ஆறாவது வார்த்தை (யோவா 19:30)


“எல்லாம் முடிந்தது”


“இயேசு காடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்”.


I. முகவுரை :-

 • “எல்லாம் முடிந்தது” என்ற ஆறாவது வார்த்தை, யோவா 19:30-ல் வருவதைக் காண்கிறோம்.
 • “யோவான் நற்செய்தி” வெறும் சரித்திர நற்செய்தி அல்லாமல், அது ஒரு இறையியல் நற்செய்தி என்பதை நாம் அறிவோம்.
 • எனவே இந்நற்செய்தியில் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் மிகுந்த இறையியல் பொருள் உண்டு எனபதை நாம் அறிந்து கொள்வோம்.
 • “எல்லாம் முடிந்தது” என்ற இயேசுவின் வார்த்தை, முன்னாலும் பின்னாலும், இரண்டு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வருவதை பார்க்கிறோம்.


1. முதல் நிகழ்ச்சி :

“இயேசு காடியை வாங்கிய பின்பு”

30-ம் வசனத்தின், முதல் பகுதியாகிய, “காடியை சுவைக்கும்” நிகழ்ச்சி, இயேசுவின் முழு வாழ்வோடும், பணியோடும், மிகவும் தொடர்புடையது.


மத் 20:22

 • “நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்னானத்தை, நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா?” என்றார்.
 • இங்கு இயேசு குடிப்பதற்காக கூறும் பாத்திரம், மீட்புக்காக இயேசு அனுபவிக்கப் போகும் பாடுகளின் பாத்திரமே.
 • இதை ஏற்கனவே, மத் 2:28, மத் 16:21, மத் 20:18, மத் 26:12 ஆகிய இடங்களில் இயேசு கூறியிருந்தார்.
 • எனவே, இயேசு குடிப்பதாக கூறும் பாத்திரம், இயேசு மீட்புக்காக படப்போகும் பாடுகளே.


மத் 26:42

 • “என் பிதாவே, இந்த பாத்திரத்தில், நான் பானம் பண்ணினாலொழிய, இது என்னை விட்டு நீங்கக் கூடாதாயின், உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது”.
 • இங்கு குறிப்பிடப்படும் பாத்திரமும், இயேசு மீட்புக்காக அனுபவிக்கப் போகும் பாடுகளின் பாத்திரமே.
 • தான் பாடுபடுவதற்கு முந்தி, கெத்சேமனே தோட்டத்தில், ஜெபிக்கும் போது இயேசு இதை கூறினார்.
 • இவ்வாறு இயேசு இவ்வுலகில் மனிதரை மீட்க, அவருக்கு பிதா குறிப்பிட்ட, பாடுகள் எனும் பானத்தின் கடைசி துளியையும் குடித்து, தன் பணியை நிறைவேற்றினார்.
 • இதையே, யோவான் நற்செய்தியாளர், 19:30-ல் குறிப்பிடுகின்றார்.
 • மத் 27:34-ல் இயேசு குடிக்க விரும்பாத காடியை, யோவா 19:30-ல் இயேசு “சுவைத்தார்” என்று பார்க்கின்றோம்.
 • இதில் யோவானைப் பொறுத்தவரையிலும், இயேசு தாம் படவேண்டிய பாடுகளை முழுமையாக நிறைவேற்றி முடித்தார் என்பதற்கு அடையாளமாகவே, இந்த முந்திய நிகழ்ச்சியை அமைத்து தருகிறார்.


