Rev.Fr.R.John Joseph


"பீடத்தின் முன்"


அன்பார்ந்தவர்களே!

இன்று நாம், கலந்துகொள்ளவிருக்கிற “சிலுவைப்பாதை ஆராதனை”, நம் பாவ – சாபங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆராதனை. நம் சொந்த பாவங்களும், நம் முன்னோரின் பாவங்களும், நமக்கும் நம் குடும்பத்துக்கும், பெரும் சாப மோசங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்த பாவ சாபத்தின் விளைவே, இயேசுவின் சிலுவைப்பாதை.

நம் அன்றாட சிலுவையை நாள்தோறும் சுமந்து, இயேசு சுமந்த பாவ சாபங்களில் நாமும் பங்கு பெற்று, இந்த ஆராதனையில் விசுவாசத்தோடு, பங்கெடுக்கும் போது, நம்முடைய பாவ சாபங்களிலிருந்து, நமக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும். ஆமென்.


"இயேசுவுக்கு அநியாய தீர்ப்பிடுகிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே! நான் அநியாயமாக பலரை தீர்ப்பிட்டு, குற்றம் சுமத்தி பாவம் செய்தேன்.

  • என் பொறாமையாலும், பழிவாங்கலாலும், அனேகர் மீது வீண் பழி சுமத்தியிருக்கிறேன்.

  • பிறர் செய்யும் சிறிய குற்றங்களையும், கை, கால், மூக்கு என்று வைத்து, அதை பெரிதுபடுத்தி, ஊரெல்லாம் பேசித் திரிந்திருக்கிறேன்.

  • எதிலும், பிறரை குற்றம் சாட்டுவதற்கு, நான் எப்போதும் முந்தியிருக்கிறேன்.

  • இந்த பாவங்களால், எனக்கும், என் குடும்பத்திற்கும் வர வேண்டிய ஆசீர்வாதம், தடைப்பட்டிருப்பதை உணர்கிறேன். என்னை மன்னித்து விடுவியும் ஐயா.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • இயேசுவே, என் குடும்ப பாரங்களை நான் சுமக்கும் போது, என்னை அநியாயமாக குற்றம் சாட்டுவோர் அனேகரைக் காண்கிறேன்.

  • நான் செய்யாத குற்றத்தை என் மீது சுமத்துகிறார்கள். நான் எடுக்காததை எடுத்ததாக சொல்கிறார்கள். நான் கொடுக்காததை, கொடுத்ததாக சொல்கிறார்கள்.

  • என் மனதின் துயரத்தால் நான் சோர்ந்து போகிறேன். என் உள்ளத்தின் துயரத்தை ஆற்றி, எனக்கு விடுதலை தாரும் இயேசுவே.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவின் மேல் சிலுவையை சுமத்துகிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசு தாமே சுமக்கும்படி, இயேசுவின் மேல் பார சிலுவையை சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம் அவர் தோள்மேல் சுமத்தப்படுகின்றன.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே, என் பணிகளிலும், குடும்பக் கடமைகளை நான் செய்யும் போதும், அநேகர் மேல், அவர்கள் சுமக்க முடியாத பாரங்களை நான் சுமத்தி விடுகிறேன்.

  • என் பிள்ளைகள் என் பெற்றோர், என் சொந்த பெந்தங்களால், தாங்க முடியாத, தூக்கி சுமக்க முடியாத சுமைகளை, நான் அவர்கள் மேல் வைத்து, பாவம் செய்தேன்.

  • எனக்கும், என் குடும்பத்துக்கும், ஆசீர் கிடைக்க இந்த பாவங்கள் தடையாக இருப்பதை நான் உணர்கிறேன்.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • இயேசுவே, என் சொந்த வாழ்வில் கூட, என் வயதிற்கோ, என் அனுபவத்திற்கோ, மேலான பாரங்களை நான் இப்போது சுமக்கிறேன்.

  • குடும்ப பொறுப்புக்கள் என்னால் தூக்கி சுமக்க முடியவில்லை.

  • பண கஷ்டங்கள், மன கஷ்டங்கள் நான் அனுபவிக்காத பெரும்துயரங்களாக என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது.

  • எனக்கு ஓர் விடுதலை தாருமைய்யா.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு முதன் முறை கீழே விழுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வற்கு கூட இயலாத நிலையிலிருந்த, இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தைத் தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே! இது பாவம் என்று தெரிந்ததும், இனி இப்படி செய்யக்கூடாது என்று, நான் தீர்மானம் எடுக்கிறேன்.

  • ஆனால், பாவ சந்தர்ப்பங்களில் விழுந்து போகிறேன்.

  • நான் பாவ சுகத்தை எவ்வளவு அனுபவிக்கிறேன் என்றால், மனம் திரும்ப, காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறேன். விழுந்த இடத்திலேயே சுகம் காண்கிறேன்.

  • இயேசுவே! பாவம் எவ்வளவு கொடியது என்று இப்போது காண்கிறேன்.

  • எனக்கும் உமக்கும் இடையே, அது குறுக்கு சுவராக நிற்பதையும் உணர்கிறேன்.

  • எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசீரை பெற தடையாக இருக்கின்ற, இந்த பாவம் இனி வேண்டாம் என்று பலமுறை தீர்மானம் எடுத்தும் மீண்டும் மீண்டும், அதே பாவத்தில் விழுந்து கிடக்கிறேன். என்னை மன்னித்து விடுவியும் ஆண்டவரே.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • இயேசுவே! என் குடும்பத்தில் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சி.

  • தொழிலில் வீழ்ச்சி, முயற்சிகளில் வீழ்ச்சி, நம்பிக்கையில் வீழ்ச்சி.

