"கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் - CPM - வரலாறு"

"CPM - HISTORY"

A. நிறுவனர்:

Rev.Fr.R.John Joseph

 பிறப்பு:

பெயர் :  அருட்திரு.R.ஜாண்ஜோசப் அடிகள்
பிறந்த இடம் :   காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
பிறந்த நாள் :  05-03-1949
பெற்றோர்கள் :  திரு.சக்கரியாஸ் ரபேல், திருமதி.ஞானதீபம் ஜீவநேசம்.
உடன்பிறப்புகள் :  அக்கா - திருமதி. J. லூர்து மேரி , தம்பி - திரு.R.மரிய ஆன்றணி, தங்கை - திருமதி.J.மேரி ஆஞ்சலா
பங்கு :  புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்
மறை மாவட்டம்
:  

கோட்டார்

 வளர்ப்பு:

அருட்தந்தை R.ஜாண்ஜோசப் அடிகளாரின், பெற்றோர், ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். அவர்கள், மிகுந்த இறைப்பற்று உடையவர்களாகவும், ஆத்மீக ஈடுபாடு உடையவர்களாகவும், இருந்தார்கள். எனவே, தந்தையவர்களுக்கு, நல்ல கல்வியறிவு தந்ததோடு, மிகுந்த ஆத்மீக பயிற்சியும் அவர்கள் தந்தார்கள்.

சிறுவயதிலிருந்தே, குடும்ப ஜெபம், மறைக்கல்வி, தினத் திருப்பலி, பாடற்குழு, என எல்லா ஆத்மீக வட்டாரங்களிலும், அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. வீடு, கோயில், பள்ளி, என்ற வட்டத்தில் வளர்ந்தாலும், அவருக்கு சமுதாய ஈடுபாடும் இருந்தது.

பள்ளிப்பருவத்திலிருந்தே, தமிழ் உணர்வோடும், அரசியல் ஈடுபாடோடும், வளர்ந்தார். இதன் பொருட்டு, பல மன்றங்களிலும், சங்கங்களிலும், அவர் ஈடுபட்டு, பணியாற்றினார்.

மேலும், கலை, இலக்கியம், பாடல், இசை, மேடைப்பேச்சு, தற்காப்பு பயிற்சிகள், குடும்ப மருத்துவம், என பல துறைகளில், அவர் புலமையுடைய வராய் இருந்தார்.

 இளமைப்பருவம்:

அவருடைய மாணவர் பருவத்தில், அவரைப் போலவே, திறமைகளும், இறைப்பற்றும் கொண்ட, நல்ல நண்பர்களும், அவருக்கு இருந்தார்கள். தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்ததும், தன் நண்பர்களோடு சேர்ந்து, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, பயிற்சியூட்டும், அறப்பணிகளை செய்து வந்தார்.

"கடவுள் - மையமான", ஒரு வாழ்வுக்கு, சிறுவயதிலிருந்தே, பயிற்றுவிக்கப்பட்டதால், இளமைப்பருவத்தின், உலக, மாமிச ஈர்ப்புக்களில், அவர் விழுந்து போகவில்லை. தமக்கு, முன் மாதிரியாக இருந்து, தன்னை அன்பு செய்த, சில பங்குத்தந்தையர்களைப் போல, தாமும் ஒரு குருவானவர் ஆக வேண்டும் என்ற ஆசை, அவருக்கு எப்போதும் இருந்தது. அதோடு அவரை சுற்றியிருந்த, அவருடைய ஆத்மீக நண்பர்கள் பலர், ஏற்கெனவே, குருத்துவப் பயிற்சிக்காக, குருமடங்களுக்குச் சென்றார்கள்.

மேலும், அவருடைய பங்கின் பாதுகாவலரான, புனித எஸ்தாக்கியாரைப் போல, தாமும் ஒரு புனிதராக வேண்டும் என்ற, ஒரு வெறி, அவருடைய உள்மனதில், எப்போதும் இருந்தது. அந்த உந்துதலே, அவரை குருத்துவப் படிப்புக்கு இட்டுச் சென்றது.

