ஆவிக்குரிய திருமண சடங்கு

CPM - Matrimony Rituale

10-11-2011 - வியாழன்

கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் - மார்த்தாண்டம்

 I.பவனி
 • பீடச்சிறுவர், ஊழியர்கள், மணமக்கள், திருப்பணியாளர்.
 • (பவனியின் முடிவில்) – மணமக்கள், பீடத்தின் முன், இருபக்கமும் நிற்பர். (நாற்காலிகளுக்கருகில்).
 II. மனஸ்தாப வழிபாடு

1. பொது மனஸ்தாப வழிபாடு:

 • (எல்லாரும் எழுந்து நிற்பர்)
 • திருப்பணியாளர் முன்னுரை
 • பாடல் - CPM பாமாலை – பாடல் எண் 452

1. எல்லாம் வல்ல தந்தையிடமும்
சகோதரரே உங்களிடமும்
நான் பெரும் பாவி என்று ஏற்றுக் கொள்கிறேன்
என் பாவமே என் பாவமே
என் பாவமே என் பெரும் பாவமே

2. ஏனெனில் என் சிந்தனையாலும்
செயலாலும் நான் பாவம் செய்தேன்
சொல்லாலும் நான் பாவம் செய்தேன்
கடமையில் தவறி பாவம் செய்தேன்
என் பாவமே என் பெரும் பாவமே
மன்னியும் தேவா மன்னியும் தேவா
மன்னியும் தேவா - என்னை மன்னியும் தேவா

2. மணமக்கள் மனஸ்தாப வழிபாடு:

மணமகன், மணமகள், இருவரும், பீடத்தின் இருபக்கமும், ஜெபத்துக்கு ஆயத்தமாய் நிற்கிறார்கள்.

மணமகனின் மனஸ்தாப ஜெபம்:

இரக்கமும் தயவும், பேரன்பும், நிறைந்த கடவுளே! உம்மை துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். என் பாவங்களை போக்கும், தேவாட்டுக்குட்டியே! இயேசுவே ! உம்மை ஆராதிக்கிறேன்.

என் குற்றங்களை எல்லாம், பொறுத்துக்கொள்ளும் ஐயா! நான் உமக்கு முன்பாகவும், வானகத் தந்தைக்கு எதிராகவும், பாவங்கள் பல செய்தேன். என்னை பொறுத்துக் கொள்ளும். ஆண்டவரே! ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டுகிற தகப்பனே, என் மீதும் இரங்கி, என் குற்றங்களை எல்லாம் மன்னித்து, என் திருமண வாழ்வுக்கு என்னை ஆயத்தப்படுத்தும்.

என் சொந்த பெலத்தையோ, நன்மைத்தனங்களையோ நம்பி அல்ல, உம் சுத்த கிருபையை நம்பியே, நான் மண வாழ்வுக்குள், காலடி எடுத்து வைக்கிறேன். சாறாளையும், தோபியையும், பரிசுத்தப்படுத்தி, தீமையை அகற்றி, ஒரு குடும்ப வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தியது போல், எனக்கும் செய்யுமய்யா.

ஆண்டவரே இரக்கமாயிரும்! கிறிஸ்துவே இரக்கமாயிரும்! ஆண்டவரே இரக்கமாயிரும்!

சபையார் - ஸ்தோத்திர ஜெபம் செய்வர்.

பாடல் - தகுதிப்படுத்தும் தேவா (CPM பாமாலை - பாடல் எண் -180)

மணமகளின் மனஸ்தாப ஜெபம் :

பேரிரக்கத்தின் ஊற்றாகிய கடவுளே! உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். என் பாவங்களைப் போக்க, கல்வாரியில் இரத்தம் சிந்தி, உயிர் விட்ட இயேசுவே, உம் திருப்பாதம் பணிந்து, உம்மை ஆராதிக்கிறேன்.