  • என் துன்பத்தில், நான் விழுந்த இடத்திலிருந்து, எழும்ப முடியாமல் தவிக்கிறேன்.

  • பரிசுத்தரே, என் அன்றாட குடும்ப கடமைகளை, நான் செய்யும் போது, என்னால் தொடர்ந்து எதையும் செய்து முடிக்க போது மன பெலன் எனக்கு இல்லை.

  • என்னை தாங்கி தூக்கி விடும் இயேசுவே.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு தன் தாயை சந்திக்கிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

முப்பது ஆண்டுகள் சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள் மனத்திலும், ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணா காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்ந்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறைபடிந்திருந்தது.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே! சின்ன பருவத்திலிருந்து இந்த நாள் வரை, என் பெற்றோரை எத்தனை முறை நான் துயரப்படுத்தியிருக்கிறேன், வருத்தப்படுத்தியிருக்கிறேன், அவமதித்திருக்கிறேன்.

  • நான் எதிர் பார்க்காதது, அவர்கள் எனக்கு செய்த போதெல்லாம், நான் எதிர்பார்த்தது, அவர்கள் எனக்கு செய்யாத போதெல்லாம், நான் அவர்களைத் துன்பப்படுத்தியுள்ளேன்.

  • ஒரு பெற்றோர் என்றால் யார், அவர்கள் பாரம் என்ன? அவர்கள் எவ்வளவு பெரியவர்கள். அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், என்பதெல்லாம் எண்ணாமல்,

  • என்னுடைய அகந்தையினாலும், சிறு பிள்ளை தனத்தினாலும், நான் அவர்களை துயரப்படுத்தி இருக்கிறேன்.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • இயேசுவே! இன்று எனக்கும், என் குடும்பத்துக்கும், ஆசீர் கிடைக்க, இந்த பாவங்கள் எல்லாம் தடையாய் இருக்கின்றன. என்னை மன்னியும் இயேசுவே.

  • என் பெற்றோரின் மனக்காயங்களையும், துயரங்களையும், ஆற்றும். இன்று என்னை பெற்றெடுத்த பெற்றோருக்காக நான் ஜெபிக்கிறேன்.

  • அவர்கள் பசியாலும், பட்டினியாலும், தங்க வீடின்றியும், நோய் நொடிகளாலும். புறக்கணித்தலாலும், மனபாரங்களாலும், சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

  • நானும், ஒரு பெற்றோருக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் தவிக்கிறேன்.

  • சொல் கேளா பிள்ளைகளால், துயரப்படுகிறேன். அவர்களின் பாவ வாழ்க்கையால், அவமானப்படுகிறேன்.

  • என் பெற்றோருக்கு நான் செய்ததெல்லாம், இன்று எனக்கு செய்யப்படுகின்றன.

  • இந்த பரிசுத்த இடத்தில் உம்முடைய தாயை நீர் சந்திக்கும் போது எனக்கும் ஓர் விடுதலை தாரும் ஐயா.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவுக்கு சீமோன் உதவி செய்கிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

பிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒரு வேளை சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவுகூரப்படுகிறார்.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே, எனக்கு நிறைய சுயநலம் உண்டு. என்னுடைய சுயநலம் எவ்வளவுக்கு என்னை ஆட்டிப்படைக்கிறதென்றால், பிறர்நலத்தைப் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

  • என் சொந்த வீட்டில், என் கூட இருப்பவர்கள், எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்பதை என்னால் உணரவே முடியவில்லை.

  • என் பார்வை மங்கி போய் இருக்கிறது. நான் வேலை செய்கிற இடங்களில், நான் பயணம் செய்கிற பாதையில்,

  • பாரத்தால், மனசுமையால், கஷ்டங்களால், தளர்ந்து தள்ளாடுபவர்களைப் பார்த்து, ஒரு ஆறுதல் சொல்ல கூட எனக்கு மனமில்லாமல் போயிற்று.

  • இந்த என் சுயநலத்தால், நான் பாவம் செய்தேன். எனக்கு விடுதலை தாரும் சுவாமி.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • ஐயா, என்னுடைய பாரத்தை நான் சுமந்து செல்லும்போது நானுங்கூட ஆறுதல் இல்லாமல் தவிக்கிறேன்.

  • என் கூட இருப்பவர்கள் கூட, என்னுடைய கஷ்டங்களை பார்த்தும் பாராமுகமாய் இருப்பதை காண்கிறேன்.

  • அது எனக்கு இன்னும் துயரமாய் இருக்கிறது. அவர்கள் எனக்கு உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு உண்டு சுவாமி.

  • என் குடும்பத்தில், என் தொழிலில், நான் தனிமைப் பட்டிருக்கிறேன் ஆண்டவரே. எனக்கு துணையாக வந்து என்னை விடுவியும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவின் முகத்தை வெறோணிக்கம்மாள் துடைக்கிறாள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

அத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வேறோணிக்காள், துணிந்து இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீரங்கனையானாள்.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே! வெட்கம், மானம், கௌரவம் என பலவிதமான மன உணர்வுகளால், நான் உந்தப்பட்டு, அகந்தைக்கு ஆளாயிருக்கிறேன்.

  • என் வாழ்வில் எனக்கு வரும் கஷ்டங்களும், பாடுகளும், பெரியது என்று என்னையே நினைத்து வாழ்ந்திருக்கிறேன்.

  • என் சொந்த மனைவி, என் சொந்த கணவன், என் பிள்ளைகள், என் தாய், என் தந்தை, போன்றோர், மனம் சோர்ந்து போய், என்னைப் பார்க்கும் போது, அதை நான் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை.