 புனிதனாகு – புனிதனாக்கு

சிறு பருவத்திலிருந்தே, "புனிதனாகு - புனிதனாக்கு" எனும், விருதுவாக்கில் தான், தந்தையவர்களின் ஆத்மீக வாழ்வு மலர்ந்தது. "நற்கருணை வீரன்", "பூச்செண்டு", "ஞானதூதன்", "தென் ஒலி" போன்ற, பல கத்தோலிக்கப் பத்திரிகைகள் மூலமாக, அவர் கற்றுக்கொண்ட ஆத்மீகப் பாடங்கள், அவரை, இத்தகைய ஒரு விருதுவாக்கிற்கு உயர்த்தியது.

இந்த விருதுவாக்கோடு தான், அவர் தம்முடைய குருத்துவப் பயிற்சியை, ஆரம்பித்தார். ஆனால், தந்தையவர்களின் "ஆத்மீக அனுபவத்திற்கு" பிறகு, "மீட்படைவதும் அருட்பொழிவு பெறுவதும்" அதையே, பிறருக்குக் கொடுப்பதும் தான், அவரது வாழ்வின் குறிக்கோளானது.

இந்தப் பின்னணியில், இன்று தந்தையவர்களின் வாழ்வும், பணியும், மேலான ஒரு விருதுவாக்கைக் கொண்டிருக்கிறது. அதாவது, "மீட்பைப் பெறு – மீட்பைக் கொடு" “Get and Give Salvation”- "நீயும் மீட்படைவாய், உனக்கு செவிசாய்ப்போரும் மீட்படைவர்" - 1திமொ 4:16.

 கல்லூரி வாழ்வு:

1969 - ம் ஆண்டு, மேய் மாதம், குருத்துவப் பயிற்சிக்காக, அவர் சென்னைக்கு சென்றார். சாந்தோம், புனித தோமையார் இளம் குருமடம், மதுரை, புனித அருளானந்தர் கல்லூரி, சென்னை பூவிருந்தவல்லி, தூய இருதய பெரிய குருமடம், போன்ற பல பயிற்சித் தளங்கள், அவரை ஒரு குருவானவராக உருவாக்கின.

அவருடைய குருமட வாழ்க்கை, இளமைக்கால அவரது இறைத் தேடுதலுக்கு, பதில் கொடுப்பதாகவே இருந்தது. ஆத்மீகத்திலும், இறை அறிவிலும், வேத படிப்பிலும் வளர, அவருக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக் களையும், அவர் முழுமையாகப் பயன்படுத்தினார்.

எல்லா பயிற்சித் தளங்களிலும், இறைப்பற்றும், புனிதமும் கொண்ட, பல குருக்களோடு, நெருக்கமான உறவு கொண்டு, இறை அனுபவங்களில் வளர, அவர் பயிற்சி பெற்றார். இளமையில், தம் இயல்பான திறமைகளை எல்லாம், இறைவனுக்குப் பயன்படும்படியாக, குருமட வாழ்வில் வளர்த்துக் கொண்டார்.

 அபிஷேகமும் - அழைப்பும்:

1977-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7-ம் நாள், சென்னை பூவிருந்தவல்லி குருமடத்தில், தந்தையவர்களுக்கு பரலோக வெளிப்பாடுகளும், அபிஷேகமும் கிடைத்தது. அன்று இரவு, மாதாந்திர தியானம் நடந்து கொண்டிருந்தது. தந்தையவர்கள், ஒரு கட்டடத்தின் மாடிக்கு மேல் சென்று, ஜெபித்துக் கொண்டிருந்தார்.

அங்கே, அவருடைய நீண்ட காலத் தேடலுக்கு, கடவுள் பதில் தந்தார். இரவு சுமார் 7.30 மணியிலிருந்து, விடியற்காலை, 1.30 மணி வரையிலும், அபிஷேக அனுபவங்களாலும், வெளிப்பாடுகளாலும், கடவுள் அவரை நிரப்பினார்.

அன்றே, அவருடைய எதிர்கால குருத்துவ வாழ்வு பற்றியும், பணிகளின் தன்மை பற்றியும், கடவுள் கற்றுத் தந்தார். அபிஷேகத்தால், "புது மனிதராக" உருமாறிய அவர், படிப்பிலும், பயிற்சிகளிலும், ஜெப ஈடுபாடுகளிலும், மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைந்தார்.

