Rev.Fr.R.John Joseph


"பீடத்தின் முன்"


கிறிஸ்துவுக்குள் எனக்கு அன்பார்ந்தவர்களே!

“இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள். ஏனெனில், வாழ்வுக்குச் செல்லும் வாயில் அது. அதன் வழி மிக குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே” – மத் 7:13,14.

மனிதகுல மீட்புக்காக, இவ்வுலகுக்கு வந்த இயேசு, அம்மீட்பை மனிதன் பெற, அவர் தேர்ந்து கொண்ட வழியே, “சிலுவையின் பாதை”. இயேசு, சிலுவையின் பாதை வழியாகச் சென்று, மனிதனை அவன் பாவத்தினின்றும், அதன் விளைவான சாபத்தினின்றும் மீட்டார்.

இயேசு, கல்வாரியில் பெற்றுத் தந்த மீட்பை, நாமும் சொந்தமாக்க, நம்முடைய அன்றாட வாழ்வில் வரும், சிலுவையாகிய துன்பங்களை, நாம் மகிழ்ச்சியோடு சுமந்து, அவர் பின்னே செல்வோம்.

“கிறிஸ்து உங்களுக்காக துன்புற்று, ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். இதற்காகவே அழைக்கப் பட்டிருக்கிறீர்கள்” – 1பேது 2:21.

கல்வாரியின் பாதையில், இயேசு நடந்து சென்ற அடிச்சுவடுகளைக் கண்டு, அவர் பாதம் ஒன்றி, நாமும் கடந்து செல்ல, மீட்பைச் சொந்தமாக்க, இந்த சிலுவையின் பாதையை தியானிப்போம்.


பாடல் : -

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


 

 

இயேசுவுக்கு அநியாயத் தீர்ப்பிடுகிறார்கள்


பாடல் : -

நீதிமன்றத்தில் அந்தோ! இயேசு நிற்கும் காட்சியைப் பார்

குற்றமற்றவர் என்று மூன்று முறை கூறியவர்,

குற்றவாளி இவர் என்று, கொலை செய்ய தீர்ப்பிட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப் பற்றி, அக்கரை கொண்டவர் யார் - ஏசா 53:8.

தியானம் :

இயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.


வசனம் :

உலகிற்கு தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே, கடவுள் இயேசுவை உலகிற்கு அனுப்பினார் - யோவா 3:17.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • உன்னை விடுவிக்க வந்த எனக்கு நீ தீர்ப்பளித்தாயோ!
 • சற்று முன்பு எனக்கு ஓசான்னா பாடிய நீ, நான் சாக வேண்டும் என்று ஓலமிடுகின்றாயே!
 • உனக்கு பரபாஸ் வேண்டும்? நான் சாக வேண்டும்?
 • அக்கிரமி சாக வேண்டும் என்பதல்ல, அவன் மனம் மாறி, வாழ வேண்டும் என்பது என் விருப்பம்.
 • ஆனால், அக்கிரமி தன் அக்கிரமத்திலேயே வாழ வேண்டும், மீட்பராகிய நானோ, சாக வேண்டும் என்று நீ விரும்பினாய்.

 • என் மகனே! உன் வாழ்வில் எத்தனை முறை, பரபாசுக்கு வாழ்வும், மெசியாவுக்கு சாவும் என்று தீர்ப்பளித்திருக்கிறாய்.
 • பரபாஸ் என்றால் யார்?
 • கொலை, கொள்ளை, பகை, சண்டை, பழி, பொய், புரட்டு, ஏமாற்று என, அத்தனை பாவத்தினுடையவும் ஒட்டுமொத்த உருவமல்லவா?
 • ஆனால் நானோ?
 • அன்பு, அமைதி, பொறுமை, மகிழ்ச்சி, இரக்கம், தியாகம், பரிசுத்தம் இவை அனைத்துக்கும் பிறப்பிடம்.
 • உன் வாழ்வுக்கு நான் வேண்டாம், பரபாஸ் போதும் என்று, நீ பலமுறை முடிவு எடுத்ததன் பயன் என்ன?
 • பாடுகள், வேதனை, பயம், கலக்கம், போராட்டம், நோய், இழப்பு, மரணம், என இன்னும் எத்தனையோ இன்னல்கள் உன்னை துரத்திக்கொண்டேயிருக்கிறதே!

 • வா! என் மகனே! என் மகளே!
 • இப்பொழுதாவது மனம் மாறி என்னை ஏற்றுக் கொள்ள வா!
 • பரபாசோடு வாழ்ந்த வாழ்க்கைப் போதும், என்னோடு என்றும் வாழ, என் இல்லத்தில் உரிமை மகனாக, மகளாக வாழ்ந்து மகிழ, உன்னைக் கரம் நீட்டி அழைக்கிறேன்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசுவின் தோள் மேல் சிலுவை சுமத்துகிறார்கள்:


பாடல் : -

இயேசுவின் தோளில் அந்தோ! பாரச் சிலுவையைப் பார்!

காலொடிந்த குட்டி ஆட்டை சுமந்திட்ட தோள்களிலே

உலகத்தின் பாவத்தையும் சாபத்தையும் வைத்தனரே

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார். கொடியவருள் ஒருவராக கருதப்பட்டார். ஆயினும், பலரின் பாவத்தை சுமந்தார் - ஏசா 53:12.

தியானம் :

இயேசு தாமே சுமக்கும்படி, பார சிலுவையை அவர் மேல் சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு, மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம், அவர் தோள்மேல் சிலுவையின் வடிவில் சுமத்தப்படுகின்றன.


வசனம் :

சிலுவையின் மீது, தம் உடலில், நம் பாவங்களை, அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே அவர் இவ்வாறு செய்தார் - 1பேது 2:24.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • நான் குற்றமற்றவன் என்று, மூன்று முறை கூறிய பிலாத்து, என்னை குற்றவாளி என்று தீர்ப்பிடுகின்றான் பார்.
 • உன் குற்றங்கள் அனைத்தையும், மன்னித்துப் போக்க வந்த, தேவ ஆட்டுக்குட்டியாம் என்னை, குற்றவாளி என்று தீர்ப்பிட்டாயே!
 • பாவம் எவ்வளவு கொடியது என்று பார்த்தாயா?
 • உன் பாவத்தையும், உன் பாரத்தையும் சுமந்து தீர்க்க வந்த என்மேல், சிலுவையை சுமத்துகிறாயோ?
 • ஆம்! நான் அதற்காகவே வந்தேன்.

 • என் மகனே! இந்தச் சிலுவை, வெறும் மரச்சிலுவை அல்ல.
 • இந்த சிலுவையில் தான், நான் உன் பாவங்களையும், அதனால் நீ அனுபவிக்கும் சாபங்களையும் சுமந்து செல்கிறேன்.
 • வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் என் மகனே! என் மகளே!
 • உன் குடும்பத்தை, உன் பிள்ளைகளை, உன் தொழிலை, உன் எதிர்காலத்தை, காலமெல்லாம் சுமந்து செல்ல, நான் ஆவலோடு வந்தேன்.

 • உன்னைக் காலமெல்லாம் சுமந்து செல்லக் காத்திருக்கும், என்னண்டை வாரோயோ!
 • இவ்வுலகில், சுமைதாங்கி என நீ தேடிச் செல்லும் அனைத்தும், ஒரு நாள் பொய்த்துப் போகும்.
 • நானோ, நீ எந்த நிலையில் இருந்தாலும், உன்னைத் தூக்கிச் சுமக்க, காத்திருக்கும் தகப்பனல்லவா?
 • என் அழைப்பின் குரல் கேட்டு, உன் அன்றாடச் சிலுவையை, நாள்தோறும் சுமந்து, என் பின்னே வா!
 • உனக்கு இளைப்பாறுதல் தருவேன். இனி, என் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசு முதன் முறை கீழே விழுகின்றார்


பாடல் : -

முதன் முறை அந்தோ! இயேசு விழும் காட்சியைப் பார்!