2. இரண்டாம் நிகழ்ச்சி :

“தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்”

 • “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தையை சொன்ன பின்பு, இந்த நிகழ்ச்சியை யோவான் நற்செய்தியாளர் தருகிறார்.
 • முதல் நிகழ்ச்சியோடு “ஆறாவது வார்த்தை” தொடங்குகிறது. இரண்டாவது நிகழ்ச்சியோடு, “ஆறாவது வார்த்தை” முடிகிறது.
 • “எல்லாம் முடிந்தது” என்ற “ஆறாவது வார்த்தையின் முழுப்பொருளும், தொடர்ந்து வரும் நிகழ்ச்சியிலேயே நிறைவேறுகிறது.
 • தலைசாய்த்து உயிர்விடுவது என்பது, சொன்னதை முடிப்பதாக உள்ளது.
 • இந்த நிகழ்ச்சியிலும் ஆறாம் வார்த்தைக்கு தொடர்புடைய ஒரு இறையியல் பொருள் வருவதை பார்க்கிறோம்.
 • பொதுவாக சிலுவையில் தொங்குபவர்கள், எப்போதும் தலையை நிமிர்த்தே வைத்திருப்பார்கள் - மூச்சுத் திணறல் காரணமாக.
 • உயிர் போன பின்பே தலை சாயும்.
 • ஆனால், இயேசுவோ, தலையை சாய்த்து, உயிர்விட்டார்.
 • அவர் தன் முழு விருப்பத்தாலும், கடமையுணர்வாலும் தன் மீட்பின் பணியை செய்து, மகிழ்ச்சியோடும், நிறைவோடும் அதை முடிப்பதாக இது அமைகிறது.
 • போரில் வெற்றி பெற்ற மகன், தன் பகைவனின் தலையை கொண்டு வந்து, தன் தந்தையின் பாதத்தில் வைப்பது போலவே இந்நிகழ்ச்சி முடிகிறது.
 • இவ்வாறு “சொல்லில்” மட்டுமல்ல, “செயலிலும்” எல்லாம் முடிகிறது.


II. இனி “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தையின் உட்பொருளைக் காண்போம்

 • இதற்கு பரிசுத்த யோவான் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை “TETELESTAI” – “தெதேலேஸ்தாயி” என்பது.
 • இதன் முழுப்பொருள், எல்லாம் முழுமையாகவும், வெற்றிகரமாகவும், நிறைவேறியது என்பதாகும்.
 • ‘தெதேலேஸ்தாயி’ என்பது, “ஒரு வெற்றியின் அறைகூவல்”, “ஒரு வேதனையின் முனகல்” அல்ல.
 • போரின் வெற்றிச் செய்தியைக் கொண்டு வரும் படைவீரன், அரசரிடம் வந்து, அவரை வணங்குவதற்கு முந்தி, முதலில் சொல்லும் வாரத்தை, “தெதேலேஸ்தாயி”.
 • இயேசுவும், அதே வார்த்தையைப் பயன்படுத்தி, பிதாவுக்கு முன்பு, தலைசாய்த்ததாக பரிசுத்த யோவான் கூறுகிறார்.


III. இயேசு கூறிய “தெதேலேஸ்தாயி” என்ற வாரத்தையின் பொது விளக்கம் (MATHEW HENRY – என்பவரின் விளக்கவுரையிலிருந்து)

இயேசு, தன் உயிர் மூச்சை கையளிக்கும் போது, சொன்ன மரண வார்த்தை இது.