  • கர்த்தாவே, என்னுடைய அகந்தையும், “நான்” என்ற என் செருக்கும், உம்முடைய நிறைவான ஆசீர்வாதம், என் குடும்பத்திற்கு வர தடையாய் இருப்பதை நான் உணர்கிறேன்.

  • இந்த பாவ கட்டிலிருந்து என்னை விடுவியும் ஐயா.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • தகப்பனே, ஒரு புறக்கணிக்கப்பட்ட உணர்வு, என் இதயத்தை வாட்டுகிறது.

  • ஒரு ஆறுதல் எனக்கு கிடைக்காதா என்று நான் ஏங்கி தவிக்கிறேன்.

  • என் உடன்பிறப்புக்களிடமிருந்து, என் பிள்ளைகளிடமிருந்து, என் பெற்றோரிடமிருந்து, என் கணவனிடமிருந்து, என் மனைவிடமிருந்து, ஒரு வார்த்தை, எனக்கு ஆறுதலாக கிடைக்காதா என்று தவிக்கிறேன் ஆண்டவரே.

  • என் மனதின் காயங்களை ஆற்றி என்னை விடுவியும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம் அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம் அவருக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால் உடலில் களைப்பு, ஆனால் செல்லும் வழியில் கிடைத்த வசைமொழிகளால் மனதில் களைப்பு, நிந்தை அவமானம் என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர் மண்ணோடு மண்ணாகப் புரள்கின்றார்.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • என்னுடைய பொறாமை, கவனக்குறைவு, சுயம், என் வாழ்க்கையில் உண்டாக்கிய விபரீதங்கள் பல. பிறருடைய வாழ்க்கையில், இனி எழும்ப முடியாத அளவுக்கு அவர்களுடைய பெயரை நான் கெடுத்திருக்கிறேன்.

  • ஒரு விளையாட்டாக நான் பேசிய சில காரியங்கள், எத்தனையோ பேருடைய உள்ளங்களில் காயத்தை உண்டாக்கி வாழ்க்கை பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

  • பொறாமையினாலே, பிறர் பெயரை கெடுத்து, அவர்கள் இனி உலகை பார்க்க முடியாத அளவுக்கு, நான் துன்பப்படுத்தியிருக்கிறேன்.

  • இதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம் என்று, நான் உணராமலேயே இருந்தேன்.

  • இதனால் உண்டான பாவம், எனக்கும் என் ஆண்டவருக்கும் இடையே பெரும் தடைச்சுவராக நிற்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • பரிசுத்தரே, என் குடும்பத்தை கண்ணோக்கிப் பாரும்.

  • எத்தனை வீழ்ச்சிகள், எத்தனை தோல்விகள், எத்தனை ஏமாற்றங்களால் நொறுக்கப்பட்டிருக்கிறேன் சுவாமி.

  • என் பிள்ளைகளுடைய வாழ்க்கையில், விழுந்த இடத்திலிருந்து, அவர்கள் எழும்ப முடியவில்லை. ஆண்டவரே, என் கணவனின் தொழிலிலும் வீழ்ச்சி.

  • என் பாவம் போக்க, பாடு ஏற்றவரே, உம்முடைய பாடுகளாலும், மரணத்தாலும் எனக்கு விடுதலை தாரும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் சொல்கிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர் - பெரும்பாலும் உள்ளவர்கள், அவரிடமிருந்து கிருபைகளைப் பெற்றுக் கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்கு பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன் வந்தனர்.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • என் பாவத்தையும், என் பாடுகளையும் சுமந்த, என் நேச இயேசுவே, நீர் எனக்கு தந்த பிள்ளைகள் உம்முடைய சொத்து என்பதை நான் உணரவில்லை.

  • அவர்கள் நீர் எனக்குத் தந்த கொடை என்பதை உணரவில்லை.

  • இந்த பிள்ளைகள் உமக்கு திருப்பி தரப்பட்ட வேண்டியவர்கள் என்பதையும் எண்ணாமல், அகந்தையோடு வாழ்ந்திருக்கிறேன் ஐயா.

  • என் பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்திருக்கிறேன்.

  • என்னுடைய கோபதாபங்களாலும், எரிச்சல்களாலும், பொறுமையின்மையாலும், பாவ அசுத்தங்களாலும், என் பிள்ளைகளுக்கு நான் துர்மாதிரியாய் இருந்திருக்கிறேன்.

  • ஆண்டவரே, அந்த பிஞ்சு உள்ளங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன்.

  • அப்பா, அவர்கள் இன்று வளர்ந்து, அவர்களுடைய காயங்களும் வளர்ந்து தவிப்பதை உணர்கிறேன் சுவாமி.

  • என் பாவங்களை பொறுத்து, எனக்கு விடுதலை தாரும இயேசுவே.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • என் இனிய இயேசுவே! என் பிள்ளைகளை உம்முடைய பாதத்தில் கொண்டுவருகிறேன்.

  • என் பிள்ளைகளுக்காக அழ வேண்டும் என்று சொன்னீரே. அவர்கள் படிப்பதற்கான வசதிகளை நீர் நிறைய தந்தும், என் பிள்ளைகளுக்கு படிக்கும் ஞானம் இல்லை ஐயா.

  • என் பிள்ளைகளுக்கு நல்ல ஆகாரங்களை தந்தும், அவர்களுக்கு உடல் எழுந்தேறவில்லை ஐயா.

  • அருமை தகப்பனே! என் குடும்பங்களிலே, எத்தனையோ பிள்ளைகள், இன்னும் எதிர்கால நிச்சயம் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் சுவாமி.