இதைக் கண்ணுற்ற, அவருடைய குருமட பொறுப்பாளர்கள், அவரை ஆவிக்குரிய நிலையில், மிகவும் ஊக்குவித்து, வளர்ச்சிக்கான எல்லா வாய்ப்புக்களையும், அவருக்கு தந்தார்கள். உடன் குருமட மாணவர்களோடு இணைந்து, அவர் ஓர் ஆவிக்குரிய குருவாக உருமாறினார்.

தொடக்கத்தில், வேலூர் மறை மாவட்டத்திற்காக, பயிற்சி பெற்ற அவர், இறுதியில், கோட்டார் மறைமாவட்டத்தில் பணிபுரிய, தன்னை இணைத்துக் கொண்டார்.

 குருப்பட்டமும் - பணித்தளமும்:

1980-ம் ஆண்டு, மேய் மாதம், 10-ம் நாள், கோட்டார் மறைமாவட்ட ஆயர், பேரருட்திரு.ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால், தந்தையவர்கள் குருத்துவ திருநிலைப்பாடு பெற்றார்கள். அன்றிலிருந்து, ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள், கோட்டார் மறைமாவட்டத்தின், பல பங்கு பணிதளங்களில், அவர் பணியாற்றினார்.

1982 - ல், மணியாரம்குன்று என்ற பங்கில், அவர் பொறுப்பாளராக இருந்த போது, அந்த பங்குத் தளத்திலேயே, தன் ஆவிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்தார். மறைமாவட்டத்தில், பல பங்குகளுக்கும் சென்று, நற்செய்திக் கூட்டங்களில் பங்கெடுத்து, ஆவிக்குரிய செய்திகளை வழங்கினார்.

மறைமாவட்டத்துக்கு வெளியில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கர்நாடகா, மும்பை போன்ற இடங்களிலும், அவர் பலமுறை சென்று, ஆவிக்குரிய கூட்டங்களை நடத்தினார். இரட்சிப்பு அபிஷேக தியானங்கள் மூலமாக, அனேகரை மீட்புக்குள் கொண்டு வந்தார்.

B.ஜெப ஊழியம் உருவாதல்:

 ஆரம்பித்தல்:

இவ்வாறு தந்தையவர்களின் நற்செய்தி ஊழியத்தால் மீட்கப்பட்டு, அபிஷேகம் பெற்ற, அனேகருடைய ஆவிக்குரிய வாழ்வை, வழிநடத்தும் பொருட்டு, 1986 - ம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 - ம் நாள், மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெருவில், அவர் ஒரு "ஜெப ஊழியத்தை", ஆரம்பித்தார்.

1987, ஜனுவரி 1 - ம் நாள் முதல், அங்கே, உபவாசக் கூட்டங்கள், குணமளிக்கும் ஆராதனைகள், மீட்பின் தியானங்கள், போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தார். இதனால், பல்லாயிரம் மக்கள் மீட்படைந்து, விடுதலையைப் பெற்றுக் கொண்டார்கள்.

அந்த இடத்தில், மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், பணிகள் விரிவடைந்ததாலும், மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில், வசதியான ஓர் இடத்தை வாங்கி, அங்கே தன் மீட்பின் பணியை முழு வீச்சில் ஆரம்பித்தார்.

இந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள, பல லட்சம் மக்கள், இதனால் ஆத்மீக நலன் அடைந்தனர்.

 இணை-ஸ்தாபகர்

தந்தையவர்கள், இந்த ஆவிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்த நாட்களில், அவருக்கு மிக உறுதுணையாக இருந்து, உழைத்தவர், அவரது அன்புத் தம்பி, திருமிகு.R.மரிய ஆன்றணி அவர்கள். அவரோடு, அவருடைய குடும்பம் முழுவதும், இந்த ஊழியத்தை ஆரம்பிக்க, பொருளாலும், பணத்தாலும், ஆளாலும், உதவி செய்தது. அன்னார், ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு, மார்ச் மாதம், பதினேழாம் நாள், விண்ணக பிறப்பை எய்தினார். அவரது, இறுதி மூச்சு வரையிலும், இந்த ஊழியத்தின், வளர்ச்சிக்காக, தந்தையவர்களோடு, அவர் தோள்கொடுத்து உழைத்தார்.

