Rev.Fr.R.John Joseph


"பீடத்தின் முன்"


 • பிரியமானவர்களே! சிலுவையின் பாதை என்பது, இயேசு நடந்து சென்ற பாதை.

 • அந்தப் பாதை வழி நாமும் செல்ல, இங்கே கூடி வந்திருக்கிறோம்.

 • இப்போது கண்களை மூடி, ஜெபிப்போம்.

 • நம் பாவங்களினால் அல்லவோ, இந்த கொடுமையான சிலுவைப் பாதை உண்டானது என்று உணர்வோம்.

 • நம் பாவங்களுக்காக வருந்துவோம்.

 • இயேசுவே, என் சிந்தனை, சொல், செயல், நடை, உடை, தோற்றம், மனம், ஆத்துமா, சரீரம் ஆகிய ஒன்பது நிலைகளிலும் நான் பாவம் செய்தேன்.

 • என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே, இனிமேல் ஒருபோதும், இப்படி பாவம் செய்வதில்லை என்று, இன்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.

 • இதோ! என்னை பரிசுத்தப்படுத்த, உம் சிலுவையின் பாதையில் நான் வருகிறேன் ஆமென்.


இயேசுவுக்கு அநியாய தீர்ப்பிடுகிறார்கள்:

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.


சிந்தனை:

 • இயேசுவே! தீர்ப்பிடாதே, நீயும் தீர்ப்புக்குள்ளாவாய் என்று, எத்தனையோ முறை எனக்கு அறிவுறுத்தினீரே.

 • நான் பாவியிலும் பெரும் பாவியாக இருந்தும், என் குற்றங்களையெல்லாம் மறைக்க, பிறர் மீது குற்றம் சாட்டியிருக்கிறேன்.

 • அனேகரை தீர்ப்பிட்டு, “நான்” என்ற அகந்தையோடு வாழ்ந்து வருகிறேன்.

 • எனது பெரிய குற்றங்களை பற்றி எண்ணாமல், பிறருடைய சிறிய குற்றங்களை கூடப் பெரிதுபடுத்தியிருக்கிறேன்.

 • என் பாவங்களை மறைக்க, பிறர் குற்றங்களை பேசி தீர்த்தேன்.

 • என் குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டும் போது நான் எவ்வளவு விசனப்பட்டிருக்கிறேன்.

 • என் “சுயநலம்” கொடியது.

 • எனக்கு குற்றம் செய்ய உரிமை உண்டு. ஆனால் அதை சுட்டிக்காட்ட, யாருக்கும் உரிமை இல்லை என்றேன்.

 • என் “சுயம்” கொடியது. அது என் நேசருக்கு சாவுத் தீர்ப்பு அளித்தது.

 • ஆண்டவரே! இந்த பாவங்களினால், எனக்கும், என் குடும்பத்துக்கும் வரவேண்டிய ஆசீர்வாதங்கள், தடைப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன்.

 • இனிமேல் ஒருபோதும் என் நாவு பிறருக்கு தீர்ப்பிடாது என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.

 • என் ஜெபத்தை கேட்டு, என்னை பொறுத்துக் கொள்ளும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

இயேசுவின் மேல் சிலுவையை சுமத்துகிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசு தாமே சுமக்கும்படி, இயேசுவின் மேல் பார சிலுவையை சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம் அவர் தோள்மேல் சுமத்தப்படுகின்றன.


சிந்தனை:

 • இயேசுவே, என் கடமைகளை நான் செய்யும் போது,

 • அனேகர் மேல், அவர்கள் சுமக்க முடியாத பாரங்களை நான் சுமத்தி இருக்கிறேன்.

 • என் பிள்ளைகள், என் பெற்றோர், என் சொந்த பெந்தங்களில், தாங்க முடியாத, அவர்கள் தூக்கி சுமக்க முடியாத சுமைகளை நான் அவர்கள் மேல் வைத்து, நான் பாவம் செய்தேன்.

 • இயேசுவே, பிறருடைய பாவங்களையும், பாரங்களையும் நானும் சுமக்க எனக்கு கற்றுத் தந்தீர்.

 • ஆனால் நான், பிறருடைய சின்ன சின்ன குற்றங்களை கூட பொறுக்க முடியாமல், பலமுறை முணுமுணுத்திருக்கிறேன்.

 • இயேசுவே, என் மீறல்களை எல்லாம் உம் தோளிலே நீர் சுமந்தீர்.

 • என் பாவங்களையும், பெலவீனங்களையும் நீர் சுமந்தீர்.

 • இதோ, என்னை சூழ்ந்திருக்கிற மக்களின் பாடுகளை நான் ஏற்றுக்கொள்ள, நல்ல தீர்மானத்தோடு நான் உம் பின்னே வருகிறேன்.

 • இயேசுவே! பிறருடைய குற்றங்குறைகளை, சகித்து, பொறுத்து வாழ இந்த பரிசுத்த வேளையில் நான் தீர்மானிக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

இயேசு முதன் முறை கீழே விழுகிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வற்கு கூட இயலாத நிலையிலிருந்த, இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தைத் தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.


சிந்தனை:

 • இயேசுவே, என் பாவங்கள் எவ்வளவு கொடியது என்று, இந்த பரிசுத்த இடத்தில் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

 • ஒரு சின்ன பாவம் என்றாலும், நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உணர்கிறேன்.

 • இயேசுவே, என் சிந்தனையாலே, என் சொல்லாலே, என் செயலாலே, நான் இழைத்த ஒவ்வொரு பாவங்களுக்காகவும் நீர் தரையிலே விழுந்தீர்.

