த தாய்.

 • தன்னை ஒரு மீட்புப் பணிக்கான ஒரு மனிதனாக உருவாக்க ஒரு தாய் என்னென்ன கஷ்டங்களை பட வேண்டுமோ, அத்தனையும் அடைந்தவள் தாய் மரியாள்.

 • இந்த உலக மீட்புக்காக இயேசு சிந்திய இரத்தமும், கையளித்த உடலும் மரியாள் அவருக்கு கொடுத்தது.


III. இறையியல் பின்னணி :


எனவே, இந்த மூன்றாம் வார்த்தையில் ஓர் ஆழ்ந்த இறையியல் பின்னணி உண்டு. மரியாளுக்கு கணவன் இறந்திருக்கலாம். ஆனால் அவள் நிச்சயமாக ஒரு அனாதையாகவோ, கைவிடப்பட்டவளாகவோ ஒருபோதும் இருக்க முடியாது. காரணம், மரியாள் எப்போதும் அவருடைய குடும்ப உறவினரோடு நெருக்கமாகவே வாழ்ந்து வந்தாள். எல்லாருமே நல்ல நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். எனவே, ஒரு நாதியற்ற அபலைக்கு உதவி செய்வதாக இந்த மூன்றாவது வார்த்தையை நாம் பார்க்கக் கூடாது. மாறாக, இது இயேசுவுடைய மீட்பின் திட்டத்தில் மறைந்திருந்த பெரியமறை பொருளின் வெளிப்பாடு எனலாம்.


மரியாளும் - திருச்சபையும் :

இயேசுவுடைய பரிசுத்த திருச்சபைக்கும் மரியாளை ஒரு அடையாளமாக யோவான் நற்செய்தியாளர் தருகிறார்.

 • மரியாளிடத்தில் இயேசு பிறந்தது போல – திருச்சபையில் இயேசு பிறக்கிறார் (லூக் 2:7).

 • மரியாள் இயேசுவைப் பெற்று உலகுக்கு தந்தது போல – திருச்சபையும் இயேசுவை கருத்தாங்கி பெற்றெடுத்து, உலகுக்கு தரும் பணியை செய்கிறது.

 • மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்து வளர்க்கும் வண்ணம், உடலாலும், உள்ளத்தாலும் தூய்மையாக இருந்தாள். திருச்சபையும் இயேசுவை பெற்றெடுத்து வளர்க்கும் வண்ணம், பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும், பரிசுத்த உடலாக இருக்கிறது (1கொரி 12:27).

 • இயேசுவை கருத்தாங்கிய நாளிலிருந்து அவரை கல்வாரியில் கையளிப்பது வரை, மரியாள் எவ்வளவோ, நிந்தை பாடுகளையும், துயரங்களையும் தாங்கி கொண்டவள். திருச்சபையும் அவ்வாறே இயேசு கிறிஸ்துவை இந்த உலகுக்கு கொடுக்கும் பணியில் இரத்த சாட்சியாகும் அளவுக்கு தம்மை ஆயத்தப்படுத்தியுள்ளது.

 • மரியாளிடத்தில் இயேசு பிறந்தது போல – திருச்சபையில் இயேசு பிறக்கிறார் (லூக் 2:7).மரியாள் தேவ சித்தம் செய்வதற்காகவே தன்னை இந்த உலகுக்கு அர்ப்பணித்தாள். திருச்சபையும் தேவ சித்தம் செய்வதற்காகவே இந்த உலகத்தில் அழைக்கப்பட்டது.

 • தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல சேலை என்பர். அது போலவே, இயேசுவின் எல்லா தன்மைகளையும், சாயலையும் மரியாளில் காணலாம் - திருச்சபையும், இயேசுவையும் அவர் சாயலையும் முழுமையாக இந்த உலகில் வெளிப்படுத்துகிறது..

 • மரியாள், மீட்பராகிய இயேசுவுக்கு தாயாக இருந்து தாங்கினார் - திருச்சபையும் மீட்பை இந்த உலகுக்கு வழங்கி, வளர்க்கும் தாயாக இருக்கிறது.


மரியாளும் - கிறிஸ்தவனும் :

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் மரியாளை ஒரு அடையாளமாக இயேசு காட்டுகிறார்.

 • மரியாளிடம் இயேசு கருவுற்று பிறந்தது போலவே – ஒவ்வொரு கிறிஸ்தவனிடத்திலும், அவன் மனம், ஆத்மா, சரீரம் அனைத்திலும் மீட்பராகிய இயேசு வியாபித்து பிறக்க வேண்டும் (1தெச 5:23).

