ஐந்தாவது வார்த்தை“தாகமாயிருக்கிறேன்”… (யோவா 19:28)Rev.Fr.R.John Josephஇந்த ஐந்தாவது வார்த்தையை நாம் நான்கு தலைப்புகளின் கீழ் இங்கு தியானிப்போம்.

 • தாகத்தின் பொது விளக்கம்
 • வேதத்தில் தாகம்
 • இயேசுவின் தாகம்
 • நித்திய தாகம்

I. தாகத்தின் பொது விளக்கம்


 • ''தாகம்'' என்ற வார்த்தை ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஆர்வம் போன்ற பல வார்த்தைகளில் தம் பொருளை வெளிப்படுத்துகின்றது.
 • இல்லாத ஒன்றை அடைவதற்கான ஒரு உள் உந்து சக்தியை, ''தாகம்'' என்று பொதுவாக கூறலாம்.
 • பொதுவாக சரீரத்துக்கு தேவையான தண்ணீருக்காக, சரீரத்தில் உண்டாகும் ஒரு சரீர உணர்ச்சியை ''தண்ணீருக்கான தாகம்'' என்கிறோம்.


மூன்று வகை தாகங்கள்

 • தண்ணீருக்கான சரீர தாகம்
 • இல்லாத ஒன்றை அடைய ஏங்கும் மன தாகம்
 • ஆத்மாவுக்கு தேவையான ஆத்மீக தாகம்

II. வேதத்தில் தாகம்


வேதத்தில் பொதுவாக, இரண்டு வகை தாகங்களைப் பற்றி, சொல்லப்படுவதைப் பார்க்கிறோம்.

 • சரீர தாகம்
 • ஆத்மீக தாகம்

இவற்றை பற்றி, சுருக்கமாக இங்கே காண்போம்.


1. பழைய ஏற்பாட்டில், சரீர தாகம்


1. பொது மக்களின் தாகம் :

 • வனாந்தரத்தில் தண்ணீர் இல்லாததால், மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
 • "நீர் எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் தண்ணீர் தாகத்தினால் கொன்று போட, எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர்?" என்றார்கள் (யாத் 17:3).
 • இஸ்ரவேல் ஜனங்களின் துன்பத்தைப் பற்றி கூறும் போது, ஏசாயா இவவாறு கூறுவார்.
 • "அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்" (ஏசா 5:13).
 • அதுபோலவே தேவன் தம் மக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணும்போது, "அவர்கள் இனி தாகமடையார்" என்று கூறினார். (ஏசா 49:10).
 • மேலும் 2 நாள் 32:11, ஏசா 41:17, 48:21, 55:1, 2சாமு 17:29, சங் 107:5 ஆகிய இடங்களில் பொது மக்களின் சரீர தாகத்தைப்பற்றி பழைய ஏற்பாடு கூறுகிறது.


2. தனி மனிதர்களின் சரீர தாகம் :

 • சிம்சோன் தன்னுடைய தாகத்தைப் பற்றி கூறும் போது, "இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனமில்லாதவர்களின் கையிலே விழ வேண்டுமோ?" என்றார் (நியா 15:18).
 • சிசோரா, யாகேலை நோக்கி "குடிக்க எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா; நான் தாகமாயிருக்கிறேன்" என்றார் (நியா 4: 19).
 • தாவீது தன் தாகத்தைப் பற்றி கூறிய போது, "என் தாகத்துக்கு காடியை குடிக்கக் கொடுத்தார்கள்" என்றார் (சங் 69: 21).


3. பூமியின் தாகம் :

 • மனிதனின் சரீர தாகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், பூமியின் தாகத்தையும் பழைய ஏற்பாடு கூறுகிறது.
 • ஏசாயா 35:7--ல், தாகமுற்ற நிலத்தை "வெட்டாந்தரை" என்றும், ஏசாயா 44:3 – ல் தாகமுற்ற நிலத்தை "வறண்ட நிலம்" என்றும் பைபிள் கூறுகிறது.


4. உயிரினங்களின் தாகம் :

 • சங் 104: 11, "காட்டிலுள்ள கழுதைகளின் தாகத்தைப்" பற்றி கூறுகிறது.
 • சங் 50: 2, "நீரில் உள்ள மீன்களின் தாகத்தைப்" பற்றி கூறுகிறது.


