"உயிர்த்த இயேசு நம்மை மீட்க வருகிறார்"


கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு அருமையானவர்களே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மண்ணில் பிறந்து, வாழ்ந்து, இறந்த இயேசுகிறிஸ்து, தன்னுடைய வாழ்வை இந்த பூமியில் முடித்துக்கொள்ளும் போது, இவ்வாறு கூறி முடித்தார். “இதோ உலக முடிவு வரை, எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்” - மத் 28:20.

"இயேசு எதற்காக வந்தார்"

இயேசு கிறிஸ்து பாவிகளை மீட்டு இரட்சிக்க, இந்த உலகுக்கு வந்தார் - 1திமோ 1:15. மனிதனுடைய பாவம் போக்கும் செம்மறியாகவும் - யோவா 1:29, பாவத்தின் விளைவான சாபம் தீர்க்கும் மீட்பராகவும் - லூக் 4:18,19, 7:22 இயேசு இந்த உலகுக்கு வந்தார்.

இயேசு இம்மையில் வாழ்ந்த காலத்தில், இந்த இரண்டையுமே செய்தார். பாவம் போக்கினார். - யோவா 8:11, லூக் 23:34, பாவத்தின் விளைவான, மனிதனின் சாபத்தையும் நீக்கினார் - மாற் 1:32,34.


“இயேசு எதற்காக நம்மோடு இருக்கிறார்"


ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமது இரட்சிப்பின் பணியை தொடங்கிய இயேசு, அதை உலக முடிவு பரியந்தம் செய்ய விரும்பினார். இந்த உலகத்தில் பிறந்து, வாழ்ந்து மடிகிற எல்லா மக்களினங்களுக்கும், தான் கொண்டு வந்த மீட்பைத் தரவிரும்பினார். அதற்காகவே, அவர் இந்த உலகத்தில் என்றென்றும் “இருக்க விரும்பினார்”.


“இயேசு இன்று எப்படி நம்மோடு இருக்கிறார்”


இயேசுவுக்கு இன்னொரு பெயர் “இம்மானுவேல்” - மத் 1:22,23. இந்த பெயருக்கு “நம்மோடு இருக்கிறவர்” என்பது பொருள். எனவே, இயேசுவினுடைய வருகையின் நோக்கமே, எப்போதும் இந்த உலகத்தில் இருக்க வேண்டுமென்பதே. ஆனால், உடலெடுத்த மனித நிலையில் அது இயலாததல்லவா! எனவே, அவர் மரித்து உயிர்த்தார் - மத் 28:6. உயிர்த்து, உயிர்த்த இயேசுவாக எப்போதும் வாழ்கிறார் - வெளி 1:18.


உயிர்த்த இயேசு - முதல் நாற்பது நாட்களில்


இயேசு மரித்து, உயிர்த்த பின்பு, நாற்பது நாட்கள் இந்த உலகில் வாழ்ந்தார் - தி.தூ 1:3. அந்த நாற்பது நாட்களும், தாம் உயிரோடு இருந்த போது, செய்த அதே மீட்பின் பணிகளை செய்தார். மேலும், தொடர்ந்து அந்த மீட்பின் பணியை செய்ய, தம் சீடர்களை ஆயத்தப்படுத்தினார். இந்த, முதல் நாற்பது நாட்களில், உயிர்த்த இயேசு செய்த “மீட்பின் பணியை”. நாம் இங்கே காண்போம்.


உயிர்த்த இயேசு - முதல் நாற்பது நாட்களில்


“உங்களுக்கு அருள் வழங்கி, உங்களுள் ஒவ்வொருவனையும், அவன் தன்தீச்செயல்களினின்று விலக்குவதற்காக (மீட்க), கடவுள் தம் ஊழியரை உயிர்ப்பித்து முதன் முதல் உங்களிடம் அனுப்பினார் - தி. ப 3:26.

