ஆறாவது வார்த்தை (யோவா 19:30)எல்லாம் முடிந்தது - இது ஒரு “தொடக்கத்தின் முடிவு”I. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


1. எல்லாம் முடிந்தது :

 • யோவா 19:30 சொல்லும், “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் - “தெதேலேஸ்தாயி” என்று கூறுவர்.
 • இந்த வார்த்தைக்கு, எல்லாம் முடிந்தது என்று நாம் மொழிபெயர்த்தாலும், இது ஒரு முடிந்து போகிற முடிவு அல்ல. இதை ஒரு தீர்ந்து போகிற முடிவாகவும் கொள்ளலாகாது.


2. கடவுள் முடிவில்லாதவர் :

 • முடிவில்லாதவருக்கு எதுவும் முடிவாக இருக்கவும் முடியாது.
 • இயேசு, “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தையை, சிலுவையில் கூறினாலும், முடிவில்லாத இறைவனாகிய இயேசுவுக்கு எதுவும் முடிவாக இருக்காது.


3. மேலும், தெதேலேஸ்தாயி என்றால், “முடிந்தது” என்று மொட்டையாகக் கூறும் ஒரு பொருளை மாத்திரம் குறிப்பதில்லை :

 • இந்த வார்த்தை, அவருடைய பணியின் பின்னணியில் கூறப்பட்ட வார்த்தை.
 • அவருடைய பணி என்பது இரடசிப்பின் பணி.
 • ஒரு இரட்சிப்பில், இரட்சிப்பவர், இரட்சிக்கப்படுபவர் என இருவர் சம்மந்தப்படுகிறார்கள்.
 • தெதேலேஸ்தாயி என்பது, இரட்சிப்பின் பின்னணியில் கூறப்பட்டதென்றால், இரட்சிப்பவராகிய இயேசு அதைக் கூறினாலும், இரட்சிக்கப்படுபவரையும் தொடர்புபடுத்தியே அதைக் கூறுகின்றார்.


4. இரட்சிப்பு என்பது, தொடர்ச்சியாக நடைபெறுகின்ற ஒன்று :

 • எனவே, அதில் எல்லாம் முடிந்தது என்றுசொல்வதற்கு ஏதும் இல்லை.
 • எதுவும் தொடர்கிறதென்றால், அதில், “முடிவு + தொடக்கம்” என இரண்டும் சங்கிலியாக வந்த வண்ணமிருக்கும்.
 • ஒன்றின் முடிவு, மற்றொன்றின் தொடக்கமாயிருக்கும்.
 • அதுபோலவே, ஒன்றின் தொடக்கம், மற்றொன்றின் முடிவாயிருக்கும்.
 • நம்முடைய இரட்சிப்புக்காக, இயேசு ஒன்றை முடிக்கிறார் என்றால், அவர் மற்றொன்றை தொடங்குகிறார் என்று அர்த்தம்.
 • இயேசு சிலுவையில் ஒன்றை முடித்து, நம் மீட்புக்காக, மற்றொன்றை தொடங்கவே.
 • நம்முடைய மீட்பில் ஒன்றை தொடங்கி வைக்க இயேசு சிலுவையில் ஒன்றை முடிக்கிறார்.
 • மீட்பு என்றாலே, பழையது முடிந்து, புதியது தொடங்குவதாகும்.


a. இரட்சிப்பின் பணி :

 • எசா 43:18-19 பழையவற்றை முடித்து, புதியவற்றை ஆரம்பிக்கிறார் இறைவன்.
 • இயேசு கல்வாரியில் பழையவற்றை முடித்து, புதியவற்றில் ஆரம்பிக்கிறார்.
 • நம்மை மீட்பதற்காக. சிலுவையில் பழைய வாழ்வை சாகடித்து, புதிய வாழ்வை பெற்றெடுத்த இயேசு, இந்த ஆறாவது வார்த்தையால், பழையதை முடித்து, புதியதை ஆரம்பிக்கிறார்.
 • பழைய வாழ்வுக்கு அடித்தளமிடுவதே இரட்சிப்பின் பணி.