2. பழைய ஏற்பாட்டில் ஆத்மீக தாகம்


 • சங்கீதக்காரருக்குண்டான ஆத்மீகத் தாகத்தைப் பற்றி, அவர் தம்முடைய சங்கீதங்களில் குறிப்பிடுகின்றார்.
 • "என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது" (சங் 42:2).
 • "என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" (சங் 63:1).
 • "வறண்ட நிலத்தைப் போல், என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" (சங் 143:6)


3. புதிய ஏற்பாட்டில் சரீர தாகம்


 • சமாரியப் பெண்ணிடம், இயேசு கூறும் போது "இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு, மறுபடியும் தாகம் உண்டாகும்" என்றார் (யோவா 4: 13).
 • தீர்வை நாளுக்காக ஆயத்தமாக இருந்தவர்களைப் பார்த்து, "நான் தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்" என்றார் (மத் 25: 35).
 • மேலும் சரீர தாகத்தைப் பற்றி, புதிய ஏற்பாட்டில் ரோமர் 12: 20, 1கொரி 4:11, 2கொரி 11:7, வெளி 7:16 ஆகிய வசனங்களில் பார்க்கிறோம்.


4. புதிய ஏற்பாட்டில் ஆத்மீக தாகம்


 • சமாரியப் பெண்ணிடம், இயேசு கூறுகையில் "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருபோதும் தாகம் உண்டாகாது" என்றார் (யோவா 4:1).
 • மேலும் "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன், ஒருக்காலும் தாகமடையான்" என்று கூறினார் (யோவா 6: 35).
 • யோவா 7: 37--ல், ஆத்மீக தாகம் கொண்ட யாவரும், தன்னிடம் வர வேண்டுமென்று இயேசு அழைக்கிறார்.
 • மேலும், ஆத்மீகத் தாகத்தைப் பற்றி, புதிய ஏற்பாட்டில் வெளி 21:6, 22:17 ஆகிய வசனங்களில் பார்க்கிறோம்.


III. இயேசுவின் தாகம்


 • "தாகமாயிருக்கிறேன்" -- (யோவா 19: 28).


பின்னணி:

 • முழு வசனம்: 'அதன் பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேத வாக்கியம்
 • நிறைவேற்றுவதற்காக "தாகமாயிருக்கிறேன்" என்றார்'.
 • யோவா 19: 28 – ன் முழு வசனத்தையும் நாம் ஆராயும் போது, "தாகமாயிருக்கிறேன்" என்ற இயேசுவின் ஐந்தாவது வார்த்தை, மூன்று முக்கியமான வார்த்தைகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கிறோம்.
 • "அதன் பின்பு"
 • "எல்லாம் முடிந்தது என்று அறிந்து"
 • "வேத வாக்கியம் நிறைவேற"


1. அதன் பின்பு

 • இந்த "அதன் பின்பு" என்ற வார்த்தைக்கு முன்னால், இரண்டு முக்கியமான வசனங்கள் வருவதைப் பார்க்கிறோம். வசனங்கள் 26, 27.
 • இந்த இரண்டு வசனங்களும், இயேசுவினுடைய மீட்புப் பணியின் முக்கியமான இறுதிக்கட்டத்தைக் குறிப்பதாகவே இருந்தன.
 • இயேசுவுக்கு "தந்தை" --- "பிதாவானவர்".
 • இயேசுவுக்கு "தாய்" --- "மரியாள்"
 • பிதாவுக்கு செய்ய வேண்டிய "மீட்பின் கடமையை" இறுதியாக இயேசு கெத்சமெனியில்
 • "ஆமென்" சொல்லி ஆரம்பித்து (மத் 26:39), பாடுகளின் பாதையெங்கும் வலம் வந்து, மனித குலத்தின் பாடுகளையும், பாவங்களையும் "தாமே தூக்கிச் சுமந்து" கொல்கொத்தா வரையிலும் வந்தார்.
 • அங்கே பிதாவின் விருப்பமாகிய, "சிலுவையில் அறையப்படுதல்" நிறைவேறுகிறது.
 • தாய்க்கு செய்ய வேண்டிய "உலகக் கடமையை" இறுதியாக இயேசு, யோவான் 19: 26, 27.
 • வசனங்களில் நிறைவேற்றுகிறார்.
 • இந்த இரண்டு கடமைகளையும் "நிறைவேற்றிய பின்பு" என்பது தான், "அதன் பின்பு" என்பதன் பொருள்.