 "தூது வரும் தேவபுறா":

தந்தையவர்களின் ஆவிக்குரிய ஊழியம், ஆரம்பித்த நாட்களிலேயே, அவர் ஒரு பத்திரிகை ஊழியத்தையும் ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகை, "தூது வரும் தேவபுறா" என்று அறியப்பட்டது. ஐயாயிரத்துக்கும் மேல் பிரதிகளைக் கொண்ட, ஒரு சிறப்பான ஆவிக்குரிய பத்திரிகையாக, அது, தமிழ் கூறும் நல்லுலகெங்கும், பறந்து பணியாற்றியது.

1987, ஜுன் மாதம், இதன் முதல் பிரதி வெளிவந்தது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர், பேரருட்திரு டாக்டர். மரியானூஸ் ஆரோக்கியசாமி ஆண்டகை, மார்த்தாண்டம் மலங்கரை மறைமாவட்ட ஆயர். டாக்டர். லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகை போன்றோர், முதல் பிரதியிலேயே, தங்களது வாழ்த்துச் செய்திகளை அளித்தார்கள். அவர்களோடு, சகோதரர். D.G.S. தினகரன், சகோ.மோகன்.C.லாசரஸ், சகோ.D.ஜாண்ரவீந்திரநாத், சகோ.J.M.றோஸ்பாண்டியன், சகோ.D.ஜெய்சிங், போன்ற பல முன்னணி ஆவிக்குரிய ஊழியர்கள், தூது வரும் தேவபுறாவுக்கு, வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார்கள்.

"தேவபுறா" என்று, பலரால் செல்லமாக அழைக்கப்பட்ட, இந்த ஆவிக்குரிய பத்திரிகை, பல கத்தோலிக்க குருக்களுக்கும், போதகர்களுக்கும், "செய்திப் பேழை" யாயிருந்து, உதவியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் பிரதிகளை பத்திரப்படுத்தி வைத்து, தங்கள் "மறை செய்திகளுக்கு" அனேகர் பயன்படுத்துகின்றார்கள்.

"மேய்ப்பனை மேய்க்கும் மந்தை", "சாயம் கலைந்த நரி", "துறவற சபை வரலாறு", "விளக்கை அணையுங்கள்" போன்ற தந்தையவர்களின் தலையங்கங்கள், அந்நாட்களில், கத்தோலிக்க உலகில், பெரும் புரட்சியை உண்டாக்கின. மேலும், "அடியார்க்கு அடியார்" கேள்விப் பதில், பகுதியும், வாசகர்களால், இன்றும் மறக்கமுடியாதவையே.

 அருங்கொடை மாநாடு:

1989, மேய் மாதம், "அகில இந்திய அருங்கொடை மாநாடு" ஒன்றை, மார்த்தாண்டம், கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில், ஐந்து நாட்கள், தந்தையவர்கள் நடத்தினார். இதில், பல கத்தோலிக்க பேராயர்களும், ஆயர்களும், கலந்து கொண்டார்கள். நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து, ஆயிரக்கணக்கான ஆவிக்குரிய மக்களும், மற்றவர்களும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, பலன் பெற்றார்கள்.

இதனால், ஊழியம் மேலும் வலுவடைந்து, பல்லாயிரம் விசுவாசிகளின் "ஆத்மீக பொறுப்பை", இந்த ஊழியம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

C.சபை ஊழியம் உருவாதல்:

 ஆரம்பித்தல்:

ஊழியம் வளர்ச்சியின் பாதையில் செல்ல செல்ல, மீட்படைந்த விசுவாசிகள் பற்றிய பொறுப்பும், ஊழியத்துக்கு அதிகரித்தது. எனவே, இதுவரையில் "ஜெப ஊழியமாக" இருந்த, இந்த ஊழியம், தொடர்ந்து, "சபை ஊழியமாக" உருமாறியது.

ஜெப ஊழியமாக இருந்த போது, "அருங்கொடை மையம்" என்று அழைக்கப்பட்ட இந்த ஊழியம், சபை ஊழியமாக மாறிய போது, "கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன்" என்று அறியப்படுகிறது. சுருக்கமாக இதை, "CPM சபை" என்று அழைக்கிறோம்.