 • மரியாள் இயேசுவை பெற்றெடுத்து உலகுக்கு கொடுத்தது போலவே – ஒவ்வொரு கிறிஸ்தவனும், இயேசுவைப் பெற்றெடுத்து உலகுக்கு தரவேண்டும்.

 • மரியாள் இயேசுவைப் பெற்றெடுக்கும் வண்ணம் உடலாலும், உள்ளத்தாலும் தூய்மையாக இருந்தது போலவே – ஒவ்வொரு கிறிஸ்தவனும், பரிசுத்தமும் மாசற்றதுமான அந்தஸ்தில் எப்போதும் தம்மை காத்து கொள்ள வேண்டும்.

 • மரியாள் இயேசுவைப் பெற்றெடுக்க பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டாள். (லூக் 1:35) – அதுபோலவே ஒவ்வொரு கிறிஸ்தவனும், பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பெற்று, அந்த ஆவியானவரைத் தாங்கி வாழும் ஆலயமாக தங்கள் உடலைக் காக்க வேண்டும்.

 • இயேசுவை கருத்தாங்கிய நாளிலிருந்து அவரை கல்வாரிக்கு கையளிக்கும் நேரம் வரை மரியாள் பாடுகளை சுமந்த ஒரு வியாகுலத் தாயாகவே இருந்தாள். கிறிஸ்தவனும், மீட்படைந்த நேரத்திலிருந்து தம் அன்றாடச் சிலுவையை சந்தோஷமாக சுமந்து இயேசுவுக்கு பின் செல்லும் நம்பிக்கைக்குரிய சீடனாக இருக்க வேண்டும் (மத் 16:24).

 • மரியாள், தேவனுக்கு அடிமையாக தன்னையே கையளித்தாள். ஒவ்வொரு கிறிஸ்தவனும், உலகம், பிசாசு, சரீரத்திற்கு அடிமைப்பட்ட நிலையிலிருந்து தன்னை விடுவித்து, தனக்காக வாழ்ந்து, பாடுபட்டு மரித்த இயேசுவுக்கே அடிமையாகவே வாழ வேண்டும்.

 • மரியாளுடைய மன, சரீர, ஆத்மாவின் சாயலும், இயேசுவின் சாயலும் ஒத்திருந்தது (லூக் 1:43). – அது போலவே, ஒவ்வொரு கிறிஸ்தவனும், பாடுபட்டு மரித்து உயிர்த்த இயேசுவின் சாயலை வெளிப்படுத்த வேண்டும்.

 • இயேசுவை பெற்றெடுப்பதில் மரியாள் எவ்வளவோ அவமானம், புறக்கணிப்பு, நிந்தை, உயிர் ஆபத்து, சரீர பிரயாசை ஆகியவற்றை மகிழ்ச்சியோடு (லூக் 2:7). கிறிஸ்தனும், தனக்குள் இருக்கும் உலகம், பிசாசு, சரீரம் சாக இயேசுவும் அவரது குணங்களும் தனக்குள் பிறக்க எந்த துன்பத்தையும் தாங்குவதற்கு தயாராக வேண்டும்.

 • மரியாள் இயேசுவை ஆலயத்தில் பிரிய வேண்டிய சந்தர்ப்பத்தில் மிகுந்த விசனமுற்று, கலங்கி போய் மீண்டும் இயேசுவைப் பெறுவதுவரை பாடாய் பட்டார் (லூக் 2:44,45) – அவ்வாறே, கிறிஸ்தவனும், ஏதாவது சந்தர்ப்பங்களில் இயேசுவை பிரிய வேண்டி வந்தால் கால தாமதப்படுத்தாமல் சீக்கிரமாகவே மீண்டும் இயேசுவோடு ஒன்றிக்க பாடுபட வேண்டும்.

 • மரியாள் கடவுளுக்கு துதிபாடுவதிலும், ஆவியில் நிறைந்தவராய் அவரோடு ஐக்கியப்பட்டிருப்பதிலும் கருத்தாயிருந்தாள் (லூக் 1:47) – கிறிஸ்தவனும் எப்போதும் தேவனை ஸ்தோத்திரம் செய்து, அவரோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் (தி.பா 34:1).

 • தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்த மரியாள், எலிசபெத்துக்கு உதவியாக அவர் இல்லம் சென்றாள் (லூக் 1:40) – கிறிஸ்தவனும், தன்னோடு நெருக்கமானவர்களுக்கு எப்போதும் உதவி செய்ய காத்திருக்க வேண்டும்.

