"இயேசுவின் பாடுகளும் நமது மீட்பும்"


1. பாடுகளும் - மனித இயல்பும்:

 • பொதுவாகவே, மனித இயல்பு பாடுகளை ஏற்க விரும்புவதில்லை.
 • அது, மனப்பாடுகளாக இருக்கலாம், அல்லது சரீரப் பாடுகளாக இருக்கலாம்.
 • எந்தப் பாடுகளையும், நமது சுபாவ இயல்பு, மகிழ்வோடு ஏற்காது.

2. பாடுகளும் - பயனும்:

 • ஆனால், பாடுகளால் ஒரு நன்மை உண்டு என்று, மனிதன் உணரும் போது, பாடுகளை ஏற்றுக்கொள்ள, மனிதன் தன்னை பழக்கப்படுத்திக் கொள்கிறான்.
 • பலனைத் தரும் பாடுகள், மனிதனுக்கு விருப்பமானவையே

3. பாடுகளும் - பணியும்:

 • பலனைத் தருகின்ற பணியை, மனிதன் மகிழ்வோடு ஏற்கிறான்.
 • பாடுகள் இல்லாத பணிகள் இல்லை.
 • எனவே, பயன் தரும் பணியில், எந்தப் பாடுகள் இருந்தாலும், அதை ஏற்க மனிதன் தயங்குவதில்லை.
 • அதுபோலவே, அதிக பயன் தரும் பணியில், அதிகப் பாடுகள் இருக்கும்.
 • அப்படியே, அதிகப் பயனுக்காக, அதிகப் பாடுகளை ஏற்கவும் மனிதன் விரும்புவான்.

4. அன்றாடப் பணிகளும் - பாடுகளும்:

 • அதிகாலை எழும்புவதிலிருந்து, இரவில் தூங்கச் செல்வது வரையிலும், மனிதன் எத்தனையோ பாடுகளை, விரும்பி சந்திக்கிறான்.
 • குடும்பக் கடமைகள், சமுதாயக் கடமைகள், தனிப்பட்ட கடமைகள் என, எல்லா கடமைகளுக்குள்ளும், பாடுகள் உள்ளன.
 • அந்தப் பாடுகள், தமக்கு நேரடியாக பயன் தராவிட்டாலும், தன் குடும்பத்துக்கோ, தம் அன்பர்களுக்கோ, அது நிச்சயம் பயனைத் தரும்.
 • சரீர வருத்தங்கள், மனக் கஷ்டங்கள் என எதையும், பயன் தரும் வேளையில், மனிதன் பாடாகக் காண்பதில்லை.
 • இரவில் கண்விழிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், உண்ணாமலிருப்பது, ஓய்வை இழப்பது, விரும்புவதை துறப்பது என, எந்த காரியமும், தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ பயன் தருவதாயின் மனிதன் மகிழ்வோடு ஏற்பான்.

5. உடல் - உலக வாழ்வில் பாடுகள்:

 • மேற்சொன்னவை அனைத்துமே, உடல் - உலக வாழ்வை சார்ந்தது.
 • ஆக, உடல் உலக வாழ்வில், பாடுகள் பயன் தருவதாக இருந்தால், மனிதன் அதனை ஆவலோடு ஏற்றுக்கொள்கிறான்.

6. ஆத்மீக வாழ்வும் - பாடுகளும்:

 • மனிதனுக்கு உடல், உலக வாழ்வைப் போலவே, ஆத்மீக வாழ்வும் உண்டு.
 • அந்த ஆத்மீக வாழ்விலும், நிறைந்த “பயன்கள்” உள்ளன.
 • பாவ – சாபக் கட்டுகளினின்று மீட்பு,
 • நித்திய சமாதானமும், வாழ்வும்,
 • நற்குணங்கள், ஆத்மீக பெலன், கடவுளின் இரக்கம் போன்றவை.
 • மேற்சொன்ன அனைத்தும், “ஆத்மீகப் பயன்கள்”.
 • இந்த ஆத்மீக பயன்களை அடையவும், பாடுகள் பயன்படும்.
 • இந்தப் பின்னணியில் தான், இயேசு, மனித குல மீட்புக்காக, பாடுகளை மகிழ்வோடு ஏற்றார்.
 • நாமும், நம் சொந்த மீட்புக்காக, பாடுகளை மகிழ்வோடு ஏற்க வேண்டும் என்று, கற்றுத் தந்தார்.

இயேசுவின் மீட்புப் பணி என்பது – பாடுகளின் பணி:

 • இயேசு என்ற பெயருக்கு, மீட்பர் என்று பொருள் - மத் 1:21.
 • இயேசு இந்த உலகிற்கு வந்தது, பாவிகளை மீட்க – 1திமொ 1:15.
 • அந்த மீட்பின் பணியை, இயேசு எவ்வாறு செய்தார் என்று பார்ப்போம் .
 • “இயேசு பலருடைய மீட்புக்கு விலையாக, தம் “உயிரை அளிக்க வந்தார்” – மத் 20:28.
 • அப்படியென்றால், இயேசு தம் பாடுகளாலும் மரணத்தினாலும், உலகை “மீட்டார்” என்று அறிகிறோம்.

பரிசுத்த வாரமும் - நமது மீட்பும்:

 • இயேசு இரட்சகரின் வாழ்வின், கடைசி ஒரு வாரம் என்பது தான், “பரிசுத்த வாரம்”.
 • அந்த வாரம், 1. குருத்து ஞாயிறு, 2. புனித வியாழன், 3. புனித வெள்ளி, 4. இயேசுவின் உயிர்ப்பு என, நான்கு பரிசுத்த நாட்களைக் கொண்டது.
 • இந்த நான்கு நாட்களும், இயேசுவுடைய “மீட்பின் பணி” நிறைவேறிய நாட்கள் ஆகும்.
 • மேலும், இந்த நான்கு நாட்களும், இயேசு “உலகை மீட்க” அனுபவித்த “பாடுகளையும், மரணத்தையும்” வெளிப்படையாகக் காட்டுகின்றன.
 • எனவே, இயேசுவுடைய “மீட்பின் பணிகளை” தியானிக்கும் போது, அவருடைய “பாடுகளின் பணிகளை” தியானிக்காமலிருக்க முடியாது.
 • “மீட்பும் - பாடுகளும்” ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே, இயேசுவின் வாழ்வில் நாம் காண முடிகிறது.
 • குருத்து ஞாயிறு தொடங்கி, புனித வெள்ளி முடிய, இயேசுவின் “மீட்புக்கான பாடுகளும், மரணமும்” எவ்வாறு நடைபெறுகிறது என்றும், இதில் நம்முடைய பங்கேற்பும், பயன்பாடும் என்ன என்றும், தொடர்ந்து வருகின்ற பகுதிகளில் காணலாம்.