  • என் உடன் பிறப்புக்கள், என் குடும்பத்தார் அனைவரையும் இந்த நேரம் நினைவு கூர்கிறேன். அவர்களுக்காக அழுது புலம்புகிறேன். விடுதலை தாரும் இயேசுவே.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசு சுமந்து வந்த சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவரை கொல்கத்தாவரை சுமந்து செல்ல அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, இயேசுவுக்கு இருந்த மனபலம், சரீர உறுதி இப்போது இல்லை. சிலுவையின் பாரமும், போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது. இயேசுவைப் பற்றி ஏற்கனவே திருப்தி இல்லாத யூதர்கள், இப்போது நடப்பதை எண்ணி, தங்கள் ஐயப்பாடுகள் சரி என்று உறுதிப்படுத்தினர். இயேசுவை விரோதிகள் தண்டித்தது, “பொறாமை” யால்தான் என்று பிலாத்து உணர்ந்திருந்தான். அந்தப் பொறாமைக் கூட்டம், கொக்கரித்துக் கூத்தாடியது. இயேசுவின் கரத்தினின்று அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு, உண்டான துயரம், பன்மடங்காகி அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்த பரிசுத்த முகம் புழுதியில் புதைந்தது.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • நன்றியின்மை எவ்வளவு பெரிய பாவம். நான் இன்று, இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அது எத்தனை பேருடைய தியாகம்.

  • அது எத்தனை பேருடைய இழப்பு. அது எத்தனை பேருடைய பலி.

  • என் தாய், என் தந்தை, என் உடன் பிறப்புக்கள், என்னை சார்ந்தவர்கள், என் கணவன், என் மனைவி, என பிள்ளைகள், என் நண்பர்கள், என் சுற்றத்தார், என் உபகாரிகள் ஓ… அடுக்கி கொண்டே போகலாமே,

  • இவர்கள் எல்லாம் சுயநலம் மறந்து, தங்களுடைய வசதிகளையும், வாழ்க்கையையும் இழந்து பலியாகி,

  • என்னை வளர்த்து, என்னை ஆளாக்கி, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்களே,

  • ஒருவிசை கூட அவர்களுடைய துயரங்களையும், கஷ்டங்களையும் நான் நினைத்துப் பார்க்காமல் வாழ்ந்திருக்கிறேனே.

  • என்னை வளர்த்தவர்கள் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தும் நான் பாராமுகமாய் இருந்திருக்கிறேனே.

  • அவர்களுக்கு கை கொடுத்து தாங்குவது என் கடமை என்பதை உணராமலேயே மரத்துப் போயிருந்தேனே.

  • என்னை பொறுத்து, என் பாவத்திலிருந்து என்னை விடுவியும் சுவாமி.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • ஆனால் நானோ, இப்போது என் பிள்ளைகளை வளர்த்து, அவர்களை ஆளாக்கி, குடும்பங்களை அமைத்து, இன்று உடல் சேரர்ந்து, மனம் சோர்ந்து காணப்படுகின்றேன் ஐயா.

  • என் கடன் பாரங்களால் நான், வெளியே தலைகாட்ட முடியாமலிருக்கிறேன் ஐயா.

  • பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த சுமை ஒரு பக்கம் இருக்கும் போதே,

  • அந்த பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையாத ஏமாற்றங்களில், என் பிள்ளைகள் தவிப்பதை கண்டு கலங்கி நிற்கிறேன் சுவாமி.

  • இருந்ததையெல்லாம் வைத்து, ஒரு பிள்ளையை திருமணம் செய்து கொடுத்தேன்.

  • இனி இருக்கும் பிள்ளைகளை அனுப்ப எதுவுமில்லையே என்று மனம் சோர்ந்து தவிக்கிறேன் ஐயா.

  • எனக்கு எல்லாம் இருந்த போது, என்னை எல்லாரும் தாங்கினார்கள். நான் எல்லாம் இழந்த போது, என்னை எல்லாரும் தாக்குகிறார்கள்.

  • மீண்டும் ஒரு வாழ்க்கையை தொடங்க எனக்கு கை கொடும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவின் ஆடைகள் உரியப்படுகின்றன"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

ஆடையோடு யாரையும் சிலுவையில் அறைவது இல்லை. அவ்வாறே இயேசுவின் ஆடைகளை உரிந்தார்கள். இது அவமானத்தின் உச்சிக்கே அவரை அழைத்துச் சென்றது. இரத்தக் கறையால் உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதை நிஷ்டூரமாக இழுத்து உரித்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • ஆடை உடுத்துவது, அலங்காரத்திற்கு என்று நினைத்து அகந்தை கொண்ட என் கடந்த நாட்களை நான் நினைக்கிறேன்.

  • என் அங்கம் மறைக்க, எனக்கு அப்பா தந்த ஆடையை, நான் அலங்காரத்திற்கு பயன்படுத்தி அனேகரை பாவத்துக்கு உள்ளாக்கியிருக்கிறேன்.

  • அப்பா எனக்கு தந்த ஆடையை என் பரிசுத்தத்தில் நான் வளர பயன்படுத்துவதை விட்டு,

  • பாவ ஆசைகளுக்கு மக்களை இட்டு செல்லும் கவர்;ச்சிக்கு நான் ஆடைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.

  • ஆடையினால் நான் மாசுபடிந்து, அழுக்கடைந்தேன், என்னை மன்னித்து, என் பாவத்திலிருந்து என்னை விடுவியும் இயேசுவே.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • இன்று உடுதுணிக்கு மறுதுணி இல்லாத நிலையில், என் குடும்பத்தில் அனேகரை பார்க்கிறேன்.