2. எல்லாம் முடிந்தது என்று அறிந்து


 • அதாவது, இயேசு தன் பிதாவுக்கு செய்ய வேண்டிய "மீட்பின் கடமையையும்", தாய்க்குச் செய்ய வேண்டிய "உலகக் கடமையையும்" தாம் நிறைவேற்றி "முடித்து விட்டோம் என்று அறிந்து" -- என்று பொருள் கொள்ளலாம்.


3. வேத வாக்கியம் நிறைவேற


 • சுவிசேஷம் முதலாவதாக யூதர்களுக்கு எழுதப்பட்டது.
 • யூதர்களின் திருமறை, பழைய ஏற்பாடு.
 • எனவே யூதர்களுக்கு இயேசுவைப் பற்றி கூறும் போது, "இயேசு தான் மெசியா" என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்து நிரூபிக்க வேண்டியது, சுவிசேஷர்களுடைய கடமையாக இருந்தது.
 • மெசியாவாகிய இயேசு, தம்முடைய "மீட்பின் பணியை", "வேத வாக்கியங்களின் படியே" செய்து முடித்தார் என்று கூறி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விளக்கினர்.
 • அவ்வாறே இங்கும் சங் 69:21, 22:15 என்ற வேத வாக்கியங்கள் நிறைவேற இயேசு "தாகமாயிருக்கிறேன்" என்று கூறுவதாக யோவான் கூறுகிறார்.


இந்த மூன்று வார்த்தைகளின் பின்னணியில் ஐந்தாவது வார்த்தை


 • "வேத வாக்கியங்களின் படி", மெசியாவுக்கு ஒரு "தாகம்" இருந்தது. சங் 69:28, 22:15 -ல் வரும் "தாகம்" தாவீதுக்குண்டான சரீர தாகம் என்றாலும்,
 • மெசியாவுக்குரிய "முன்னுரைத்தல்" மூலமாக, இந்த தாகம் மெசயாவின் "ஆத்மீக தாகமாக" மாறுகிறது.
 • எனவே மெசியாவுக்கு "ஒரு தாகம் உண்டு" என்பது, பழைய ஏற்பாட்டின் முன்னுரைத்தல் ஆகும்.
 • மேலும் மெசயா இந்த உலகுக்கு வருவதே, "உலகத்தை மீட்டு இரட்சிக்க" (1திமோ 1:15).
 • எனவே அந்த தாகம் "மீட்புக்கான - தாகமாக" நாம் கருத இடம் உண்டு.
 • மேலும் அந்த "மீட்பின் தாகத்தை" தீர்க்க, இயேசு மற்றொரு தாகமுற்றார் என்றும், புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறது (மத் 20:22, லூக் 12:50) – அது “பாடுகளின் தாகம்”.
 • பிதாவுக்கு செய்யும் கடமையாகிய, "பாடுகளின் தாகம்" தாய்க்கு செய்ய வேண்டிய
 • கடமையாகிய "அன்பின் தாகம்" "முடிந்தது" என்று காண்கிறோம்.
 • அதன் பிறகு, இயேசு தம்முடைய "நித்திய தாகத்தை", இந்த ஐந்தாம் வார்த்தை மூலமாக "தாகமாயிருக்கிறேன்" என்று வெளிப்படுத்தினார்.
 • இயேசு இரண்டு முறை தாகம் கொண்டார்.
 • முதன்முறை இயேசு தம் சீடர்களிடம், மத் 20:22-ல் வெளிப்படுத்திய "பாடுகளின் தாகம்".
 • பின்பு மத் 26:30-ல் இயேசு பிதாவிடம் வெளிப்படுத்திய "பாடுகளின் தாகம்".
 • முதன்முறை இயேசு வெளிப்படுத்திய இந்த இரண்டு பாடுகளின் தாகமும், யோவான 19:30-ன் படி, கல்வாரியில் நடந்து "முடிந்தது".
 • இரண்டாம்முறை - இயேசு தம் "பாடுகளின் தாகத்தை" மத் 19:28-ல் மீண்டும்
 • வெளிப்படுத்தினார்.
 • இந்த இரண்டாம் முறை வெளிப்படுத்திய "தாகத்தை தான்", ஐந்தாவது வார்த்தையில் காண்கிறோம்.