 


"குருத்து ஞாயிறு"


“நாமும் போவோம், அவரோடு சாவோம்” யோவா 11:16.


குருத்து ஞாயிறின் முன் நிகழ்வுகள்:


1. இயேசுவை எறிய கல் எடுத்தனர்:

 • “குருத்து ஞாயிறு” என்பது, இயேசு எருசலேமுக்கு இறுதியாக பயணமான போது நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.
 • இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் நடந்த, சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
 • இயேசுவின் இறுதி எருசலேம் பயணம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன், அவர், எருசலேமில் சாலமோன் மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார் - யோவா 10: 22-24.
 • இந்த உரையின் போது, இயேசு “நானும் தந்தையும் ஒன்றே” என்று கூறினார் - யோவா 10:30.
 • இதைக் கேட்ட யூதர்கள், இயேசுவைக் கொல்ல, கல் எடுத்தார்கள் - யோவா 10:31.

2. லாசர் நோயுற்றிருந்த செய்தி:

 • மோற்சொன்ன நிகழ்ச்சிக்குப்பின் இயேசு அங்கிருந்து புறப்பட்டு, யோர்தானுக்கு அப்பாலுள்ள ஓர் இடத்தில் சென்று தங்கினார். – யோவா 10:40
 • அப்போது, லாசரு நோயுற்றிருப்பதாக, அவர் சகோதரிகள், ஆளனுப்பி இயேசுவிடம் கூறினர் - யோவா 11:3.
 • இயேசு உடனடியாக லாசருவின் வீட்டிற்கு செல்லாவிட்டாலும், இரண்டு நாட்கள் கழித்து, பெத்தானியாவுக்குச் செல்ல இயேசு தீர்மானித்தார் - யோவா 11:6,7.

3. சீடர்கள் தடை செய்தார்கள்:

 • ஆனால், அது சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.
 • காரணம் அது, ஆபத்தான பயணம் என்று அவர்கள் எண்ணினர்.
 • “இப்போது தானே, எருசலேமில் உம்மைக் கல்லெறிய யூதர்கள் எண்ணினர், இன்னும் அங்கு போக வேண்டுமா” என்று கேட்டு, சீடர்கள் இயேசுவை தடுக்கப்பார்த்தனர் - யோவா 11:8.
 • ஆனால், இயேசு, தாம் எருசலேம் போவது பற்றி உறுதியாயிருந்தார் - யோவா 11:9-15.

4. நாமும் போவோம், அவரோடு சாவோம்:

 • இயேசுவின் பயணம், “சாவை உண்டாக்கும்” ஆபத்தைக் கொண்டது என்பதை, சீடர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
 • மொத்த சூழ்நிலையையும் ஊன்றி கவனித்த, திதிமு என்ற தோமா, “எப்படியும், சாவு என்பது நிச்சயம் தான், இயேசுவும் அதை நோக்கியே செல்ல, கண்டிப்பாயிருக்கிறார்” என்பதை உணர்ந்தார்.
 • எனவே அவர், ஒரே வார்த்தையில், பிரச்சனையை முடித்தார், “நாமும் போவோம், அவரோடு சாவோம்” – யோவா 11:16.

5. சீடரிடமிருந்த “சாவின் கலக்கம்”:

 • இவ்வாறு, முதல் குருத்துப் பவனியைப் பொறுத்த வரையில், சீடரின் இதயத்தில் இருந்ததெல்லாம், சாவின் கலக்கமாகவே இருந்தது.
 • மக்கள், ஓசான்னா பாடி, மகிழ்ந்து ஆர்ப்பரித்தாலும், சீடர்கள் மற்றொரு உணர்வோடேயே இருந்தனர்.

6. “இயேசுவோடு சாவு” என்பதன் பொருள்:

 • இங்கே “சாவு” என்பது இரண்டு கருத்துக்களில் சொல்லப்படுகின்றன.
 • முதலாவது, “பாவத்துக்கு சாவு”, இரண்டாவது, “சரீரச் சாவு”.
 • சரீர சாவு என்பது, துன்பங்களையும் வேதனைகளையும் ஏற்பது.
 • பாவத்துக்குச் சாவு என்பது, பாவத்தை நமக்குள்ளிருந்து எடுத்துவிடுவது.
 • அதாவது, நம்மிடம் பாவம் இல்லாதபடி செய்வது.

7. “பாவமும் - சாவும்”:

 • “பாவம்” என்பது, கடவுளுடைய விருப்பத்துக்கு மாறாக நடப்பது. கடவுள் விரும்புவதை செய்யாமலிருப்பது – 1யோவா 3:4.
 • இந்த பாவத்தின் விளைவு, “சாவு” – உரோ 6:23, தொ.நூ 2:16,17.
 • இந்த “சாவு” துன்பத்தைக் குறிக்கிறது – தொ.நூ 3:14-19.
 • மேலும், “பாவம்” நம்மில் சாகும் போது, அதன் விளைவான “துன்பமும்” நம்மில் சாகிறது.
 • இப்போது, “பாவம்” நம்மில் “சாக” என்ன செய்ய வேண்டும் என்றும், “துன்பம்” நம்மில் “சாக” என்ன செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம்.

 


"பாவத்துக்குச் சாவு"


பாவம் நம்மில் சாக, என்ன செய்ய வேண்டும்?


கடவுள் விருப்பமும் - சுய விருப்பமும்:

 • “பாவம்” என்பது, கடவுள் விரும்புவதை செய்யாமலிருப்பதும், கடவுள் விரும்பாததை செய்வதும் - 1யோவா 3:4, என்று பார்த்தோம்.
 • மேலும், “கடவுளுடைய விருப்பத்துக்கு” மாறான விருப்பங்கள், நமக்குள் இருக்கும் “சரீர, உலக, பிசாசின் விருப்பங்கள்” ஆகும்.
 • நம்முடைய “சுயவிருப்பம்” கடவுளுடைய விருப்பத்தைப் புறக்கணித்து, உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களை ஏற்கும் போது, “நம்மில் பாவம் உருவாகிறது.”
 • நம்முடைய பாவத்துக்கு காரணமான, உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களை நம்முடைய “சுயம் விருப்பம்” புறக்கணித்து, கடவுளுடைய விருப்பத்தை ஏற்கும் போது, “நமக்குள் பாவம் சாகடிக்கப்படுகிறது.”