 அர்ப்பண ஊழியர் உருவாதல்:

ஊழியப் பொறுப்புக்கள் வளர, வளர, CPM சபையில், ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது. எனவே, இந்த ஊழியத்தில், "ஊழியப் பயிற்சி தியானங்கள்" ஆரம்பமாயின. இந்த தியானம், நாற்பது நாட்கள் நடைபெற்றது. இதில், பல மக்கள் கலந்து கொண்டு, ஆத்மீக அனுபவங்களும், ஊழியப் பயிற்சியும் பெற்று, தங்களை ஆவிக்குரிய ஊழியத்திற்கென்று, அர்ப்பணித்தார்கள்.

அன்றிலிருந்து, அவர்கள், குடும்பங்களில் வாழ்ந்தாலும், துறவு ஆடைகளை உடுத்தி, "இல்லறத் துறவிகளாக", தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

இந்த இல்லறத் துறவிகள், தொடர்ந்து பல வேதபாட பயிற்சிகளையும் பெற்று, CPM சபையில், இரட்சிப்பு அபிஷேக ஊழியத்தை வளர்த்தார்கள். இவ்வாறு, பத்தொன்பது குழுக்கள், ஊழியர்களாக உருவானார்கள். இதில், முந்நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளார்கள்.

 மேய்ப்பர்கள்:

இவர்களில் சிலர், சிறப்பு பயிற்சிகள் பெற்று, "மேய்ப்பர்களாக" திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபையின் எல்லா பணிகளிலும், இவர்கள் பொறுப்பேற்று, பணி புரிகிறார்கள். 1.மாதம் ஒருமுறை, விசுவாசிகளின் வீடுகளை சந்தித்தல், 2. இல்லங்களில் நற்செய்தி அறிவித்தல், 3. மக்களை இரட்சிப்பு அபிஷேக தியானத்திற்கு ஆயத்தப்படுத்துதல், 4. அவர்களை தியானத்திற்கு அழைத்து வருதல், 5. இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றவர்களுக்கு, தொடர் பயிற்சிகள் வழங்கி, அவர்களை ஆவியில் வளர்த்தல், போன்ற பணிகளை, இந்த மேய்ப்பர்கள் செய்கிறார்கள்.

 திருத்தொண்டர்கள்:

அர்ப்பணித்த ஊழியர்களில், திறமையும், அறிவும், இறைப்பற்றும், ஆவியின் வல்லமையும் நிரம்ப பெற்ற, ஒரு சிலருக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து, அவர்கள், திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள், திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதிலும், விசுவாசிகளை திருவருட்சாதனத்திற்கு ஆயத்தப்படுத்துவதிலும், திருவழிபாடுகளை நடத்துவதிலும், ஈடுபட்டு, பணிபுரிகிறார்கள்.

 அருங்கொடையாளர்கள்:

ஆவிக்குரிய அனுபவம் பெற்று, பத்து ஆண்டுகளுக்கு மேல், ஆவிக்குரிய வாழ்விலும், பணியிலும், ஈடுபட்டவர்களை, சிறப்பு "அருங்கொடை தியானங்களில்" - Charismatic Retreat - பங்கேற்க வைத்து, அவர்களை, CPM அருங்கொடையாளர் களாக, உயர்த்தியிருக்கிறோம்.

இவர்கள், தங்கள் இல்லங்களிலும், வாழும் சமுதாயத்திலும், சபையிலும், தாங்கள் பெற்றுக்கொண்ட, ஆவிக்குரிய வரங்களை, பயன்படுத்தி, மீட்பின் ஊழியம் செய்து, சபை வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள்.

 "கிறிஸ்துவின் அருங்கொடை ஊழியர் சபை"

இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று, நாற்பது நாள் ஊழியப் பயிற்சி தியானத்திலிருந்து, ஊழியத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களில் பலர், மணமாகாத இளைஞர்களும், இளம் பெண்களும் ஆவார். இவர்களில், திறமையும், வேத அறிவும், இறைப்பற்றும் கொண்டவர்களை, பயிற்றுவித்து, அவர்களுக்காக, "துறவற சபை" ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

இவர்களுக்கு, வார்த்தைப்பாட்டுக்குரிய பயிற்சிகளை, பல நிலைகளில் அளித்து, துறவற ஊழியர்களாக, திருநிலைப்படுத்துகிறோம். இவர்கள், "கிறிஸ்துவின் அருங்கொடை ஊழியர்கள்" - Charismatic Missionaries of Christ (CMC) என்று அறியப்படுகிறார்கள்.