உயிர்த்த இயேசு, எதற்காக, வந்தார் என்பதற்கு விளக்கம், மேற்சொன்ன வசனத்தில் வருவதைப் பார்க்கிறோம். முதலாவது தீமையினின்று மீட்க வந்தார் என்றும், அதோடு, தீமையின் விளைவான, சாபத்தினின்று மீட்டு அருள்வழங்கவும் வந்ததாக வாசிக்கிறோம். இந்த வசனத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த பகுதியை தியானிப்போம்.

 

"பாவமும் அதோடு தொடர்புடையவையும்"


1. பாவம் போக்க வருகிறார் - யோவா 20:23


இயேசு இம்மையில் வாழ்ந்த போது, ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ - லூக் 5:20 என்று பாவம் போக்கும் பணியை செய்தார். இப்போது உயிர்த்த பின்பும், தம் சீடருடையவும், உலகத்தினுடையவும், பாவத்தைப் போக்கும் வழி செய்கிறார். “எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்” என்றார் - யோவா 20:23.


2. பயம் நீக்க வருகிறார் - மத் 28:10


பாவத்தின் விளைவே, “பயம்” - தொ.நூ 3:10. இயேசுவின் வாழ்நாட்களில், பலமுறை மக்களின் பயம் நீக்கும் பணியை செய்தார் - லூக் 12:4,5. அவர் உயிர்த்த பின்பும் அதே பணியை தொடர்ந்து செய்கிறார். “நீங்கள் அஞ்சாதீர்கள்”, “சிலுவையில் அறையுண்ட இயேசுவை தேடுகிறீர்கள் என்று அறிவேன்” – தூதர் - மத் 28:5. “அஞ்சாதீர்கள்”, என் சகோதரரிடம் சென்று, அவர்களை கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள், அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார் - மத் 28:10.


3. சமாதானம் வழங்க வருகிறார் - யோவா 20:21


பாவத்தோடு நெருங்கிய தொடர்புடையது கலக்கம். இயேசுவின் பிறப்பின் நாளிலிருந்தே அவர் இந்த உலகுக்கு “சமாதானம்” என்று வாழ்த்தினார் - லூக் 2:14. பின்பு தம் சீடருக்கும் இந்த உபதேசத்தைக் கொடுத்தார். எந்த வீட்டிற்குப் போனாலும், சமாதானம் வழங்கச் சொன்னார் - லூக் 10:5,6. உயிர்த்த பின்பும் இயேசு அதே பணியைச் செய்தார். “அப்போது இயேசு அங்குவந்து, அவர்கள் நடுவில் நினறு, ‘உங்களுக்கு சமாதானம்’ என்றார்” - யோவா 20:19. இயேசு மீண்டும் அவர்களிடம் ‘உங்களுக்கு சமாதானம்’ என்றார் - யோவா 20:21.


4. சந்தோஷம் தர வருகிறார் - லூக் 24:41


பாவத்தின் நண்பன் கவலை என்பர். இந்த கவலையைப் போக்கும் சந்தோஷத்தை இயேசு இம்மையில் வாழ்ந்த போது, தம் சீடருக்கு வழங்கினார் - யோவா 15:11, 17:13. அதையே உயிர்த்த பின்பும் செய்தார். அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும், அதே வேளையில் “பெருமகிழ்ச்சி” யுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள் - மத் 28:8. “அவர்கள் மகிழ்ச்சி” மிகுதியால் வியந்து கொண்டிருந்தனர் - லூக் 24:41.

 

"துன்பம் நீக்க வருகிறார்"

பாவத்தின் விளைவு துன்பம் - உரோ 6:23. இயேசு வாழ்ந்த காலத்தில், பாவத்தின் விளைவான துன்பங்களை நீக்கினார் - மாற் 1:32,34. இயேசு உயிர்த்த பின்பும் துன்பம் நீக்குவதிலேயே அக்கறையாக இருந்தார்.