சிறுவயதிலிருந்து, இன்று வரை, நான் செய்த, என் குற்றங்களை எல்லாம், பொறுத்துக் கொள்ளும். இயேசுவே! என் சிந்தனையால், சொல்லால், செயலால், என் கடமைகளைத் தவறியதால், நான் பாவங்கள், பல செய்தேன். அப்பா என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும். உம் திரு இரத்தத்தால், என்னைக் கழுவி பரிசுத்தமாக்கும்.

அப்பா, உம் கிருபையை மட்டுமே நம்பி, என் திருமண வாழ்வுக்கு, காலடி எடுத்து வைக்கிறேன். என் பாவங்களைப் பொறுத்து, என்னை இப்புது வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தும்.

கர்த்தாவே, உம்மை விசுவசித்து வாழ்ந்த எஸ்தர் ராணிக்கும், ஒரு மகிமையான வாழ்வைத் தந்தீரே! அவ்வண்ணமே, தகுதியற்ற உம் அடியாளாகிய என்னையும், உம் இரத்தத்தால் தகுதிப்படுத்தி, ஒரு மண வாழ்வுக்கு என்னை உயர்த்தும்.

ஆண்டவரே இரக்கமாயிரும்! கிறிஸ்துவே இரக்கமாயிரும், ஆண்டவரே இரக்கமாயிரும்!

சபையார் - ஸ்தோத்திர ஜெபம் செய்வர்.

பாடல் - தகுதிப்படுத்தும் தேவா (CPM பாமாலை - பாடல் எண் -180)

பாவமன்னிப்பு ஜெபம்:

திருப்பணியாளர்:

இரக்கம் மிகுந்த தந்தையாகிய இறைவன்! தம்முடைய பாடுகளாலும், மரணத்தினாலும், உலகத்தை மீட்டு இரட்சித்த இறைவன்! நமக்கு அருளும், சமாதானமும் தந்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

சபையார்:

ஆமென்.

திருப்பணியாளர்:

சகோதரரே ! தம் இரத்தத்தால், நம்மை பரிசுத்தப்படுத்தி, ஓர் ஆவிக்குரிய திருமண வாழ்வுக்கு தம் பிள்ளைகளை தகுதிப்படுத்திய இறைவனை நாம், நன்றியோடும், மகிழ்ச்சியோடும், போற்றிப் புகழ்ந்து, வானவர் கடவுளைத் துதித்துப் பாடிய, வானவர் கீதத்தை, நாமும், இசைத்துப் பாடுவோமா!

வானவர் கீதம் பாடப்படுகிறது.

திருப்பணியாளர் சபை ஜெபம் செய்கிறார்

சபை ஜெபம்

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்களை மீட்டு இரட்சிக்க வந்த, உம் திருக்குமாரனோடு, நாங்கள் மணவாட்டிகளாகும், உறவைப் பெற்றுள்ளோம்.

இவ்வுலக வாழ்விலும், நாங்கள் மண உறவு கொண்டு வாழ, ஆதாம்-ஏவாளை, ஆபிரகாம்-சாராளை, ஈசாக்கு- ரபேக்காளை, ஆசீர்வதித்தீர்.

கானாவூர் திருமண விழாவில், கலந்து கொண்டு, அத்திருமண நாளை குறை நீக்கி, நிறைவுள்ளதாக்கினீர்.

இன்று திருமண வாழ்வில் இணைக்கப் பெறவிருக்கும், எங்கள் பிள்ளைகளையும், உம் அன்பினால் இணைத்து, ஆவியின் கனிகளால் பிணைத்து, உம் வார்த்தைகளால், இதயங்களை நிறைத்து, வேதம் போற்றும், மணமக்களாக, மாற்றுவீராக... உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில், இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் சுதனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லோரும் - ஆமென்.

 III. வாசகப்பகுதி

1.முதல் வாசகம் - தோபி 7:12-16, 8:4-8.