 • ஐயா! எத்தனையோ முறை, பிறர் கீழே விழும் நிலைக்கு நான் காரணமாய் இருந்திருக்கிறேன்.

 • பிறர் சமாதானம் இழந்து, அவர்கள் கீழே விழ, பிறர் தங்கள் உரிமைகளை, உறவுகளை, நற்பெயரை இழந்து அவர்கள் கீழே விழ, நான் காரணமாயிருந்தேன்.

 • இனிமேல் பாவத்தின் மட்டில் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.

 • மனிதன் பெலவீனன். வீழ்ச்சி என்பது அவனுக்கு சகஜம்.

 • ஆனால் வீழ்ந்த இடத்தில் படுத்து கிடப்பவன் பாவி. எழும்புவனோ பரிசுத்தன்.

 • இயேசுவே! என்னால் இனி யாரும், கீழே விழ நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று இந்த நேரம் தீர்மானிக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு தன் தாயை சந்திக்கிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

முப்பது ஆண்டுகள் சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள் மனத்திலும், ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணா காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்ந்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறைபடிந்திருந்தது.


சிந்தனை:

 • “தாய் தந்தையரை போற்று” என்ற கட்டளையால், பெற்றவர்களை தாங்க வேண்டும், போற்ற வேண்டும் என்று கற்றுத் தந்தீர்.

 • இயேசுவே, சின்னப் பருவத்திலிருந்து, இந்த நாள் வரை நான் என் பெற்றோரை எத்தனையோ முறை துயரப்படுத்தியிருக்கிறேன்.

 • வருத்தப்படுத்தியிருக்கிறேன், அவமதித்திருக்கிறேன்.

 • நான் எதிர்பார்க்காதது அவர்கள் எனக்கு செய்த போதெல்லாம்,

 • நான் எதிர்பார்த்தது அவர்கள் எனக்கு செய்யாத போதெல்லாம், நான் அவர்களை துன்புறுத்தியிருக்கிறேன்.

 • பெற்றோர் என்றால் யார்? அவர்கள் பாரம் என்ன? அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்பதையெல்லாம் நான் எண்ணாமல், என்னுடைய அகந்தையாலும், சிறுபிள்ளைத் தனத்தினாலும் நான் அவர்களை துயரப்படுத்தி இருக்கிறேன்.

 • தெய்வமே, என்னைப் பெற்றவர்களின் மனதைப் புண்படுத்தி, அவர்களை காயப்படுத்திய என் பாவமே,

 • இந்த 4-ம் ஸ்தலத்தை உருவாக்கியது என்பதை அறிகிறேன். ஐயா! இந்த உலக வாழ்வில், உமது தாய்க்கு செய்ய வேண்டிய உம் கடமையை, நீர் செய்ய விடாமல் தடுத்தது என் பாவம்.

 • நான் பாவம் செய்யும் போது, அது எவ்வளவு கொடியது என்ற உணர்வே இல்லாமல், அனேக விசை நான் பாவம் செய்தேன்.

 • என் பாவம் இயேசுவை மட்டுமல்ல் அவர் குடும்பத்தை மட்டுமல்ல அவரை சார்ந்த அனைவரையும் பாதித்திருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.

 • நான் என் வாழ்க்கையில் ஒருவருக்கு இழைக்கின்ற குற்றம்,

 • அது பேச்சாக இருக்கலாம், எண்ணமாக இருக்கலாம், செயலாக இருக்கலாம்.

 • அது அவரை மட்டுமல்ல, அவரை சார்ந்த குடும்பம் முழுவதையுமே பாதிக்கிறது என்பதை இந்த பரிசுத்த வேளையில் உணர்ந்து கொள்கிறேன்.

 • ஒவ்வொரு முறை, பாவ சந்தர்ப்பங்களில் நான் நிற்கும் போது,

 • பாவம், இயேசுவை, அவர் தாயிடமிருந்து பிரிக்கும் சக்தி கொண்டது என்பதை எப்போதும் உணர்வேன்.

 • இயேசுவே! என்னால் காயப்பட்ட என் பெற்றோரின் காயங்களை குணப்படுத்தி, வியாகுல அன்னையின் காயங்களை ஆற்றுவேன் என்று இப்போது தீர்மானம் எடுக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவுக்கு சீமோன் உதவி செய்கிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

பிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒரு வேளை சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவுகூரப்படுகிறார்.


சிந்தனை:

 • இயேசுவே, என்னிடம் நிறைய சுயநலம் உண்டு. என்னுடைய சுயநலம் எவ்வளவுக்கு என்னை ஆட்டிப்படைக்கிறதென்றால்,

 • பிறர் நலத்தைப் பற்றி எனக்கு நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

 • என் சொந்த வீட்டில், என் கூட இருப்பவர்கள், என்னை சுற்றிலும் இருக்கிற எத்தனையோ பேர்,

 • தங்கள் குடும்ப கடமைகளிலும், சரீர பிரயாசங்களிலும், தங்கள் அன்றாடப் பாடுகளை தூக்கி சுமக்க முடியாமல்,

 • தள்ளாடுவதை நான் பார்த்தும் என்னால் உணர முடிவதில்லை. என் சுயத்தால் என் பார்வை மங்கிப் போய் இருக்கிறது.

 • அப்படியே பிறர் துன்புறுவதை நான் பார்த்தால் கூட, உனக்கு வந்ததற்கு எனக்கு என்ன என்ற தோரணையில் அசட்டையாக இருந்திருக்கிறேன்.

 • பார்த்தும் பாராமுகமாய் இருந்தேன்.