 • மரியாள், எந்த நபரை சந்தித்தாலும், அவனிடமிருந்து ஆவியானவர் புறப்பட்டு போய் அடுத்தவரையும் நிரப்பியது (லூக் 1:41) - அவ்வாறே கிறிஸ்தவனும், தான் பழகுகிற மக்கள் அனைவருக்கும் தேவ ஆவியையும், வல்லமையையும் பகிர்ந்தளிப்பவராக இருக்க வேண்டும் (தி.தூ19:6).

 • பிறருடைய கஷ்டங்களில் குறிப்பறிந்து உதவுவதிலும், இயேசுவிடம் பரிந்து பேசி ஜெபிப்பதிலும் மரியாள் கருத்தாயிருந்ததை கானாவூரின் திருமணத்தில் வெளிப்படுத்தினாள் (யோவான் 2:3) – அவ்வாறே கிறிஸ்தவனும், தன்னலத்தை நாடாது, எல்லாவற்றிலும் பிறர் நலத்தையே நாடுபவர்களாகவும், குறிப்பறிந்து உதவவும், பரிந்து பேசி ஜெபிக்கவும் முந்திக் கொள்பவராகவும் இருக்க வேண்டும் (தி.தூ 7:60).

 • இயேசுவுக்கு துன்ப சோதனை வந்த போது, மரியாள் எங்கும் ஓடிவிடாமல், தன் மகனுக்கு அருகிலேயே இறுதிவரை நிலைத்து நின்றது போல (யோவா 19:25) – கிறிஸ்தவனும், தான் கிறிஸ்தவன் என்பதற்காக தனக்கு எந்த துன்பம் வந்தாலும், இயேசுவை விட்டுவிட்டு ஓடிவிடாமல் இயேசுவோடேயே உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும் (உரே 8:17).


IV . A . மீட்பர் இயேசுவிடமிருந்து நான்கு விசேஷ தன்மைகள்:


1. தேவ கிருபை


2. தேவ அன்பு


3. தேவ ஐக்கியம்


4. தியாக பலி


உலகத்தின் மீட்பு :

மேற்சொன்ன நான்கு தன்மைகளையும் கொண்டே, இயேசு இந்த உலகத்தை மீட்டு இரட்சித்தார். இந்த உலகத்தின் மீட்புக்காக தங்களையே கையளிக்க விரும்புகிறவர்களிடம், இந்த நான்கு தன்மைகளும் இருக்க இயேசு விரும்பினார். தன் இறுதி மூச்சை கையளிக்கும் முன், கல்வாரியில் இயேசு கண்டெடுத்த “மீட்புக்கான மாதிரி ஊழியர்கள்” மரியாளும், யோவானுமே. எனவே தான் அவர்களை இயேசு ஒன்றாக்கினார்.


B. ஒரே தன்மைகளைக் கொண்ட இருவர்


1. கிருபையில் ஒத்தவர்கள் :

மரியாள் “கடவுளின் கிருபையை” நிறைவாக அடைந்தவள் (லூக் 1:28). யோவான் என்னும் பெயருக்கு “கடவுளின் கிருபை” என்பதே பொருள். எனவே, இருவருமே தேவ கிருபைக்கு சொந்தக்காரர்கள்.


2. இயேசுவோடுள்ள நெருக்கத்தில் ஒத்தவர்கள் :

மரியாள், சிலுவையில் தொங்கிய இயேசுவுக்கு “அருகே நின்றாள்” (யோவா 19:25). யோவானும், இயேசுவுக்கு அருகாமையில் இருப்பதிலே எப்போதும் ஆர்வம் காட்டியவர்.


1. கடைசி இராப்போஜனத்தில் (யோவா 13:23).


2. சிலுவை அருகில் (யோவா 19:26).


3. அன்பில் ஒத்தவர்கள் :

“தாய்க்கு அன்பு வற்றி போகுமோ” என்று வேதம் கேட்கிறது (எசா 49:15). இங்கே, இயேசுவின் தாய் என்றாலே, இயேசுவை அன்பு செய்தவர் என்பது பொருள். எனவே, மரியாள் இயேசுவின் அன்பில் நிலைத்திருந்தவர். யோவானோ, “அன்பாயிருந்த சீஷன்” என்று அறியப்பட்டவர்.


4. இயேசுவோடு துன்புறுவதில் ஒத்தவர்கள் :

மரியாள், இயேசுவின் சிலுவையருகில் நின்றிருந்தாள். அவ்வண்ணமே, பாடுபட்ட இயேசுவுக்கு பக்கத்திலேயே யோவானும் நின்று கொண்டிருந்தார் (யோவா 19:26).