2.இரண்டாம் வாசகம் - 1பேது 3:1-7.

3.நற்செய்தி வாசகம் - மத் 5:1-10.

திருப்பணியாளர் – மறை உரை நிகழ்த்துவார்.

 IV. திருமண சடங்கு
 • சபையார் அமர்ந்திருப்பர்
 • மணமக்கள், பீடத்துக்கு முன்பாக வந்து நிற்பர்.
 • மணமக்களின் பெற்றோர், ஒவ்வொரு திருமறைநூலை, கொண்டு வந்து, தட்டில் வைப்பர்.
 • மணமகனின் பெற்றோர், திருமாங்கல்யத்தை கொண்டு வந்து, மற்றொரு தட்டில் வைப்பர்.
 • பின்பு அவர்கள், இரண்டு பக்கங்களிலும், நின்று கொண்டிருப்பர்.

திருப்பணியாளர்:

அன்பார்ந்த ஆவிக்குரிய பிள்ளைகளே! திருமணச் சடங்கால், புது வாழ்வில் இணைக்கப்படவிருக்கும், இம்மணமக்களுக்காக, நாம் ஜெபிப்போம். இச்சடங்கு, இரண்டு முறைகளில் நடைபெறும். முதலாவது, திருமறைநூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு. இரண்டாவது, திருமாங்கல்யத்தை கட்டிக் கொள்ளும் சடங்கு.

திருமறை நூல் மாற்றிக் கொள்ளும் சடங்கு

 • மணமக்கள் பீடத்தை நோக்கி, முழங்காலில் நிற்பர்.
 • திருமறைநூல் தட்டை, ஒருவர் மணமக்களுக்கு முன் தூக்கிப் பிடிப்பார்.
 • திருப்பணியாளர் முன்னுரை கூறுவார். பின்பு,
 • மணமக்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் முகம் பார்த்து நிற்பர்.
 • மணமகன் திருமறை நூலை, கையில் எடுத்துக் கொள்வார்.
 • மணமகள் முழங்காலில் நிற்பார்.
 • மணமகன், திருமறைநூலை, மணமகளுக்கு நேராக, உயர்த்திப் பிடித்து, பின்வருமாறு கூறுவார்.

மணமகன்:

என்னை அதிகம் அன்பு செய்து, என் வாழ்க்கை துணைவியாக விருக்கும், என் அன்பு (சுஜி பிரியா), நம் திருமண வாழ்வை, இந்த பரிசுத்த வேதம், உறுதி செய்வதாக.

இந்த வேதம் காட்டும் வழியை நாம் பின்பற்றி, நம்முடைய இன்பத்திலும், துன்பத்திலும், இறை விருப்பத்துக்கு ஆமென் சொல்வோமாக. நம் காலடிக்கு, இந்த வார்த்தையே விளக்காகவும், நம் பாதைக்கு, இத்திருநூலே ஒளியாகவும், அமைவதாக.

யோசுவாவைப் போல, நம் குடும்ப வாழ்விலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், இவ்வேத நூலை, நம் கண்முன்னின்று அகற்றாமல், வாழ்வோமாக. இத்திருநூலால், நம்மை இணைக்கும் மண வாழ்வை, எந்த மனித, உலக, சக்தியும், பிரிக்காமல் காப்பதாக. நம் மண ஒப்பந்த உடன்படிக்கையாக, இத்திருமறைநூலைப் பெற்றுக் கொள்.

 • திருமறைநூலை, மணமகளின் தலையில் வைத்துக் கொடுக்க, மணமகளும் அதனை, இருகைகளையும் பற்றி, வாங்கிக் கொள்கிறார்.
 • பின்பு, மணமகன் முழங்காலில் நிற்க, மணமகள் எழுந்து நின்று, திருமறைநூலை உயர்த்திப் பிடித்து, பின்வருமாறு கூறுவார்.