இந்த CMC துறவிகளே, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன், சபையை நிர்வாகம் செய்கின்றார்கள். இவர்கள், துறவற குடும்பங்களாக வாழ்ந்து, தங்களை சகோதர உறவிலும், வேத அறிவிலும், இறைப்பற்றிலும், தொடர்ந்து வளர்த்துக் கொள்கின்றார்கள்.

 "பரிசுத்த ஆவி பேராலயம்"

தொடக்கத்தில், ஓர் ஓலைக் கொட்டகையில், ஆரம்பித்த ஜெப ஊழியம், வளர்ந்து, சபை ஊழியமாக மாறிய போது, ஓர் ஆலயத்தின் தேவையும் ஏற்பட்டது. விசுவாசிகளுடைய நன்கொடைகளாலும், ஒத்துழைப்பாலும், நூற்றைம்பதுக்கு எண்பத்து ஐந்து என்ற அளவில், ஓர் ஆலயத்தை உருவாக்கினோம். இந்த ஆலயத்திற்கு, "பரிசுத்த ஆவி பேராலயம்" என்று, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் பணி, முடிவடையாவிட்டாலும், ஆலயத்துக்குள்ளேயே, எல்லா ஊழியமும், இன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பலி விருந்துக்கென்று, திருப்பீடம் ஒன்றை, அழகுற அமைத்துள்ளோம். பீட முகப்பில், பதினான்கு அடி உயரமுள்ள, பாடுபட்ட இயேசுவின் சொரூபமொன்றை, திருநிலைப்படுத்தியுள்ளோம். ஆலயத்தின் உள் சுவரை சுற்றி, பதினைந்து சிலுவைப்பாதை படங்களை ஸ்தாபித்து உள்ளோம்.

ஆலயத்தின் முகப்பு பகுதியில், எண்பத்தி ஐந்துக்கு - முப்பது அளவில், ஓர் அழகான ஜெப அறை அமைத்துள்ளோம். அங்கே, பல்வேறுபட்ட நோயாளிகள், பல இடங்களிலுமிருந்து வந்து, தங்கி விடுதலை பெற்று செல்கிறார்கள். ஆலயத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், ஒரே நேரத்தில், வசதியாக அமர்ந்திருந்து, ஆராதனையில் பங்கு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

 சங்கிலி ஜெப அறை:

இரவு பகல், 24 மணி நேரமும், "CPM ஜெப ஊழியர்கள்", சங்கிலி ஜெபம் செய்ய, இருபதுக்கு - இருபது என்ற அளவில், சங்கிலி ஜெப அறை ஒன்றை, அமைத்துள்ளோம். கூடவே, கழிப்பறை, ஓய்வறை வசதிகளும் செய்துள்ளோம். இங்கே, இறைப்பிரசன்னத்துக்கு முன்னால், இரவும் பகலும், சிலுவையில் தொங்கி நின்று, பரிந்து பேசும் ஜெப ஊழியம் நடைபெறுகின்றது.

 உணவு விருந்து:

ஒவ்வொரு நாளும், ஆராதனை, ஜெப பயிற்சிகள், எழுப்புதல் கூட்டங்கள், கருத்தரங்குகள், விடுதலை ஆராதனைகள், ஜெப ஆலோசனைகள் வேதபாட வகுப்புக்கள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக, சபைக்கு வரும் விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும், மதிய உணவு, அளிக்கிறோம். அடிக்கடி வந்து, தங்கி பணி செய்யும், இறை ஊழியர்களுக்கும், தங்குமிடம், உணவு போன்ற வசதிகள் செய்து கொடுக்கிறோம்.