1. அழுகையை தீர்க்க வருகிறார் - யோவா 20:13


மனிதனுக்கு அழுகை என்பது, துன்பத்தின் எதிரொலி. துன்பத்தால் நெஞ்சம் கனத்த மனிதன், அதை அழுகையால் வெளியிடுகிறான். அப்படி அழுதவர்களின் கண்ணீர் துடைக்க இயேசு வந்தார். இயேசு பலமுறை அழுகையை தீர்த்தார். மகனை இழந்த தாயின் அழுகையை தீர்த்தார் - லூக் 7:13. சகோதரனுடைய இறப்பால் அழுது புலம்பிய மார்த்தாள், மரியாளின் அழுகையை மாற்றினார் - யோவா 11:33,43. அதுபோலவே, உயிர்த்த பின்பும், இயேசு, மதலேன் மரியாளுடைய அழுகையை மாற்றினார்.

தம் தலைவரும், குருவுமாகிய இயேசு மரணமடைந்தது, மதலேன் மரியாளுக்கு, எவ்வளவு துன்பத்தைத் தந்திருக்கும் என்று இயேசு அறிவார். எனவே தான் அவள் அழுது கொண்டிருந்த வேளையில், “அம்மா ஏன் அழுகிறீர்?” - யோவா 20:13 , என்று கேட்டு அவள் அழுகையை தீர்க்க முயன்றார்.

வேற்றுருவில் வந்து அவளைத் தேற்றினார். அவளைப் பெயர் சொல்லி அழைத்து, அவள் அழுகையை களிநடனமாக மாற்றினார் - யோவா 20:16-18.


2. துயரம் போக்க வருகிறார் - யோவா 20:19


மனத்துயரம் என்பது துன்பத்தின் மற்றொரு விளைவு. இந்த துன்பத்தையும் இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் போக்கினார். “பாரம் சுமப்பவரே என்னிடம் வாருங்கள். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29 என்றார். சகோதரனுடைய இறப்பால், நொந்து போயிருந்த மார்த்தாள் மரியாளின், மனத்துயர் துடைக்க அவர்கள் வீட்டுக்குச் சென்றார் - யோவா 11:20.

அதே இயேசு உயிர்த்த பின்பு, துயருற்றிருந்த தம் சீடர்களை சந்திக்கிறார். தன்னுடைய மரணத்தாலும், பிரிவாலும், தம் சீடர்கள் எவ்வளவுக்கு துயருற்றார்கள் என்று, இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, யூதர்களுக்குப் பயந்து, அறைகளைப் பூட்டி வைத்திருந்த அவர்கள் நடுவில் தோன்றி, அவர்களுக்கு சமாதானம் கூறி, அவர்கள் நெஞ்சத்துயரை ஆற்றினார் - யோவா 20:19.

 

"வாழ்வின் அன்றாடத் தேவைகளை சந்திக்க வருகிறார்"

பாவத்தையும், அதன்விளைவான துன்பத்தையும், போக்கிய உயிர்த்த இயேசு, “தம் மக்களின்” அன்றாட வாழ்க்கை தேவைகளையும் சந்திக்க வந்தார்.


1. வயல்வெளியில் - மாற் 16:12


வயல்வெளியில் இருந்த சீடர்களிடம் அங்கே அவர்களின் தேவைகளை சந்திக்கச் சென்றார். விவசாயம் போன்ற பல தொழிலில் சீடர்கள் அங்கே இருந்தார்கள். உயிர்த்த இயேசு, அவர்களிடம் வேற்றுருவில் சென்றார் - மாற் 16:12.


2. கடல் தொழிலில் - யோவா 21:5


இயேசு தான் வாழ்ந்த நாட்களிலும், தொழில் செய்தவர்களை, அவர்கள் தொழிலிலேயே சந்தித்து ஆசீர்வதித்தார் - லூக் 5:6,7. உயிர்த்த பின்பும் கடலில் மீன்பிடிக்க சென்றவர்களை சந்திப்பதற்காக, உயிர்த்த இயேசு, கடலுக்கே சென்றார் - யோவா 21:4-7


3. தொழிலில் ஆலோசனை தர - யோவா 21:6


கடவுள் “ஆலோசனை கர்த்தர்” என்று அறியப்படுகிறார் - எசா 9:6. இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம் ஆலோசனை கேட்காமல் செய்கிற எந்த காரியங்களையும் கடவுள் ஆசீர்வதித்ததில்லை - எசா 30:1-3. எனவே தான், தாவீது தன் வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கடவுளிடம் ஆலோசனை கேட்பதில் கருத்தாயிருந்தார். - 2சாமு 5:23,19. உயிர்த்த இயேசு, தம் சீடர்களுக்கு, அவர்கள் செய்த கடல் தொழிலில் ஆலோசனை கூற வந்தார் - யோவா 21:6.