மணமகள்

என்னை அதிகம் அன்பு செய்து, என் வாழ்க்கை துணைவராக விருக்கும், என் அன்பு (அலெக்ஸ் ஜோசப் ராஜ்), நம் திருமண வாழ்வை, இந்த பரிசுத்த வேதம் உறுதிப்படுத்துவதாக.

இந்த திருச்சட்ட நூலில் எழுதியுள்ள அனைத்தையும், நாம் இரவும் பகலும் தியானித்து, இதினின்று, இடமோ வலமோ திரும்பாமல், இதை முற்றும், கடைபிடித்து வாழ்வோமாக.

நாம் பாவம் செய்யாதவாறு, இத்திருச்சட்டத்தை, நம் இதயத்தில் இருத்திக் கொள்வோமாக. அன்னை மரியாளைப் போல, நம் வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும், இறை விருப்பத்துக்கு அடிமைகளாக வாழ்வோமாக.

நம் மண ஒப்பந்த உடன்படிக்கையாக, இத்திருமறைநூலை பெற்றுக் கொள்ளுங்கள்.

 • திருமறைநூலை, மணமகனின் தலையில் வைத்துக் கொடுக்க, அவரும் அதனை இருகைகளையும் பற்றி, வாங்கிக் கொள்கிறார்.
 • பாடல் - தெய்வீக பொக்கிஷமே – CPM பாமாலை - பாடல் எண் - 295.
 • இப்போது, சபையார் எழுந்து நிற்பர்.
 • மணமக்கள் பீடத்தை நோக்கி, முழங்காலில் நிற்பர்.

திருமாங்கல்யம் கட்டிக் கொள்ளும் சடங்கு

 • தட்டிலிருக்கும், திருமாங்கல்யத்தை, திருப்பணியாளர் உயர்த்தி பிடிப்பார்.
 • மக்கள் எல்லாரும், தம் கரங்களை திருமாங்கல்யத்தின் மீது நீட்டி, அதனை இறைவன் அர்ச்சிக்கும் படியாக ஜெபிப்பர்.
 • திருப்பணியாளரும் ஜெபிப்பார்.
 • பாடல் - இந்த வேளை வந்திறங்கும் - CPM பாமாலை - பாடல் எண் – 964
 • பின்பு, மணமகன் எழுந்து நிற்பார்.
 • மணமகள், முழங்காலில் நிற்பார்.
 • திருப்பணியாளர், திருமாங்கல்யத்தை, மணமகனிடம் கொடுப்பார்.
 • மணமகன், திருமாங்ல்யத்தை உயர்த்திப் பிடித்து,
 • திருமண உடன்படிக்கை வார்த்தைகளை பரிமாறுவார்.

மணமகன்:

என் அன்பு (சுஜி பிரியா), இன்று நான் உன்னை, இறைப்பிரசன்னத்துக்கு முன்பாகவும், இறை மக்கள் முன்பாகவும், என் வாழ்க்கை துணைவியாக, மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

உன் இன்பத்திலும், உன் துன்பத்திலும், உன் உடல் நலத்திலும், உன் நோயிலும், உன் உயர்விலும், உன் தாழ்விலும், நான் உனக்கு, பிரமாணிக்கமுள்ள வாழ்க்கைத் துணைவராய் இருந்து, உன் வாழ்நாள் எல்லாம், உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

இந்த திருமாங்கல்யத்தை, நம்மை ஐக்கியப்படுத்தும் ஆவியானவர் தாமே அர்ச்சித்து, நம்மை நித்திய மணமக்களாக இணைப்பாராக.