விழுந்திட்ட உலகத்தை தூக்கிவிட வந்தவரை,

உலகத்தின் புழுதியில் புரண்டிட வைத்தனரே

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

இயேசுவின் தோற்றம், பெரிதும் உருக்குலைந்ததால், மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது, மானிடரின் உருவமே, அவருக்கு இல்லை – எசா 52:14.

தியானம் :

இரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வதற்கு கூட, இயலாத நிலையிலிருந்த இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தை தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.


வசனம் :

நாம் இறைப்பற்று இன்றி, வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும், கிறிஸ்து, நமக்காக, தம் உயிரைக் கொடுத்தார் - உரோ 5:6.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • மனித குலத்தின் வீழ்ச்சி, ஏதேன் தோட்டத்தில் ஆரம்பமானது.
 • அந்த வீழ்ச்சியினின்று, எழும்ப முடியாத மனுக்குலத்தை, எழுப்பிவிட, நான் இவ்வுலகுக்கு வந்தேன்.
 • என் மகனே! உன்னை எழுப்பிவிட, நான் விழுந்து கிடக்கும் காட்சியைப் பார்!
 • இங்கே தான், ஊதாரி மகனின் மனமாற்றம் ஆரம்பமானது.
 • ஆனால் நீயோ, விழுந்த இடமே சுகம் என்று, அங்கேயே படுத்துக்கிடக்கின்றாயோ?

 • எழுந்திரு, என் மகனே! என் மகளே!
 • பன்றிக்குழியின் வாசம் உனக்கு பழக்கப் பட்டு போய்விட்டது.
 • துர்நாற்றத்துக்கும், நறுமணத்துக்கும் வேறுபாடு காண, உன்னால் முடியவில்லை.
 • ஆனால், உன்னை மீட்க வந்த என்னை வீழ்த்திய, உன்னுடைய வீழ்ச்சி, உன் மனக்கண்ணை திறக்கட்டும்.
 • உன்னை எந்நேரமும் மன்னித்து ஏற்றுக்கொள்ள காத்திருக்கும், தந்தை நான்.
 • பாவத்தில் விழுந்து கிடக்கும் உன்னால், “சாபம்” புற்றுநோய் போல், உன் குடும்பத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது.
 • போதும், உன் பாவ வாழ்க்கை. திரும்பு – உன் தந்தையின் இல்லம் நோக்கி.
 • அங்கே உனக்கும், உன் குடும்பத்துக்கும் மீட்பு காத்திருக்கிறது.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

சிலுவையின் பாதையில், இயேசு தன் தாயை சந்திக்கிறார்.


பாடல் : -

வியாகுலத்தின் தாய் அந்தோ! வழியில் மகனைக் கண்டார்!

உலகத்தின் மீட்புக்காக ஒரே மகனைத் தந்த

உத்தமியின் இதயத்தில், வியாகுல வாள் குத்தியதே

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அவரோ, நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:4.

தியானம் :

முப்பது ஆண்டுகள், சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள், மனத்திலும் ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணாக் காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்த்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறை படிந்திருந்தது.


வசனம் :

இரத்தம் சிந்தி, மனிதனுடைய பாவத்துக்கு கழுவாய் ஆகுமாறு, இயேசுவைக் கடவுள், நியமித்தார் - உரோ 3:28.

சிந்தனை:

 • என் மகனே!
 • என் அன்னை மரியாள், ஆவிக்குரிய அத்தனை அன்னையருக்கும் தாயானவள்.
 • தூய ஆவியாலும், வல்லமையாலும், என் அன்னை எவ்வளவு நிறைந்திருந்தார் என்றால், அவரது வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே, எலிசபெத்தும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றார்கள்.
 • தந்தையின் விருப்பம் செய்வதில், நிறைவு கண்டு, என்னைக் கருத்தரித்து, உலகுக்கு ஈந்த தாயல்லவா அவர்.

 • என் மகனே! உன் பாவம் எனக்குத் தந்த சிலுவை, என்னை மட்டுமல்ல, என் தாயையும், என்னை அன்பு செய்கின்ற அத்தனை பேரையும் கூடத் துன்புறுத்தியதே.
 • நீ செய்கின்ற ஒரு சிறு தவறு கூட, அது யாருக்குச் செய்யப்பட்டதோ, அவரை மட்டுமல்ல, அவரை சார்ந்த அத்தனை பேரையும் துன்புறுத்துகிறதே.
 • பாவம் எவ்வளவு கொடியது பார்த்தாயா?
 • இதுவரையிலும், பாவம் செய்வதற்கு முந்திக்கொண்ட நீ, இனிமேல், அதற்கு பரிகாரம் செய்வதற்கு முந்த வேண்டும்.
 • என் மகனே! பாவம் பாடுகளை உற்பத்தி செய்கின்ற ஓர் இயந்திரம்.
 • நீ அசட்டையாகச் செய்யும் ஒவ்வொரு பாவமும், உனக்கும், உன் குடும்பத்துக்கும், நீ வாழும் சமுதாயத்துக்கும், பாடுகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும்.
 • பாடுகளால் பாவமும், பாவத்தால் பாடுகளும், என்ற சுழற்சியிலிருந்து, நீ மீள முடியாத நிலைக்கு, அதி சீக்கிரமாகவே தள்ளப்படுவாய்.
 • போதும்! உன் பாவ வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்றே என்னிடம் திருந்தி வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசு தன் சிலுவையை சுமக்க, சீமோன் உதவி செய்கிறார்.


பாடல் : -

தள்ளாடும் இயேசு அந்தோ! பாரத்தினால் துடித்தார்

உதவி செய்ய சீரேன் சீமோனை அழைத்திட்டார்

இயேசு ஏற்ற சிலுவையை, தானும் ஏற்று சுமந்திட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

மெய்யாகவே, அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.

தியானம் :

பிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கொத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒருவேளை அவர் சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, இயேசுவின் சிலுவையை சுமக்கும்படி, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவு கூரப்படுகிறார்.


வசனம் :

நம் குற்றங்களுக்காக சாகுமாறு, கடவுள் இயேசுவை ஒப்புவித்தார் - உரோ 4:25.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • பாவத்தின் சம்பளம், பாடுகளும் மரணமும்.
 • இந்த உலகம், தன் பாவங்களால், தனக்குச் சம்பாதித்துக் கொண்டதெல்லாம், பாடுகளும் மரணமுமே.
 • பாவமும், சாபமும், நிறைந்த இவ்வுலகில், நீ எப்படி வாழ வேண்டுமென்று, என் கல்வாரியின் பாதையில், நான் உனக்கு கற்றுத் தருகிறேன்.
 • இதோ! நீ துன்புறும் வேளையில், அன்போடிரு.
 • ஸ்னேகம் சகலமும் தாங்கும், ஸ்னேகம் சகலமும் சகிக்கும்.
 • பொறுமையோடும், தியாக உணர்வோடும், இருக்க கற்றுக்கொள்.
 • துன்புறுபவரின் துன்பங்களில், அவர்களைத் தாங்கிக் கொள்ளப் பழகு.
 • உன் துன்பங்களை மட்டுமே, எண்ணிக் கொண்டிராதே. உன்னைச் சுற்றியிருப்பவரின் துன்பங்களையும் நினைத்துப் பார்.
 • பிறரின் துன்பத்தைத் தீர்ப்பதற்கு, நீ வழி தேடும் போது, உன் துன்பத்தினின்று மீள, உனக்கு வழி பிறக்கும்.