 • நான் வேலை செய்கிற இடங்கள், நான் பயணம் செய்கிற பாதையில், பாரத்தால், மனசுமையால், கஷ்டங்களால், தளர்ந்து தள்ளாடுபவர்களைப் பார்த்து,

 • ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல எனக்கு மனமில்லாமல் போயிற்று.

 • இயேசுவே! ஒரு ஆறுதலின் வார்த்தை, ஒரு பாசம் நிறைந்த பார்வை, ஒரு சின்ன உதவி,

 • ஒரு வேளை என்னை சுற்றி சிலுவை சுமப்போருடைய பாரத்தை கொஞ்சம் தணித்திருக்காதோ!

 • என் சுயநலத்தால், நான் பாவம் செய்தேன்.

 • இந்த சீரேனே சீமோனை எனக்கு பாடமாக சொல்லித் தருகிறீரே!

 • அப்பா! நானும் ஒரு சீமோனாகி, ஒரு நல்ல சமாரியனாகி, இயேசுவே, என்னை சுற்றி; உள்ளவர்களின் சுமைகளை தாங்கும் ஒரு சுமைதாங்கி ஆவேன் என, இந்த நேரம் வாக்களிக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவின் முகத்தை வெறோணிக்கம்மாள் துடைக்கிறாள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

அத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வேறோணிக்காள், துணிந்து இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீரங்கனையானாள்.


சிந்தனை:

 • தம் குமாரனின் சாயலாக நான் உருமாற வேண்டுமென்பது பிதாவின் திட்டம்.

 • அந்த இயேசுவினுடைய சாயலை நான் பெற்றுக் கொள்வதை விட்டு விட்டு,

 • என் முகத்தின் பாவ சாயலை, நான் அவர் முகத்தில் பதித்தேன்.

 • பரிசுத்தருடைய முகத்தை பாவமுகமாக்கினேன்.

 • என் பாவ சிந்தனையால், என் பாவ சொல்லால், என் பாவ செயலால், என் கடமையில் தவறியதால்,

 • நான் உருவாக்கிய அந்த பாவ முகத்தின் கறையை அகற்றும் பணியை வெறோணிக்காள் செய்தாள்.

 • அவரோடு சேர்ந்து, நானும் இனி என் பாவ முகத்திலிருக்கும் கறைகளை அகற்ற முயற்சி எடுப்பேன்.

 • என்னை வெளிப்படையாக ஏற்றுக் கொள்பவனை, நானும் வெளிப்படையாக ஏற்று கொள்வேன்.

 • என்னை வெளிப்படையாக ஏற்று கொள்ள வெட்கப்படுபவனை குறித்து, நானும் வெட்கப்படுவேன் என்று சொன்ன இயேசுவே!

 • பல சந்தர்ப்பங்களில் என் விசுவாசத்தை வெளிப்படையாக காட்ட நான் தவறி இருக்கிறேன்.

 • அச்சம், கூச்சம், வெட்கம் போன்றவை, என் விசுவாச வாழ்க்கையின் வேகத்தை தடை செய்தது.

 • பரிசுத்தரே! அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம், நான் பரிசுத்த வெறோணிக்காளை நினைவு கூர்வேன்.

 • நேசரை, எந்த சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாக உம்மை ஏற்று கொள்வேன் என்று இப்போது தீர்மானிக்கிறேன்.

 • இயேசுவே, பிறருடைய துன்பத்தில் அவர்களைத் தாங்குவதில் நான் ஒருபோதும் வெட்கப்படமாட்டேன்.

 • பிறருடைய துன்பத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில், நான் ஒரு போதும், பின் வாங்கமாட்டேன் என்று, இந்த பரிசுத்த வேளையில் தீர்மானம் எடுக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம் அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம் அவருக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால் உடலில் களைப்பு, ஆனால் செல்லும் வழியில் கிடைத்த வசைமொழிகளால் மனதில் களைப்பு, நிந்தை அவமானம் என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர் மண்ணோடு மண்ணாகப் புரள்கின்றார்.


சிந்தனை:

 • இயேசுவே! என்னுடைய பொறாமை, கவனக்குறைவு, சுயம், போன்றவை என் வாழ்க்கையில் உண்டாக்கிய விபரீதங்கள் பல.

 • பிறருடைய வாழ்க்கையில் இனி எழும்ப முடியாத அளவுக்கு அவர்களுடைய பெயரைக் கெடுத்திருக்கிறேன்.

 • ஒரு வேடிக்கையாக நான் பேசிய சில காரியங்கள், எத்தனையோ பேருடைய உள்ளங்களில் காயத்தை உண்டாக்கி,

 • அவர்களது வாழ்க்கையை பெரும் துன்பத்திற்கு தள்ளியிருக்கிறது.

 • பொறாமையினாலே, பிறர் பெயரைக் கெடுத்து, அவர்கள் இனி உலகை பார்க்க முடியாத அளவுக்கு, நான் உபத்திரவப்படுத்தியிருக்கிறேன்.

 • இதெல்லாம், எவ்வளவு பெரிய பாவம் என்று நான் உணராமலேயே இருந்தேன்.

 • இயேசுவே, பிறருக்கு துன்பம் கொடுப்பதில் அனேகமுறை நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

 • பிறர் வேதனையடைவதை கண்டு பலமுறை ஆனந்தமடைந்திருக்கிறேன்.

 • என்னை பிடிக்காதவர்கள், எனக்கு இஷ்டமில்லாதவர்களுக்கு துன்பம் வரும்போது, நான் அதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

 • இந்த பாவங்கள், எனக்கும் என் ஆண்டவருக்குமிடையே பெரும் தடைச்சுவராக நிற்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.

 • நீ பாவம் செய்தாயோ, மீண்டும் பாவம் செய்யாதே.