 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது - இயேசுவை சித்திரவதை செய்தவர்களின், கொடூரத்தினுடையவும், பயரங்கரத்தினுடையவும், பகையினுடையவும் உச்ச கட்டம் முடிந்தது.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது - இயேசு படவேண்டிய பாடுகளைப் பற்றிய, பிதாவின் விருப்பமும், கட்டளையும் முடிந்தது. பாடுகளின் தொடக்கத்தில், “பிதாவின் சித்தத்தின் படியே ஆகக்கடவது” – மாற் 14:36 என்றார் - பாடுகளின் முடிவில், “பாடுகளின் சித்தம் முழுமையும் செய்து முடிக்கப்பட்டது” என்றார்.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது – பாடுபடும் மெசியாவைப் பற்றிய, பழைய ஏற்பாட்டின் முன்னுரைத்தல்கள், எல்லாம் நிறைவேறி முடிந்தன.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது – பழங்காலத் திருச்சட்டத்தின் அலங்கார ஆட்சி முடிந்து, தேவ கிருபையின் ஆட்சிக்கு அடிப்படை போடப்பட்டது.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது – பாவத்தின் அந்தகார ஆட்சி முடிந்தது. பாவபரிகாரியாகிய தேவாட்டுக் குட்டியின் பலி முடிந்தது.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது - இயேசு அனுபவித்த துன்பங்கள், வேதனைகள், பரிகாரம், நிந்தை, அவமானம், கொலை, கொடுமை, சதி, பயம், பயங்கரம் அனைத்தும் முடிந்தது.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது - இவ்வுலகில், மனிதனாகிய மட்டும், இயேசுவினுடைய வாழ்க்கை முடிந்தது.
 • தெதேலேஸ்தாயி – எல்லாம் முடிந்தது - இயேசுவின் மரணத்தோடு, அலகையின் ஆட்சி முடிந்தது. ஆவியானவரின் ஆட்சி மலர்ந்தது.


IV. வேதத்தில் தெதேலேஸ்தாயி :

A. பிதா : ஆதி 2:2-3

 • தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு,
 • ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஏழாம் நாளை ஆசீர்வதித்து, பரிசுத்தப்படுத்தினார்.


B. பிதா : ஆதி 2:2-3

 • பிதாவே, நான் செய்யும்படி, நீர் எனக்கு நியமித்த கிரியையை செய்து “முடித்தேன்”.
 • உலகம் உண்டாகும் முன்பே இருந்த மகிமையால் என்னை மகிமைப்படுத்தும்.

யோவான் : 4:34-35

 • என்னை அனுப்பினவருடைய சித்தப்படி செய்து, அவருடைய கிரியையை “முடிப்பதே” என் போஜனம்.
 • இதோ அறுப்புக்காலம் காத்திருக்கிறது.


C. சாலமோன் : 1 அர 9:1-3

 • சாலமோன், தேவனுக்கு ஆலயத்தையும், மற்றெல்லாவற்றையும் கட்டி “முடித்தபின்பு”,
 • கர்த்தர் இரண்டாம் முறை தரிசனமானார்.

 • அவர் செய்த வேண்டுதலையும், விண்ணப்பத்தையும் கேட்டார்.
 • ஆலயத்தை பரிசுத்தப்படுத்தினார்.
 • தம் இதயமும், கண்ணும் அதில் இருக்கும் என்றார்.

D. பவுல் : அப் 20:24

 • என் ஓட்டத்தை சந்தோஷத்தோட “முடிக்கவும்”,

 • இயேசுவிடமிருந்து பெற்ற ஊழியத்தை, நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

E. 2 திமோ 4:7-8

 • நல்ல போராட்டத்தை போராடினேன்.
  • ஓட்டத்தை “முடித்தேன்”, விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.

 • நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
 • விசுவாசி

F. லூக் 14:28-30

 • கோபுரத்தை கட்டத் தொடங்கி,
  • “முடிக்க” திராணியில்லாமல் போனால்,

 • பார்க்கிறவர் பரிகாசம் பண்ணுவர்.

V. தெதேலேஸ்தாயியும், நமது விசுவாச வாழ்வும் :

மேற்சொன்ன வசனங்களிலிருந்து, “தேவ சித்தத்தை செய்து முடிப்பதில்” தான் - மகிமையில் இளைப்பாறுதல் அடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது - ( மத் 25:23, 25:34-36).