இயேசுவின் தாகமும் - பாடுகளும்


தண்ணீரும் - குடித்தலும்:

 • "தாகம்" என்ற வார்த்தைக்குள் "தண்ணீர்", "குடிப்பது" என்ற இரண்டு வார்த்தைகளும்,
 • உள்ளடங்கி இருப்பதைக் காண்கிறோம்.
 • பொதுவாக எந்த தாகமும் "தண்ணீருக்காகவே" இருக்கும்.
 • அதுபோலவே, எந்த தாகமும் "குடிப்பதற்காகவே" இருக்கும்.
 • எனவே இயேசுவுக்குண்டான தாகத்திலும் தண்ணீரும், குடித்தலும் நிச்சயமாக உண்டு.
 • 'நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க முடியுமா?' (மத் 20:22) என்று இயேசு,
 • தம் சீடரிடம் கேட்டார்.
 • இங்கே பாத்திரம் என்பது "தண்ணீரைக்" குறிக்கும்.
 • அதுபோலவே "என் பிதாவே, இந்த பாத்திரம் நான் பானம் பண்ணினாலொழிய, இது என்னை விட்டு நீங்க கூடாதாகில் உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது" (மத் 26:39).
 • இங்கு "பானம் பண்ணுதல்" என்றால் "குடித்தல்" என்று அர்த்தம்.
 • ஆக மத் 20:22, 26:39-ல் சொல்லப்படும் பானமும், பானம் பண்ணுதலும் "பாடுகளின்"
 • பானமும், பான பாத்திரமும் என்றே அறிகிறோம்.


மீட்பின் தாகமும் -- பாடுகளின் தாகமும்


 • இயேசு எதற்காக இந்த பூமிக்கு வந்தார்? "பாவிகளை மீட்டு இரட்சிக்க" (1திமோ 1:15).
 • இயேசு எவ்வாறு பாவிகளை மீட்டு இரட்சித்தார் என்றால், "தன்னுடைய பாடுகளாலும் -
 • மரணத்தாலுமே" (மத் 20:28).
 • எனவே இயேசு "உலக மீட்பு" என்ற தம்முடைய இலட்சியத்தை அடைய, "பாடுகள் -
 • மரணத்திற்காக" தாகித்தார்.
 • பொதுவாக தாகம் என்றால், ஒன்றை அடைவதற்கான ஒருவருடைய மன, சரீர "ஏக்கம்"
 • என்றும் கூறலாம்.
 • "மீட்பு" என்ற ஒரு பொருளை வாங்குவதற்காக, இயேசு கொடுக்க வேண்டிய விலை
 • "இரத்தம் சிந்துதல்" என்ற தன்னுடைய "பாடுகளும் மரணமும்" ஆகும் (எபி 9:22).
 • ஒருவர் தான் வாங்க வேண்டிய பொருளுக்காக தாகிப்பது போலவே, அந்த பொருளுக்குண்டான விலைக்காகவும் தாகிக்க வேண்டும்.
 • மனுக்குல இரட்சிப்புக்காக இயேசு எந்த அளவுக்கு தாகமுற்றாரோ, அந்த அளவுக்கு மீட்புக்கு
 • கொடுக்க வேண்டிய விலைக்காகவும் இயேசு தாகமுற்றார்.
 • அதுவே "பாடுகளின் தாகம்".


உதாரணமாக :

 • ஒரு மகனுக்கு தன் தாயினுடைய நோய் எப்படியாவது தீர வேண்டுமே என்ற ஏக்கம் அல்லது தாகம் உண்டானது.
 • ஆனால் தாய்க்கு சிகிட்சை செய்ய பணம் வேண்டும்.
 • எனவே அந்த பணத்துக்காக அவன் ஏக்கமுற்றான்.
 • போதுமான பணம் உண்டாக்க வழி, "பாடுபட்டு உழைப்பது" ஒன்றே ஆகும்.
 • எனவே அவன் அதிகமாக பாடுபட்டு உழைக்கும் ஒரு வேலைக்காக ஏங்கினான்..
 • தன் தாயின் "நோய் நீங்குவது" என்ற தாகத்தை தீர்க்க, அவன் "கடின உழைப்பு" என்ற தாகத்தை அடைகிறான்.
 • இயேசு இந்த பூமிக்கு வந்ததன் இறுதி குறிக்கோள் 'உலக மீட்பு'.
 • அதை அடைய வேண்டிய ஒரே வழி "இரத்தம் சிந்துதலும், மரணமுமே" (எபி 9:22).
 • எனவே இயேசு பாடுகளுக்காகவும், மரணத்திற்காகவும் தாகமுற்றார் என்றால் அதில் வியப்பொன்றுமில்லை.


