"நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்" - 2குறி 19:11

Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இந்த “விடுதலை செய்தி” பகுதி வழியாக, உங்களை சந்திப்பதில், நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” - இ.ச 31:6,8, எனக் கூறிய நம் தந்தையாம் கடவுளின் பெயரால், உங்கள் அனைவரையும், வாழ்த்துகிறேன்.

பிரியமானவர்களே! வேதத்தில் யோசபாத் அரசனைப்பற்றி, கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர், இஸ்ராயேல் நாட்டின், தென்பகுதியாகிய யூதேயா நாட்டை, ஆண்டு வந்த அரசர். இவரைப் பற்றி, வேதம் இவ்வாறு கூறுகிறது.

“ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல், தம் மூதாதை தாவீது வழியில் நடந்தார். மேலும் அவர், இஸ்ராயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையரின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே, நடந்து வந்தார். ஆதலால், ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். ஆண்டவரின் வழியில், அவரது உள்ளம், உறுதியடைந்தது” - 2குறி 17:3-6.

யோசபாத் அரசன், தான் நீதிமானாக இருந்தது மட்டுமல்லாது, தன்னுடைய நாட்டு மக்களையும், இறை வழியில் வாழ ஊக்கப்படுத்தினார்.

“அவர், தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர் எங்கும், போதிக்கும் பொருட்டு, தலைவர்களை..... அனுப்பி வைத்தார். அவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று, யூதாவில் போதித்தனர். யூதாவில் எல்லா நகர்களிலும், சுற்றி அலைந்து, மக்களுக்கு போதித்தனர்” - 2குறி 17:7-9.

மேலும் அவர், தன்னுடைய அவையில், அனேகரை வைத்திருந்தாலும், தெய்வ பயமுள்ள மக்களையும், உடன் வைத்துக்கொள்ள தவறவில்லை. அதில்,

“ஆண்டவருக்கு தன்னையே அர்ப்பணித்திருந்தவனும், சிக்ரியின் மகனுமான, அமசியாவும் ஒருவர் - 2குறி 17:16.

யோசபாத் அரசன், தான் நாட்டை ஆளும் ஒரு அரசராக இருந்தது மட்டுமல்ல, அவர் ஒரு போதகராகவும் இருந்தார்.

அவர் பலரை அனுப்பி, நாட்டு மக்களுக்கு போதித்தார் என்று கண்டோம். ஆனால் அதோடு, தாமே மக்களிடம் சென்று, மக்களுக்கு ஆண்டவரைப் பற்றி, நேரடியாகப் போதித்தார்.

“எருசலேமில் வாழ்ந்த யோசபாத்து, தம் குடிமக்களைக் காணப் புறப்பட்டு, பெயர்செபா முதல், மலைநாடான எப்ராயீம் வரை சென்று, மக்களை தம் மூதாதையரின் கடவுளான ஆண்டவரிடம் திருப்பினார்” - 2குறி 19:4.

அது மட்டுமல்லாது, தன் மக்களுக்கு நீதி வழங்கவும், பணிவிடை செய்யவும், நீதிபதிகளையும், லேவியரையும் நியமித்தார். அவர்களும், தெய்வ பயமுள்ளவர்களாய், கடவுளுடைய இடத்திலிருந்து, பணியாற்ற வேண்டுமென்று உபதேசித்தார்.

“நீங்கள் நீதி வழங்குவது, மனிதனை முன்னிட்டு அன்று; ஆண்டவரை முன்னிட்டே. ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார். உங்களிடையே, இறையச்சம் இருக்கட்டும். எல்லாவற்றையும், கவனத்தோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம், அநீதி இல்லை; ஓர வஞ்சனை இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது; நீங்கள், ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும், நேரிய உள்ளத்தோடும், நடங்கள்” - 2குறி 19:6,7,9.