 • பாம்பை கண்டு ஓடுவது போல, பாவத்தை கண்டு ஓடு,

 • இந்த பரிசுத்த வார்த்தைகளை நான் பலமுறை கேட்டேன்.

 • ஆனாலும், பாவத்தின் மட்டில் நான் விழிப்பாகவும், ஜாக்கிரதையாகவும், எச்சரிக்கையாகவும் இல்லை.

 • இதனால் என் பாவ வழி இன்றும் அழுத்தமாய் துலங்யுள்ளது.

 • ஓன்றை நான் பலமுறை செய்வதில்லை என்று தீர்மானித்தும், நான் மீண்டும், அதே பாவத்தில் விழுவதால், அந்த பாவத்தில் நான் பழகிப் போகிறேன் என்பதை, இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

 • செய்த பாவத்தை மீண்டும் செய்யாமல் இருக்கும் போது, இயேசுவே! என்னில் பாவத்தின் பெலன் குறைந்து போகிறது என்பதை, இப்போது நான் உணர்கிறேன். என்னை மன்னியும்!

 • இயேசுவே! என் பெலவீனத்தில் எனக்கு துணையாய் வாரும்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் சொல்கிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர் - பெரும்பாலும் உள்ளவர்கள், அவரிடமிருந்து கிருபைகளைப் பெற்றுக் கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்கு பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன் வந்தனர்.


சிந்தனை:

 • ஏற்கனவே, வெறோணிக்காள் தன் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டாள் என்பதைப் பார்த்தேன்.

 • இதோ! மற்றொரு விசுவாசக்கூட்டம், தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிடுகிறது.

 • படைவீரர்கள் சூழ்ந்து நின்ற இடம் அது.

 • பொதுவாக, கொலையாளிகளை இழுத்து செல்கின்ற இடங்களில் பெண்கள் செல்வதில்லை.

 • காரணம் அந்த நிஷ்டூரக் காட்சிகளைக் காண பெண்களுக்குப் பொறுக்காது.

 • ஆனால் இங்கோ, உயர் குலத்துப் பெண்கள் பலர் வீதிகளில் இறங்கி வருகிறார்கள்.

 • இயேசுவின் பொருட்டு, அவர்பட்ட பாடுகளின் பொருட்டு, அவர் பட்ட நிந்தைகளின் பொருட்டு, அவற்றில் தாங்களும் பங்குபெற வந்தார்கள்.

 • பிற்காலத்தில் இயேசுவின் பொருட்டு, இலட்சோக இலட்ச விசுவாசிகள்,

 • தங்களை சிலுவையில் அறைந்து கொல்லும்படி, கொப்பரைகளில் போட்டு எரிக்கும்படி, வாளால் தலை வெட்டும்படி கையளித்தார்களே! அந்த இரத்த சாட்சிகளின், தொடக்க சாட்சிகள் இவர்களே!

 • ஆம்! இனிமேல், என் இயேசுவுக்காக, நான் எந்த பாடுகளையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பேன்.

 • என் பாவத்தையும், என் பாடுகளையும் சுமந்த என் நேச இயேசுவே,

 • நீர் எனக்குத் தந்த பிள்ளைகள், உம்முடைய சொத்து என்று உணராமல், நீர் எனக்கு தந்த கொடை என்பதை உணராமல்,

 • இந்த பிள்ளைகள் உமக்கு திருப்பித் தரப்பட வேண்டியவர்கள் என்பதை எண்ணாமல், அகந்தையோடு வாழ்ந்திருக்கிறேன் ஐயா.

 • என் பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்திருக்கிறேன்.

 • என்னுடைய கோபதாபங்களாலும், எரிச்சல்களாலும், பொறுமையின்மையாலும், பாவ அசுத்தங்களாலும்,

 • என் பிள்ளைகளுக்கு நான் துர்மாதிரியாய் இருந்திருக்கிறேன் ஆண்டவரே.

 • அந்த பிஞ்சு உள்ளங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன்

 • அப்பா. அவர்கள் இன்று வளர்ந்து, அவர்களோடு அவர்கள் காயங்களும் வளர்ந்து தவிப்பதை உணர்கிறேன் சுவாமி.

 • என் பாவங்களை பொறுத்தருளும்.

 • இயேசுவே, நீர் இம்மையில் வாழ்ந்த போது, அழுது புலம்பி கண்ணீர் வடித்து ஜெபித்தீரே.

 • நானோ, ஜெபத்தில் கண்ணீர் விட்டு அழ பலமுறை வெட்கப்பட்டிருக்கிறேன்.

 • பச்சை மரமான உமக்கு

 • பாவம் பெரிய தண்டனை தந்ததென்றால்,

 • பட்ட மரமாகிய எனக்கு, என் பாவத்தால் உண்டாகப்போகும் தண்டனை என்ன என்பதை இப்போது உணர்கிறேன்.

 • இயேசுவே! என் பாவத்தின் மட்டில் எச்சரிக்கையாயிருந்து, அழுது புலம்பி ஜெபிக்க, இப்போது தீர்மானிக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசு சுமந்து வந்த சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவரை கொல்கத்தாவரை சுமந்து செல்ல அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, இயேசுவுக்கு இருந்த மனபலம், சரீர உறுதி இப்போது இல்லை. சிலுவையின் பாரமும், போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது. இயேசுவைப் பற்றி ஏற்கனவே திருப்தி இல்லாத யூதர்கள், இப்போது நடப்பதை எண்ணி, தங்கள் ஐயப்பாடுகள் சரி என்று உறுதிப்படுத்தினர். இயேசுவை விரோதிகள் தண்டித்தது, “பொறாமை” யால்தான் என்று பிலாத்து உணர்ந்திருந்தான். அந்தப் பொறாமைக் கூட்டம், கொக்கரித்துக் கூத்தாடியது. இயேசுவின் கரத்தினின்று அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு, உண்டான துயரம், பன்மடங்காகி அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்த பரிசுத்த முகம் புழுதியில் புதைந்தது.