 • பிதா, தன் முதல் சிருஷ்டிப்பை “முடித்துவிட்டு”, ஏழாம் நாளில் இளைப்பாறினார் – (ஆதி 2:2-3).
 • குமாரனோ, பிதாவின் சித்தமாகிய இரண்டாம் சிருஷ்டிப்பை “முடித்துவிட்டு”, மகிமையில் இளைப்பாறினார் - (யோவா 17:4-5).
 • நாமெல்லாம் புதிய சிருஷ்டி ஆவதே பிதாவின் சித்தம்.
 • புதிய சிருஷ்டியை நமக்குள் உருவாக்க நம்முடைய பழைய சிருஷ்டி சாக வேண்டும் - (கொலோ 3:5).
 • நமக்குள் கிறிஸ்து உருவாகும் போது, புதிய சிருஷ்டி உண்டாகிறது - (கலா 4:19, 2 கொரி 5:17).
 • ஆவியானவரின் சட்டத்தை கொண்டு, மாமிசத்தின் சட்டத்தை சாகடித்தால், கிறிஸ்து என்னும் புதிய சிருஷ்டி நமக்குள் உருவாகிறது - (உரோ 8:15,2).
 • நமக்குள் கிறிஸ்து என்னும் புதிய சிருஷ்டியை உருவாக்க ஆவியானவர் துணை செய்கிறார்.
 • ஆவியானவரின் துணையோடு, நாமும் இந்த சிருஷ்டிப்பின் பணியை செய்து “முடித்து”, பரிசுக்காக காத்திருக்க வேண்டும் - ( உரோ 8:20-30).
 • நமக்குள் ஏற்கனவே, கிறிஸ்து என்னும் புதிய சிருஷ்டியை அஸ்திபாரம் இட்டுள்ளோம் (1கொரி 3:11).
 • அந்த அஸ்திபாரத்தின் மேல், நாம் கட்டடத்தை “கட்டி முடிக்க வேண்டும்” -( கொலோ 2:7).
 • நம்முடைய வாழ்வின் இறுதியில், கட்டிடம் அஸ்திபாரத்தோடு முடியாமல் கிடப்பதுபற்றி, நாம் பரிகாசத்துக்குரியவர் ஆகக் கூடாது - லூக் 14:28-30).
 • எதையும், தொடங்குவதில் அல்ல, முடிப்பதிலேயே மீட்பு அடங்கியிருக்கிறது - ( மத் 10:22, 24:13).
 • கிறிஸ்து எனும் புதிய சிருஷ்டி, நமக்குள் உருவாக, நமக்குள் இருக்கும், “பாரமான யாவற்றையும், நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும், தள்ளிவிட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும், “முடிக்கிறவருமாயிருக்கிற” , இயேசுவை நோக்கி, நமக்கு நியமத்திருக்கிற ஓட்டத்தில், பொறுமையோடே ஓடக்கடவோம்”.
 • அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையை சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின், வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” – (எபி 12:1-2).
 • பிதா தன் முதல் சிருஷ்டிப்பை முடித்துவிட்டு, சமாதானத்தில் இளைப்பாறினர் – (ஆதி 2:2,3).
 • குமரன் தன் இரண்டாம் சிருஷ்டிப்பை முடித்துவிட்டு, பிதாவின் வலப்பக்கம் இளைப்பாறினார் - ( எபி 12:2).
 • பவுல் தன்னிடம் ஒப்படைத்த, இரண்டாம் சிருஷ்டிப்பின் பணியை முடித்துவிட்டு, பரிசிலுக்காக காத்திருந்தார் - (2 திமோ 4:7-8)
 • நமக்குள் கிறிஸ்து என்னும் புதிய சிருஷ்டி உருவாவதே பிதாவின் சித்தம் - (உரோ 8:29).
 • அந்த சித்தத்தை நிறைவேற்ற நாம் ஆரம்பித்தோம். அதை ஜெயத்தோடு செய்து முடிப்போம்.
 • நமது வாழ்வின் இறுதிநாளில், கிறிஸ்துவோடு சேர்ந்து, தெதேலேஸ்தாயி என்று கூறி, பிதாவின் வலப்பக்கத்தில் நிற்க, இந்த பரிசுத்த நாளில் விஷேச கிருபை, நமக்கு துணைபுரிவதாக.


 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in