யோசபாத் அரசன், தெற்கே யூதேயாவை ஆண்ட அதே காலகட்டத்தில், ஆகாபு என்ற மன்னன், வடக்கே இஸ்ராயேலை ஆண்டு வந்தான். இந்த ஆகாபு மன்னன், யோசபாத் அரசனுக்கு நேர்மாறானவன். அவன், தான் பாவியாக இருந்ததோடு மட்டுமல்லாது, தன் நாட்டு மக்களையும், பாவம் செய்யத் தூண்டினான்.

“ஓம்ரியின் மகன் ஆகாபு, ஆண்டவரின் பார்வையில், தீயதெனப்பட்டதை, தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட, மிகுதியாய் செய்தான். தீய வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னனின் மகள், ஈசபேலை மணந்துகொண்டு, பாகால் தெய்வத்தை வணங்கி, வழிபடலானான்” - 1அர 16:30-31.

ஆகாபின் மனைவி ஈசபேல், எவ்வளவு தீயவள் என்றால், அவள் இஸ்ராயேலின் இறைவாக்கினர்களைக் கொன்று குவித்தாள் - 1அர 18:4,13. அவள், தன் கணவனைத் திருப்திப்படுத்த, நாபோத்தைக் கொலை செய்தாள் - 1அர 21:15. அது மட்டுமல்லாது, எலியா இறைவாக்கினரைக் கொல்லவும், திட்டமிட்டாள் - 1அர 19:2,3.

இந்த சூழ்நிலையில், எவ்வளவோ நல்லவரான யோசபாத் அரசன், ஒரு தவறு செய்தார். தீயவனான இந்த ஆகாபின் குடும்பத்தோடு, அவர் நட்புறவு கொண்டார்.

“திருமணத்தின் வழியாக, ஆகாபுடன் உறவுமுறை கொண்டார்” - 2குறி 18:1.

ஆம் பிரியமானவர்களே! யோசபாத் அரசர், எவ்வளவோ கடவுளுக்குப் பிரியமானவராயிருந்தும், “கூடா நட்பால்” பெரும் ஆபத்துக்குள்ளால் மாட்டிக் கொண்டார். தீயவனான ஆகாபு மன்னனை சந்திக்க, அவர் சமாரியா சென்றார். அங்கே, விருந்து நடந்த போது, ஆகாபு மன்னன் சூழ்ச்சியாக, யோசபாத்தை நோக்கி, “சீரியா அரசனுக்கு எதிராகப் போர்தொடுக்க, என்னோடு வருவீரா” என்று கேட்டான் - 2குறி 18:3. அதற்கு யோசபாத்தும் உடன்பட்டார்.

“உம்மைப்போலவே, நானும் தயார்; உம் மக்களைப் போலவே, என் மக்களும்; நான் உமக்கு துணையாக, போருக்கு வருவேன்” - 2குறி 18:3.

அப்படியே, ஆகாபுடன் போருக்குப் போக உடன்பட்டாலும், நல்லவரான யோசபாத், ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்கத் தவறவில்லை. அவர், ஆகாபு மன்னனை நோக்கி, இதைக் கேட்டார்.

“ஆண்டவரின் வாக்கு எதுவென, இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்” - 2குறி 18:4.

ஆனால், ஆகாபு மன்னன், பொய்வாக்கினரை வரவழைத்து, பேசச் சொன்னான். அவர்களும், எல்லாரும் ஒரே குரலாய், போருக்குப் போக கூறினார்கள். இதுவே கடவுளின் விருப்பம் என்று, பொய் பகர்ந்தார்கள் - 2குறி 18:5. ஆனாலும், நல்லவரான யோசபாத் அரசருக்கு, அது திருப்தியாகப் படவில்லை. எனவே அவர், ஆகாபிடம் மீண்டும் கேட்டார்,

“நாம் கேட்டறிய, இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர்கள் யாருமில்லையா?” - 2குறி 18:6.

அப்போது, இறைவாக்கினர் மீக்காயாவை ஆளனுப்பி அழைத்துவர, ஆகாபு மன்னன் கூறினான். மீக்காயா, உண்மை இறைவாக்கினர் ஆதலால், ஆகாபு மன்னன், போரில் தோல்வி கண்டு மடிவான் என்றார் - 2குறி 18:16,27.

