CPM சபையில் சாட்சிகள்

Testimonies(Best viewed in Google Chrome)

1. குழந்தைப்பேறும், மரணத்தினின்று விடுதலையும் - டெல்பின்,சவுதி.

என் பெயர் டெல்பின். சொந்த ஊர் மாடத்தட்டுவிளை. நான் சவுதியில், வேலை பார்க்கிறேன். அங்கேயே என் கணவரோடும், இரண்டு பிள்ளைகளோடும் தங்கியிருக்கிறேன். நான் CPM சபையில், இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்ற, ஒரு விசுவாசி. எனக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகளாகியும், குழந்தை கிடைக்கவில்லை. ஆனால், நான் CPM சபையின் “மொபைல் ஊழியத்தில்” தொடர்பு கொண்டு, என் விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். அப்போதிருந்து, நான் தினமும், மாலை ஏழரை மணிமுதல், ஒன்பதரை மணி வரையிலுள்ள, ஜெப வேளையில், தந்தையவர்களிடம் மொபைலில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து ஜெபித்து வந்தேன். நல்ல ஆண்டவர், என்மேல் இரக்கம் வைத்து, என் குறை எல்லாம் நீக்கி, ஓர் அழகான ஆண்குழந்தையை, அற்புதமாக தந்தார். குழந்தை, கருவுற்ற நாளிலிருந்து, பிரசவ நேரம் வரையிலும், நான் விடாமல், மொபைல் வழி ஜெபித்து வந்தேன். எனக்கு, அற்புதர் இயேசுவின் துணையால், சுகப்பிரசவம் நடந்தது.

அப்படியே, சில ஆண்டுகளுக்குப் பின், நான் இரண்டாவது குழந்தையை கருவுற்றேன். ஆனால், இந்த நாட்களில், நான் மிகவும் பெலவீனமாயிருந்தேன். உதிரப்பெருக்கால், மிகவும் கஷ்டப்பட்டேன். குழந்தைக்கும், கொடிய நோய் ஒன்று இருப்பதாக, மருத்துவர்கள் கூறினார்கள். வயிற்றில் குழந்தை வளர்ந்தால், தாய்க்கு ஆபத்து எனவும், மருத்துவர்கள் பயமுறுத்தினர்.


திக்கற்றவர்க்குத் துணையான இயேசப்பாவிடம், நான் தஞ்சம் புகுந்தேன். “அப்பா, இப்போது நான் குழந்தையைக் கேட்காமலேயே, நீங்கள் ஒரு குழந்தையைத் தந்தீர். உங்களுக்கு விருப்பமானால், எனக்கு இந்தக் குழந்தையைக் காப்பாற்றித் தாரும்” என்று மன்றாடினேன். CPM மொபைல் ஊழியம் வழியாக, தந்தையிடம் தொடர்பு கொண்டு, விடாமல் ஜெபித்தேன். மூன்றாவது, ஏழாவது, எட்டாவது மாதங்களில், எனக்கு உதிரப்பெருக்கு அதிகமாகி, நான் சாகும் தருவாயிலிருந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும், நான் விடாமல், ஜெபத்தொடர்பை வைத்துக் கொண்டேன். தந்தையவர்கள், போன் மூலமாக, இறை வார்த்தைகளைத் தந்து, என்னை உறுதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