இரண்டு முறை தாகம்


 • "உலக மீட்புக்காக" இயேசு "பாடுபட" ஏற்கெனவே மத் 20: 22,28-ல் தாகமுற்றார்.
 • இந்த மீட்புக்கான பாடுகளும் மரணமும் என்ற இயேசுவின் முதல் தாகம், சிலுவையில் இயேசு உயிர்விடும் கடைசி நிமிடங்களில் யோவான் 19: 30 --ல் நிவர்த்தியாகிறது-
 • ஆனால் இயேசுவினுடைய வருகையின் தாகமாகிய, உலக மீட்பை தன் பாடுகளின்
 • தாகத்தால் அவர் அடைந்து முடிக்கின்ற அதே நேரத்தில், இயேசு இரண்டாம் முறையாக
 • தாகமுற்றார் (யோவா 19: 28).
 • அதுவே சிலுவையின் ஐந்தாவது வார்த்தை.
 • இயேசுவினுடைய முதல் தாகம் முழுமையாகத் தீருகின்ற அதே வேளையில், அவர் தொடர்ந்து தாகப்படுவதில் நிச்சயமாக ஒரு கருத்து இருக்கத்தான் வேண்டும்.


IV. நித்திய மீட்பும் நித்திய தாகமும்


 • இயேசு தம் சிலுவையின் பாடுகளாலும், மரணத்தாலும் ஒரு மீட்பின் சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தார்.
 • ஆனால் அந்த மீட்பின் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் (ரோம 8:25).
 • மீட்பு பணியின் முடிவு என்பது உலகத்தின் முடிவு ஆகும்.
 • எனவே உலகின் கடைசி நாளில் பிறக்கின்ற கடைசி மனிதன் மீட்பை அடைவது வரையிலும், "மீட்பின் பணி" தொடர வேண்டும்.
 • இயேசுவுக்கு "மீட்பின் பணி" என்பது, அவருடைய பாடுகளும் மரணமுமே
 • எனவே இயேசு மரித்த பின்பும் மீட்பின் பணி தொடர்வது போலவே, அதை அடைவதற்கான பாடுகளின் பணியும் தொடர வேண்டும்.
 • மரித்த இயேசு, உலகம் முடிவு பரியந்தம் மனிதரோடு இருக்கிறார். எதற்காக? உலகின் கடைசி மனிதரையும் மீட்க.
 • எனவே இயேசுவினுடைய மீட்பின் தாகம் தொடர்வது போலவே, மரித்த பின்பும் அவருடைய பாடுகளின் தாகமும் தொடர்கிறது.


1. திருச்சபையில் மீட்பின் தாகம்


 • இயேசு உலகில் தொடர்ந்து வாழ்வது, அவருடைய திருச்சபையில்.
 • இயேசுவின் திருச்சபை இயேசுவின் மீட்புக்கான தாகத்தை தொடர்கிறது.
 • இவ்வாறு மீட்புக்கு விலையான பாடுகளின் தாகத்தையும் திருச்சபை கொண்டுள்ளது.
 • ஐந்தாவது வார்த்தையில், இயேசுவுக்குண்டான தாகம் திருச்சபையில் தொடர்கிறது.
 • "இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அனுபவிக்கின்ற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாமிசத்திலே நிறைவேற்றுகிறேன்" (கொலோ 1:24).
 • "எப்படியாகிலும் சிலரையாவது இரட்சிக்கும்படிக்கு, நான் எல்லாருக்கும் எல்லாமானேன்".
 • (1கொரி 9: 19-22)
 • "கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும், உங்களுக்காக மறுபடியும் நான் கர்ப்ப வேதனைப்படுகிறேன்" (கலா 4:19).
 • மேற்சொன்ன வசனங்களின்படி, மீட்பின் தாகத்தைக் கொண்ட திருச்சபை அதை அடைவதற்கான "பாடுகளின் தாகத்தையும்" கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. இது சபைக்குரிய 'பாடுகளின் தாகம்'.
 • அதுபோலவே ஒவ்வொரு விசுவாசியிடத்திலும் மீட்பின் தாகம் இருப்பது போலவே, அதை
 • அடைவதற்கான "பாடுகளின் தாகமும்" இருக்க வேண்டும் என்று ஆதிசபை உபதேசிக்கிறது.
 • "கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு, அவருடனே கூட பாடுகள் பட வேண்டும்" (ரோம 8: 17).
 • "கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும் படியாக, அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகள் ஆனதால் சந்தோஷப்படுங்கள்" (1பேது 4:13).
 • "தேவன் மேல் பற்றுதலாயிருக்கிற மனசாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய் பாடுபட்டு, உபத்திரவங்களை பொறுமையாய் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்" (1பேது 2: 19).
 • "இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காக பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி, உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப் போனார்" (1பேது 2:21).
 • இவ்வாறு மீட்புக்காக ஏக்கமுறும் ஒவ்வொரு விசுவாசியும் அதை அடையும் வழியான, பாடுகளுக்காகவும் தாகமுற வேண்டும் என்று ஆதிசபை படிப்பித்தது.