மணமகள்:

என்றும் என் அன்புக்குரிய (அலெக்ஸ் ஜோசப் ராஜ்), இன்று நான் உங்களை, இறைப்பிரசன்னத்துக்கு முன்பாகவும், இறை மக்கள் முன்பாகவும், என் வாழ்க்கைத் துணைவராக, மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

உங்கள் இன்பத்திலும், உங்கள் துன்பத்திலும், உங்கள் உடல் நலத்திலும், உங்கள் நோயிலும், உங்கள் உயர்விலும், உங்கள் தாழ்விலும், நான் உங்களுக்கு பிரமாணிக்கமுள்ள, வாழ்க்கைத் துணைவியாய் இருந்து, உங்கள் வாழ்நாள் எல்லாம், உங்களை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

இந்த திருமாங்கல்யத்தை, நம்மை ஐக்கியப்படுத்தும் ஆவியானவர் தாமே அர்ச்சித்து, நம்மை நித்திய மணமக்களாக இணைப்பாராக.

 • மணமகன் திருமாங்கல்யத்தை, மணமகளின் கழுத்தில் அணிவிக்கிறார்.
 • பாடல் - இம்மணர்க்கும்மருள் - CPM பாமாலை - பாடல் எண் – 1152
 • பாடல் வேளையில், மணமக்கள் மீது, மக்கள், ஆசீர் பொழிவர்.
 • ஆசீர்வாத ஜெபம் - ஒருவர்.

 IV. பலிவிருந்து
 • இப்பொழுது, காணிக்கை பவனியோடு, பலிவிருந்து ஆரம்பமாகும்.
 • நற்கருணை விருந்துக்கு பின், மணமக்கள் நன்றி ஜெபம் செய்வர்.

மணமகன்

ஸ்தோத்திரம் பிதாவே, அப்பா உம்மை, நன்றியோடு ஆராதிக்கிறேன். துதிக்கிறேன். இயேசுவே, இன்றைய நாளில், என்னுடைய திருமணம், இந்த இடத்தில், ஆசீர்வாதமாய் நடந்து முடியச் செய்தீர் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நீர் எனக்குத் தந்த, அப்பா, அம்மா, சகோதரனை ஆசீர்வதிக்கிறீர் உமக்கு நன்றி. இந்த திருமணத்தை, நல்ல முறையில் நடத்திய எல்லா பெரியவர்களுக்காகவும், உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

இயேசுவே, இந்த திருமணத்தை ஆசீர்வாதமாய் நடத்திய கத்தோலிக்க பெந்தக்கோஸ்;து மிஷனுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நாங்கள், திருமண வாழ்;வில் ஆவிக்குரிய பிள்ளைகளாக வாழ பயிற்சிகளை தந்த, எங்களுடைய பங்குத் தந்தைக்காகவும், அருட்சகோதரிகளுக்காகவும், உமக்கு நன்றி. இயேசுவே, இத்திருமண விழாவில் எங்களை வாழ்த்தி ஜெபிக்க வந்த, நண்பர்கள், சொந்த பெந்தங்கள், உற்றார், உறவினர்கள், யாவரையும் ஆசீர்வதிக்கிறீர் உமக்கு நன்றி.

இயேசுவே, இன்று புதிதாக மணம் முடித்த என்னுடைய வாழ்க்கை துணையை ஆசீர்வதியும். அவளுடைய அப்பா அம்மாவை ஆசீர்வதியும். அவளுடைய சகோதரனை ஆசீர்வதியும். அப்பா, அவர்கள் ஒவ்வொருவரின் தொழிலையும் ஆசீர்வதியும். எங்கள் திருமண வாழ்வையும் தொடர்ந்து ஆசீர்வதியும்.

துதி, கன, மகிமை யாவும் உமக்கே செலுத்துகின்றோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமென்.