அந்த ஜெப வேளைகளிலெல்லாம், நான் தேவப்பிரசன்னத்தையும், விடுதலையையும், அற்புதமாக உணர்ந்தேன். என் ஆண்டவர், என் பக்கத்திலிருந்து, என்னோடு பேசுவது போலும், நலப்படுத்துவது போலும், ஒவ்வொரு ஜெப வேளையிலும், அனுபவித்தேன். எட்டாம் மாதத்தில், மிகவும் கடினமான அவஸ்தையில், குழந்தையை எடுத்துத்தான் ஆக வேண்டும் என்று, ஆபரேஷன் அறைக்குக் கொண்டுச் சென்றார்கள். ஆனால், நான் இன்னும் நம்பிக்கையிழக்காமல், அந்த அறையிலிருந்தும், தந்தையோடு தொடர்பு கொண்டு, ஜெபித்தேன். என்ன ஆச்சரியம்! ப்ளீடிங் தானாக நின்றது. மருத்துவர்கள், ஆபரேஷன் வேண்டாம் என்று, திரும்பிப் போனார்கள். அதுமுதல், முழுக்க பெட்ரெஸ்டில் இருந்தேன். பிறக்கப்போகும் குழந்தை, ஆபத்தில் இருக்கிறது என்று கூறினார்கள். நான் எல்லாம் இயேசப்பாவிடம் ஒப்படைத்தேன். தந்தையவர்களின் வழிநடத்தலின்படியே, விடாமல், “ஸ்தோத்திரபலி” எழுப்பிக் கொண்டேயிருந்தேன். “இம்மட்டும் காத்தவர், இன்னும் காப்பார்” என்னும் நம்பிக்கை, எனக்கு மேன்மேலும் வளர்ந்து கொண்டேயிருந்தது.

மருத்துவர்கள் குறிப்பிட்ட நாளில், பிரசவத்திற்காக ஆயத்தமானேன். எல்லாம் என் ஆண்டவரிடம், ஒப்படைத்தேன். CPM மொபைல் ஊழியத்தில் “அவசர சேவை” மூலமாக, விடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்நாள்களில், போண் எப்போதும் என் கையிலேயே இருந்தது. அந்த வேளையிலெல்லாம், மருத்துவர்களுக்கு மேலான மருத்துவரை, நான் கையில் வைத்திருந்த ஒரு உணர்வு, எனக்கு எப்போதும் இருந்தது. “நான் கூட இருப்பேன்” என்று கூறியவர், கூட இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை, எனக்கு உண்டானது. பிரசவ நேரம் வந்தது. ஒரு சிறிய ஆபரேஷன் செய்தனர். ஒரு அழகான பெண் குழந்தை எனக்குப் பிறந்தது. எந்தப் பிரச்சனையும் இல்லை. மருத்துவர்கள் கூறியபடி, என் குழந்தைக்கு எந்த நோயும், ஆபத்தும் இல்லை.

இதிலெல்லாம், தேவக்கிருபை எவ்வளவு என்னைத் தாங்கிற்று என்றால், நான் வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் கருவுற்றால், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் போய் தான், பிரசவம் பார்க்க வேண்டும். ஆனால், நானோ அம்மா அப்பா இல்லாதவள். எனக்கு பிரசவம் பார்க்க, ஊரில் பெரிய வசதி ஒன்றும் இல்லை. இந்த நிலையில், குழந்தைக்கு கொடிய நோய் என்று, மருத்துவர்கள் கூறியதால், நான் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே, சிகிட்சையும், பிரசவமும் நடக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். எவ்வளவு அற்புதம் பாருங்கள். எனக்கு உடல் நோய்களும், வேதனையும், தொடர்ந்து இருந்தாலும், இயேசப்பா, என்னை அலையவிடாமல், தன் கைக்குள்ளேயே என்னை வைத்து, பிரசவத்தை நடத்தித் தந்தார்.

CPM சபையின் மொபைல் சேவை, என்னைப் போன்ற திக்கற்றவர்களுக்கு, கடவுள் தந்த பெரிய கொடை என்பதை உணர்கிறேன். அந்த சபையும், ஊழியமும் வளர்ந்தோங்க, ஜெபிக்கிறேன். கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கு, கலங்கரை விளக்காயிருந்து உதவும், CPM மொபைல் ஊழியத்தை, கடவுள் ஆசீர்வதித்து, என்னைப் போன்ற, தொலைத்தூரப் பணிகளில் இருப்பவர்களை, அருகாமையில் இருந்து அன்பு செய்துக் காக்கட்டும்.