4. தொழிலை ஆசீர்வதிக்க - யோவா 21:6


‘நீ கையிட்டுச் செய்யும் தொழிலை ஆசீர்வதிப்பேன்’ என்று கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தார் - இ.ச. 28:8. அதன்படியே இயேசு வாழ்ந்த நாட்களில், தம் சீடர்கள் செய்த தொழிலை ஆசீர்வதித்து, ஏராளமான மீன்பாடை தந்தார் - லூக் 5:9. தொடர்ந்து அதே மீட்பின் பணியை உயிர்த்த பின்பும் இயேசு செய்ய வருகிறார் - யோவா 21:6.


5. உணவு சமைக்க - யோவா 21:9


பாலைவனத்தில் இஸ்ராயேலருக்கு பாறையில் தண்ணீரையும், வானம், பூமியில், மன்னா-காடையையும் ஆயத்தப்படுத்தின கடவுள் - தி.பா 105:40,41. மனிதராகத் தோன்றிய போது, இந்த மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார் - மாற் 8:2,3. அதே இயேசு உயிர்த்து வந்த போது, ஒருதாயைப் போல, “கரிநெருப்புமூட்டி, உணவு தயாரித்தார்” - யோவா 21:9,10.


6. உணவை ஊட்ட - யோவா 21:12,13


இஸ்ரயேல் மக்களுக்கு நாற்பது ஆண்டுகள் தாமே அற்புதமாக உணவு ஊட்டிய கடவுள் - வி.ப. 16:35, இ.ச. 29:5-6 இம்மையில் வாழ்ந்த போது, பசி தாகம் உள்ளவர்கள் தம்மிடம் வரும்படி அழைத்தார் - யோவா 6:35. பசித்த மக்கள் மீது “மனமிரங்குகிறேன்” என்று கூறி அப்பம் பலுகச் செய்து போஷித்தார் - மாற் 8:1-7. அந்த இயேசு உயிர்த்த பின்பும் வேலை செய்து களைத்திருந்த சீடரை நோக்கி, “பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட்டு உணவு ஊட்டினார் - யோவா 21:12,13.


7. போகும் வழியில் உடன் இருக்க - லூக் 24:13-15


“நீ செல்லும் வழிகளிலெல்லாம் நான் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9 என்றும், “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” - வி.ப 33:14 என்றும் கூறிய கடவுள், கலிலேயா கடலோரத்தில் பலமுறை சீடர்களோடு பயணம் செய்த இயேசு - மத் : 15:29 உயிர்த்த பின்பு, தம் சீடர்கள் எம்மாவுக்கு வழிப்பயணம் செல்லுகையில் உடன் நடந்து சென்றார் - லூக் 24:15.

 

"விசுவாசத்தை ஊட்ட வருகிறார்"


1. வேதபாடம் கற்றுத்தர - லூக் 24:44


தான் “மீட்ட” இஸ்ராயேல் மக்களுக்கு சீனாய் மலையில் “இறைவார்த்தையை” கடவுள் தந்தார் - வி.ப 19:3-6, 20:1. மலை பிரசங்கத்திலே விசுவாசத்தை தன்னை பின்சென்ற சீடருக்கு, விசுவாசத்தை உருவாக்க புதிய சட்டத்தை இயேசு தந்தார் - மத் 5:1,2. விசுவாசத்தை தொடங்கி வைப்பவராகிய உயிர்த்த இயேசுவும் - எபி 12:2. தம் சீடர்களுக்கு தம்மைப் பற்றிய வேதபாடங்களை கற்றுத்தந்தார் - லூக் 24:44.