சிந்தனை:

 • இயேசுவே, நன்றியின்மை எவ்வளவு பெரிய பாவம்.

 • நான் இன்று, இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அது எத்தனையோ பேருடைய தியாகத்தால்.

 • அது எத்தனையோ பேருடைய இழப்பால், எத்தனையோ பேருடைய பலியால்,

 • என் தாய், என் தந்தை, என் உடன்பிறப்புகள், என்னை சார்ந்தவர்கள், என் கணவன், என் மனைவி,

 • என் பிள்ளைகள், என் நண்பர்கள், என் சுற்றத்தார், என் உபகாரிகள். ஓ… அடுக்கி கொண்டே போகலாமே.

 • இவர்கள் எல்லாம் சுயநலம் மறந்து, தங்களுடைய வசதிகளையும், வாழ்க்கையையும் இழந்து, பலியாகி,

 • என்னை வளர்த்து ஆளாக்கி, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்களே,

 • ஒருவிசை கூட, அவர்களுடைய துயரங்களை, கஷ்டங்களை, நான் நினையாமல் வாழ்ந்திருக்கிறேனே.

 • என்னை வளர்த்தவர்கள், வீழ்ந்து கிடக்கப் பார்த்தும், பாரமுகமாய் இருந்திருக்கிறேனே,

 • அவர்களுக்கு கை கொடுத்து தாங்குவது என் கடமை என்பதை உணராமலேயே, மரத்துப் போயிருந்தேனே.

 • உலக ஆதாயங்களுக்காக, என் நேசருடைய வழிகளையும், சத்தியங்களையும் தூக்கி எறிந்திருக்கிறேன்.

 • என்னை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்ட என் நேசரை நான் பலமுறை புறக்கணித்திருக்கிறேன்.

 • அவரை அறியேன் என்று பலமுறை சொன்னேன்.

 • என் ஆண்டவரை மூன்றாம் முறையாக வீழ்த்தியது, என்னுடைய இந்த கொடிய பாவங்கள் என்று ஏற்றுக் கொள்கிறேன்.

 • இனி ஒரு போதும், இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று பலமுறை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.

 • ஒவ்வொரு முறையும், தீர்மானம் எடுத்து முடியும் போது, மீண்டும் அதே பாவத்தில் நான் விழுந்து கிடப்பதை உணர்கிறேன்.

 • என் தீர்மானத்தில் நிலைத்து நிற்க முடியாத கொடிய பாவத்தினால், இயேசுவே மூன்றாம் முறை உம்மை கீழே விழத்தாட்டினேன்.

 • “எழுந்திரு”, “எழுந்து பிரகாசி”, “எழுந்திரு, நீ செல்ல வேண்டிய பாதை இன்னும் தூரம் உண்டு”; “எழுந்து உன் படுக்கையை எடுத்து கொண்டு நட” என்று, விழுந்த உலகத்தை எழும்ப சொன்ன இயேசுவே,

 • விழுந்து கிடந்த உலகத்தை, எழுப்பி விட்ட இயேசுவே! நான் விழுந்த இடமே சுகம் என்று, எழும்ப மனமின்றி, காலம் தாழ்த்துகிறேனே!

 • ஐயா! ஊதாரி மைந்தனும், நாற்றம் தாங்காமல், எழுந்து தந்தையிடம் திரும்பியது போல,

 • நானும் இந்த நோன்பு காலத்தில் உம்மிடம் எழுந்து வருகிறேன். என்னை பொறுத்து, ஏற்றருளும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவின் ஆடைகள் உரியப்படுகின்றன"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

ஆடையோடு யாரையும் சிலுவையில் அறைவது இல்லை. அவ்வாறே இயேசுவின் ஆடைகளை உரிந்தார்கள். இது அவமானத்தின் உச்சிக்கே அவரை அழைத்துச் சென்றது. இரத்தக் கறையால் உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதை நிஷ்டூரமாக இழுத்து உரித்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.


சிந்தனை:

 • இயேசுவே! ஆடைகள், மானம் காக்க, மனுக்குலத்துக்கு நீர் கொடுத்த, ஒரு பெரிய கொடை.

 • ஏதேன் தோட்டத்தில், நான் நிர்வாணமாய் நின்றதை கண்ட இயேசுவை, என் உடலை மறைக்க, நீர் எனக்கு பரிசாக தந்த ஆடைகளையே,

 • நான் எனது உடலின் அலங்காரத்திற்காகவும், பாவ இச்சைகளுக்காகவும் உடுத்தி பாவம் செய்தேன்.

 • ஆடை அலங்காரத்திற்கானது என்று நினைத்து அகந்தை கொண்டேன். ஆடையால் அனேகரை பாவத்துக்கு உள்ளாக்கினேன்.

 • அப்பா எனக்கு தந்த ஆடையை, என் பரிசுத்தத்தில் நான் வளர பயன்படுத்துவதை விட்டு,

 • பாவ ஆசைகளுக்கு மக்களை இட்டு செல்லும் கவர்ச்சிக்கு, என் ஆடைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.

 • அப்படியே என் பிள்ளைகளையும் உடுத்தி, பாவம் செய்கிறேன்.

 • என் ஆடையினால் நான் மாசுபடிந்து அழுக்கடைந்தேன். என்னை மன்னியும்.