இதைக் கேட்டபிறகும், ஆகாபோடு சேர்ந்து, போருக்குச் செல்ல, யோசபாத் இசைந்தார். போர் மும்முரமாக நடந்தது. ஆகாபு மன்னன், எவ்வளவு வஞ்சகம் மிக்கவன் என்றால், யோசபாத்தை அரச ஆடை அணிந்து, போர்க்களம் போகச் சொன்னான். தானோ, மாறுவேடம் பூண்டு வருவதாகக் கூறினான்.

போர்க்களத்தில், ஆகாபு யார் என்று அறிந்திராத சீரியப்படையினர், யோசபாத்தை ஆகாபு என எண்ணி, அவரை முற்றுகையிட்டனர். அப்போது தான், யோசபாத் அரசன், மெய்யுணர்வு பெற்றார். தாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டோம் என்று அறிந்த யோசபாத், மனிதனின் உதவியை நாடாமல், கடவுளை கூவி, உதவிக்கு அழைத்தார்.

“அப்பொழுது யோசபாத், ஆண்டவரை நோக்கி கூக்குரலிட, ஆண்டவரும், அவருக்கு துணையாக வந்து, எதிரிகள் அவரை விட்டு விலகும்படி செய்தார்” - 2குறி 18:31.

இவ்வாறு யோசபாத், போர்க்களத்தில் உயிர் தப்பினார். ஆனால், கடவுள் தீயவனான ஆகாபை விட்டு வைக்கவில்லை.

“ஒரு மனிதன், தனது வில்லை நாணேற்றி, குறிவைக்காமல் அம்பெய்தான். அது, இஸ்ராயேல் அரசன், ஆகாபின் கவசத்தின் இடை வழியே பாய்ந்தது” - 2குறி 18:33.

ஆகாபு மன்னன், போர்க்களத்தில் மடிந்தான். நடந்த இந்த நிகழ்ச்சிகள், யோசபாத் அரசரை, மிகவும் சிந்திக்க வைத்தது. அவரை, இந்த பெரிய ஆபத்தினின்று காப்பாற்றியது என்ன என்று, எண்ணிப் பார்த்தார்.

அவர், நீதிமானாயிருந்து, தெய்வபயத்தோடு, கடவுளுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததே, அவரை அந்த மாபெரும் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது. தன் பெலவீனத்தால், தீய நட்பைக் கொண்டதும், அந்த நட்பால், ஆண்டவரின் வாக்கைக் கேளாமல் போனதும், தவறு என்றாலும், கடவுள் யோசபாத்தைக் கைவிடவில்லை. இதை நன்கு புரிந்துகொண்ட யோசபாத் அரசர், தன் மக்களுக்கும், நீதிபதிகளுக்கும், குருக்களுக்கும், உபதேசம் கொடுக்கையில், கீழ்க்காணும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்.

“என் மக்களே! மன உறுதியுடன் செயல்படுங்கள்; நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்” - 2குறி 19:11.

யோசபாத்து அரசருக்கு, ஆண்டவர் வெளிப்படுத்திய இந்த பெரிய சத்தியத்தின் படியே, நமது வாழ்க்கை அமையட்டும். எந்த சூழ்நிலையிலும், கடவுள் விரும்புவதையே செய்து, கடவுள் விரும்பாததை தவிர்க்கும் ஒருவருக்கு, கடவுள் எல்லா வகையிலும், துணை நிற்பார்.

அவனுடைய பெலவீனத்தில், தேவ கிருபை பெலனைத் தரும் - 2கொரி 12:9-10. சோதனைகள் வந்தாலும், திராணிக்கு மேல் சோதிக்காத தேவன், தாங்கும் பெலனும் அளித்து, தப்பும் வழியையும் காட்டுவார் - 1கொரி 10:13. இதை உணர்ந்தே, தாவீது, “நல்லவருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது” என்றார் - தி.பா 37:39. ஆமென்.

 


My status
..... சபை வரலாறு


 திருவருட்சாதனங்கள்......“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29


 
 
copyrights © 2012 catholicpentecostmission.com