  • என் சொந்த பெற்றோர் என் உடன் பிறப்புகள் கூட போதிய ஆடை இல்லாமல் வருந்துவதை உணர்கிறேன்.

  • நான் வாழும் சமுதாயத்தில் கூட, அனேகர் நல்ல ஆடை இன்றி தவிப்பதை பார்க்கிறேன்.

  • ஒரு பக்கம் அலங்கார ஆடை உடுத்தி, மக்கள் செல்வதையும், மறுபக்கம், ஒரு நல்ல ஆடை இல்லையே என்ற பெருமூச்சோடு மக்கள் தவிப்பதையும் காண்கிறேன்.

  • இயேசுவே என் ஏக்கத்தையும் என் உள்ளத்தின் கலக்கத்தையும் பாரும்.

  • அலங்கார ஆடை உடுத்தி, அங்கமெல்லாம் காட்டி செய்தப் பாவத்தால், இன்று என் உடலெல்லாம் நோய்நொடிகள்.

  • வியாதி இல்லாத உறுப்புக்களே என் உடலில் இல்லை.

  • மருந்தும், மருத்துவமும் பொய்த்துப் போக, தவியாய் தவிக்கிறேன் சுவாமி.

  • இன்று என்னை உம் பாதத்தில் தாழ்த்தி தருகிறேன் சுவாமி. எனக்கு விடுதலை தாரும் இயேசுவே.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவுக்குண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால் அதற்குமேல், ஆணி அறைதல் நடந்தது.


உள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல் ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் நடந்தன.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • பிறரை காயப்படுத்துகின்றன என்னுடைய வார்த்தைகள், பிறரை காயப்படுத்துகின்றன என்னுடைய செயல்கள்.

  • எத்தனை முறை வேண்டுமென்றே செயல்களாலும், என் சொற்களாலும் பிறரை நான் கொடுமையாக காயப்படுத்தியிருக்கிறேன்.

  • வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், நான் பிறரை காயப்படுத்துவதில் அக்கரையோடிருந்தேன்.

  • என் உள்ளத்தின் “பழி” எவ்வளவு பெரியது என்றால், வாய்ப்பை உண்டாக்கி, என் பழி தீருமட்டும் நான் காயப்படுத்தியிருக்கிறேன்.

  • இயேசுவே, என்னுடைய வைராக்கியம், என்னுடைய பழிவாங்குதல்கள், எத்தனையோ பேரை சிலுவையில் அறைந்து வைத்திருக்கிறது.

  • இன்னும் அவர்கள் சிலுவையிலேயே தொங்கி நிற்கிறார்கள். என் பாவங்களைப் பொறுத்து, என்னை மன்னியும் தெய்வமே.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • இயேசுவே, என் குடும்பத்தில், என் கணவனுக்கு தீராத வியாதி. என் மனைவிக்கு, என் பிள்ளைகளுக்கு, கொடிய வியாதிகள்.

  • கேன்சர், T.B, ஆஸ்மா, இதய நோய், சர்க்கரை வியாதி, என்று கொடும் வியாதிகளால் என்னுடைய குடும்பம் அலைக்கழிக்கப்படுகிறது.

  • சரீரத்தின் வலி தாங்க முடியாமல், தூங்காத இரவுகள்.

  • குடும்பத்தில் ஒப்பாரி சத்தம் ஓயாத என்வீடு, கண்ணீரும் கலக்கமும் நிறைந்த என் குடும்ப வாழ்வு.

  • இயேசுவே எனக்கு விடுதலை தாரும்.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

இயேசுவை நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்த்து அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறிப் புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில் சிலுவையில் தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான் பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு பலமணி நேரங்கள் நீடித்தன. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன் தன்பணியை சாந்தத்தோடு செய்து கொண்டிருந்தார்.

  • “அம்மா, இதோ உம் மகன்; யோவான், இதோ உன்தாய்,” யோவா 19:2.
  • “பிதாவே இவர்களை மன்னியும்.” லூக் - 23:43.
  • “இன்றே நீ என்னோடு பரகதியில் இருப்பாய்.” லூக் - 23:43.
  • “பிதாவே, ஏன் என்னைக் கை விட்டீர்,” மாற் - 15: 34.
  • “தாகமாயிருக்கிறது.” யோவா 19 : 28.
  • “எல்லாம் முடிந்தது,”; யோவா 19 : 28.
  • “பிதாவே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.” லூக் - 23:46 என்று கூறி இயேசு உயிர் துறந்தார்.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • பாவத்தை பற்றிய அச்சமே இல்லாதது என் வாழ்வு. பாவம் எவ்வளவு கொடியது. அது என் தெய்வத்தை நேரடியாக தாக்குகின்ற சக்தியுடையது.

  • என் தெய்வத்துக்கும் எனக்கும் இடையே, உறவை அறுத்துப் போடும் சக்தி கொண்டது. இதை நான் உணராமலேயே வாழ்ந்தேன்.

  • என் பேச்சுக்களால், கடுமையானப் பாவங்களை கட்டிக் கொண்டன. என் எண்ணங்களால், கொடிய பாவங்களை கட்டிக் கொண்டேன். என் செயல்களால் அவ்வாறே ….

  • பரிசுத்தமான இதயத்தோடு தெய்வத்திடத்திலே வலம் வந்த என் கடந்த காலத்தை நினைக்கிறேன்.