 • சின்னஞ்சிறியவர்களாகிய இவர்களுக்கு, நீ செய்த போதெல்லாம், என் பிள்ளையே! அதை நீ எனக்கே செய்கிறாய்.
 • பிறரின் அன்றாட சிலுவையை, நீ சுமக்க முன்வரும் போது, உன்னுடையவும், உன் குடும்பத்தினுடையவும், அன்றாடச் சிலுவையை, தூக்கிச் சுமக்க, நான் உன்னுடன் வருவேன்.

 • என் மகனே! என் மகளே!
 • என் சிலுவையின் பாதையில், சீமோன் எனக்குச் செய்த உதவி, நீ பிறருக்குச் செய்ய வேண்டியதன் முன் அடையாளமே.
 • பிறர் துன்புறுவதைக் கண்டும், பாராமுகமாயிருக்கின்றாயோ! போதும், என் பிள்ளையே! போதும், எழுந்திரு, உன் உதவிக்கரம் நீட்டி, பிறரை துன்பத்தினின்று மீட்க வா!
 • என் மீட்பின் பணியில், நீயும் பங்குபெற வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

குருதி வடிந்த இயேசுவின் முகத்தை, வெறோணிக்காள் துடைக்கிறாள்.


பாடல் : -

களையற்ற முகத்தில் அந்தோ! முள்முடியின் குருதியைப் பார்!

அவர் முகம் பார்க்கிறவர், பிரகாசம் அடைந்திட

வெறோணிக்காள் துகிலாலே இரத்த முகம் துடைத்திட்டாள்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ, அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை – எசா 53:2.

தியானம் :

அத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வெறோணிக்காள், துணிந்து, இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது, அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மட்டுமல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீராங்கனையானாள்.


வசனம் :

பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, கிறிஸ்துவும், ஒரே முறை, தம்மைத் தாமே, பலியாகக் கொடுத்தார் - எபி 9:28.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • விசுவாசம் என்பது, என்னை உன் இரட்சகர் என்று, நீ வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனவலிமை.
 • அன்றொரு நாள், எல்லாரும் என்னை, புதுமைகள் செய்கின்ற ஒரு நாசரேத்தூர் போதகர் என்று மட்டும், பின்பற்றிய வேளையில், பார்வையற்ற பார்த்திமேயு, நான், இரட்சகராகிய இயேசு என்றும், தாவீதின் குமாரன் என்றும், வெளிப்படையாக ஏற்று, என்னைப் பின்சென்றார்.
 • கூட்டத்தில், பலரும் அவரை அதட்டினார்கள்.
 • ஆனால் பார்த்திமேயு, இன்னும் அதிக உறுதியுடன், என்னை, எல்லாருக்கும் முன்பாக, இரட்சகர் என்று அறிக்கையிட்டு, பின்தொடர்ந்தார்.
 • இதுவல்லவா விசுவாசம்!.
 • இங்கே, உள்ளத்தின் விசுவாசம், வெளிப்படையாக அறிக்கையிடப்படுகின்றது.

 • என் மகனே! மகளே!
 • என்னுடைய பணியின் போது, ஆயிரக்கணக்கானோர், என் கையிலிருந்து, நன்மை உதவிகள் பெற்றுள்ளனர்.
 • ஆனால், அந்த உதவிக்காக மட்டும் என்னைப் பின்தொடர்ந்தவர்கள், என்னை வெளிப்படையாக, இரட்சகர் என்று ஏற்று, பின்பற்ற முன்வரவில்லை.
 • ஆனால் வெறோணிக்கா என்ற ஒரு பெண்மணி, துணிவுடன் முன்வந்து, என் கல்வாரியின் பாதையில், என்னை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்.

 • என்னைப் புறக்கணிக்கும் மக்களின் மத்தியில், நீ என்னை, வெளிப்படையாக, இரட்;சகர் என்று ஏற்று, பின்பற்ற வேண்டும் என்று, இந்த தலம், உனக்குச் சொல்லித் தருகின்றது.
 • துன்பங்கள், நிந்தைகள், அவமானங்கள் மத்தியிலும், என்னை உன்னுடையவும், இந்த உலகத்தினுடையவும், இரட்சகர் என்று, வெளிப்படையாக அறிக்கையிட்டு, ஏற்றுக்கொள்ள, இப்போதே புறப்பட்டு வா!
 • கூச்சப்படாதே! பரிகாசங்களுக்கு அஞ்சாதே! பாடுகளை ஜெயங்கொண்டவர் உன்னோடிருப்பேன். என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வா.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்


பாடல் : -

இரண்டாம் முறை அந்தோ! இயேசு மீண்டும் விழுவதைப் பார்!

பாவத்திலே மீண்டும் மீண்டும் விழுந்தெழுந்த குற்றத்திற்காய்

பரிசுத்தர் இயேசு இன்று, புழுதியில் புரள்கின்றார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அவர் இகழப்பட்டார், மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராயிருந்தார். நோயுற்று நலிந்திருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:3.

தியானம் :

இயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம், அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம், இயேசுவுக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால், உடலில் களைப்பு, ஆனால், செல்லும் வழியில் கிடைத்த வசை அடிகளால், மனதில் களைப்பு. நிந்தை, அவமானம், என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர், மண்ணோடு மண்ணாக புரள்கின்றார்.


வசனம் :

கிறிஸ்து இரத்தம் சிந்தி, தம் அருள் வளத்திற்கேற்ப, நமக்கு மீட்பு அளித்துள்ளார். அம்மீட்பால், குற்றங்களிலிருந்து, நாம் மன்னிப்பு பெறுகிறோம் - எபே 1:7.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • இன்று இந்த உலகின் மிகப்பெரிய பாவம், எது என்றால், பாவத்தை நியாயப்படுத்தும் கொடுமை.
 • பாவத்தை நியாயப்படுத்துபவன் தான் பாவி. பாவத்தை அறிக்கையிட்டு விட்டு விடுகிறவன், பரிசுத்தன், நீதிமான்.
 • பாவி, விழுந்த இடத்திலேயே படுத்திருப்பான்.
 • பரிசுத்தவான்கள், எத்தனை முறை விழுந்தாலும், அத்தனை முறையும், மனம் வருந்தி, கண்ணீர் சிந்தி, திரும்பி வருவர்.

 • மகனே! இன்றைய உலகின் பெரிய சாபத்தீட்டு, எடுத்ததற்க்கெல்லாம் சாக்குப் போக்கு கூறும் நிலை.
 • தவறுவது மனித இயல்பு. ஆனால், சாக்குப்போக்கு சொல்வதோ, பேயின் இயல்பு.
 • அவன், தான் விழுந்த இடத்தையே, தனக்கு கல்லறை குழியாய் மாற்றி விடுகிறான்.
 • இன்று, பாவமும் அதன் விளைவான சாபமும், மலியக் காரணமே இதுதான்.

 • மகனே! பாவத்தின் மட்டில், அச்சம் உடையவன், விழுந்த இடத்திலேயே, படுத்துக் கொள்ளமாட்டான்.
 • கல்வாரியில், என் இரு பக்கங்களிலும், இரண்டு பேர், சிலுவையில் அறையப்பட்டார்கள்.
 • இருவரும் பாவம் செய்தவர்களே.
 • ஆனால், அதில் ஒருவர், இறையச்சம் உடையவர். தன் பாவத்தையும், அதன் விளைவான சாபத்தையும் ஏற்றுக் கொண்டவர்.
 • இதனால் தான், அவர் பாவியாயிருந்தும், என்னோடு நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொண்டார்.