 • இயேசுவே, மானம் காக்க நீர் தந்த ஆடைகளை களைந்து, பலரை அவமானப்படுத்தியிருக்கிறேன்.

 • பிறரை அவமானப்படுத்துதல் எவ்வளவு கொடியது என்பதை உணராமலேயே, அதை செய்திருக்கிறேன்.

 • என் மானம் காக்க வந்த நீர், என் அவமான பாவத்தால், இன்று அவமானப்பட்டீர்.

 • ஒரு காலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புகளை, பாவத்துக்கு கையளித்தீர்கள்.

 • இப்போதோ, அந்த உறுப்புகளை பரிசுத்தத்துக்கும், மீட்புக்கும் கையளியுங்கள். என்று எங்களுக்கு சொன்னவரே,

 • அதற்குப் பதிலாக உம்முடைய சரீரத்தை நான் ஒரு அவமான சின்னமாக மாற்றிய, இந்த இடத்தை நினைத்து நான் அழுகிறேன்.

 • இந்த உலகத்தில், நீர் எனக்கு தந்த சரீரத்தை, பாவத்திற்கு அல்ல,

 • மீட்புக்கு பயன்படுத்த வேண்டும் என்று, நீர் எனக்கு சொல்லித் தருகிறீர்.

 • என் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களாலும், நான் கட்டிக் கொண்ட பாவங்கள், என் நேசரை அவமானமாக நிறுத்தியது, என்று ஏற்று கொள்கிறேன்.

 • கர்த்தாவே என்னை பொறுத்து கொள்ளும்; இனி என் உடலின் உறுப்புகளை உமக்கு மகிமை உண்டாக்கும் படியாகவும்,

 • என் சொந்த மீட்புக்காகவும் பயன்படுத்துவேன் என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவுக்குண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால் அதற்குமேல், ஆணி அறைதல் நடந்தது.


உள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல் ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் நடந்தன.


சிந்தனை:

 • என் இயேசுவே! பிறரை காயப்படுத்துகின்றன, என்னுடைய வார்த்தைகளும், என்னுடைய செயல்களும்.

 • எத்தனை முறை வேண்டுமென்றே பிறரை நான் கொடுமையாக காயப்படுத்தியிருக்கிறேன்.

 • என் உள்ளத்தின் பழி எவ்வளவு பெரிது என்றால், வாய்ப்பை உண்டாக்கி, என் பழி தீருமட்டும் பிறரை காயப்படுத்தியிருக்கிறேன்.

 • இயேசுவே என்னுடைய வைராக்கியம், என் பழி வாங்குதல்கள், எத்தனையோ பேரை சிலுவையில் அறைந்திருக்கிறது.

 • இன்னும் அவர்கள் சிலுவையிலேயே தொங்கி நிற்கிறார்கள்;

 • என் பாவத்தை பொறுத்து, என்னை மன்னியும் தெய்வமே.

 • இயேசுவே, கரத்தால் நான் செய்த பாவம், உம்முடைய கரத்தில் ஆணிகளை துளைத்தது.

 • என் கால்களால் நான் செய்த பாவம், உம்முடைய கால்களில் ஆணிகளை துளைத்தது.

 • என் நெஞ்சத்தால், நான் செய்த பாவம், உம் இதயத்தை ஈட்டியதால் குத்தியது.

 • என் எண்ணங்களால், நான் செய்த பாவம், உம் தலையிலே முள்முடியே ஏற்றியது. என்னை மன்னியும் இயேசுவே.

 • “உங்கள் பாவங்கள், இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டால், அவரோடு மகிமையில் உயிர் பெறுவீர்கள்”.

 • இயேசுவே! என் சரீரத்தின் பாவங்களும், என் மனத்தின் பாவங்களும், உம்முடைய சிலுவையோடு அறையப்பட வேண்டும் என்று எனக்கு கற்றுத் தருகிறீர்.

 • எனக்கு அன்றாடம் வருகின்ற சிலுவையை நான் அன்போடு ஏற்கும் போது, என் பாவங்களை சிலுவையில் அறைகிறேன்.

 • என் சரீரத்தின் பாடுகளை, நான் சந்தோஷமாய் ஏற்கும் போது, என் சரீரத்தின் பாவங்களை நான் சிலுவையில் அறைகிறேன்.

 • என் மனதுக்கு வரும் பாடுகளை சந்தோஷமாய் ஏற்கும்போது, என், அக, மன பாவங்களை நான் சிலுவையில் அறைகிறேன்.

 • நான் உம்மை சிலுவையிலறையும், இப்படி ஒரு தலத்தை மீண்டும் ஒரு முறை என் வாழ்க்கையில் உருவாக்க மாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.

 • யாராவது, என்னை சிலுவையில் அறைந்து என்னை பலியாக்கட்டும்.

 • அது அவனா, அவளா, அவரா, இவரா யாராக இருந்தாலென்ன?

 • பிறர் என் குற்றங்குறைகளை சுட்டிக்காட்ட முன் வரும் போது,

 • என் சுயத்திற்கு உண்டாகக் கூடிய அடியை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றால்,

 • இந்த பெரும் ஆணியை எங்கே நான் தாங்கி கொள்ள போகிறேன்.

 • இயேசுவே, என்னை திருத்தவும், என்னை மீட்கவும் என் குறைகள் சுட்டிக்காட்டப்படும், எல்லா குற்ற சந்தர்ப்பங்களிலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்ள தீர்மானிக்கிறேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவை நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்த்து அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறிப் புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில் சிலுவையில் தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான் பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு பலமணி நேரங்கள் நீடித்தன. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன் தன்பணியை சாந்தத்தோடு செய்து கொண்டிருந்தார்.