இதை வாசிக்கின்ற விசுவாசிகளே! நம் ஆண்டவர், தம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். எந்த ஆபத்து வேளையிலும், நான் முதலில் மனிதனைத் தேடாமல், கடவுளின் உதவியையே தேடுகிறேன். தேடிக் கண்டடைகிறேன். ஆபத்து நாட்களில், என்னை நோக்கி கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்றவர், இன்றும் வாழ்கின்றார். என்னைத் தாங்கியவர், உங்களையும் தாங்குவார். இரவு பகல், இருபத்து நான்கு மணி நேரமும், ஜெபத்தில் இருந்து சேவை செய்யும், CPM மொபைல் ஊழியம், உங்களையும் தாங்கட்டும் என, ஜெபித்து முடிக்கிறேன். ஆமென்.

 

2. குழந்தை கிடைத்தது -சுலொஜனாபாய் - மாவறவிளை.

என் வீட்டின் அருகில் உள்ள ஒருவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும், குழந்தைக் கிடைக்கவில்லை. பல மருத்துவர்களிடம் சென்றும், குழந்தை கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்கள். அவர்கள் விசுவாசத்தோடு என்னிடம் ஒரு விண்ணப்பம் தந்தார்கள்.

நான் CPM சபையில் ஆராதனை வேளையில், இந்த விண்ணப்பத்தை வைத்து, ஒரு குழந்தைக்காக ஜெபித்தேன். நல்ல ஆண்டவர், அந்த குடும்பத்தின் மீது இரக்கம் கொண்டார். எல்லாரும் ஆச்சரியப்படும் அளவுக்கு, மறு ஆண்டே அவர்களுக்கு ஒரு குழந்தையை கடவுள் தந்தார். இல்லாததை தம் சொல்லால் இருக்கச் செய்யும் தேவன், CPM சபையில் செயலாற்றுகிறார். அவருடைய நாமத்துக்கே மகிமை

சுலொஜனாபாய் - மாவறவிளை.

3. ஆண்டு முழுவதும் ஆசீர்வாதம் - வைலட் எஸ்தர் ராணி – குன்னத்தூர்.

நான் கடந்த ஆண்டு, வழக்கம் போல, என் பிறந்த நாளை CPM சபையில் கொண்டாடினேன். பலிவிருந்து வேளையில், பீடத்துக்கு சென்று ஜெபித்தேன். அப்போது, தந்தை அவர்கள், என் தலையில் கை வைத்து, என்னை ஆசீர்வதித்து ஜெபித்தார்கள்.

அன்றிலிருந்து, இந்த நாள் வரையிலும், நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே இருக்கிறேன். என்னை எந்த நோயும் தீண்டவில்லை. இதயத்தில் எல்லாரோடும் சமாதானமும், சந்தோஷமும் கிடைத்திருக்கின்றது. என் ஆவிக்குரிய கடமைகளை நான் சரியாக செய்ய முடிகிறது.

எந்த துன்ப சோதனையிலும், மனம் தளர்ந்து போகாமல், ஜெபத்தில் நிலைத்திருக்கிறேன். மேலும், என் தேவைகளை எல்லாம், என் தேவன் சந்தித்து ஆசீர்வதிக்கிறார். ஆண்டவரைத் தேடுவோர்க்கோ எந்த நன்மையும் குறைவுபடாது என்ற வசனத்தின்படி, என்னை பாதுகாத்து, போஷித்து, நித்தம் பராமரித்து வரும் கடவுளுக்கே கோடி கோடி நன்றி.

வைலட் எஸ்தர் ராணி – குன்னத்தூர்.

4. வயிற்றுவலி நீங்கியது - அன்னம்மா – கேசவபுரம்.

என் மகள், வயிற்றுவலியால், சில நாட்களாகவே, மிகவும் கஷ்டப்பட்டாள். பல மருத்துவர்களிடம் சென்றும், என்ன நோய் என்று கண்டுகொள்ள முடியவில்லை. நான் CPM சபையில் நடக்கும் குணமளிக்கும் ஆராதனையில் கலந்து கொண்டு, தொடர்ந்து சில நாட்கள் ஜெபித்தேன். என் மகளும் ஜெபித்தாள்.