A. நம்முடைய சுய விருப்பம், “உலக விருப்பங்களை” சாகடிக்க வேண்டும்:

வேத உபதேசம்:

 • இந்த உலகம், பாவ உலகம் - 2பேது 2:5, உரோ 5:12,13.
 • இது, தீயவனின் பிடியில் உள்ள உலகம் - 1யோவா 5:19.
 • இது, நெறிகெட்ட உலகம் - யாக் 3:6.
 • இது, குற்றம் நிறைந்த உலகம் - 2கொரி 5:19.
 • எனவே, உலகப் போக்கை பின்பற்றாதீர்கள் - 1திமொ 1:9.
 • இவ்வுலக வாழ்வை, ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள் - யோவா 12:25.
 • உலகத்தின் போக்கின்படி, தீர்ப்பிடாதீர்கள் - யோவா 8:15.
 • உலகப் போக்கின்படி, ஒழுகாதீர்கள் - உரோ 12:2.
 • உலகப் போக்கின்படி, வாழாதீர்கள் - எபே 2:2.
 • உலகப் போக்கிலான, விதிமுறைகளுக்கு உட்படாதீர்கள் - கொலோ 2:20.
 • உலகின் மீதும், அதன் எதன் மீதும், அன்பு செலுத்தாதீர்கள் - 1யோவா 2:15, யாக் 4:4.

B. நம்முடைய சுய விருப்பம், “பிசாசின் விருப்பங்களை” சாகடிக்க வேண்டும்:

வேத உபதேசம்:

 • அலகை, நமக்குள் பொறாமையைத் தூண்டுபவன் - 1சாமு 18:8,9.
 • அலகை நம் எண்ணங்களை சீரழிப்பவன் - 2கொரி 11:3.
 • அலகை நம் அறிவுக்கண்ணை குருடாக்குபவன் - 2கொரி 4:4.
 • அலகை நமக்குள் பாவ எண்ணங்களைத் தூண்டுபவன் - யோவா 13:2.
 • அலகை நமக்குள், பொறாமை, கட்சிமனப்பான்மை, குழப்பம், கொடும் செயல், செய்யத் தூண்டுபவன் - யாக் 3:16.
 • அலகை நம்மைத் தம் மாய வலையில் சிக்க வைத்து, தன் விருப்பங்களுக்கு அடிமைப்படுத்துவான் - 2திமொ 2:26.
 • எனவே, அலகையைப் பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - 1பேது 5:8, லூக் 8:12.
 • அலகையை எதிர்த்து நிற்க வேண்டும் - யாக் 4:7.
 • அலகையின் செயல்களை முறியடிக்க, இயேசு வந்தார் - 1யோவா 3:8.

C. நம்முடைய சுய விருப்பம், “உடலின் விருப்பங்களை” சாகடிக்க வேண்டும்:

வேத உபதேசம்:

 • உடலின் விருப்பங்கள் எட்டு.
 • இந்த எட்டு விருப்பங்களுக்கும், நாம் அடிமையாகாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • உடல், பசியில் “உணவை” விரும்பும் - தொ.நூ 25:30-33.
  • உடல், நோயில் “மருந்தை” விரும்பும் - சீரா 38:9,12.
  • உடல், களைப்பில் “உறக்கம்” விரும்பும் - மாற் 14:40.
  • உடல், பருவத்தில் “இணையை” விரும்பும் - தொ.நூ 24:67.
  • உடல், இணையில் “சந்ததியை” விரும்பும் - தொ.நூ 15:3.
  • உடல், தங்கி வாழ, “வீட்டை” விரும்பும் - 2அர 4:10.
  • உடல், நாளைக்கு என்று, “சேமிக்க” விரும்பும் - தொ.நூ 41:35.
  • உடல், ஆபத்தில் “பாதுகாப்பு” விரும்பும் - 1சாமு 17:4-7.

 • மேற்சொன்ன எட்டு “விருப்பங்களும்” உடலுக்கு “தேவை” தான்.
 • ஆனால், எப்போது தேவை? எந்த அளவுக்குத் தேவை?, என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
 • மனதின் “ஆசை”களுக்கும், சரீரத்தின் “தேவை”களுக்கும் வேறுபாடு உண்டு.
 • நம்முடைய “ஆசைகள்” எல்லாம், நம்முடைய “தேவைகள்” அல்ல.
 • நம் தேவைகளை, கடவுள் மட்டுமே அறிவார் - மத் 6:8,32.
 • நாமோ, பலமுறை, ஆசைகள் எவை, தேவைகள் எவை என, அறியாமல், குழம்பிவிடுகிறோம்.
 • இதனால், உடலின் விருப்பங்கள் எல்லாம் நம் “தேவையே” என்ற ஒரு “மாயையில்” வீழ்ந்துவிடுகிறோம்.
 • எனவே, உடலின் விருப்பங்களுக்கு அடிமையாகாமல், அவற்றை “நம் கட்டுப்பாட்டுக்குள்” வைத்துப் பழக வேண்டும்.
 • ஏனெனில், உடலின் விருப்பங்கள், “எல்லாமே”, “எல்லா வேளைகளிலும்”, கடவுளின் விருப்பமாக இருக்கும் என்று, கூறிவிட முடியாது.
 • உடலின் விருப்பங்களுக்கு அடிமையாகாது, அவற்றை நம் கட்டுப்பாட்டுக்குள், வைத்திருந்தால், “கடவுளின் விருப்பம்” நமக்குள் செயலாற்ற அது வழி வகுக்கும்.

இவ்வாறு பாவம் நமக்குள் சாகிறது:

 • நம் சுயவிருப்பத்தை அடிமையாக்கும், உலக, சரீர, பிசாசின் விருப்பங்களை, சாகடிப்பது எவ்வாறு எனக் கண்டோம்.
 • நம் சுயவிருப்பத்தில் உலக, சரீர, பிசாசின் விருப்பங்கள் சாகடிக்கப்பட்டு, இறை விருப்பங்கள் வாழும் போது, நாம், “பாவத்துக்கு சாகிறோம்”.
 • இதையே, திருமுழுக்கு யோவான், “அவரது செல்வாக்கு பெருக வேண்டும், எனது செல்வாக்கு குறைய வேண்டும்” என்றார் - யோவா 3:30.
 • இதேயே பவுல், “இனி வாழ்வது “நானல்ல”, “கிறிஸ்து” என்னில் வாழ்கின்றார்” என்றார் - கலா 2:20.