  • இன்று பரிசுத்தம் இழந்து, புனிதம் இழந்து, ஆத்துமா செத்துப் போக, உம் காலடியில் வந்துநிற்கிறேன். உம் பாடுகளாலும், மரணத்தாலும் என்னை விடுவியும் இயேசுவே.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • என் குடும்பம் சில நாட்களாகவே, மரண பயத்தில் வாடுகிறது. எப்போது என்ன செய்தி வருமோ என்ற நடுக்கம்.

  • வெளிநாடுகளிலிருந்து கெட்ட செய்திகள் வருகின்றன. தொலைபேசி மணி அடிக்கும் போதே நெஞ்சம் துடிக்கிறது.

  • என்ன செய்தி எப்போது வருமோ என்று ஒவ்வொருவரையும் பயந்து கொண்டே பார்க்க வேண்டியிருக்கிறது.

  • வியாதியின் கொடுமையால் இரவைக் கடத்தி செல்ல முடியாமல் பயத்தில் இருக்கிறேன்.

  • நாளைக்கு எப்படி கண் விழிப்பேன் என்று தெரியாத மரண பயம்.

  • இந்த பெரும் அந்தகார கட்டிலிருந்து எனக்கு விடுதலை தாரும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவை இறக்கி, தாயார் மடியில் வைக்கிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

அரிமத்தியா ஊர் சூசை நல்லவர், நீதிமான், யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை எதிர்பார்த்திருந்தார். தலைமைச் சங்க உறுப்பினர் இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள் தாங்கொண்ணா துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும், என்று முன்னறிவிக்கப்பட்டவர். வியாகுலத்தாயாக அமர்ந்திருந்தார்.


கணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர் . அந்த ஒரே மகனையே பிதாவுக்கு பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பதிந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தித் திறக்கப்பட்ட, இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த வீரத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத்தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலி பீடத்துக்கு கையளிக்கிறார். உலக மீட்புக்கான உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • எல்லாரையும் சிலுவையில் அறைவதில், எப்போதும் நான் முந்தியிருக்கிறேன்.

  • பாவம் செய்வதற்கு விரைந்த என் கால்கள், பாவத்திலிருந்து திரும்ப விரையவில்லை.

  • பாவம் செய்ய, காலத்தையும் நேரத்தையும், திட்டமிட்டுத் தேடினேன். ஆனால், பாவத்திலிருந்து திரும்ப, காலம் குறிக்க பயப்படுகிறேன்.

  • என் பேச்சுக்களால், என் எண்ணங்களால், என் செயல்களால், பிறரை சிலுவையில் அறைவதிலேயே, நான் குறியாயிருக்கிறேன்.

  • இயேசுவே! என்னை மன்னியும் ஐயா! இந்த 13 –ம் தலத்தைக் கண்ட பின்பு, நான் என் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை.

  • என்னைப் பொறுத்து, ஏற்றுக்கொள்ளும் சுவாமி.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • என் துன்பத்தை யாரிடம் சொல்வேன், என் குடும்பத்தில் நெருக்கடிகளை, என் பெற்றோர் அறிந்தால் பொறுத்து கொள்ளமாட்டார்களே.

  • என் கணவனுக்குத் தெரியாமல், என் மனைவிக்கு தெரியாமல், என் துன்பத்தை என் பிள்ளைகளுக்கு அறிவிக்காமல் நான் தன்னந்தனியே தவிக்கிறேன்.

  • யாரிடத்திலும் சொல்ல முடியாத என் துயரத்தை, இந்த நேரம் என் இயேசுவே நீர் மாத்திரம் காண்கிறீர்.

  • பிறர் என்னை, இந்த சிலுவையிலிருந்து இறக்க முடியாது. மனித உதவியை தேடுவதும் ஏமாற்றம் தான்.

  • ஆனால், உம்மை இறக்கி விட, ஒரு அரிமத்தியா ஊர் யோசேப்பை நீர் தேர்ந்து கொண்டீரே.

  • அப்பா, நீர் எல்லாம் காண்கிறவர், என்னையும், என் சிலுவையிலிருந்து இறக்கி தேற்ற, இந்த 13-ம் தலத்தில் கை தாருமையா.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

 

"இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்"

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"


தியானம் :

மண்ணையும், விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” தெய்வத்தை புறக்கணித்த மனிதனின் செயல்தான் இயேசுவின் அடக்கம்.


“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,

“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது

.

அந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு, “கல்லறை”. விளக்கை அணைத்துவிட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்குக் கொண்டாட்டம். நல்லவரை அழித்துவிட்டால் தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம், ஆனால் தெய்வத்தை கல்லறை தாங்குமா? உயிரும் உயிர்ப்புமானவர் கல்லறையில் இருக்க முடியுமா?


சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

  • இயேசுவே! இரகசிய பாவங்கள், எனக்குள் கல்லறையாக இருந்து கொண்டிருக்கிறது.

  • இரகசிய பாவம் என்பது, வெளிப்படையில் மறைக்கப்பட்ட பாவமாக இருக்கலாம்.

  • ஆனால், உள் மனதிலே புதைந்திருந்து அது புழுத்து புழுவாகி, பெரும் மரண ஆபத்தை ஆத்துமாவுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.

  • நான் அதை பற்றியெல்லாம் அக்கரை கொண்டதேயில்லை.

  • வெளிப்படையாக, மக்கள் பார்க்கின்ற பாவங்கள் தான் நான் நீக்கப்பட வேண்டியது என்று என்னையே தேற்றியிருக்கிறேன்.

  • வாய்ப்பு கிடைக்காததால் நான் பாவம் செய்யாமலிருக்கிறேன்.

  • என்னுடைய மறைந்த உள்ளம் பாவத்தை தேடிக் கொண்டே இருக்கிறது.