வரவேற்று, உபசரித்து, வழியனுப்பும் ஊழியர்கள்:

CMC சபையை சார்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட, கன்னியர்களும், துறவிகளும், சபை ஊழியத்தின் நிர்வாகப் பொறுப்போடு, பணி பொறுப்பையும், எடுத்துள்ளார்கள். விடுதலைக்காக அல்லது, விபரம் அறிய, அன்றாடம் வருகிற மக்களை, இன்முகத்தோடு வரவேற்று, உணவளித்து, உபசரித்து, அவர்களை இந்த ஊழியர்கள், விடுதலையோடு வழியனுப்பி வைக்கிறார்கள்.

 மிஷன் ஊழியம்:

கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை, மூன்று மிஷன்களாக பிரிக்கப்பட்டு, விசுவாசிகளைப் பேணும் பணிகளை, செய்து வருகின்றது. புனித ஜாண்ஸ் மிஷன், புனித பீட்டர்ஸ் மிஷன், புனித பால்ஸ் மிஷன், என்று இவை அறியப்படுகின்றன.

CPM விசுவாசிகள் வாழும் இடங்கள், தமிழ்நாடு, கேரளா, என்ற இரண்டு மாநிலங்கள் ஆகும். இதில், தமிழ்நாட்டிலுள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரியும், கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் மாவட்டமும் அடங்கும். இந்த மூன்று மாவட்டங்களையும், மூன்று மிஷன்களாக பிரித்துள்ளோம்.

தமிழ்நாட்டில், குமரி மாவட்டத்தின் மேற்கு எல்லையோரப்பகுதி களையும், கேரளாவில், திருவனந்தபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய இடங்களை, புனித பீட்டர்ஸ் மிஷன் என்கிறோம். குமரி மாவட்டத்தில், மேற்கு எல்லையோரத்தின் எஞ்சிய பகுதியிலிருந்து, விளவங்கோடு தாலுகா முழுமையும் உள்ளடக்கி, புனித பால்ஸ் மிஷன் என்கிறோம். குமரி மாவட்டத்தின், மீதமுள்ள பகுதிகள் தொடங்கி, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், சங்கரன்கோயில், சிதம்பராபுரம், மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களையும் உள்ளடக்கி, புனித ஜாண்ஸ் மிஷன் என்கிறோம்.

இந்த ஒவ்வொரு மிஷனுக்கும், ஒரு தலைமை மேய்ப்பர் பொறுப்பாயிருப்பார். அவருக்கு கீழ், ஒவ்வொரு மிஷனிலும், பல மேய்ப்பர்கள் இருப்பார்கள். இவர்கள், அவரவர்கள் பொறுப்பிலுள்ள மிஷனின் இல்லங்களுக்கு, மாதமொருமுறை சென்று, நலம் விசாரித்து, அவர்களுக்காக ஜெபிப்பர். அந்த விசுவாசிகளின் குடும்பங்களிலுள்ள, எல்லா இன்ப – துன்ப நிகழ்வுகளிலும், அந்த மேய்ப்பர்கள் கலந்து கொண்டு, ஊழியம் செய்வர். சுருக்கமாகச் சொன்னால், இந்த மிஷன் மேய்ப்பர்கள், சபைக்கும், விசுவாசிகளுக்குமிடையே, பாலமாயிருந்து, பணி புரிகிறார்கள்.

 கத்தோலிக்க சபைக்கு நன்றி:

குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றுக்கொண்ட, கத்தோலிக்க அன்புறவு, கத்தோலிக்க பக்தி வைராக்கியம், கத்தோலிக்க ஆத்மீகப் பயிற்சிகள், கத்தோலிக்க குடும்ப வாழ்வு, கத்தோலிக்க துறவிகளின் முன்மாதிரி, புனிதர்களின் வழிகாட்டுதல், இவை எல்லாம், ஓர் ஏணியாக இருந்து, அருட்தந்தை.R.ஜாண்ஜோசப் அவர்களை, ஒரு புனிதமான ஆவிக்குரிய குருவாக உயர்த்தியது. அதற்காக, அவர் என்றும், கத்தோலிக்க திருச்சபைக்கு நன்றியுள்ளவராயிருக்கிறார்.

கத்தோலிக்க திருச்சபைக்குள் இல்லாத எதையும், தந்தையவர்கள் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. 1.ஆவிக்குரிய வாழ்வும், 2.இறை விருப்பத்துக்குக் கட்டுப்பட்ட அன்புறவும், 3.ஒரு விசுவாசியை இரத்த சாட்சியாக்கும் பயிற்சிகளும், கத்தோலிக்க சபையில், நிறைந்து காணப்படுகின்றன.