 


"சரீரச் சாவு"


துன்பங்கள் அதாவது வேதனைகளை மகிழ்வோடு ஏற்பது “சரீரச் சாவு”:


“இயேசுவுடைய மீட்புப் பணியின் இரண்டு அம்சங்கள்"


1.“பாவம் போக்கும் மீட்பு”

 • இயேசு முதலில் தன்னை பாவமில்லாதவராக மாற்றினார்.
 • இயேசு தன் “சுயவிருப்பங்களை” “பிதாவின் விருப்பங்களுக்கு” ஒப்புவித்தார் - யோவா 8:29, 46, 7:16, 6:38, 5:30, 4:34, மத் 26:39,42,44.
 • இயேசு தன் “சுயத்துக்குள்” பிதாவின் விருப்பங்களை வைத்துக் கொண்டார்.
 • உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களை மேற்கொண்டார்.
 • அதை ஒரு அடையாளமாக, பாலைவன நோன்பின் போது காட்டினார்.

  • உலக மேன்மையை மேற்கொண்டார் - மத் 4:8-10.
  • பிசாசின் தந்திரத்தை மேற்கொண்டார் - மத் 4:6,7.
  • மாமிச இச்சையை மேற்கொண்டார் - மத் 4:2-4.

 • அவ்வண்ணமே இயேசு, தன் “மீட்பின் செய்தியில்”, தம் மக்களுக்கும், பாவத்தை சாகடிக்க கற்றுத்தந்தார்.
 • உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களை “சாகடித்து”, நம்மில் கடவுளின் விருப்பங்களை நிறைவேற்ற, என்ன செய்ய வேண்டுமென்ற படிப்பினையை தம், “மீட்பின் செய்திகளில்” வெளிப்படுத்தினார்.
 • இதை நாம், முதல் பகுதியில் பார்த்தோம்.

2.“பாவத்தின் விளைவான “துன்பத்தை – சாவை – போக்கும் மீட்பு”: 1பேதுரு 2:21

 • பாவத்தின் விளைவான துன்பத்தை, நாம் எப்படி சாகடிக்க வேண்டும் என்பதை இயேசு, தம் வாழ்வில் வெளிப்படுத்தினார்.
 • துன்பத்தை “ஏற்றுக்கொள்வதே”, துன்பத்தை போக்கும் ஒரே வழி.
 • இதுவே, இயேசு கண்ட வழி, இயேசு காட்டிய வழி. 1பேதுரு 2:21
 • துன்பத்தை ஏற்றுக்கொள்பவனைக் கண்டு, துன்பம் ஓடும்.
 • ஆனால், துன்பத்தைக் கண்டு பயந்தவனை, அவனது “சாவு வரை” அவனை துன்பம் துரத்தும்.

பாவமும் - தண்டனையும்:

 • எல்லா பாவத்துக்குமே, தண்டனை உண்டு.
 • அந்தத் தண்டனையே “துன்பம்” – தொ.நூ 3:14-19.
 • மனிதகுலம் செய்த, பாவத்துக்குரிய தண்டனையை, மனிதன் அடைந்து முடியும் வரை, அவன் “அலகையின் ஆட்சியில்” தான் இருக்கிறான்.
 • அலகையின் “ஆட்சியில்” இருக்கும் மனிதனை, “தண்டனையிலிருந்து மீட்கவும்” இயேசு இவ்வுலகுக்கு வந்தார்.

இயேசுவும் - பாவத் தண்டனையும்:

 • எசா 53 –ன் படி, இயேசு, மனிதன் செய்த “பாவத்தின் தண்டனையை: தாமே ஏற்றுக்கொண்டார்.
 • நம் பாவங்களையும், பாடுகளையும், அவர் சுமந்து தீர்த்தார். எசா 53:5,8,11,12.
 • இவ்வாறு, அலகையின் கையிலிருந்து, மனுக்குலத்தை இயேசு மீட்டார். – மத் 20:28.
 • இவ்வாறு, பாடுகளை ஏற்றுக்கொள்வதால், பாடுகள் நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பதை, நமக்கு கற்றுத் தந்தார்.

பாடுகளும், இயேசுவின் மனநிலையும்:

 • பாடுகளின் போது, இயேசுவிடமிருந்த மனநிலை, “மனித குல மீட்பாக” இருந்தது.
 • அவ்வண்ணமே, நாமும் பாடுகள் வரும் போது, இயேசுவிடமிருந்த மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் -பிலி 2:5-11.
 • நமது பாடுகளின் போது, நமக்காக பாடுபட்ட இயேசுவை, நம் சிந்தையில் இருத்த வேண்டும் - எபி 12:2-13.
 • இயேசு நம் பாவங்களுக்குப் “பரிகாரமாக” தம் பாடுகளை ஏற்றார். 1யோவா 2:2.
 • நாமும், நம் பாவங்களுக்குப் பரிகாரமாக, நம் பாடுகளை ஏற்க வேண்டும். உரோ 8:17.

நாம் பாடுகளை ஏற்பதைப் பற்றிய வேத உபதேசம்:

 • நன்மை செய்தும் அதற்காக பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும் - 1 பேதுரு 2 : 20.
 • நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்கு தீமை செய்ய போகிறவர் யார் - 1 பேதுரு 3 : 13
 • நீதியின் பொருட்டு துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறுபெற்றவர்களே – 1 பேதுரு 3 : 14.
 • அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அலகையை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 1 பேதுரு 5 : 9.
 • தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்கு திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல் - 1 பேதுரு 3 : 17.
 • உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்க கூடாது – 1 பேதுரு 4 : 15.
 • நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கபடலாகாது. அந்த பெயரின் பொருட்டு கடவுளை போற்றி புகழுங்கள் - 1 பேதுரு 4 : 16.
 • கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக - 1பேதுரு 4 : 19.
 • கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று, ஒரு முனமாதிரியை வைத்து சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள் - 1பேதுரு 2 : 21.
 • கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாக பூண்டு கொள்ளுங்கள் - 1பேதுரு 4 : 1.
 • ஒருவர் அநியாயமாக துயருறும் போது, கடவுளை மனதில் கொண்டு, அதை பொறுமையோடு ஏற்று கொள்வாராயின், அதுவே கடவுளுக்கு உகந்தது ஆகும் - 1பேதுரு 2 : 19.
 • துன்ப தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்று எண்ணி மகிழுங்கள். – 1பேதுரு 4 : 12.