 • என் மகனே! என் மகளே!
 • எழுந்திரு, உன் பாவ போதை தெளியட்டும்.
 • அறிவுத் தெளிந்ததும், ஊதாரி மகன், எழுந்து தந்தையிடம் வந்தான்.
 • இன்னும் தாமதம் ஏன்? எழுந்து என்னண்டை வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

சிலுவையின் பாதையில், தன்னைப் பின்தொடர்ந்த மகளிருக்கு, இயேசு ஆறுதல் கூறுகின்றார்:


பாடல் : -

அழுதிட்ட மகளிர்க்கந்தோ! புத்தி சொல்லும் காட்சியைப் பார்!

தமக்காக அல்ல தங்கள் பிள்ளைகள்க்காய் அழச் சொன்னார்

பச்சை மரப் பாடைக்கண்டு, பட்ட மரம் மாறச் சொன்னார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அவர் ஒடுக்கப்பட்டார், சிறுமைப்படுத்தப்பட்டார், ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை – எசா 53:7.

தியானம் :

இயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர். அவர்களில் அனேகர், இயேசுவிடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்குப் பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்நதவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான, இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன்வந்தனர். பச்சை மரத்துக்கே இந்தப் பாடு என்றால், பட்ட மரத்தின் நிலை என்ன? என்று, இயேசு அவர்களை எச்சரித்தார். அவர்களின் பிள்ளைகளின் மீது அக்கரை கொண்டவராய், உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்றார். ஒரு விசுவாச சேனை பின்தொடர, இயேசுவின் சிலுவையின் பயணம் தொடர்ந்தது.


வசனம் :

நாம் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு, கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் - உரோ 5:8.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • கல்வாரி நோக்கிய என் பயணத்தில், எனது நிலையைக் கண்டு, மாரடித்து அழும், ஒரு கூட்டம் மக்களைப் பார்.
 • இவர்கள், எந்த துன்பத்தின் மத்தியிலும், என்னைப் பின்செல்பவர்கள்.
 • இவர்கள், என் துன்ப சோதனை நேரத்தில், என்னோடு இறுதிவரை நிலைத்திருந்தவர்கள்.
 • தங்கள் விசுவாச வாழ்வில், பாடுகள் எதிர்கொள்ளும் போது, பின்வாங்கி ஓடாத, இரத்தசாட்சிகள் இவர்களே!

 • இந்த மக்களை உற்றுப்பார்த்தால், இன்னும் ஓர் உண்மை விளங்கும்.
 • இவர்கள், நீதி சாவதை காண சகியாதவர்கள்.
 • தர்மம் அழிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ளாதவர்கள் இவர்கள்.
 • தங்கள் கண் எதிரே, சத்தியம் சாகடிக்கப்படும் போது, துணிச்சலோடும், வெளிப்படையாகவும், அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் இவர்கள்.
 • மகனே! ஏதோ சில பெண்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று, இந்நிகழ்ச்சியை தட்டிக் கழிக்காதே.
 • இவர்களே பிற்காலத்தில், இரத்தசாட்சிகளைப் பெற்றெடுத்த வீரத்தாய்மார்கள்.
 • இத்தகையவரின் பாறை போன்ற விசுவாசத்தின் மேல்தான், என் ஆவிக்குரிய திருச்சபை கட்டியெழுப்பப்பட்டது.

 • இந்த வேளை, நான் இரண்டு எச்சரிப்புகளை, அவர்களுக்குத் தந்தேன்.
 • முதலாவது, துன்பத்தைப் பற்றிய எச்சரிப்பு.
 • தந்தையின் விருப்பத்தை எப்போதும் செய்து, அவருடைய ஜீவனோடு எப்போதும் ஒன்றித்திருக்கும், பச்சைமரமாகிய என்னையே, பாவத்தின் விளைவான சாபம், இவ்வளவு தாக்கும் என்றால்,
 • தந்தையின் விருப்பத்தை மீறி, ஜீவனை இழந்த, பட்டமரங்களாகிய மக்களை, சாபம் எவ்வளவு கொடுமையாய் தாக்கும்!

 • இரண்டாவது, தங்கள் பிள்ளைகளின் மட்டில், பெற்றோர் வைக்க வேண்டிய, எச்சரிப்பு.
 • உலகப்பற்றின் மிகுதியால், பிள்ளைப் பாசம் என்ற பெயரில், பிள்ளைகளின் சிறு வயதிலேயே, அவர்கள் செய்யும், தவறுகளைக் கண்டுகொள்ளாமலிருக்கின்றாய்.
 • தீமை, விதையாக இருக்கும் போதே, அதை அழித்துவிடாமல் இருப்பவர்களுக்கு, அது முளைத்து, மரமான பின்பு, எதுவும் செய்ய முடியாத நிலை உண்டாகும்.
 • தங்கள் பிள்ளைகளே, தங்களுக்கு சாபமாக மாறிவிடுகின்றார்கள்.

 • என் மகனே! மகளே!
 • என் கல்வாரியின் குரல் கேட்டு, என் பின்னே வா!
 • உன் அன்றாடச் சிலுவையின் பாதை, இனிதாகவும், எளிதாகவும் மாறும்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்:


பாடல் : -

மூன்றாம் முறை அந்தோ! இயேசு விழும் காட்சியைப் பார்!

ஒரே சொல்லால் விண்ணும் மண்ணும் படைத்திட்ட தேவன் அவர்

முடியாமல் மண்டியிட்டு, மண்ணில் விழும் கொடுமை பார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில், கத்தாத செம்மறி போலும், அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் - எசா 53:7.

தியானம் :

இயேசு சுமந்து வந்த, சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவர் அதை, கொல்கொத்தா வரை சுமந்து செல்ல, அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது இயேசுவுக்கு இருந்த மனபெலமும், சரீர உறுதியும் இப்போது இல்லை. சிலுவையின் பாரமும் போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது.


இயேசுவின் கரத்தினின்று, அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு உண்டான துயரம், பன்மடங்காகி, அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்தப் பரிசுத்த முகம் புழுதியில் புரண்டது.


வசனம் :

இனி வாழ்பவன் நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன் மீது கொண்டுள்ள, நம்பிக்கையின் அடிப்படையில், நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காக, தம்மையே ஒப்புவித்தார் - கலா 2:20.

சிந்தனை:

 • என் அன்புப் பிள்ளையே!
 • என் சிலுவையின் பாதையில், நான் மூன்றாம் முறையாக, விழுந்து கிடப்பதைக் காண்கின்றாய்.
 • என் சிலுவைப்பாதையில், நான் பலமுறை அனுபவித்த, ஒரே துன்பம் நான் பாரச்சிலுவையோடு, தரையிலே விழுந்தது தான்.
 • ஏதேன் தோட்டத்தில், தொடங்கிய வீழ்ச்சி, இன்னும் தொடர்ந்து கொண்டே யிருப்பதைத் தான், இது காட்டுகிறது.
 • நீ பாவம் செய்யும் ஒவ்வொரு வேளையும், உனக்கு வீழ்ச்சியே.
 • நடமாட்டம், ஜீவனுக்கு அடையாளம்.
 • வீழ்ச்சி, சாவுக்கு அடையாளம்.
 • பாவம், சாவின் மறுபக்கம்.
 • நீ எப்போது விழுகிறாய்? உன் காலின் உறுதி தளரும் போது.
 • அவ்வண்ணமே, உன் விசுவாசத்தின் உறுதி தளரும் போது, நீ பாவத்தில் விழுகின்றாய்.
 • இறை ஒன்றிப்பிலிருந்து, நீ விலகும் போது, மூட்டு விலகிய கால் போல், நீ பாவத்தில் தள்ளாடி விழுகின்றாய்.