b. இரட்சிப்பின் வாழ்வு :

 • 2 கொரி 5:17 – பழைய படைப்பிற்கு முடிவு வந்ததும், புதிய படைப்பு நம்மில் ஆரம்பமாகிறது. இதுவே, இரட்சிப்பின் வாழ்வு.
 • எனவே, இயேசுகிறிஸ்து இன்று கல்வாரியிலே, தமது ஆறாவது வார்த்தை மூலமாக நமது பழைய வாழ்வை முடித்து, புதிய வாழ்வை தொடங்கினார். இவ்வாறு, நமது மீட்பின் வாழ்வில், முடிந்து போன பழைய வாழ்வையும், தொடங்குகின்ற புதிய வாழ்வையும் குறித்து, வேதம் தரும் பாடத்தை இன்று தியானிப்போம்.


II. புதுப்படைப்பு :

1. பிறப்பு


“தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்து, நமக்கு புதுப்பிறப்பு அளித்துள்ளார்” (1பேதுரு 1:3).

பழைய பிறப்பு :

ஊனுடலால் பிறப்பு : “ஊனுடலால் பிறப்பது ஊனுடலே” (யோவா 3:63).


புதிய பிறப்பு :

“கடவுளால் பிறப்பது” : இவர்கள், இரத்தத்தினாலோ, உடல்ஆசையினாலோ, ஆண்மகன் கொள்ளும் விருப்பத்தினாலோ பிறவாமல் கடவுளாலே பிறந்தவர்கள் (யோவா 1:13).

“வார்த்தையால் பிறப்பது” : நீங்கள் புதிதாய் பிறந்துள்ளீர்கள். அப்பிறப்பு உங்களுக்கு, அழிவுள்ள வித்தினாலன்று, அழிவில்லாத வித்தினால் கிடைத்தது. உயிருள்ளதும், என்றும் நிலைத்து நிற்பதுமான கடவுளின் வார்த்தையால் பிறந்துள்ளீர்கள்”. (1 பேதுரு 1:23). தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும் பொருட்டு, உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுத்தார் (யாக் 1:16).

“ஆவியில் பிறப்பது” : ஒருவன் நீரினாலும், ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழைய முடியாது. ஆவியால் பிறப்பது ஆவி (யோவா 3:5,6).


2. ஆவி


“உங்கள் உள்ளத்தில் நமது ஆவியை ஊட்டுவோம்” (எசே 36:27).

பழைய ஆவி :

தீய ஆவி : ஆண்டவரால் அனுப்பப் பட்ட தீயஆவி சவுலைப் பிடித்து கொண்டது. அவர்தம் வீட்டிற்குள்ளே அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார் (1சாமு18:10).

மனித ஆவி : மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார் (1கொரி 2:11).

அடிமையாக்கும் ஆவி : மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார் (1கொரி 2:11).


புதிய ஆவி :

அபிஷேக ஆவி : நீங்களோ அவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். அந்த அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது. ஆகவே, ஒருவரும் உங்களுக்கு கற்பிக்கத் தேவையில்லை. அவரது அபிஷேகமே உங்களுக்கு எல்லாவற்றை குறித்தும் கற்பித்து வருகிறது (1 யோவா 2:27).

கடவுளின் ஆவி : கடவுளின் உள்ளத்தில் இருப்பதை கடவுளின் ஆவியேயன்றி வேறெவரும் அறியார் (1கொரி 2:11).

தேவ ஆவி : பரிசுத்தமாக்கும் தேவ ஆவியாலும், உண்மை மீதுள்ள விசுவாசத்தாலும் நீங்கள் மீட்படைவதற்கென்று, கடவுள் உங்களை தொடக்க முதல் தேர்;ந்து கொண்டுள்ளார் (2தெச 2:13).

விடுதலை அளிக்கும் ஆவி : ஆண்டவர் என்றது ஆவியானவரைத் தான், ஆண்டவரின் ஆவியானவர் எங்கிருக்கிறாரோ, அங்கு விடுதலை உண்டு (2கொரி 3:17).