முதல் குருத்தோலை பவனியின் படிப்பினை

 • இயேசுவோடு சாகப் போகிறவர்கள், அவரோடு வாழ்வைக் கண்டடைவர்.
 • பரிசுத்த வாரத்தின் முதல் சிறப்பு நிகழ்ச்சி, “குருத்து ஞாயிறோடு” ஆரம்பமாகிறது.
 • முதல் பரிசுத்த வாரத்தை, இதே நாளில் தொடங்கிய இயேசுவின் சீடர்கள், “இயேசுவோடு சாகப்போகும்” மன உணர்வோடு அதைத் தொடங்கினர்.
 • நாமும், பரிசுத்த வாரத்துக்குள் நுழையும் போது, இந்த வசனத்தை நினைவில் இருத்துவோம்.
 • “இயேசுவோடு இறந்தால், இயேசுவோடு வாழ்வோம்” – உரோ 6:8.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

“நாமும் போவோம், அவரோடு சாவோம்” என்று, இயேசுவின் பின்னால் சென்ற தோமையாரையும், மற்ற சீடர்களையும் போல, நாமும் இந்த குருத்தோலை தினத்தில், இயேசுவின் பின்னால் சென்று, பாடுகளை சந்திக்க ஆயத்தமாவோம். அதற்காக, நம்மில் சாக வேண்டியவற்றை ஆராய்ந்து பார்த்து, குருத்தோலை தினத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

 


"பெரிய வியாழன்" - 1 (திருவிருந்து)


A.பாடுகளுக்கு முன் இயேசுவின் ஆயத்தம்:


1. “மீட்புக்காக சாகப்போகிறேன்” என்ற தீர்மானத்தில் உறுதி கொண்டார் :

 • இறுதியாக இயேசு எருசலேமிற்கு மேற்கொண்ட பயணம், ஒரு கடினமான, பாடுபடும் பயணம் என்பது, அவருக்கு தெரிந்ததே.
 • இயேசுவின் இந்த தீர்மானம், “உலகிற்கு” புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
 • சீடர்கள் எச்சரித்தும் தன் தீர்மானப்படியே, இயேசு போகிறார். – யோவா 11:7-16.

2. மீட்புக்கான ஏக்கம் கொண்டார்:

 • எந்த பாடுபட்டாகிலும், இந்த உலகை மீட்கும் பணியைச் செய்து முடிக்க வேண்டும் என்று, இயேசு ஏக்கம் கொண்டார்.
 • “மீட்பை” கண்முன் வைத்த போது, “பாடுகள்” அவருக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை.
 • “என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரும் அழிவுறாதவாறு, என்னையே உமக்கு அர்ச்சனையாக்குகிறேன்” – என்று கூறியதன் மூலம் அவரது தீர்மான உறுதி வெளிப்படுகிறது. யோவா 17:12,19.

3. தந்தையோடு நெருங்கிய உறவு கொண்டார் :

 • “தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே, என் உணவு” என்றார். – யோவா 4:34.
 • “என்னைக் கண்டவன் தந்தையைக் கண்டான் என்றார்” - யோவா 14:9.
 • “என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுபவர் தந்தையே” என்றார் – யோவா 14:10.
 • “நான் தந்தையினுள் இருக்கிறேன்” என்றார் - யோவா 14:11.

4. தன் சீடரோடு ஆழ்ந்த அக்கறை கொண்டார்:

 • “நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்றார்.– யோவா 14:18
 • “உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம், என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்று கூறி தேற்றினார் - யோவா 14:1.
 • அவர்களுக்காக ஓர் இடம் ஏற்பாடு செய்யப் போவதாக கூறினார் - யோவா 14:2,3.
 • “உலகம் தராத சமாதானம், உங்களுக்குத் தருவேன், என்று சீடருக்கு கூறினார் - யோவா 14:27.

5. துன்புறுவதர்க்கு முன் “சகோதர விருந்து” வைத்தார் :

 • “என் நேரம் அருகிலுள்ளது. என் சீடரோடு உன் வீட்டில் பாஸ்கா கொண்டாடுவேன்” என்றார் - மத் 26:18.
 • துன்பங்கள் படும் முன், தம் சீடரோடு விருந்துண்ண ஆவலாயிருப்பதாகக் கூறினார் - லூக் 22:15.
 • இறுதி உணவுக்கு, இயேசுவே எல்லா ஏற்பாடும் செய்தார் - லூக் 22:10-12.

6. சீடர்களிடம் தனி அன்பு காட்டினார் :

மத் 26 : 26-29 வரை உள்ள வசனங்களில்

 • சீடருக்குத் தன் உடலை உண்ணத் தருகிறார் - மத் 26:26.
 • சீடருக்குத் தன் இரத்தத்தைக் குடிக்கத் தருகிறார்- மத் 26:27.
 • இதன் மூலமாக அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறார் - மத் 26:28.
 • இவ்வாறு, இறந்த பின்பும், இயேசு தம் சீடரோடு வாழ விரும்புகிறார்.

7.காட்டி கொடுக்கும் சீடரான யூதாசிடம் நடந்து கொண்ட விதம் : - யோவா 13:21-30

 • தன் விருந்தில் அவனுக்கும் கூட பங்கு தந்தார் - யோவா 13:18.
 • காட்டிக் கொடுப்பதை பொதுவாக முன்னுரைக்கிறார் - யோவா 13:21.
 • அதனை சூசகமாக சுட்டிக் காட்டுகிறார் - யோவா 13:26.
 • கடினமாக எச்சரிக்கிறார் - லூக் 22:22, மாற் 14:21.
 • கடைசியாக, நேரடியாக கூறுகிறார் - யோவா 13:27.

 


"பெரிய வியாழன்" - 2 (திருவிருந்து)


B. பாடுகளுக்கு, இயேசு தம் சீடர்களை ஆயத்தம் செய்தல்


1. சீடருக்கு துன்பத்தை முன்னறிவிக்கிறார் :

 • “இயேசு தம் சீடரை நோக்கி, இரண்டு நாள் கழித்து பாஸ்கா விழா என்று உங்களுக்குத் தெரியும். அப்போது, மனுமகன் சிலுவையில் அறையப்பட கையளிக்கப்படுவார்” என்று சொன்னார். மத் 26:2.
 • என் நேரம் அருகில் உள்ளது என்றார் - மத் 26:18.
 • இந்த நாளுக்காக, ஆவலாயிருந்தேன் என்றார் - லூக் 22:15.