C. ஆத்மீக அர்த்தம் கொண்ட வார்த்தை :


இந்த மூன்றவாது வார்த்தை, அனாதைக்கு அடைக்கலம் கொடுக்கிற வார்த்தை அல்ல என்று கண்டோம். அப்படி என்றால், இதில் அதிகமான ஆத்மீக பொருள் அடங்கியுள்ளது.

 • இயேசுவிடமிருந்த மீட்புக்குரிய தன்மைகளை கொண்ட இருவர் ஒன்று சேர்க்கப்பட்டனர்.

 • மீட்பின் ஊழியம் இயேசுவோடு முடியவில்லை. மாறாக, அது சிலுவையில் இயேசு உயர்த்தப்பட்டபின், இன்னும் அதிக ஆற்றலோடு நடைபெற வேண்டும்.

 • அதற்காக அனேக “மீட்பர்கள்” இந்த உலகு உள்ளளவும் தேவைப்படுகிறார்கள்.

 • இயேசு ஒருவரே இரட்சகர்.

 • இந்த மீட்பராகிய இயேசு, யார் யாருக்குள் எல்லாம் வாழ்கிறாரோ, அவர்களெல்லாம் இயேசு கொண்டு வந்த மீட்பை இந்த உலகுக்கு தர முடியும்.

 • அதற்கு அடையாளமான இருவரை, இயேசுவின் மீட்பைத் தேடும் இந்த உலகுக்கு முன் இயேசு நிறுத்தினார்.


உறவை கடந்த மரியாள் :

மரியாளை இயேசு ஒரு உறவுக்குள் வைத்து பார்க்க விரும்பவில்லை. மாறாக, மரியாள், இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதருக்கும் ஒரு “தலையான முன் மாதிரி” என்று காண்கிறார்.

 • மாற் 3:35, லூக் 1:38 – பிதாவின் சித்தம் நிறைவேற்றும் தாய்.

 • லூக் 1:28, 30 – கடவுளின் கிருபை நிறைந்த தாய்.

 • லூக் 1:28,48 – எல்லா பெண்களுக்குள்ளும் அருளும், ஆசீரும் பெற்ற தாய்.


தன் தாயை ஒத்த ஒரு பெண்ணாக, இந்த உலகில் உள்ள எல்லாரும் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.


மாதிரியான மரியாள் :

பிரியமானவர்களே! இன்று இந்த உலகில் உள்ள எல்லா பெண்களும் மரியாளைப் போல

 • தேவ கிருபை நிறைந்தவர்களாயும்,

 • தேவனுக்குப் பிரியமானவர்களாயும்,

 • எப்போதும் இயேசுவின் மன உணர்வோடு நெருக்கமானவர்களாயும்,

 • எந்த துன்ப சோதனையிலும் இயேசுவை விட்டு ஓடாதவர்களாயும்,

 • மரியாளைப் போல ஆவிக்குரிய ஆதி சபையோடு எப்போதும் ஐக்கியம் கொண்டவர்களாயும்,

 • தங்கள் குடும்பங்களுக்கும், இந்த உலகுக்கும் மீட்பைப் பெற்றுத்தரும் மரியாளாகவும் இருந்தால், இந்த மூன்றாம் வார்த்தையின் விஷேச அருளை நாமெல்லாம் அடையலாம்.


மாதிரியான யோவான் :

அதுபோலவே, இயேசுவை பின் செல்லும் சீடர்களுக்கெல்லாம், யோவானை ஒரு முன் அடையாளமாக ஏற்று கொள்வோம்.

 • எல்லா சீடரும் - யோவானைப் போல், கிருபை நிறைந்தவராக இருக்க வேண்டும்.

 • எல்லா சீடரும் - யோவானைப் போல், எந்த துன்பத்திலும், இயேசுவிடம் நெருக்கமாக இருக்க வேண்டும்.

 • எல்லா சீடரும் - யோவானைப் போல், கடவுளின் அன்பை பிரதிபலிக்க வேண்டும்.

 • எல்லா சீடரும் - யோவானைப் போல், இயேசுவோடும், அவரது மனநிலையோடும் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்.

 • எல்லா சீடரும் - யோவானைப் போல், இயேசு மனதில் நினைப்பதை விரைந்து செய்து முடிக்கும் நம்பிக்கைக்குரிய சீடனாக இருக்க வேண்டும் (யோவா 19:27). அப்போது, இந்த நாளுக்குரிய எல்லா ஆசீரும் நமக்கும், நம் குடும்பங்களுக்கும் அதிகமாக பொழியப்படும் - ஆமென்.

 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in