கத்தோலிக்க சபையால், புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், மேற்சொன்னவற்றை, தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டு, ஆவிக்குரிய விசுவாசிகளாக வாழ்ந்து, மடிந்து, இன்றும், சமய எல்லைகளைக் கடந்து நின்று, மீட்பின் பணியை, செய்து கொண்டிருக்கிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபைக்குள், இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்து, பல ஆயிரம் 'புனிதர்களை உருவாக்கிய ஆவிக்குரிய வாழ்வை', கத்தோலிக்க சபையில் பெற்று வாழ முடியாமல், எங்கெங்கோ அலைந்து திரியும், கத்தோலிக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும், அதை அளித்து, வழிநடத்தும், தந்தையவர்களின் பணி, CPM சபையில் தொடர்கிறது.

 கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை:

"மீட்பை" மையமாக வைத்து, உருவான கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபை, இன்று, கத்தோலிக்க கோட்பாடுகளை கைக்கொண்டு, ஓர் ஆவிக்குரிய சபையாக வளர்ந்து வருகிறது.

CPM சபை, கத்தோலிக்க திருச்சபையின், நிர்வாகத்தின் கீழ் இல்லை. ஆனால், 1.கத்தோலிக்க விசுவாசம், 2.கத்தோலிக்க வழிபாடுகள், 3.கத்தோலிக்க திருவருட்சாதனங்கள், 4.கத்தோலிக்க திருமறைநூல், 5. கத்தோலிக்க திருமறை விளக்கம், 6.கத்தோலிக்க பாரம்பரியம், ஆகியவற்றை பற்றிக்கொண்டு, அதோடு, விசுவாசிகளுக்கு, "ஆவிக்குரிய அனுபவங்களையும் தந்து, அவர்களை இரட்சிப்பு அபிஷேகப் பாதையில், CPM சபை வழிநடத்துகின்றது.

மேலும், CPM சபை, கத்தோலிக்கர்களுக்கு, ஆவிக்குரிய அனுபவத்தை தருவதோடு, அவர்களும், ஆவிக்குரிய மக்களாக வாழலாம் எனும், நம்பிக்கையை ஊட்டி, அன்றாட வாழ்வில், ஆவிக்குரிய மக்களாக அவர்கள் வாழ, பயிற்சியும் அளிக்கிறது.


 

My status


பெற்றோர்......மாணவர் பருவம் திருவருட்சாதனங்கள்

 கி.மு கி.பி

 பைபிள் விளக்கம்


இளமைப்பருவம்......குருமட மாணவர்கள் - 1973......தூய இதய குருமடம் - சென்னை - 1972 - 1980.....


இறைவெளிப்பாடு பெற்ற இடம் - சென்னை குருமடம் மேல்மாடி - 1977 தாபோர் தியானம்


 சீனாய் மலை தியானம்......குருப்பட்டம் - 1980 மாத ஊழியங்கள்

 ஆண்டு ஊழியங்கள்பங்குத்தந்தை- 1982
......பங்கு பணித்தளம் - 1988
......பங்கு பணித்தளம் - 1989.....இணை ஸ்தாபகர்

திருமிகு.R.மரிய ஆன்றணி – 1953-1995 ஆவிக்குரிய திருமணம்

 சாட்சிகள்
......CMC தலைமை சகோதரி

V.கேதரின் விமலா


.....
......ஜாண்ஸ் மிஷன் மேய்ப்பர்

அருட்சகோதரி.J.மேரி ஆஞ்சலா.


 நல்லவரோடு கடவுள்


 கி.மு கி.பி


 இன்று - சபை


 திருவருட்சாதனங்கள்பீட்டர்ஸ் மிஷன் மேய்ப்பர்

அருட்சகோதரி.S.ஜெயராணிபால்ஸ் மிஷன் மேய்ப்பர்

அருட்சகோதரி.M.அல்போன்ஸா..... மாத ஊழியங்கள்


 வார ஊழியங்கள்


 ஆண்டு ஊழியங்கள்


......My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com