2. மந்த புத்தி நீக்க : - லூக் 24:25-27


இஸ்ராயேல் மக்கள், இறைவார்த்தைகளை புரிந்து கொள்ளாமல் இருந்த போது, அவர்களுக்கு, இறைவாக்கினர்களை அனுப்பி வேத விளக்கங்களை கடவுள் தந்தார் - எரே 1:7-10. இயேசுவும் தாம் வாழ்ந்த நாட்களில், சீடர்களால் புரிந்து கொள்ள முடியாத வேளைகளில், மந்த புத்தி மாற்றி இறைவார்த்தைகளுக்கும், உவமைகளுக்கும் விளக்கம் அளித்தார் - மத் 13:36-40,51. அதையே உயிர்த்த இயேசுவும் தம் சீடர்களுக்குச் செய்தார். இறைவார்த்தைகளை புரிந்து விசுவசிக்க முடியாமலிருந்த நிலைமாற்ற, வேத விளக்கங்களை இயேசு அளித்தார் - லூக் 24:25-27.


3. வேதம் புரிய , மனக்கண் திறக்க - லூக் 24:1-45


வேத சத்தியங்களை எளிதில் புரிந்து கொண்டு, விசுவசித்து ஏற்று கொள்வதற்கு ஏற்றவாறு, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு, ‘உள் ஒளியை’ வழங்கினார் - தி.ப 16:14, தி.பா 119:105,130, 19:8. தம்முடைய போதனைகளை தம் சீடர்கள் தெளிவாக புரிந்து கொள்ள, இயேசுவும் அவர்களை தனியாக அழைத்து, அவர்களுக்கு உபதேசித்தார் - மத் 20:17, லூக் 9:18. உயிர்த்த ஆண்டவரும், சீடர்கள் வேதத்தை புரியும் வண்ணம் அவர்கள் “மனக்கண்களைத் திறந்து பேசினார்” - லூக் 24:45.


4. கடிந்து திருத்த - மாற் 16:14


தம்மை ஏற்றுக்கொண்ட மக்களை, தந்தைக்குரிய பரிவோடு “கடிந்து” திருத்துவது, பைபிள் கடவுளுக்கு ஒரு சாதாரண காரியம். இஸ்ராயேல் மக்கள், கடவுளை புறக்கணித்த வேளைகளிலெல்லாம், அவர்களை “கடிந்து” பலமுறை திருத்தினார் - எசா 1:1-6. கடிந்து திருத்தம் பெறுவதன் அவசியத்தைக் கூறினார். - எபி 12:10. இயேசுவும் இம்மையில் வாழ்ந்த போது, பல கடினமான வார்த்தைகளால், சீடரையும், மற்றவரையும் கடிந்து திருத்தினார் - யோவா 2:13-16, மத் 16:22,23, மாற் 8:17, 8:21. அதையே உயிர்த்த இயேசுவும், விசுவசியாத தம் சீடருக்கு தொடர்ந்து செய்தார் - மாற் 16:14.


5. விசுவாசம் பற்றிய பாடம் தர : - யோவா 20:29


தம்மை விசுவசிப்பது என்றால் என்ன, என்பது பற்றி கடவுள் பலமுறை இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துச்சொன்னார். குறிப்பாக, ஆபிரகாமின் ஏக புதல்வனை பலிகேட்ட போது - தொ.நூ 22:2, இயேசுவும் தம் சீடர்களுக்கு, விசுவாசத்தின் உள் சத்தியங்களை பல புதுமைகள் - லூக் 9:37-43 மூலமாகவும், உபதேசம் மூலமாகவும் தந்தார் - யோவா 11:25. இயேசு உயிர்த்த ஆண்டவராக தம் சீடர்களை சந்திக்க வந்த போது, உண்மையான விசுவாசம் எது என்பதை விளக்கினார் - யோவா 20:20.