மணமகள்

ஸ்தோத்திரம் பிதாவே, அப்பா உம்மை, நன்றியோடு ஆராதிக்கிறேன். துதிக்கிறேன். இயேசுவே, இன்றைய நாளில், என்னுடைய திருமணம், இந்த இடத்தில், ஆசீர்வாதமாய் நடந்து முடியச் செய்தீர் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நீர் எனக்குத் தந்த, அப்பா, அம்மா, சகோதரனை ஆசீர்வதிக்கிறீர் உமக்கு நன்றி. இந்த திருமணத்தை, நல்ல முறையில் நடத்திய எல்லா பெரியவர்களுக்காகவும், உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவே, இந்த திருமணத்தை ஆசீர்வாதமாய் நடத்தித் தந்த என் ஆவிக்குரிய சபைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நாங்கள் திருமண வாழ்வில் ஆவிக்குரிய பிள்ளைகளாக என்றும் வாழ, பயிற்சிகளை தந்த, எங்களுடைய பங்குத் தந்தைக்காகவும், அருட்சகோதரிகளுக்காகவும் உமக்கு நன்றி. இயேசுவே, எங்கள் அழைப்பை ஏற்று எங்களை வாழ்த்தி ஜெபிக்க வந்த, நண்பர்கள், சொந்த பெந்தங்கள், உற்றார், உறவினர்கள், யாவரையும் ஆசீர்வதிக்கிறீர் உமக்கு நன்றி.

இயேசுவே, இன்று புதிதாக மணம் முடித்த என்னுடைய வாழ்க்கைத் துணைவரை ஆசீர்வதியும். அவருடைய அப்பா அம்மாவை ஆசீர்வதியும். அவருடைய தம்பியையும் ஆசீர்வதியும். அப்பா, அவர்கள் செய்கின்ற ஊழியத்தை ஆசீர்வதித்து, நீடிய வாழ்வையும், உடல் நலத்தையும், அவர்களுக்குத் தாரும். எங்கள் மண வாழ்வையும் ஆசீர்வதியும்.

துதி, கன, மகிமை யாவும் உமக்கே செலுத்துகின்றோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமென்.

குறிப்பு:

இதை வாசிக்கின்ற அன்பர்களே! CPM சபையில், அருட்சாதனங்கள் அனைத்தும், இத்தகைய பொலிவோடும், ஆவிக்குரிய நிறைவோடும், பைபிள் அர்த்தத்தோடும், சிறப்பாக நடந்தேறுகின்றன என்பதை, உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை, இந்த பகுதியில் எதிர்பாருங்கள்.

 

My status
திருமண பவனி


 திருவருட்சாதனங்கள்

 சபை வரலாறு

 ஆண்டு ஊழியங்கள்


......

மணமகனின் பாவ அறிக்கை


மணமகளின் பாவ அறிக்கை


சபை ஜெபம் - திருப்பணியாளர்


 கி.மு கி.பி

 திருமறை வகுப்புக்கள்

மணமகள் வாசகம்


திருத்தொண்டர் நற்செய்தி வாசகம்


திருப்பணியாளர் மறை உரை


திருமண சடங்கு ஆரம்பம்


மணமகனின் தந்தை, திருமறைநூலை பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்


மணமகளின் தாயார், திருமறைநூலை பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்


திருமறைநூல் அர்ச்சிப்பு சடங்கு......மணமகன், திருமறைநூலை மாற்றிக் கொள்ளும் சடங்குமணமகள் திருமறைநூலை மாற்றிக் கொள்ளும் சடங்குமாங்கல்யம் அர்ச்சிப்பு ஜெபம்மாங்கல்யத்தின் மேல், விசுவாசிகள் ஜெபம்மணமகன் மாங்கல்யத்தைப் பெற்றுக்கொள்கிறார்மணமகனின் மண ஒப்பந்த வாக்குறுதி ஜெபம்
......


மணமகன், திருமாங்கல்யம் அணிவிக்கிறார்“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15மணமகன் காணிக்கை வழங்கல்மணமகள் காணிக்கை வழங்கல்மணமகன், மணமகள் - நன்றி ஜெபம்.....மணமக்கள் மீது, விசுவாசிகள் ஆசீர் ஜெபம்மணமகன், மணமகள் கையொப்பம்My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com