ஒரு நாள், திடீரென்று வயிற்றுவலி மிகவும் கடுமையாக இருந்ததால், மேலும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றொம். அங்கே, என் மகளுக்கு வயிற்றில் கட்டி இருக்கிறது என்று கூறி, ஒரு சிறு ஆபரேஷன் செய்தார்கள். அப்போதே வயிற்றுவலி, நீங்கிப்போனது. நம்பினோரைக் கைவிடாத கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

அன்னம்மா – கேசவபுரம்.

5. பொருத்தனையால்- விடுதலை பெற்றேன் - தங்கராஜன் - சடையங்குழி.

எனது காலில், பல நாட்களாக, ஒரு புண் இருந்தது. நான் பல மருந்துகள் செய்தும் குறையவில்லை. அப்போது என்னுடைய மகனின் திருமணம் நடந்தது. நான் அதற்காக, அதிகம் அலைய வேண்டியும் இருந்தது. அந்த நாளில் அதே காலில், ஓர் ஆணியும் குத்தியது. வலி தாங்க முடியவில்லை. மருந்துகளால் எந்த பயனுமில்லை. அப்பொழுது நான் அழுது ஜெபித்தேன்.

CPM சபையில் விடுதலை ஆராதனையில் நான் சாட்சி சொல்வேன், எனக்கு குணம் தர வேண்டுமென்று மன்றாடினேன். அற்புத தேவன், இரண்டெ நாளில் நல்ல சுகம் தந்தார். என் பணிகளெல்லாம் இனிதே நடந்தன.

அதுபோலவே, என்னுடைய மகளின் குழந்தைக்கு அடிக்கடி, காய்ச்சல் வந்து கொண்டிருந்தது. நெருக்கடியான நேரத்தில் குழந்தையின் காய்ச்சல், எல்லாருக்கும் கஷ்டத்தை தந்தது. நான் CPM சபையில் என் ஆண்டவரை நோக்கி ஜெபித்தேன். அங்கே சாட்சி சொல்வதாக பொருத்தனை செய்தேன். குழந்தைகளை நேசிக்கும் நல்ல தகப்பன், எங்கள் குழந்தைக்கு நல்ல சுகம் தந்தார். அவருடைய நாமத்துக்கே மகிமை

தங்கராஜன் - சடையங்குழி.

6. ஆடிட் வெற்றியாக முடிந்தது - லீலாபாய் - சுண்டவிளை கருங்கல்

என் மகன், கோவாவில் மருந்து கம்பெனி ஒன்றில், மேனேஜராக வேலை பார்க்கிறான். அது ஒரு அமெரிக்க கம்பெனி. ஆண்டுக்கு ஒருமுறை அங்கே ஆடிட் நடக்கும். இந்த முறையும், ஆடிட் நடந்தது. ஆனால், இம்முறை மிகவும் கடினமாக இருப்பதாகவும், ஆடிட் செய்ய வந்தவர்கள், மிகவும் கடுமையாக இருப்பதாகவும், மகன் எனக்கு போண் செய்தான். நான் உடனடியாக, தந்தையவர்களுக்கு போண் செய்து, என் மகனுக்கு இந்த ஆடிட்டிங், வெற்றியாக முடிய வேண்டுமென்று வேண்டினேன். தந்தையவர்கள், நம்பிக்கையான வார்த்தைகள் கூறி ஜெபித்தார்கள்.

இந்த ஆடிட்டிங் ஒரு வாரம் நடந்தது. எவ்வளவோ பெரிய ஆபத்தான சூழ்நிலைகள் வந்த போதும், நேர்மையாளர்களை காப்பாற்றும் தெய்வம், என் மகனோடிருந்தார். ஆடிட்டிங் எல்லாம், வெற்றியாக முடிந்தது என்றும், கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும், மகன் போண் செய்தான். நல்லவர்களுக்கு ஈடேற்றமருளும் கடவுள், எங்கள் இக்கட்டான வேளையில், எப்போதும் உதவியாக வந்து காக்கிறார். அவருக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாய் இருப்போம்.