2. சீடருக்கு தாழ்ச்சியின் பயிற்சி அளித்தார் :

 • “தாழ்ச்சி” இல்லாத ஒருவர், பாடுகளை ஏற்க முடியாது.
 • எனவே, தான் பாடுபடும் முன், தன் சீடர்கள், தாழ்ச்சியைக் கற்றுக்கொள்ள, இயேசு விரும்பினார்.
 • தாம் தாழ்ச்சியுள்ளவர் - மத் 11:28,29 – எனவே, எந்தப் பாட்டையும், ஏற்கும் வலிமை, தமக்கு உண்டு என்று காட்டினார்.
 • இயேசு, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார்.
 • இயேசு தன் சீடருக்கு தாழ்ச்சிக்கு முன்மாதிரி காட்டினார்.
 • பின் தன் சீடர்களிடம், “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேனென்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்” என்றார் - யோவா 13:3-17.

3. பாடுகளுக்கான எச்சரிக்கை கொடுக்கிறார் :

 • எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள் என்றார் - மாற் 14:27.
 • மந்தைகள் போல், சீடர் சிதறடிக்கப்படுவர் என்றார் - மத் 26:31.
 • பேதுருவை, சாத்தான் புடமிடுவான் என்றார் - லூக் 22:31.
 • பேதுருவின் அறியாமையில், அவரிடம் பொறுமையாக எச்சரிக்கிறார். (மத் 26:30-35).

4. துன்பத்தில் ஜெபிக்க, சீடருக்கு கற்றுக்கொடுத்தார்:

 • தன் சீடர்களுக்கு முன் மாதிரியாக, இயேசு தன் துன்பத்தில் ஜெபித்தார் - மத் 26:36-39.
 • சீடர்கள் ஜெபிக்கும்படி உபதேசித்தார் - மத் 26:40-41.
 • “சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபியுங்கள்” என்றார் - லூக் 22:41.

இவை எல்லாம், புனித வெள்ளிக்கான ஆயத்தம்:

 • இவ்வாறு, இயேசு புனித வெள்ளிக்காக, தான் மட்டும் ஆயத்தப்பட்டதல்லாமல், தன் சீடர்களையும், ஆயத்தப்படுத்தினார்.
 • புனித வியாழனின் “திருவிருந்து”, புனித வெள்ளியின் “பலிவிருந்தில்” முடிந்தது.

 


"புனித வெள்ளி" ( பலி விருந்து)


A. பாடுகளின் பாதையில் இயேசு


1. இயேசு கெத்சமெனியில் பிடிபட்ட போது - (மத் 26 : 47-56) :

 • கொலைஞர் கூட்டத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறார் -யோவா 18:4,5.
 • முத்தமிட்ட துரோகியை, “நண்பா” என்று அழைத்து, அவன் செய்வதை உணர்த்துகிறார் - மத் 26:50.
 • இயேசு, சீடர்களால் கைவிடப்பட்டார் - மத் 26:56.

2. இயேசு தலைமைச் சங்கத்தின் முன் நின்ற போது - (மாற் 14:65):

 • முகத்தில் துப்பப்பட்டார் - மத் 26:67.
 • படை வீரர்களால் அடிக்கப்பட்டார் - லூக் 22:63.
 • கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டார் - யோவா 18:22.
 • கைது செய்யப்பட்டு, இழுத்து செல்லப்பட்டார் - லூக் 22:54,66.

3. இயேசு பிலாத்துவின் முன் நின்ற போது - (மத் 27 : 11-31):

 • பாவியான பரபாசோடு சமமாக்கப்பட்டார் - மத் 27:15-21.
 • மூன்று முறை, இயேசு குற்றம் செய்யவில்லை என்று பிலாத்துவால் சொல்லப்பட்டார் - யோவா 18:38, 19:4,6.
 • ஆனாலும், சாட்டையால் அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையும்படி கையளிக்கப்பட்டார் - மத் 27 : 31, யோவா 19:16.

4. இயேசுவின் சிலுவைப் பாதையில்:

 • முள்முடி சூட்டப்பட்டார் - மத் 27:29.
 • பிரம்பால் அடிக்கப்பட்டார் -மத் 27:30.
 • குற்றவாளிகளுக்கு நடுவில் இருந்தார் - மத் 27:38.
 • இறுதியாக சிலுவையில் அறையப்பட்டார். (மத் 27 : 35).

5. இயேசு சிலுவையில் தொங்கிய போது:

 • வழிப்போக்கரால் பழித்துரைக்கப்பட்டார் - மத் 27:39-43.
 • உடன் குற்றவாளிகளால் வசை கூறப்பட்டார் - மத் 27:44.
 • பிதாவோடு முறையிட்டு ஜெபித்தார் -மத் 27:46.
 • சிலுவையில் ஏழு வார்த்தைகளைச் சொல்லி ஜெபித்தார்.

  • பிதாவே இவர்களை மன்னியும் (லூக் 23:34)
  • இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பாய். (லூக் 23:43)
  • அம்மா, இதோ உம் மகன் (யோவா 19:26,27)
  • ஏன் என்னை கைவிட்டீர் (மத் 27:46)
  • தாகமாயிருக்கிறேன் (யோவா 19:28)
  • எல்லாம் முடிந்தது (யோவா 19:30)
  • உம் கரத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46)

 • இவ்வார்த்தைகளைச் சொல்லி, பிதாவை அழைத்தே உயிர் துறந்தார் - லூக் 23:46

 


"புனித வெள்ளி" ( பலி விருந்து)


B. சிலுவைப்பாடுகளின் போது - இயேசுவின் மனநிலை

 • “மீட்பின்” பாரம்.
 • ஆவியின் கனிகள்.

1. மீட்பின் பாரம்


1. இயேசு துன்புறும் முன் அவரது “மீட்பின்” பாரம் :

 • இயேசு, தன் உடலையும் இரத்தத்தையும், மக்களுக்கு உணவாகக் கொடுத்தார்- மத் 26:26-28.
 • காட்டிக் கொடுக்கப் போகும் ய+தாஸ் திருந்த, கடைசி வாய்ப்பும் கொடுத்தார் - யோவா 13:21-30.
 • சீடரின் பாதம் கழுவி, தாழ்ச்சியின் பயிற்சி அளித்தார் - யோவா 13:3-17.
 • தன் சீடர்களுக்காக ஜெபித்தார் “நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் ஒருவரையாகிலும் நான் இழந்து போகாதபடி என்னை உமக்கு அர்ச்சனையாக்குகிறேன்” (யோவா 17 :12,19).