 • என் மகனே! என் மகளே!
 • நீ தீர்மானமெடுக்கும் ஒவ்வொரு முறையும், என்னோடு உனக்குள்ள உறவை பெலப்படுத்துகின்றாய்.
 • நீ விழுந்த இடத்திலிருந்து, எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பிக்கின்றாய்.
 • உன் மனம், விசுவாசத்தில் உறுதியற்றுப் போகும் போது, மீண்டும் பாவத்தில் விழுகின்றாய்.
 • ஆனால், ஒவ்வொரு முறை, நீ உன் தீர்மானத்தில் பின்வாங்கி, விழுந்து போகும் வேளையிலும், கல்வாரியில் நான் விழுந்து கிடக்கும் காட்சி, உன் மனக்கண் முன் வரட்டும்.
 • உன் ஈவு இரக்கமற்ற, பாவங்களின் அழுத்தம், என்னைத் தரையில் சாய்த்தது.
 • சாட்டையடிகளின் காயங்கள், முள்முடியின் அழுத்தம், அடிகளால் உண்டான, உடல் வலி, அவமானத்தால் உருவான, மன உளைச்சல், அத்தனையும் ஒருசேர, என்னைத் தரையில் வீழ்த்தியது.
 • மகனே! போதும் உன் பாவ வாழ்வு.
 • இதோ! உன் பாவத்திலிருந்து நீ எழும் போது, நீ என்னைத் தரையிலிருந்து தூக்கி விடுகின்றாய்.
 • வா! எனக்கு உன் கரம் தந்து, என்னைத் தூக்கிவிட வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசுவை, சிலுவையில் அறையும் முன், அவருடைய ஆடைகளை உரிகின்றார்கள்:


பாடல் : -

ஆடைகளை அந்தோ! உரிந்திடும் காட்சியைப் பார்!

மேலிருந்து கீழே வரை, தையலில்லா ஆடையது

மானபங்கம் செய்திடவே பலவந்தமாய் உரிந்தார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

ஆடுகளைப் போல், நாம் அனைவரும், வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ, நம் அனைவரின் தீச்செயல்களையும், அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.

தியானம் :

ஆடையோடு யாரையும் சிலுவையில் அறைவது இல்லை. அவ்வாறே, இயேசுவின் ஆடைகளையும் உரிந்தார்கள். இது, அவமானத்தின் உச்சிக்கே இயேசுவை இழுத்துச் சென்றது. இரத்தக் கறையால், உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதைக் கொடுமையாக இழுத்து உரிந்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.


வசனம் :

தம் ஒரே மகன் மீது, விசுவாசம் கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார் - 1யோவா 3:16.

சிந்தனை:

 • என் அருமைப் பிள்ளையே!
 • ஏதேன் தோட்டத்தில், ஆதிப்பெற்றோர், பாவம் செய்த போது, அவர்கள் கண்கள் தங்கள் உடலை, நிர்வாணமாகக் கண்டன.
 • பாவத்தின் விளைவான, அந்த நிர்வாணத்தை மறைக்க, நான் ஆதிப் பெற்றோருக்கு ஆடை உடுத்தினேன்.
 • அங்கம் மறைப்பதால், பாவத்தைத் தூண்டும் இச்சைகளினின்று, நீ பாதுகாக்கப்படுகின்றாய்.
 • ஆனால் நீயோ! அங்கம் காட்டுவதற்காகவே, ஆடை உடுத்துகின்றாய்.
 • உன் உடலைக்காட்டி, பிறரை பாவத்துக்குத் தூண்டுகின்றாய்.
 • நீயும் பாவம் செய்து, பிறரும் பாவம் செய்ய, ஆடை அலங்காரத்தைப் பயன்படுத்துகின்றாய்.
 • இதுவும், அலகையின் தந்திரச் செயல்தானே?
 • இதற்கு நீ அடிமையாகி விடுகின்றாய்.
 • இதன் விளைவை, இன்று நீ நித்தம் பார்க்கின்றாய்.
 • இன்றைய கற்ப்பழிப்புக் கொலைகளுக்கெல்லாம், இதுவும் ஒரு காரணமல்லவா?
 • உன் அலங்கோல உடைகளால், பாவமும் சாபமும், பலுகிப் பெருகுகின்றன.
 • ஆதிப் பாவத்துக்கு காரணமான, ஏவாளின் தலைமுறையினர், இன்றும் அலகையின் கையிலிருந்து, பாவ உலகை ஆளுகின்றனர்.

 • உன் பாவத்துக்கு, என்மேல் வந்த தண்டனையைப் பார்த்தாயா?
 • பரிசுத்தரான என் ஆடையை உரிந்து, என்னை நிர்வாண கோலமாக்கி, சிலுவையில் தொங்கவிட்டனர்.
 • உன் அலங்கோல பாவத்துக்காக, நான் இவ்வளவும் அனுபவித்தது போதாதா?
 • என் மகனே! என் மகளே!
 • ஒழுக்கத்தையும், பரிசுத்தத்தையும் ஆடையாக அணிந்து, என் அவமானத்தை மறைக்க முன்வருவாயா?

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசுவின் கை கால்களை, சிலுவை மரத்தோடு சேர்த்து அறைகின்றார்கள்:


பாடல் : -

கை கால்கள் இழுத்தந்தோ! அறைந்திடும் காட்சியைப் பார்!

ஆசீர் தந்த கரங்களை, தேடி வந்த கால்களை,

நிஷ்டூரமாய் இழுத்து மூன்றாணிகளில் அறைந்திட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

நமக்கு நிறைவாழ்வை அளிக்க, அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம் காயங்களால், நாம் குணமடைகின்றோம் - எசா 53:5.

தியானம் :

இயேசுவுக்கு உண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே, அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால், அதற்கு மேல், அணி அறைதல் நடந்தது.


உள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல், ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து, ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் தொடர்ந்தன.


வசனம் :

நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும், அவருடைய மகன், நமக்காக தம் உயிரைக் கொடுத்ததால், நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் - உரோ 5:10.

சிந்தனை:

 • என் பிள்ளையே! உன்னை மீட்க வந்த என்னை, நிற்வாண கோலமாக்கி, சிலுவையில் அறையும், கொடிய காட்சியைப் பார்.
 • உன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்த என் கை, கடலில் நீ மூழ்குகையில், உன்னைக் காப்பாற்றிய என் கை, அப்பம் பலுகச் செய்து, உனக்கு உணவு ஊட்டிய என் கை, உன் தொழுநோயைத் தொட்டு, சுகப்படுத்திய என் கை,
 • அந்தக் கையை, நீ சிலுவையில் அறைகின்றாயோ?
 • முப்பத்து எட்டு ஆண்டுகளாக, நோயுற்றுப் படுத்திருந்த உன்னை சுகமாக்க, தேடி வந்த என் கால்கள், இறந்து நான்கு நாட்களாகி, நாற்றமடித்த உன்னை உயிர்ப்பிக்க, கடந்து வந்த என் கால்கள், உனக்கு சத்தியத்தின் பாதையை எடுத்துச் செல்ல, வீதியெங்கும் நடந்து வந்த என் கால்கள்,
 • அந்தக் கால்கள் இரண்டையும் சேர்த்து, நீ சிலுவையில் ஆணிகளால் அறைகின்றாயோ?
 • ஆணியின் கூரை வளைக்க, என்னை கவிழ்த்துப்போட்டு, அடிக்கின்றாயே?

 • இன்னும் உன் பாவ மனம் மாறாதோ?
 • சித்திரவதை என்று கூறுவார்களே, அது இதுவல்லவோ?