லீலாபாய் - சுண்டவிளை கருங்கல்.

7. பேயின் தொல்லை நீங்கியது - லில்லி – கழுவந்திட்டை.

கடந்த பதிமூன்று ஆண்டுகளாக, நான் பல கொடிய வியாதிகளால், அல்லலுற்றேன். திடீரென்று கைகால்விளங்காமல், ஸ்தம்பித்துப் போகும். டாக்டரிடம் சென்றால், எதுவும் இல்லை என்று கூறுவார்கள். சில வேளைகளில், அலறி சத்தம் போட்டு ஓடுவேன். இப்படி அடிக்கடி நடக்கும். பல ஜெபத்தலங்களுக்கும் போனேன். மருந்தாலும் விடுதலை இல்லை, ஜெபத்தாலும் விடுதலை இல்லை என்ற விரக்தியில், நான் வீட்டில் முடங்கி கிடந்தேன்.

இந்த துன்பம் எனக்கு மட்டுமல்ல, என் கணவன், இரண்டு பிள்ளைகள் என, எல்லாரையும் வாட்டி வதக்கியது. இந்த நிலையில், ஒரு சகோதரி என்னிடம் வந்து, CPM சபையில் நடக்கும் விடுதலை ஜெபத்தில் கலந்து கொள்ளுமாறு, அழைத்தார். நானும் என் அக்காளுமாக, ஜெபத்துக்கு வந்தோம். ஜெபத்தில் கலந்துகொண்ட நாள் முதல், எனக்குள் ஒரு மாற்றம் தென்பட்டது.

அன்றிலிருந்து, தினமும் நான், தந்தையவர்களிடம் போண் செய்து, ஜெபிப்பேன். தொடர்ந்து, ஆராதனைகளில் பங்கு கொள்வேன். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த “தாபோர்மலை தியானத்தில்” நாங்கள் குடும்பமாக கலந்து கொண்டோம். நாங்கள் இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றோம்.

என்னையும், என் குடும்பத்தையும் வாட்டி துன்புறுத்திய பேயின் தொல்லை நீங்கியது. கோடிய வியாதியின் கட்டுகள் அறுந்து போயின. குடும்பத்துக்கு சமாதானம் கிடைத்தது. பிள்ளைகள் அன்போடும் ஒற்றுமையோடும் இருக்கிறார்கள். கணவனுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவ்வளவு அற்புதம் செய்து, எங்களை மீட்டெடுத்த எங்கள் இயேசு அப்பாவுக்கு, நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாயிருப்போம்

லில்லி – கழுவந்திட்டை.

8. குழந்தை பாக்கியம் கிடைத்தது - மேழ்சிபாய் - சிதறால்.

என்னுடைய மருமகளுக்கு, பத்து வருடமாக குழந்தை இல்லை. நாங்கள் மருத்துவ ரீதியாக, எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தோம். எல்லாம் தோல்வியாகவே முடிந்தது.

கடைசியாக, CPM சபையில் நடைபெறும், விடுதலை ஆராதனையில் நாங்கள் பங்கு கொண்டோம். தந்தையவர்களிடம் தினமும் போண் வழியாகவும் ஜெபித்தோம். கடவுள் எங்கள் ஜெபத்தைக் கேட்டார். எங்கள் மருமகள், கருவுறும்படியாக ஆண்டவர் செய்தார்.

பிரசவ நேரம் வந்த போது, பல சிரமங்கள் இருப்பதாகவும், ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும் என்றும், மருத்துவர் கூறினார். நான் தந்தையவர்களுக்கு போண் செய்து, விபரத்தைக் கூறினேன். எளியவரின் ஜெபத்தை ஆண்டவர் புறக்கணிக்கவில்லை. என் மகளுக்கு, கடவுள் ஒரு சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டார். தாயும் குழந்தையுமாக நலமாக உள்ளனர். விசுவசித்தால் தேவ மகிமையை காணச் செய்யும் எங்கள் தெய்வத்துக்கு கோடான கோடி நன்றி.