2. கெத்சமெனியில் இயேசுவுடைய “மீட்பின்” பாரம் :

 • சோதனையை ஜெயம் கொள்ள, விழித்திருந்து “ஜெபியுங்கள்” என்று சொல்லி, தன் சீடருக்கு உபதேசித்தார் - மத் 26:40-41.
 • தன்னை பிடிக்க வந்தவர்களிடம், “நீங்கள் என்னைத் தேடி வந்தால் இவர்களை விட்டுவிடுங்கள்” என்று, தன் சீடர்கள் மட்டில், அக்கரை காட்டினார். - யோவா 18:8.

3. சிலுவையின் பாதையில் இயேசுவிடமிருந்த “மீட்பின்” பாரம் :

 • தன்னைப் பின்தொடர்ந்து, அழுதுகொண்டிருந்த பெண்களிடம், “அழாதீர்கள்” என்று சொல்லி ஆறுதலளித்தார் - லூக் 23:27-31.
 • அவர்கள் பாவத்தில் விழுந்து போகாமல் எச்சரித்தார் - லூக் 23:31.
 • “உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்றார் (லூக் 23:28)

4. இயேசு சிலுவையில் தொங்கிய போது – “மீட்பின்” பாரம் :

 • தன் அன்புச் சீடரிடம், தன் தாயை ஒப்படைத்தார். (யோவா 19:26).
 • தன்னை கைது செய்பவர்களை “பிதாவே, இவர்களை மன்னியும்” என்று வேண்டினார் - லூக் 23:34.
 • நல்ல கள்ளனுக்கு பரகதி அளித்தார் - லூக் 23:43.

 


"புனித வெள்ளி" ( பலி விருந்து)


B. சிலுவைப்பாடுகளின் போது - இயேசுவின் மனநிலை


2. ஆவியின் கனிகள் :


1. அன்பு காட்டினார்:

 • காட்டிக் கொடுப்பவன் முத்தமிட்ட போது – மத் 26:49-50.
 • முள்முடி தலையில் சூட்டியபோது – மத் 27:29.
 • முகத்தில் காறித் துப்பிய போது – மத் 27:30.
 • பிரம்பை வைத்து தலையில் அடித்த போது - மத் 27:30.
 • எள்ளி நகையாடிய போது - மத் 27:31.

2. மகிழ்ச்சியோடு ஏற்றார் :

 • கெத்சமெனியில் சீடர்களின் அக்கரையின்மையை – மத் 26:43.
 • பேதுரு எல்லார் முன்னிலையிலும் மறுதலித்ததை – மத் 26:70.
 • சிலுவையில் அறைய மக்கள் கூச்சலிட்டதை – மத் 27:23.
 • ஆடைகளை பகிர்ந்து கொண்டதை – மத் 27:35.
 • மூன்று முறை குற்றமில்லை என்று சொல்லியும், சாவுக்கு தீர்ப்பிட்டதை – லூக் 23:4, 14,22.

3. அமைதியாயிருந்தார்:

 • கைப்பாசின் கேள்விக்கு இயேசு பேசாதிருந்தார். மத் 26:63.
 • பிலாத்துவுக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. – மத் 27:12,14.
 • வழிப்போக்கர், தலைமைக்குருக்கள், மூப்பர் பரிகாசித்த போது – மத் 27: 39-44.
 • சீடர்கள் அவரை விட்டு ஓடிய போது – மத் 26:56.

4. பொறுமை காத்தார் :

 • நண்பா எதற்காக வந்தாய் என்று கூறி - மத் 26:50.
 • கன்னத்தில் அறைந்து துப்பிய போது - மத் 26:67.
 • முள்முடியும், கோலும் தந்த போது - மத் 27:28,29.
 • பிரம்பை எடுத்து தலையில் அடித்த போது - மத் 27:30.
 • அவரை சிலுவையில் ஆணிகளால் அறைந்த போது – மத் 27:35.

5. பரிவு காட்டினார்:

 • தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகும் யூதாஸ் திருந்த கடைசி வாய்ப்பும் கொடுத்து - யோவா 13:11.
 • சீடருக்கு தாழ்ச்சியின் பயிற்சி கொடுத்து – யோவா 13:14.
 • சீடருக்கு ஜெபிக்க பயிற்சி கொடுத்து - மத் 26:41.
 • கெத்சமெனியில் தன்னை பிடிக்க வந்தவர்களிடம், “என்னை தேடி வந்தால், இவர்களைப் போக விடுங்கள்” என்று கூறி – யோவா 18:8.
 • சிலுவையின் பாதையில், தன்னைப் பின்தொடர்ந்த பெண்களிடம் “அழாதீர்கள்” என்று கூறி – லூக் 23:28.

6. நன்னயம் கொண்டிருந்தார்:

 • தன் சீடருக்கு உடலை உண்ணத் தந்த போது – மத் 26:26.
 • தன் இரத்தத்தை பானமாக தந்த போது – மத் 26:27,28.
 • இதன் மூலம் பாவமன்னிப்பு வழங்கிய போது – மத் 26:28
 • தன்னைத் துன்புறுத்தியவனின் காது அறுபட்ட போது, - லூக் 22:51.

7. விசுவாச உறுதியோடிருந்தார்:

 • சாவுக்கு கையளிக்க யூதர்கள் பொய் சான்று தேடிய போது – மத் 26:59.
 • கசப்புக்கலந்த இரசத்தை குடிக்கத் தந்த போது – மத் 27:34.
 • கொடிய வேதனைக்குள்ளாகிய போது - லூக் 22:44.
 • யூதர்கள் இயேசுவைக் கொல்வதிலேயே குறியாக இருந்த போது – யோவா 18:31.

8. சாந்தமாயிருந்தார்:

 • தூங்கும் சீடரை அன்போடு கடிதலால் - மத் 26:40.
 • கோயிலில் ஏன் என்னை பிடிக்கவில்லை, என்று கேட்டு – மத் 26:55.
 • சிலுவையில் அறைய இழுத்துச் சென்ற போது - மத் 27:31.
 • ஏரோது படைகளோடு பரிகாசம் செய்த போது - லூக் 23:11.
 • தலைமைக்குருவின் காவலன் கன்னத்தில் அறைந்த போது - யோவா 18:22.