 • “அம்மா, இதோ உம் மகன்; யோவான், இதோ உன்தாய்,” யோவா 19:2.
 • “பிதாவே இவர்களை மன்னியும்.” லூக் - 23:43.
 • “இன்றே நீ என்னோடு பரகதியில் இருப்பாய்.” லூக் - 23:43.
 • “பிதாவே, ஏன் என்னைக் கை விட்டீர்,” மாற் - 15: 34.
 • “தாகமாயிருக்கிறது.” யோவா 19 : 28.
 • “எல்லாம் முடிந்தது,”; யோவா 19 : 28.
 • “பிதாவே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.” லூக் - 23:46 என்று கூறி இயேசு உயிர் துறந்தார்.


சிந்தனை:

 • இயேசுவே! நான் பாவத்தை பற்றிய அச்சமே இல்லாமல் வாழ்கிறேன்.

 • பாவம் எவ்வளவோ கொடியது. அது என் தெய்வத்தை நேரடியாக தாக்குகின்ற சக்தி கொண்டது.

 • என் தெய்வத்துக்கும் எனக்கும் இடையே உறவை அறுத்துப் போடும் சக்தியுடையது.

 • இதை நான் உணராமலேயே வாழ்ந்தேன்.

 • என் பேச்சுக்களால், கடுமையானப் பாவங்களைக் கட்டி கொண்டேன்.

 • என் எண்ணங்களால், கொடிய பாவங்களை கட்டி கொண்டேன். என் செயல்களாலும் அவ்வாறே…

 • அப்பா நான் பரிசுத்தமான இதயத்தோடு, உம்மைச் சுற்றி வலம் வந்த என் கடந்த காலத்தை நினைக்கிறேன்.

 • இன்று பரிசுத்தம் இழந்து, புனிதம் இழந்து, ஆத்துமா செத்துப்போக, உம் காலடியில் வந்து நிற்கிறேன்.

 • உம் பாடுகளாலும், மரணத்தாலும், எனக்கு விடுதலை தாரும்.

 • என்னில் “நான்” என்ற அகந்தை சாக வேண்டும்.

 • இயேசு என்னில் வாழ, என் “சுயம்” சாக வேண்டும்,

 • என்னில் மாமிசத்துக்கு அடுத்தவை, உலகுக்கு அடுத்தவை சாக வேண்டும்.

 • “இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கிறார்” , என நான் சொல்ல வேண்டும்.

 • இயேசுவே நீர் சாக வந்தவர் அல்ல வாழ வந்தவர்.

 • என் மனதில், என் சரீரத்தில், என் ஆத்மாவில், நீர் வாழ வேண்டும்.

 • இதோ வருகிறேன் ஆண்டவரே, நான் செத்து உமக்கு ஜீவன் தர இதோ வருகிறேன்.

 • என் சரீரத்தை நீர் சுதந்தரித்து கொள்ளும். அது இனி உமக்கு சொந்தம்;

 • என் மனத்தை தாழ்த்தி தருகிறேன். அதை எடுத்து கொள்ளும்.

 • இயேசுவே! அங்கே வாழ நீர் வர வேண்டும், அது இனி உமக்கே சொந்தம்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவை இறக்கி, தாயார் மடியில் வைக்கிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

அரிமத்தியா ஊர் சூசை நல்லவர், நீதிமான், யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை எதிர்பார்த்திருந்தார். தலைமைச் சங்க உறுப்பினர் இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள் தாங்கொண்ணா துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும், என்று முன்னறிவிக்கப்பட்டவர். வியாகுலத்தாயாக அமர்ந்திருந்தார்.


கணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர் . அந்த ஒரே மகனையே பிதாவுக்கு பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பதிந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தித் திறக்கப்பட்ட, இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த வீரத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத்தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலி பீடத்துக்கு கையளிக்கிறார். உலக மீட்புக்கான உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.


சிந்தனை:

 • நான் பாவம் செய்ததும், என் ஆத்துமா சாகிறது.

 • ஆனால் என் சரீரமோ வாழ்கிறது.

 • ஆத்துமா செத்த பின், மீண்டும் சரீரம் வாழ, கடவுள் இரக்கம் கொண்டது எதற்காக.

 • நான், பாவப் பரிகாரம் செய்வதற்காக.

 • பாவம் செய்ய, நான் உனக்கென்று ஒரு காலத்தை உண்டாக்கினேன்.

 • பாவத்திற்கு பரிகாரம் செய்ய உனக்கென்று, கடவுள் ஒரு காலத்தை தருகிறார்.

 • காலம் பொன் போன்றது.

 • அந்த காலத்தை, இயேசுவை சிலுவையில் அறைந்ததால் நான் கறைப்படுத்தினேன்.

 • எனக்கு கடவுள் தந்த, என் எஞ்சிய காலத்தை, என் பாவக் கறையை கழுவும் படியாக, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்க இதோ வருகிறேன்.

 • என் சிந்தனையாலே, என் சொல்லாலே, என் செயலாலே, என் ஆத்மீக கடமைகளைச் செய்ய தவறியதாலே, பலமுறை உம்மை நான் சிலுவையில் அறைந்தேன் இயேசுவே!

 • இனி உம்மை சிலுவையிலிருந்து இறக்குவதிலேயே நான் கவனமாக இருப்பேன். பிறருக்காக பலியாவதிலும், பிறருடைய சுமையை இறக்குவதிலும் நான் ஆர்வமாக இருப்பேன்.

 • காலத்தை பரிசுத்தப்படுத்துவேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

மண்ணையும், விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” தெய்வத்தை புறக்கணித்த மனிதனின் செயல்தான் இயேசுவின் அடக்கம்.