 • என் மகனே! என் மகளே!
 • உனக்காக, நொறுக்கப்பட்ட அப்பமாக, நான் மண்ணில் புரள்வதைப் பார்.
 • இன்னும், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
 • உன் மேல் விழ வேண்டிய தண்டனை, எந்த அளவுக்கு என் மேல் விழுந்தது என்று பார்த்தாயா?
 • இன்னும் உன் மனம், என் பக்கமாகத் திரும்பாதோ?
 • பாவத்துக்குப் பணிவிடைச் செய்தது போதும், என் மகனே! மகளே! என்னண்டை வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

மனித குல மீட்புக்காக, இயேசு தன் உயிரை விடுகின்றார்:


பாடல் : -

சிலுவையில் இயேசு அந்தோ! உயிர்விடும் காட்சியைப் பார்!

மன்னிப்பீந்து, மீட்பைத் தந்து, இதோ உன் தாய், கைவிட்டீரே,

தாகம் முடிந்தது ஏழு வார்த்தை சொல்லி உயிர் விட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

அவர் தம் உயிரை, நம் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார். எனவே, தம் வழிமரபு கண்டு, நீடு வாழ்வார். ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் - எசா 53:10.

தியானம் :

இயேசுவை, நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்ந்து, அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறி புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில், சிலுவையில் இயேசு தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான், பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு, பலமணி நேரம் நீடித்தது. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன், சாந்தத்தோடு தன் பணியை செய்து கொண்டிருந்தார்.


1.“அம்மா! இதோ உம் மகன்; யோவானே! - இதோ உன் தாய்” – யோவா 19:2.

2. “பிதாவே, இவர்களை மன்னியும்” – லூக் 23:43.

3. “இன்றே நீ என்னோடு, பரகதியில் இருப்பாய்” – லூக் 23:43.

4. “பிதாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்” – மாற் 15:34.

5. “தாகமாயிருக்கிறது” – யோவா 19:28.

6. “எல்லாம் முடிந்தது” – யோவா 19:28.

7. “பிதாவே! உம் கையில், என் ஆவியை ஒப்படைக்கிறேன் “ – லூக் 23:46.


என்ற, ஏழு இறுதி வாக்கியங்களைக் கூறி, இயேசு உயிர் துறந்தார்.


வசனம் :

வாழ்வோர், இனிமேல் தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர் பெற்றவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே, அவர் அனைவருக்காகவும் இறந்தார்” – 2கொரி 5:15.

பாடல் : -

உன் கைகளால், நீ செய்த பாவங்கள்

என் கைகளை சிலுவையில் அறைந்ததோ!

உன் கால்களால் நீ செய்த பாவங்கள்,

என் கால்களை சிலுவையில் அறைந்ததோ!

உன் எண்ணத்தால் நீ செய்த பாவங்கள்,

என் தலையில் முள்முடி சூட்டியதோ!

உன் சீரழிந்த வாழ்வால், நீ செய்த பாவங்கள்,

என் ஜீவனைப் பறித்ததோ!

மகனே ! என் மகளே!

எனக்காக வாழ, என்னோடு வாழ,

, உன் வாழ்வைத் தாராயோ!!!


சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • ஆதியில், ஏதேன் தோட்டத்தில், என் ஜீவ மூச்சை ஊதி, உனக்கு ஜீவன் தந்தேன்.
 • அந்த ஜீவமூச்சை, உன் பாவத்தாலும், அதன் விளைவான சாபத்தாலும், நீ இழந்துவிட்டாய்.
 • கனிவும், இரக்கமும் கொண்ட நான், அதை மீண்டும் உனக்குத் தர, இப்ப+மிக்கு வந்தேன்.
 • நீயோ, என் ஜீவனைக் கல்வாரியில் பறித்துவிட்டாயே?
 • என் மகனே! நீ ஜீவன் பெற, இதோ மீண்டும் என் ஜீவனை, உனக்காக ஒப்புவிக்கிறேன்.
 • என்னில் விசுவாசம் கொண்டு, நித்திய ஜீவனை சொந்தமாக்கிக் கொள்.

 • பாடுகளாலும், வேதனையாலும், உழலும் என் பிள்ளையே! நீ உற்ற பாடுகள், உன் பாவத்தின் விளைவான சாபமல்லவா!
 • உன் பாவத்தையும், உற்ற சாபத்தையும், இதோ நான் கல்வாரியில் சுமந்து தீர்த்தேன்.
 • இதை நீ விசுவசிக்கின்றாயா?
 • நீ இன்னும் பாவியாக இருந்தபோதே, உனக்காக என் ஜீவனையும், கையளித்த நான், உனக்கு என்ன தான் செய்யமாட்டேன்?
 • என்னை விசுவசித்து ஏற்றுக்கொள்ளமாட்டாயா?
 • உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, நீ அனுபவிக்க வேண்டிய தண்டனையை, நானே ஏற்றுக்கொண்டேனே.
 • என்னை ஏற்றுக்கொண்டு, எனக்காக வாழ, இன்னும் ஏன் தயக்கம்?

 • என் மகனே! மகளே!
 • உன் சிறு குற்றங்களைக் கூட பொறுத்துக் கொள்ள, முடியாதவர்கள் மத்தியில் நீ வாழ்கின்றாயே?
 • நான் உன்னை, உன் அனைத்து பெலவீனங்களோடும் ஏற்றுக்கொள்ள, இதோ கல்வாரியில் தொங்கி நிற்கின்றேன்.
 • என்னைக் கொலை செய்தவர்களையே மன்னித்த நான், உன்னையும் மன்னிக்க காத்திருக்கின்றேன்.
 • இனி, உன் வாழ்வில், இன்பமோ துன்பமோ, நன்மையோ தீமையோ, எதுவாக இருந்தாலும், என் கரம் பற்றி என்னைப் பின்செல்ல வா!
 • உனக்காகக் கையளித்த என் ஜீவன், உன்னை என்றென்றும், மகிழ்வோடு வாழ வைக்கும்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

அரிமத்தியா ஊர் யோசேப்பு, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்குகின்றார்:


பாடல் : -

சிலுவையில் இருந்தந்தோ! இறக்கிடும் காட்சியைப் பார்!

தீயவர்கள் சிலுவையில் அறைந்திடும் பணி செய்தார்

தூயவராம் யோசேப்பு இறக்கிடும் பணி செய்தார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

வாழ்வோர் உலகினின்று, அவர் அகற்றப்பட்டார். தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, அவர் கொலையுண்டார் - எசா 53:9.

தியானம் :

அரிமத்தியா ஊர் யோசேப்பு நல்லவர், நீதிமான். யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை, எதிர்பார்த்திருந்தவர். தலைமைச் சங்க உறுப்பினர். இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள். தாங்கொண்ணாத் துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும் என்று முன்னறிவிக்கபட்;டவர், வியாகுலத் தாயாக அமர்ந்திருந்தார்.


கணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர், அந்த ஒரே மகனையே, பிதாவுக்குப் பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பாய்ந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தி திறக்கப்பட்ட இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த தியாகத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத் தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலிபீத்துக்குக் கையளிக்கின்றார். உலக மீட்புக்கான, உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.


வசனம் :

இப்போது நாம், கிறிஸ்துவின் இரத்தத்தினால், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகி, அவர் வழியாய், தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பி, மீட்பு பெறுவோம் என, மிக உறுதியாய் விசுவசிக்கலாம் - உரோ 5:9.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • பிலாத்து எனக்கு, அநியாயத் தீர்ப்பளித்த நேரத்திலிருந்து, என் உயிர் என்னை விட்டு பிரியும் நேரம் வரையிலும், என்னைச் சிலுவையில் சாகடிக்க, உதவி செய்து, உழைத்த அத்தனை பேரையும் நான் பார்க்கிறேன்.
 • பெத்லேகேமில், நான் பிறந்த நேரத்திலிருந்து, கல்வாரியில் என் உயிர் பிரியும் நேரம் வரையிலும், இரண்டு கூட்டம் மக்கள், என்னோடிருந்ததை நான் காண்கிறேன்.