  • என் இரகசிய பாவங்கள், என் சரீரத்தையும், என் ஆத்துமாவையும் ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கிறது.

  • இயேசுவே! என்னை முற்றும் அறிகிற கர்த்தாவே, நான் மறைத்தாலும், உமக்கு முன் மறைவானது ஒன்றுமில்லை ஐயா.

  • என் சின்ன பருவத்திலிருந்து இந்த நாள் வரை வானகத்துக்கு முன்பும், உமக்கு முன்பும், நான் மறைத்த என் பாவங்களை, இதோ வெளியே கொண்டு வருகிறேன்.

  • உம் இரத்தத்தால் தொட்டு, ஒரு கல்லறையின் ஜீவியத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும் சுவாமி.

சாபம் நீக்கும் இயேசுவே !

  • பரிசுத்தரே, என் ஏழை குடும்பத்தை ஒரு முறை பாரும். இனி நாங்கள் எழும்புவோமோ, என்று அச்சம் உண்டாகும் அளவுக்கு விழுந்து கிடக்கிறோம் ஐயா!

  • ஒரு கல்லறையின் அனுபவம் அது. இனி எங்களுக்கு மீட்பு இல்லை. இனி என் பிள்ளைகளுக்கு மீட்பு இல்லை. இனி என் வியாதியிலிருந்து மீட்பு இல்லை.

  • கடன் தொல்லையிலிருந்து மீட்பு இல்லை என்ற ஒரு கொடுமையான அச்சத்தை நான் என் வாழ்வில் அனுபவிக்கிறேன் சுவாமி.

  • ஒரு கல்லறையின் அனுபவம் அது. என் பிள்ளைகளை பார்க்க என் கண்கள் கூசுகின்றன. என் முன்னால் இருக்கின்றவற்றை காண என் கண்கள் அச்சப்படுகின்றன.

  • தனிமையை விரும்புகிறேன். யாரையும் பார்க்கும் மன துணிச்சல் எனக்கு இல்லை. ஒதுங்கி ஒதுங்கி, என் வாழ்க்கையை ஓரத்திற்கே கொண்டு போகிறேன்.

  • ஒரு கல்லறையின் அனுபவம் அது.

  • இயேசுவே, என்னையும், என் குடும்பத்தையும் பற்றி இருக்கின்ற, கொடிய கல்லறையின் அச்சுறுத்தலினின்று எங்களுக்கு விடுதலை தாரும் சுவாமி.


எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு


 

"இறுதி ஜெப வழிநடத்தல்"

பிரியமானவர்களே!

  • இப்போது நாம், கல்வாரியில், இயேசுவின் சிலுவைப்பாதையை தியானித்து முடிக்கிறோம்.
  • அந்த சிலுவைப்பாதையின் பேறுபலன்கள், நம்மையும், நம் பிள்ளைகளையும் நம் குடும்பத்தையும் வந்து அடையும்படியாக ஜெபிப்போமா?


  • நமக்காக சிலுவையில் மரித்த இயேசுவை உற்று பார்ப்போம்.
  • நமக்கு வாழ்வு தருவதற்காக வந்த இயேசு தம் ஜீவனை நமக்காக கையளித்தார்.
  • நம்மை நலமாக்கும் தண்டனை, அவர் மீது விழுந்தது.
  • நம் அக்கிரமங்களுக்காகவே, அவர் நொறுக்கப்பட்டார். நம் பாவங்களை கடவுள் அவர் மேல் சுமத்தினார்.
  • அவருக்கு உண்டான இந்த நிலையைப் பற்றி அக்கறைப்பட்டவன் யார்?
  • ஏசாயா 53 வேதனையோடு இக்கேள்வியை கேட்கிறது.


  • நம் பாவங்களுக்கு பரிகார பலியாக பிதா இயேசுவை பலியாக்கினார்.
  • ஆடுகளை போல் நாம் வழி தவறி அலைந்தோம்.
  • அவர் நம் பாவங்களை தன் தோள் மேல் சுமந்தார்.
  • இயேசுவினுடைய சிலுவை பாடுகளும் மரணமும் நம்மை நம் பாடுகளின் மத்தியில் தங்குகிறது.
  • நம்முடைய பாவங்கள் அனைத்தும் அவர் தோளிலே சுமத்தப்பட்டன.
  • பரிசுத்தரான இயேசு பாவிகளாகிய நமக்காக சிலுவையிலே நொறுக்கப்பட்டார்.
  • நம்மை பரிசுத்தராக்குவதற்காக அவர் பாடுகளை ஏற்றுக்கொண்டார்.
  • அவருடைய மரணம் நமக்கு நிச்சயம் விடுதலை தரும்.
  • நமக்கு மட்டுமல்ல, நம்முடைய குடும்பம் முழுவதற்கும் விடுதலை கொடுக்கின்றது அவருடைய மரணம்.
  • நாம் அழிந்து போகாமல் இருக்க அவர் தம்மையே அழித்துக்கொண்டார்.


  • இன்று இயேசு கல்வாரியில், அவருடைய ஆவியை நமக்காக கையளித்தார்.
  • நம்முடைய துன்பத்தில், நம்முடைய வேதனைகளில், நம்முடைய போராட்டங்களில், நமக்குத் துணையாக இருக்க, பாடுபட்டு மரித்த இயேசுவின் ஆவி, இப்போது நம்மீது பொழியப்படுகிறது.
  • அவர், நமக்காக வாக்களிக்கப்பட்டவர்.
  • இந்த உலகத்தின் போராட்டத்தில், போராடி ஜெயம் கொண்ட இயேசுவின் ஆவி, நம்மீது பொழியப்படுகிறது.
  • இப்போது அந்த ஆவியை, நாம் சொந்தமாக்கி கொள்வோம்.
  • கல்வாரியில் இயேசு நமக்காக கையளித்த ஆவியை நாம் சொந்தமாக்கி கொள்வோம்.