“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,

“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது

.

அந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு, “கல்லறை”. விளக்கை அணைத்துவிட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்குக் கொண்டாட்டம். நல்லவரை அழித்துவிட்டால் தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம், ஆனால் தெய்வத்தை கல்லறை தாங்குமா? உயிரும் உயிர்ப்புமானவர் கல்லறையில் இருக்க முடியுமா?


சிந்தனை:

 • என் இயேசுவை, கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.

 • நான் என் செய்வேன்! நான் என்ன செய்ய வேண்டும்!

 • என் நேசரை கல்லறைக்கு அனுப்பிய, என் பாவத்தை நான் கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.

 • என் இயேசுவே! இரகசிய பாவங்கள், எனக்குள் பாவக் கல்லறையாக இருந்து கொண்டிருக்கிறது.

 • இரகசிய பாவம் என்பது, வெளிப்படையாக மறைக்கப்பட்ட பாவமாக இருக்கலாம்.

 • ஆனால், என் மனதில் புதைந்திருந்து.

 • அது புழுத்து புழுவாகி, பெரும் மரண ஆபத்தை என் ஆத்துமாவுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.

 • நான் அதைப் பற்றியெல்லாம் அக்கரை கொண்டதேயில்லை.

 • வெளிப்படையாக, மக்கள் பார்க்கின்ற பாவங்கள் தான்,

 • நீக்கப்பட வேண்டியது என்று நான் என்னையே தேற்றியிருக்கிறேன்.

 • வாய்ப்பு கிடைக்காததால், நான் பாவம் செய்யாமலிருக்கிறேன்.

 • என்னுடைய மறைந்த உள்ளம் பாவத்தை தேடிக் கொண்டே இருக்கிறது.

 • என் இரகசியப் பாவங்கள், என் சரீரத்தையும் என் ஆத்துமாவையும், ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கிறது.

 • இயேசுவே! என்னை முற்றும் அறிகிற கர்த்தாவே,

 • நான் மறைத்தாலும், உமக்கு முன் மறைவானது ஒன்றுமில்லை ஐயா.

 • என் சின்ன பருவத்திலிருந்து, இந்த நாள் வரை, வானகத்துக்கு முன்பும், உமக்கு முன்பும்,

 • நான் மறைத்த என் பாவங்களை, இதோ வெளியே கொண்டு வருகிறேன்.

 • என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்.

 • என் பாவங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

 • என் மாமிசத்தையும், என் சுயத்தையும், அதில் அடங்கிய அனைத்துத் தீமைகளையும் நான் மண்ணுக்குள் அடக்கம் செய்கிறேன். தன்னடக்கம் கட்டுப்பாடோடு,

 • இந்த 40 நாள் நோன்பில், நான் எனக்குள் இருக்கும் தீமைகள் அனைத்தையும் அடக்கம் செய்வேன்.

 • என் நேசரை நான் கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வருவேன். அங்கே நான் அடக்கம் ஆவேன்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


"இறுதி ஜெபம்"

என் இனிய இயேசுவே! என் பாவங்களால் நொறுக்கப்பட்டு, கல்வாரியில் தொங்கி உயிர்விட்ட இயேசுவே!, என் பாவங்கள், என்னை மீட்க வந்த நேசரை, சிலுவையில் அறைந்து கொன்றது, என்பதை எண்ணும் போது, நான் மிகுந்த துயரப்படுகிறேன். ஏன் பாவம், “கடவுளையே” கொன்றது என்றால், அது “என்னை” விட்டு வைக்குமா என்பதை, எண்ணிப் பார்க்கிறேன்.

இனி என் வாழ்வு, மீண்டும் ஒரு முறை என் இயேசுவை, சிலுவையில் அறைய பாவம் செய்யாது. இதில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். இயேசுவே! ஒவ்வொரு முறையும், உம்முடைய பரிசுத்த காயங்களையும், நீர் சிலுவையில் தொங்கி நிற்கும் காட்சிகளையும் நான் பார்க்கும் போது, என்னில் குடிகொள்ளும் பாவத்தை, நான் அடியோடு வெறுக்கிறேன்.

“ஒருமுறை, ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையை சுவைத்தவர்கள், நெறிபிறழ்ந்து விடின், இவர்கள் தாங்களே, இறைமகனை சிலுவையில் அறைகிறார்கள்” – எபி 6:4-6, என்று சொன்ன இயேசுவே, இந்த காரியத்தை, நான் என் வாழ்க்கையில், எப்போதும் செய்ய மாட்டேன் என்று, இப்போது தீர்மானம் எடுக்கிறேன். ஆமென். 

My status 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


என்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.


ஆண்டவரே! என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

இயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்? – எசா 53:8.


தாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்


இயேசுவே! என் இதயக் கலக்கத்தை மாற்றும்.


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


இயேசுவே! மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்


 

X


ஆடைகளை உரிதல்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

XI


சிலுவையில் அறைதல்

நம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

இயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

XIII


தாயின் மடியில்

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

XIV


கல்லறையில் இயேசு

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

XV


உயிர்த்த இயேசு

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

I


அநியாய தீர்ப்பு

 

 

II


சிலுவை சுமக்கின்றார்

 

 

III


முதன்முறை விழுகின்றார்

 

 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

 

 

V


சீமோன் உதவி செய்கின்றார்

 

 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

 

 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

 

 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

 

 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

 

 

X


ஆடைகளை உரிதல்

 

 

XI


சிலுவையில் அறைதல்

 

 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

 

 

XIII


தாயின் மடியில்

 

 

XIV


கல்லறையில் இயேசு

 

 

XV


உயிர்த்த இயேசு

   


My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com