 • என் பிறப்பைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த வானதூதர், ஆட்டிடையர், மூன்று ஞானிகள், ஒரு பக்கம்,
 • என் பிறப்பை எண்ணி, அச்சமுற்று கலங்கிய ஏரோதின் மக்கள் மறுபக்கம்.
 • என் உயிரைப் பாதுகாக்க, எகிப்துக்குத் தப்பியோடிய என் பெற்றோர் ஒருபக்கம், என் உயிரைப் பறிக்கத் தேடிய, ஏரோது அரசனும் படையும் மறுபக்கம்.
 • என் வார்த்தைகளைக் கேட்டு, என் சீடராக வந்த மக்கள் கூட்டம் ஒருபக்கம், என் மீது குறை காண வந்த, பரிசேயர் கூட்டம் மறுபக்கம்.
 • என் வாழ்வுதரும் வார்த்தையைக் கேட்டு, என்னோடு இருக்க வந்தவர்கள் ஒருபக்கம். என் வார்த்தைகள் தங்களுக்கு வசதியாக இல்லாத போது, என்னைப் புறக்கணித்து பின்வாங்கிப் போனவர்கள் மறுபக்கம்.
 • என்னிடத்தில் விடுதலையைப் பெற்று, எனக்குப் பின்னே வரவும், வாழவும், ஆயத்தமானவர்கள் ஒரு பக்கம், என்னிடம் அப்பம் உண்டு, புதுமைகள் பெற்று, அவர்கள் தேவைகள் சந்திக்கப்பட்டதும், என்னைவிட்டுப் போனவர்கள் மறுபக்கம்.

 • குழந்தை உள்ளத்தோடு, எனக்கு ஓசான்னா பாடி, என்னை வரவேற்றவர்கள் ஒரு பக்கம், குற்றம் நிறைந்த இதயத்தோடு, அவன் சாக வேண்டும், அவனை சிலுவையில் அறையும் என்று, கோஷம் போட்டவர்கள் மறுபக்கம்.
 • சாவதாயினும், உம்மைவிட்டுப் போகமாட்டோம் என்று, என்னைப் பற்றி நின்றவர்கள் ஒரு கூட்டம், எனக்கெதிராய் சதி செய்து, என்னை விலை பேசி, கொலை செய்யக் காத்திருந்தவர்கள் மறுபக்கம்.
 • இறுதியாக, என்னை சிலுவையில் அறைந்து, சாகடிக்கும் மக்கள் ஒரு பக்கம், என்னை சிலுவையினின்று இறக்க உழைக்கும் மக்கள் இன்னொரு பக்கம்.

 • என் மகனே! என் மகளே!
 • இதில், நீ எந்தப் பக்கம் நிற்கின்றாய்?
 • நான் செல்லும் பாதை இடுக்கமான பாதை, அந்த வழி செல்பவரும் சிலரே. ஆனால், அது வழ்வுக்குச் செல்லும் பாதை.
 • ஆனால், விசாலமான பாதை வழி செல்வோர் பலர். அந்த வழி, அழிவுக்குச் செல்லும் வழி.
 • மகனே! நீ எந்த வழியைத் தேர்ந்து கொண்டாய்?
 • வெறும் உலக ஆதாயங்களுக்காகவும், பெருமைக்காகவும், பிழைப்புக்காகவும் மட்டும், என்னைப் பின்பற்றுபவர்கள் கூட்டம், இன்று மிகப்பெரியது.
 • ஆனால், மீட்படைந்து, சத்தியங்களுக்குக் கட்டுப்பட்டு, அன்றாடச் சிலுவையை நாள்தோறும் சுமந்து, என்னைப் பின்பற்றும் விசுவாசிகள் கூட்டம், மிகச் சிறியதே.
 • என் மகனே! மகளே!
 • இதில் நீ எந்தக் கூட்டத்தில் இருக்கிறாய்?

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்:


பாடல் : -

கல்லறையில் அந்தோ! அடக்கிடும் காட்சியைப் பார்!

தன்னடக்கம், கட்டுப்பாடு இல்லாதவர் பாவம் போக்க

தானே அடக்கமாகி, கல்லறைக்குள் முடங்கிட்டார்.

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


வசனம் :

வன்செயல் எதுவும், அவர் செய்ததில்லை, வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.

தியானம் :

மண்ணையும் விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர், மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை”. தெய்வத்தைப் புறக்கணித்த மனிதனின் செயல்தான், இயேசுவின் அடக்கம்.

“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,

“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது.


அந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு “கல்லறை”. விளக்கை அணைத்து விட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்கு கொண்டாட்டம். நல்லவரை அழித்து விட்டால், தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம். ஆனால், தெய்வத்தை கல்லறை தாங்குமா? உயிரும் உயிர்ப்புமானவர், கல்லறையில் இருக்க முடியுமா?


வசனம் :

நாம் இனிமேல், பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு, அழிந்து போகும்” – உரோ 6:6.

சிந்தனை:

 • என் மகனே! என் மகளே!
 • பாவ உலகம், பரிசுத்தவான்களை சகித்துக் கொள்ளாது.
 • அக்கிரமிகள், நீதிமான்களை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
 • பரிசுத்தரான எனக்கு, கல்லறை கட்டிவிட்டு, பாவிகள் இந்த உலகை ஆள ஆசிக்கிறார்கள்.

 • இறையாட்சியை நான் இந்த உலகுக்கு கொண்டுவந்தேன்.
 • ஆனால், இறையாட்சிக்கு கல்லறை கட்டி, அலகையின் ஆட்சியை வளர்க்கப் பார்க்கிறது, இந்தப் பாவ உலகம்.
 • தர்மம், நீதி, அன்பு, பரிசுத்தம், தியாகம், அனைத்துக்கும் கல்லறை கட்டி, அதர்மத்தையும், அநீதியையும், பகையையும், ஒழுக்கக்கேட்டையும், சுயநலத்தையும், வாழ வைக்கிறது, இந்தப் பாவ உலகம்.

 • என் மகனே! என் மகளே!
 • வா! இங்கே உன் மனமாற்றத்தை ஆரம்பி.
 • உன் பாவ வாழ்க்கைக்கு கல்லறை கட்டு.
 • எனக்குப் பிரியமில்லாத ஒரு வாழ்வுக்கு, நீ அடிமைப்பட்டிருக்கின்றாய்.
 • அந்த வாழ்க்கையை கல்லறைக்கு அனுப்பு.
 • பரிசுத்தம் உன்னில் வாழ, விசுவாசம் உன்னில் வாழ, அன்பும், கனிகளும், உன்னில் தொடர்ந்து வாழ,
 • உன் ஒழுக்கக்கேடான வாழ்வும், மாமிசத்தின் இச்சைகளுக்கு அடிமையான வாழ்வும், கல்லறைக்குச் செல்லட்டும்.
 • நான் கல்லறையிலிருந்து வெளியே வந்து, உன்னில் வாழ இடம் தா!
 • உன் பாவ வாழ்க்கையை கல்லறைக்கு அனுப்பி, கல்லறையில் இருக்கும் எனக்கு, உனக்குள் ஒரு வாழ்வைத் தா!