  • அது பாடுகளை ஏற்றுக் கொண்ட ஆவி.
  • அது நம் பாவங்களை சுமந்து அழித்த ஆவி.
  • அது துன்பங்களையும், மரணத்தையும் ஜெயம் கொண்ட ஆவி.
  • அந்த ஆவியை நமக்கு சொந்தமாக்கி கொள்வோம்.
  • இயேசுவினுடைய ஆவிக்காக கேட்டு ஜெபிப்போம்.
  • இயேசுவே! என் இரட்சகரே! உம் ஆவியாலே என்னைத் தொடும் என்று கேட்போம்.
  • நம்மை விடுவிக்க, மீட்க வந்த இயேசுவின் ஆவி எங்குண்டோ அங்கே விடுதலை உண்டு.
  • நம்மை விடுவிக்க வந்த இயேசுவின் ஆவி எங்கே பொழியப்படுகின்றதோ, அங்கே விடுதலை உண்டு.


  • நம் சரீரத்துக்கு விடுதலை தர, நம் மனக்கலக்கங்களுக்கு விடுதலை தர,
  • நம்முடைய பய சஞ்சலங்களிலிருந்து நமக்கு விடுதலை தர,
  • நம் பாடுகள் வேதனைகள் போராட்டங்களில் விடுதலை தர ,
  • இயேசு சுவாமி கல்வாரியில், தன் ஆவியை இன்று கையளித்தார்.
  • அந்த ஆவிக்காக அழுது ஜெபிப்போம்.
  • இயேசுவே அந்த ஆவியை என் மீது பொழியும் என்று கேட்டு ஜெபிப்போம்.
  • இயேசுவே உம்முடைய ஆவியாலே என்னை நிரப்பும் என்று மன்றாடுவோம்.


  • அபிஷேகம் பெற்ற எனக்கருமையானவர்களே! கிறிஸ்துவின் ஆவி எங்குண்டோ அங்கே விடுதலை உண்டு என்று விசுவசிப்போம்.
  • அந்த அபிஷேகத்தின் ஆவியால் நாம் நிரப்பப்பட ,
  • நமக்காக கையளித்த இயேசுவின் ஜீவனாலே நாம் நிரப்பப்பட,
  • நாம் பாவத்தில் அழிந்து போகாமலிருக்க, நம்மை அவர் ஆட்கொள்ள, இப்போது ஸ்தோத்திரத்தோடு ஜெபிப்போமா.
  • ஸ்தோத்திர பலி எங்குண்டோ அங்கே ஆவியின் பொழிதலும் உண்டு.


  • ஆவிக்காக அழுது ஜெபிப்போம்.
  • நம்மை குணமாக்குகின்ற இயேசுவின் ஆவி.
  • நம்மை விடுவிக்கின்ற இயேசுவின் ஆவி.
  • நம் காயங்களை ஆற்றுகின்ற இயேசுவின் ஆவி.
  • நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற இயேசுவின் ஆவி.
  • நம் தளைகளை, கட்டுக்களை, தகர்த்தெறிகின்ற இயேசுவின் ஆவி.
  • அந்த ஆவி நம்மை ஆட்கொள்வதற்காக, ஸ்தோத்திர பலியோடு அவருடைய பாதத்துக்கு வருவோம்.
  • ஆதி அப்போஸ்தலர்கள் ஆலயத்தில் கூடியிருந்து, ஸ்தோத்திரபலி இட்டார்கள்.
  • அப்போது, இந்த உலகத்தை விடுவிக்கின்ற பரிசுத்த ஆவியானவர் மிகுந்த பெலனோடு அவர்களை ஆட்கொள்ள இறங்கி வந்தார்.
  • ஆமென்! இது விடுதலையின் நேரம்.
  • விடுதலை அளிக்கின்ற ஆவியானவர் நம்மை ஆட்கொள்கின்ற நேரம்.

  • நன்றி இயேசுவே! உம்முடைய ஆவிக்காக நன்றி!
  • நீர் எங்களை விடுவிக்க, கையளித்த ஆவிக்காக நன்றி!
  • எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் குடும்பம் முழுவதையும், உம்முடைய ஆவி விடுவித்த அன்புக்காய் கோடி, கோடி நன்றி ஐயா!
  • துதி, கனம், மகிமை, உமக்கே செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் நல்ல பிதாவே !
  • ஆமென்.


 

My status







 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


என்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.


ஆண்டவரே! என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

இயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்? – எசா 53:8.


தாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்


இயேசுவே! என் இதயக் கலக்கத்தை மாற்றும்.


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


இயேசுவே! மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்


 

X


ஆடைகளை உரிதல்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

XI


சிலுவையில் அறைதல்

நம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

இயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

XIII


தாயின் மடியில்

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

XIV


கல்லறையில் இயேசு

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

XV


உயிர்த்த இயேசு

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 



உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

I


அநியாய தீர்ப்பு

 

 

II


சிலுவை சுமக்கின்றார்

 

 

III


முதன்முறை விழுகின்றார்

 

 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

 

 

V


சீமோன் உதவி செய்கின்றார்

 

 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

 

 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

 

 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

 

 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

 

 

X


ஆடைகளை உரிதல்

 

 

XI


சிலுவையில் அறைதல்

 

 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

 

 

XIII


தாயின் மடியில்

 

 

XIV


கல்லறையில் இயேசு

 

 

XV


உயிர்த்த இயேசு

   


My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com