9. தன்னடக்கம் கொண்டிருந்தார் :

 • இயேசுவை கையிட்டுப் பிடித்த போது – மத் 26:50.
 • ஆடைகளை களைந்து வேறு ஆடை தந்த போது – மத் 27:28.
 • வியர்வை இரத்தத்துளிகளாக நிலத்தில் விழுந்த போது – லூக் 22:44.
 • பிலாத்து விடுவிக்க வழிதேடியும், சாவுக்கு கையளித்த போது - யோவா 19 : 12,16.
 • தாய், உயர்குடிப் பெண்கள் முன் நிர்வாணமாகத் தொங்கிய போது - யோவா 19:25.

C. சிலுவையில் தொங்கியபோது ஆவியின் கனிகள்


 • அன்பு-- கொலைஞரையும் மன்னித்த போது – (லூக் 23:34)

 • மகிழ்ச்சி- “உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்ற போது. (லூக் 23:46)

 • அமைதி- “பிறரைக் காப்பாற்றினான், தன்னை காப்பாற்ற இயலவில்லை” என்று பரிகாசம் செய்தபோது. (லூக் 23:35)

 • பொறுமை-- கள்வர்கள் பழித்துரைத்த போது. (லூக் 23:39)

 • பரிவு- “யோவான் இதோ உம் தாய்” என்று கூறி தன் தாயை ஒப்படைத்தபோது. (யோவா. 19:26)

 • நன்னயம்-- நல்ல கள்ளனிடம் “இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பாய்” என்ற போது. (லூக் 23:43)

 • விசுவாசம்-- போதை காடி குடிக்க கொடுத்த போது (குடிக்கவில்லை) (மத் 26:34)

 • சாந்தம்-“சிலுவையிலிருந்து இறங்கி வா விசுவசிக்கிறோம்” என்று பழித்த போது. (மத் 26:40)

 • தன்னடக்கம்-- சிலுவையில் நிர்வாணமாக தொங்கிய போது. (மத் 27:35)

 


"முடிவுரை"


பரிசுத்தராக்கும் பரிசுத்த வாரம்:

 • நாம் பரிசுத்தராய் இருப்பது போல், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் - லேவி 19:2.
 • இந்த அழைப்பு, இந்த பரிசுத்த வாரத்தில் நம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
 • எனவே, பரிசுத்த வாரத்தின் நோக்கமே, நம்மை பரிசுத்தமாக்குவது தான்.

பாவமும் - பரிசுத்தமும்:

 • கடவுளுடைய விருப்பத்தை மீறி நடப்பவர்கள், தம் மீறுதலை விட்டு விலகும் போது, அவர்கள் பரிசுத்தராகிறார்கள்.
 • எனவே, பரிசுத்தராவது என்பது, கடவுளுடைய விருப்பப்படி வாழ்வது என்று பொருள்.
 • நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவராகுங்கள் என்று, கடவுள் கூறினார் -லேவி 20:7.
 • இந்தப் புனிதப்படுத்தலை, கட்டளைகளைக் கடைபிடிப்பதன் மூலமாக, நிறைவேற்ற வேதம் அழைக்கிறது – லேவி 20:8.

பரிசுத்தராவதும் - கடவுளின் திட்டமும்:

 • நாம் தூயவராகவும், மாசற்றவராகவும் இருக்குமாறு, கடவுள் உலகம் தோன்று முன்பே, நம்மை முன்குறித்தார் - எபே 1:4.
 • அதாவது, படைக்கப்பட்ட மனிதர் அனைவருமே, கடவுளுடைய விருப்பப்படி வாழ வேண்டும் என்பதே, கடவுளுடைய திட்டம் - எபே 1:5

பாடுகளும் - பரிசுத்தமும்:

 • கடவுளுடைய விருப்பத்துக்கு கட்டுப்படாமல் இருப்பவர்களை, கடவுள், துன்பங்களால் புடமிட்டு, அவர் விருப்பத்தின்படி வாழ வைக்கிறார் - எசா 48:10, ஒசே 5:15.
 • இதையே கடவுள், “நான் அவர்களைத் தூய்மையாக்கும் கடவுள்” என்று கூறினார் - லேவி 20:8.
 • இவ்வாறு, கடவுள் துன்பத்தால் நம்மை தூய்மைப்படுத்துகிறார் - எபி 12:10.

பாடுகளை ஏற்பதால் - பரிசுத்தராகிறோம்:

 • இவ்வாறு, பாடுகளை நாம் மனதார ஏற்பதால், பரிசுத்தராகிறோம்.
 • பாடுகள், நம்மை தூய்மையாக்கவே நமக்கு அருளப்படுகின்றன.
 • அதாவது, நமக்கு பாடுகள் வரும் போது, நாம் கடவுளுடைய விருப்பத்தின்படி வாழ, விருப்பம் காட்டுகிறோம்.
 • மேலும், பாடுகளை ஏற்கும் எண்ணம், நம்மை, கடவுளின் விருப்பத்தின்படி வாழ, தூண்டுகிறது.
 • அதுபோலவே, பாடுகளைப் பற்றிய அச்சமும், சிலவேளைகளில், நம்மை, கடவுளின் விருப்பத்தின் படி வாழ, ஊக்கப்படுத்துகிறது.
 • கடவுளின் விருப்பத்தின்படி வாழ்வதும், தூயவராவதும் ஒன்றே.

“இரட்சிப்பு – அபிஷேகமும்” – பரிசுத்தமும்:

 • கடவுளுடைய விருப்பத்தின்படி வாழ்வதே, “மீட்பின் வாழ்வு”.
 • எனவே, மீட்பின் வாழ்வால் நாம் பரிசுத்தராகிறோம்.
 • தூய ஆவியால், ஆட்கொள்ளப்படுவதே, அபிஷேகம் - லூக் 4:1,18.
 • தூய ஆவி, நம்மை தூய்மைப்படுத்துகிறார் - 2தெச 2:13.

 

 

My status 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


என்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.


ஆண்டவரே! என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

இயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்? – எசா 53:8.


தாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்


இயேசுவே! என் இதயக் கலக்கத்தை மாற்றும்.


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


இயேசுவே! மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்


 

X


ஆடைகளை உரிதல்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


XI


சிலுவையில் அறைதல்

நம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

இயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

XIII


தாயின் மடியில்

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

XIV


கல்லறையில் இயேசு

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

XV


உயிர்த்த இயேசு

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 


My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com