3. மொழி விசுவாசிப்பவரின் அருங்குறி


“விசுவாசிப்பவர்கள் புதிய மொழிகளை பேசுவர்” (மாற் 16:17).

பழைய மொழி :

குழப்பத்தின் ஆவி : பூமியெங்கும் வழங்கும் மொழிக்குழப்பம் அவ்விடத்தில் பிறந்தமையால், அதன் பெயர் பாபேல் எனப்பட்டது (தொ.நூ 11:9).


புதியமொழி :

ஆவியின் மொழி : எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத் தொடங்கினார் (தி.தூ 2:4).

அன்பு மொழி : நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் வழியாய் கடவுளின் அன்பும் நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5).


4. உள்ளம்


“உள்ளத்தின் ஆழத்தில் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்” (எபே 4:23).

பழைய உள்ளம் :

கடவுளை விட்டு தொலைவில் : “வாயால் இம்மக்கள் நம்மை அணுகி வருகின்றனர். உதட்டால் நம்மை போற்றுகின்றனர் அவர்கள் உள்ளமே நம்மை விட்டு தொலைவில் இருக்கிறது” (எசா 29:13).


புதிய உள்ளம் :

புதுப்பித்த உள்ளம் : இவ்வுலகம் காட்டும் மாதிரியை பின்பற்றாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று, முற்றிலும் மாற்றம் அடைவதாக (உரோ 12:2).


5. பார்வை


“இனிமேல் நாங்கள் ஊனக்கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை, இதற்கு முன் ஊனக்கண் கொண்டு கிறிஸ்துவைப் பார்த்திருந்தாலும், இனிமேல் அப்படி பார்ப்பதில்லை” (2கொரி 5:16).

பழைய பார்வை :

தீய பார்வை : சவுல், தாவீதை நல்ல கண்கொண்டு பார்க்கவில்லை (1சாமு 18:9).

பாவபார்வை : மரத்தின் கனி தின்பதற்கு நல்லது, பார்வைக்கு இனியது என கண்டு, அதை பறித்து தானும் உண்டு, கணவனுக்கும் கொடுத்தாள் (தொ.நூ 3:6).

இச்சிக்கும் பார்வை : ஊனியல்பு இச்சிப்பதும், கண்கள் காண இச்சிப்பதும், செல்வத்தில் செருக்கு கொள்வதுமாகிய இவ்வுலகிற்குரியவையெல்லாம் பரம தந்தையிடமிருந்து வரவில்லை (1யோவா 2:16).

தீனாளின் பார்வை : தீனாள் அந்நாட்டு பெண்களைப் பார்க்க விரும்பி வெளியே புறப்பட்டு போனாள் (தொ.நூ 34:4).


புதிய பார்வை :

அகக்கண்களுக்கு ஒளி : விசுவசிப்போரான நம் பொருட்டு, அவர் விளங்க செய்யும் வல்லமை எத்துணை பெருமை மிக்கது என்றும், நீங்கள் அறிந்து கொள்ளும்படி உங்கள் அகக்கண்களுக்கு ஒளி தருவாராக (எபே 1:19).

அகக்கண்களுக்கு ஒளி : பயனற்றதின் மீது பார்வையை செலுத்தாதபடி என் கண்களை திருப்பி விடும் (தி.பா 119:37). உம் வாக்கின் மீது கொண்ட ஏக்கத்தால் என் கண்கள் பூத்துப் போயின (தி.பா 119:82). கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன் (யோபு 31:1).


6. பாதை


“இயேசு தன் உடலாகிய திரைச்சிலையை கடந்து, புதியதும் உயிருள்ளதுமானதொரு பாதையை நமக்கு திறந்து வைத்தார்” (எபி 10:19).

பழைய பாதை :

தவறான பாதை : தவறான வழியில் என்னை நடக்க விடாதேயும் உமது திருச்சட்டத்தை எனக்கு அருளும்.