 • நான் பிறந்த போதே, எனக்கு மாட்டுத்தொழுவத்தைத் தந்து, உலக மாயை, பாவம் அனைத்துக்கும், நடுவீட்டில் இடம் தந்தது இந்த உலகம்.
 • உலக முடிவு மட்டும், உன் இதயத்திலும், இல்லத்திலும், வாழ வந்த எனக்கு, மீண்டும் கல்லறையைத்தான் தருகிறாயோ?
 • வேண்டாம் என் மகனே! வேண்டாம் என் மகளே!
 • அன்று அவர்கள் அறியாது செய்த பிழையை, நான் மன்னித்தேன்.
 • ஆனால், இன்று அதே பிழையை நீயும் செய்யாதே.
 • உன் இதயத்தில் என்னை வாழ விடு.
 • இனி, நீ என்னிலும், நான் உன்னிலும் வாழ, ஒரு புதுவாழ்வுக்கு இப்போதே கடந்து வா!.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .


 

 

இயேசு உயிர்த்தார்! இனி நாமும் உயிர்ப்போம்!!


பாடல் : -

இயேசு உயிர்த்தார்! - இனி நாமும் உயிர்ப்போம்!!

 

வசனம் :

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே, நாம் கொண்டுள்ள விசுவாசம் - உரோ 6:8.

தியானம் :

 • கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
 • இந்நேரம் வரை, கல்வாரியின் குரலைக் கேட்ட வண்ணம், சிலுவையின் பாதையை தியானித்தோம்.
 • “என் ஆடுகள், என் குரலைக் கேட்கும்” என்று, இயேசு கூறினார்.
 • இம்மட்டும் பேசிய இயேசுவின் குரலை, அவரது ஆடுகள் நிச்சயம் கேட்கும்.
 • என் ஆயன் அண்டவர், எனக்கு என்ன குறைவு? என்று கூறும் ஆட்டுக்குட்டி,
 • நிச்சயமாக, தம் ஆயனுடைய கல்வாரியின் சத்தத்தைப் புறக்கணியாது,
 • அந்த குரலுக்கு, மறுமொழி கொடுக்க, சங்கீதக்காரரின் வரிகளைக் கூறி, வருவோமா?
 • “இதோ வருகிறேன் ஆண்டவரே! இனி, உம் விருப்பப்படி நடப்பதே எனக்கு இன்பம்” .

 • இம்மட்டும், உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களுக்கு செவிசாய்த்து வாழ்ந்தோம்.
 • அதன் விளைவோ?
 • நம் வாழ்வைப் பற்றிக்கொண்ட, பாவமும் அதன் விளைவான சாபமும் அல்லவா?.
 • இனிமேல், இன்று ஒலித்த கல்வாரியின் குரலுக்கு செவிகொடுத்து வாழ்வோம்.
 • அதன் பயனோ, நித்திய மீட்பு.

வசனம் :

“உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்! ‘நான் உங்களுக்குள், உயிர்மூச்சு புகச் செய்வேன்! நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை, நரம்புகளால் தொடுப்பேன். உங்கள் மேல், சதையைப் பரப்புவேன்! உங்களைத் தோலால் மூடுவேன்! பின் உங்களுக்குள், உயிர்மூச்சு புகச்செய்வேன்! நீங்களும் உயிர்பெறுவீர்கள்” – எசே 37:4-6

சிந்தனை:

 • அன்பார்ந்தவர்களே!
 • எலும்புக் கூட்டமாக, எல்லா நம்பிக்கையும் இழந்து, கல்வாரியின் குரல் கேட்க வந்த நமக்கு, இதோ நம்பிக்கை உதிக்கிறது.
 • இந்த எலும்புக்கூட்டங்கள், நிச்சயம் உயிர்பெறும்!
 • இயேசு கல்வாரியில், பிதாவிடம் ஒப்புவித்த ஆவி, பெந்தக்கோஸ்து நாளன்று, காத்திருந்த சீடர்கள் மேல் இறங்கி வந்து, அவர்களை வேறு மனிதர் ஆக்கியது.
 • எலும்புக்கூட்டமாக, இயேசுவைப் பின்செல்ல தீர்மானித்த நம்மை, அதே ஜீவமூச்சு ஆட்கொள்ள, நம்மைத் தாழ்த்தி ஒப்புவிப்போம்.

 • நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும், பாவம் தொலைந்து போக, அதன் விளைவாக நம்மைத் துரத்திக் கொண்டிருக்கும் சாபங்கள் நீங்கிப் போக, துதி எனும் பலி செலுத்தி, தேவ பாதத்தில் சரணடைவோம். (ஸ்தோத்திர ஜெபம்)

 • நம் எல்லாப் பாவங்களையும், கல்வாரியில் இயேசு சிந்திய இரத்தம், இப்போதே கழுவிப் போக்கிவிடும்.
 • நம்மைப் பிடித்திருக்கும், அனைத்து சாபக்கட்டுகளும், விடுதலை அளிக்கும் தூய ஆவியால் இப்போதே விலகிப் போகும்.
 • என்னிடம் வருபவனை, நான் ஒருபோதும் தள்ளேன் என்றவர், நமக்கு முன், கல்வாரியில் கரம் விரித்து காத்திருக்கின்றார்.
 • நம் பாவங்களை ஆழ்கடலிலே எறிந்துப் போட,
 • நம் அக்கிரமங்களை காலால் மிதிக்க,
 • நம் குற்றங்களை, தம் முதுகுக்குப் பின்னாலே எறிந்து போட, உயிர்த்த இயேசு வருகின்றார்.

 • அவரை விசுவசித்து, ஏற்றுக்கொள்வோம்.
 • இனி, அவரோடு, அவருக்காக வாழ, தீர்மானித்து, நம்மையும், நம் குடும்பத்தையும் முழுமையாக, அவருடைய கல்வாரியின் காலடிக்கு ஒப்புவிப்போம்.

 • இதோ!நாம் ஆவலோடு எதிர்பார்க்கும் விடுதலை, நம்மை சந்திக்கிறது.
 • எலும்புக்கூட்டங்களான நம்மை, ஆவியானவர் ஆட்கொள்ள, நமக்கு புதுவாழ்வு கிடைக்கிறது.
 • உயிர்த்த இயேசுவோடு, ஒரு புதுவாழ்வு ஆரம்பமாகிறது.
 • நம் பாவங்களும், சாபங்களும், இயேசுவோடு கல்லறைக்குள் புதைக்கப்பட்டன.
 • நாமோ, ஜெயம் கொண்ட இயேசுவோடு, என்றென்றைக்கும், விடுதலை வாழ்வுக்கு கடந்து செல்கின்றோம். ஆமென்.

பாடல் : -

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், முதல் முடிவற்றவரே!

பாவத்தினால் இறந்த என், வாழ்வினுக்கு ஜீவன் தர

பாவ சாபம், போக்கி என்னை மீட்டெடுக்க உயிர்த்தெழுந்தார்.

ஸ்தோத்றம் தேவா, ஸ்தோத்றம் தேவா

ஸ்தோத்றம் ஸ்தோத்றம் தேவா

ஹாலேலூயா ஹாலேலூயா ஹா…லேலூயா(2) 

My status 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


என்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.


ஆண்டவரே! என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

இயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்? – எசா 53:8.


தாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்


இயேசுவே! என் இதயக் கலக்கத்தை மாற்றும்.


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


இயேசுவே! மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்


 

X


ஆடைகளை உரிதல்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

XI


சிலுவையில் அறைதல்

நம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

இயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

XIII


தாயின் மடியில்

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

XIV


கல்லறையில் இயேசு

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

XV


உயிர்த்த இயேசு

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

I


அநியாய தீர்ப்பு

 

 

II


சிலுவை சுமக்கின்றார்

 

 

III


முதன்முறை விழுகின்றார்

 

 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

 

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

 

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

 

 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

 

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

 

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

 

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

X


ஆடைகளை உரிதல்

 

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

XI


சிலுவையில் அறைதல்

 

 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

 

 

XIII


தாயின் மடியில்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

XIV

கல்லறையில் இயேசு

 

 

XV


உயிர்த்த இயேசு

   

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.

ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com