 

"அருட்பொழிவு வழங்க வருகிறார்"

இரட்சிப்பு, அபிஷேகம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பின் பணி பற்றிய தேவதிட்டம். அதை, அவர் வாழ்ந்த போதும், உயிர்த்த பின்பும் செய்தார் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாவத்திலிருந்தும், பாவத்தின் விளைவான துன்பத்திலிருந்தும் தம் மக்களை விடுவித்து, அவர்கள் பெற்றுக்கொண்ட மீட்பில் நிலைத்து வாழ, விசுவாசத்தை ஊட்ட, உயிர்த்த இயேசு என்னென்ன செய்தார் என்பதை இதுவரை பார்த்தோம். இப்போது, அவர்களை விசுவாசிகளாக திருநிலைப்படுத்த, அபிஷேகம் தருவதையும் காண்கிறோம்.


1. பரிசுத்த ஆவியை தருகிறார் : - யோவா 20:22


மனித குல தொடக்கத்தில், அவர்கள் மீது ஊதி, பரிசுத்த ஆவியை வழங்கிய கடவுள் - தொ.நூ 2:7. அவர்கள் பாவத்தால் அதை இழந்த போதும், “பாவத்தின”;, “இறுதிநாளில்” எல்லார் மேலும், அந்த ஆவியை பொழிவேன் என்று வாக்குறுதி அளித்தார் - யோவே 2:28.

இயேசு தம் மீட்பின் பணியில், ஜீவ ஊற்றாம் ஆவியானவரை பெற வேண்டும் என்றும் - யோவா 15:26, ஆவியில் திருமுழுக்கு பெற வேண்டும் - யோவா 3:5 என்றும் மக்களுக்கு போதித்து விளக்கினார். இயேசு உயிர்த்தபின்பு, தம் பணியை தொடர்ந்து, தம் சீடர்மேல் ஊதி, ஆவியால் அபிஷேகம் செய்தார் - யோவா 20:22.


2. வாக்களித்த வல்லமைக்காக காத்திருக்க கட்டளை தர வருகிறார் - லூக் 24:49


யோவேல் இறைவாக்கினர் மூலமாக இஸ்ராயேல் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஆவி, அதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட “திருப்பொழிவு” போன்றது அல்ல. மாறாக, அது கடவுளின் “வல்லமையையும்” “ஆவியையும்” அளிக்கும் “அருட்பொழிவு”. எனவே, “தேவகிருபையின் காலத்து மக்கள்”, ஆவியின் அபிஷேகம் மட்டுமல்ல, “பெலனையும்” பெற வேண்டுமென்றும், அதை எவ்வாறு பெற வேண்டுமென்றும், தம் வனாந்தர அனுபவம் மூலமாக இயேசுவும் கற்றுத்தந்தார் - லூக் 4:1,14.

அந்த “பெலனை” பெறுவது தான், “தந்தை வாக்களித்தது” என்றும், அதற்காக தம் சீடர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் உயிர்த்த இயேசு கட்டளையிட்டார் - லூக் 24:49.

 

"ஊழியராக உயர்த்த வருகிறார்"

இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று, இயேசுவின் வார்த்தைகளை ஏற்று வாழும் “சீடரின்” நிலைக்கு தம் மக்களை உருவாக்கிய, “உயிர்த்த இயேசு”, சீடர்களை “ஊழிய” நிலைக்கும் உயர்த்த தவறவில்லை.


1. சீடரை உயிர்ப்பின் ஊழியம் செய்யும் ஊழியராக்கு கிறார் - மத் 28:7,10


“நீங்கள் விரைந்து சென்று, உயிர்ப்பின் செய்தியை அறிவியுங்கள்” என்று, முதலில் தூதன் மூலமாகவும் - மத் 28:7, பின்பு, தாமே நேராகவும் வந்து, தம் சீடருக்கு கட்டளையிட்டார் - மத் 28:10. இவ்வாறு உயிர்ப்பின் ஊழியத்தை, அவர் ஆரம்பித்தார்.