புதிய பாதை :

கற்பனை காட்டும் பாதை : நீர் என் அறிவை விவரிக்கும் போது, உம் கற்பனைகள் காட்டும் வழியில் நான் சொல்வேன் (தி.பா 119:32).

உண்மையான பாதை : உண்மையின் பாதையை தேர்ந்து கொண்டேன் உம் முறைமைகளை என் கண்முன் கொண்டேன் (தி.பா 118:30).


7. சாயல்


“தன்னை உண்டாக்கியவரின் சாயலுக்கேற்ப, உண்மை அறிவை அடையும் பொருட்டுப் புதுப்பிக்கப்பட்டு வரும் புதிய இயல்பை அணிந்து கொண்டீர்கள்” (கொலோ 3:10).

பழைய சாயல் :

சாயல் இழந்த மனிதன் : “நம் ஆவி மனிதனிடம் என்றென்றும் தங்காது. ஏனென்றால், அவன் மாமிசமே” (தொ.நூ 6:3).

மனித சாயல் : அவரது தோற்றம் சீர் குலைந்திருந்தது. மனித சாயலே அவரிடம் இல்லை (எசா 52:14).


புதிய சாயல் :

குமாரனின் சாயல் :கடவுள் யாரை முன்பே தேர்ந்து கொண்டாரோ, அவர்கள் தன் மகனின் சாயலுக்கேற்ற உருவை தாங்கும்படி முன் குறித்திருக்கிறார் (உரோ 8:29).

தேவ சாயல் :கடவுள் மனிதனை தமது சாயலாகப் படைத்தார். தேவ சாயலாகவேப் படைத்தார். தேவ சாயலாகவே அவனைப் படைத்தார் (தொ.நூ 1:27).


8. வாழ்வு


“நீங்கள் போய் கோயிலில் நின்று, இப்புது வாழ்வைப் பற்றிய அனைத்தையும் மக்களுக்கு தயங்காமல் சொல்லுங்கள்” (தி.தூ 5:20).

பழைய வாழ்வு :

பாவ வாழ்வு : “நீங்கள் பாவ வாழ்க்கையை பொருத்தமட்டில் செத்தவர்கள்” (உரோ 6:11).


புதிய வாழ்வு :

கிறிஸ்துவுக்குள் வாழ்வு :கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வு ஊக்கம் ஊட்டுவதெனில், அன்பினால் ஆறுதல் விளைவிப்பதெனில், ஆவியானவரோடு நட்புறவு தருவதெனில், பரிவும், இரக்கமும் உண்டாக்குவதெனில், நீங்கள் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவு பெறச்செய்யுங்கள் (பிலி 2:1).


“கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்” என்பதே நம் விசுவாசம் (உரோ 6:8).


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !

பழைய வாழ்வுக்கு முடிவு கட்டி, புதிய வாழ்வுக்கு அடித்தளமிடுவதே இரட்சிப்பின் பணி என்று பார்த்தோம். நாமும் பழைய வாழ்வை முடித்து, புதிய வாழ்க்கையை தொடர வேதம் பல வழிகளை நமக்கும் கற்று தருகின்றது. நம் வாழ்வில் அமைகின்ற பழையனவற்றையும், புதியனவற்றையும் பற்றி, வேதம் தெளிவாக நமக்குஎடுத்துக்காட்டுகிறது. இவற்றில், பழையனவற்றை விட்டுவிடுவதும், புதியனவற்றை கடைபிடிப்பதுமே இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வார்த்தையின் அர்த்தமாகும்.


எனவே தான், இந்த ஆறாவது வார்த்தையால் நம் பழைய பாவ ஜீவியம் முடிவுற்று, புதிய பரிசுத்த வாழ்வு தொடர நாம் உழைப்போம். புதிய படைப்பாக மாறுவோம். புதுப்பிறப்பு, புதிய ஆவி, புதிய உள்ளம், புதியபார்வை, இதயம் புதிய மொழி போன்ற வேதத்தின் அனுகூலங்களை பெற்று, இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வார்த்தையை ஏற்று மகிழ்வோம். புதிய இரட்சிப்பின் பாதையை தொடர்வோம். ஆமென்!

 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in