மேழ்சிபாய் - சிதறால்.

9. குழந்தை கிடைத்தது - கமலபாய் - மரியகிரி.

என் மருமகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமலிருந்தது. இதனால் எங்கள் குடும்பம் மிகவும் கவலையில் இருந்தோம். பல மனவருத்தங்களும், மனஸ்தாபங்களும், குடும்பத்தில் உண்டாக ஆரம்பித்தது.

நான் CPM சபையில் ஆராதனையில் கலந்துகொண்டு, எங்கள் குடும்பத்தின் குறை போக்கும்படியாக, தொடர்ந்து ஜெபித்தேன். நல்ல ஆண்டவர், எங்கள் ஜெபத்தைக் கேட்டருளினார். என் மருமகளுக்கு, கருவுறும் பேறு கிடைத்தது.

மேலும், கருவுற்று சில மாதங்களில், கர்ப்பப்பையில் போதுமான தண்ணீர் இல்லை என்று, டாக்டர் பயமுறுத்தினர். நாங்கள் தளராமல், மீண்டும் ஆராதனையில் ஜெபத்தை ஏறெடுத்தோம். ஆண்டவர் எங்கள் ஜெபத்திற்கு நல்ல பதிலை தந்தார். குழந்தைக்கு எக்குறையும் இல்லாமல், என் மருமகளுக்கு ஒரு சுகப்பிரசவம் கிடைத்தது. தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். இவ்வளவு புதுமைகள் செய்த எங்கள் ஆண்டவருக்கு நாங்கள் சாட்சியுள்ள பிள்ளைகளாயிருப்போம்.

கமலபாய் - மரியகிரி.

10. ப்ரஷர் நோய் தீர்ந்தது - கிளீட்டஸ் - குளச்சல்

நான் ஒரு ப்ரஷர் நோயாளி. எனக்கு தலைச்சுற்று, தலை பாரம், வலி என, பல வியாதிகளால், துன்புறுவேன். மருந்துகள் எடுத்தாலும், பெரிய விடுதலை இல்லை.

இந்த நோய் இருப்பதால், நான் நம்பிக்கையோடு எந்த வேலைக்கு போக முடியாது. வழியில் விழுந்துவிடுவேனோ என்ற பயம், எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உண்டு.

ஒருநாள், நான் வெளியே ஒரு வேலை விஷயமாக போன போது, எனக்கு ப்ரஷர் அதிகம் ஆகி, நான் தலைச்சுற்றி, மயக்கமுற்றேன். பக்கத்திலிருந்தவர்கள் என்னை விழாமல் காப்பாற்றினார்கள்.

அந்த நேரம், நான் CPM சபையின் சங்கிலி ஜெபத்தை ஏறெடுத்துப் பார்த்தேன். இந்த வேளை ஆண்டவரே எனக்கு உதவியாக வாரும் என்று மன்றாடினேன். தந்தையவர்களுக்கும் போண் செய்து ஜெபித்தேன். அப்போதே என் நோய் நீங்கியது. அதற்கு பின்பு இன்றுவரை, நான் நலத்தோடேயே, இருக்கிறேன். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உனக்கு செவிசாய்ப்பேன் என்றவர், இன்றும் CPMசபையில் வாழ்கின்றார். தேவனுக்கே மகிமை.

கிளீட்டஸ் - குளச்சல்

 

My status
 நல்லவரோடு கடவுள்


 தின ஊழியங்கள்


மொபைல் வழி ஊழியம்


இணையதள ஊழியம்......


“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29


வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு, இளைப்பாறுதல்...... வார ஊழியங்கள்


 பைபிள் திருச்சபை


 கி.மு கி.பி


My status


 
 
copyrights © 2012 catholicpentecostmission.com