2. மீட்பின் ஊழியத்துக்கு வழிகாட்ட வருகிறார் - மத் 28:16-20


மீட்பின் ஊழியம் எப்படி தம் சீடர் செய்ய வேண்டும் என்று, உயிர்த்த இயேசு ஒரு தெளிவான வரைமுறை கொடுத்தார். 1) போக வேண்டும். 2) எல்லாரையும் சீடராக்க வேண்டும். 3)தந்தை, மகன், ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்க வேண்டும். 4) கட்டளைகளை கடைபிடிக்க கற்பிக்க வேண்டும். - மத் 28:20.


3. மீட்பின் ஊழியத்துக்கு புதிய பாடத்தை வழங்க வருகிறார். - மாற் 16:15-18


1)உலகமெங்கும் போக வேண்டும். 2)படைப்பிற்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும். 3) விசுவசித்து திருமுழுக்கு பெறுபவர் மீட்படைய 4) விசுவாசிகளிடம், ஆவியானவரின் அருட்கொடைகளும், கனிகளும் காணப்படும். - மாற் 16:15-18.


4. ஊழியர் மனத்தை உறுதிப்படுத்த வருகிறார் - யோவா 21:18


தன் பெலவீனத்தால், இயேசுவை மறுதலித்த பேதுரு, இயேசுவின் பிரியமான ஊழியர். தாம் மறுதலித்து விட்டோமே என்று, பேதுரு மனமுடைந்து போகாதவண்ணம், இயேசுவே முன்னுணர்ந்தவராய் அவரை தேற்றினார். பேதுருவைக் கொண்டே, அவரது அன்பை மூன்றுமுறை அறிக்கையிடச் செய்து, மனக்கசப்பை மாற்றினார் - யோவா 21:15,17.


5. அவரவர்க்குரிய ஊழியத்தையும் வழங்க வருகின்றார் - யோவா 21:15


இயேசு வாழ்ந்த போது, வாக்களித்தபடியே, பேதுருவுக்கு, தன் மேய்ப்பின் தலைமைப் பணியை உறுதிப்படுத்தி வழங்கினார்.


6. துன்புறும் ஊழியமே மீட்பின் ஊழியம் என்பதை உறுதி செய்ய வருகிறார் - யோவா 21:18


தம் தலைமை ஊழியரான பேதுரு எத்தகைய துன்பபாடுகளை ஊழியத்தில் சந்திக்க வேண்டும் என்று, அவர் இறக்கும் முன்பே கூறினார் - லூக் 22:31. இப்போது, அதை மீண்டும் கூறி பேதுருவை துன்புறும் ஊழியத்துக்கு ஆயத்தப்படுத்தினார் - யோவா 21:18.


7. உலகம் முடியும்வரை உடனிருக்க வருகிறார் - மத் 28:20


தாம் தொடங்கிய மீட்பின் ஊழியம், தன்னுடைய ஊழியர் வழியாக தொடர விரும்பிய இயேசு, மனிதனாகிய மட்டும் எப்போதும் அவர் உடன் இருக்க முடியாது. எனவே, மரித்து, உயிர்த்து, உயிர்த்த ஆண்டவரின் ஆவியாக அவர்களோடு இருக்க வந்தார் - மத் 28:20.


8. சொன்னபடி உடனிருந்தார் - மாற் 16:20


உயிர்த்த இயேசு சொன்னபடியே, சீடர்கள் சென்று, மீட்பின் பணி செய்தனர். அவ்வேளையில், உயிர்த்த இயேசு வாக்களித்த படியே, அவர்களோடு இருந்து, பல அற்புத செயல்களினால், தாம் கூறியபடி உடனிருப்பதாகக் காட்டினார் - மாற் 16:20.


 

My status 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார். 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார். 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


இயேசு, கல்லறையில் இல்லை. 


அம்மா அழாதீர்! 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம். 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார். 


உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


விசுவாசம் அற்றவனாயிராதே. 


நான் தான் அஞ்சாதீர்கள்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, எம்மாவூஸ் சீடரோடு. 


உயிர்த்த இயேசு, மறைநூலை விளக்கினார் . 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.மாலை நேரம் ! எங்களோடு தங்கும். 


உயிர்த்த இயேசு, வயல்வெளியில் தோன்றினார். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.

My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com