2. இரத்தசாட்சிகளும் பாடுகளின் தாகமும்


 • "இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலேயே தோய்த்து வெளுத்தவர்கள்..... இவர்கள் இனி தாகமடைவதில்லை" (வெளி 7: 14,16).
 • இந்த வசனம் பரலோகத்தில் ஜீவிக்கின்ற பரிசுத்தவான்களைப் பற்றி, யோவானுக்கு
 • கொடுக்கப்பட்ட வெளிப்பாடு.
 • இதில் ஒரு பெரிய சத்தியம் அடங்கியிருக்கிறது.
 • ஒருவர் மீட்கப்பட்டு பரலோகத்தை அடைய, அவர் இவ்வுலகில் தமக்கு பாடுகளை ஏற்று, இவ்வாறு இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமடைய வேண்டும்.
 • இயேசுவுடைய "பாடுகளின் தாகத்தில்" பங்குபெற்றவர்களுக்கு, பரலோகத்தில் அவருடைய மகிமையில் பங்கு உண்டு.
 • யோவான் கூறும் பரலோகவாசிகளுக்கு இனி தாகமில்லை. காரணம் அவர்கள் இரத்தசாட்சிகளாகி, தங்கள் பாடுகளின் தாகத்தை தீர்த்துக் கொண்டார்கள்.
 • திருச்சபையில் தொடரும் இயேசுவின் தாகம் கல்வாரியில் ஐந்தாவது வார்த்தை மூலமாக, இயேசு வெளிப்படுத்திய"'பாடுகளின் தாகம்"
 • ஒவ்வொரு விசுவாசியிலும் திருச்சபையிலும் தொடர வேண்டிய "பாடுகளின் தாகமே".
 • ஆதியில் இந்த பாடுகளின் தாகமே, திருச்சபையினுடைய வளர்ச்சிக்கு அடிகோலியது.
 • திருச்சபை தன் மீட்பின் பணியை செய்த போது, விசுவாசிகளை பாடுகளில் தாகப்பட தூண்டியது.
 • பாடுகளின் மட்டில் வைக்கும் தாகத்தால் மாத்திரமே, சொர்க்க ராஜ்யத்தை அடைய முடியும் என்று உபதேசித்தது (அப 14:22).
 • எனவே தான், வேதகலாபனையின் காலத்தில் இரட்சிப்படைந்தவர்களின் கூட்டம்
 • வளர்ந்தோங்கியது.
 • "வேதசாட்சிகளின் இரத்தம்" - "விசுவாசத்தின் வித்து" ஆனது.
 • ஒரு இரத்தசாட்சியின் "பாடுகளுக்கான தாகம்" ஓராயிரம் இரத்தசாட்சிகளை உருவாக்கியது.
 • பேதுருவில் ஆரம்பித்து (அப 5:41), ஸ்தேவானில் தொடர்ந்து (அப 7:57, 60), உரோமை,
 • கிரேக்க பேரரசுகளையே கைப்பற்ற செய்த "பாடுகளின் தாகம்" என்ற ஐந்தாவது வார்த்தை, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அகில உலகத்தையே, மீட்பின் பாதைக்கு கட்டி இழுத்துச் செல்கிறது.
 • இன்று இந்த ஐந்தாவது வார்த்தையை தியானிக்கும் நாமும், பாடுகளை அருவருக்கத்தக்க ஒன்றாக கருதாமல், 1கொரி 1:18-ன் படி நமது மீட்புக்காக ஏற்றுக் கொள்வோம்.
 • இயேசுவைப்போல பாடுகளுக்காக தாகமுற்று, இயேசுவின் மகிமையில் பங்காளிகளாவோம். ஆமென். 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in