திருமறை வகுப்புகள்

Bible Classes

Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் இனியவரே! நீ குழந்தைப் பருவத்திலிருந்தே, திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய்; அது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால், உன்னை மீட்புக்கு வழிநடத்தும் ஞானத்தை அளிக்கிறது - 2திமொ 3:15.

விசுவாசத்தினால், நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவதற்காக, நம்மை, கிறிஸ்து இயேசுவிடம் கூட்டிச் செல்லும், வழித்துணையாய், திருச்சட்டம் செயல்படுகிறது - கலா 3:24.

திருமறையை வாசிப்பது வேறு, கற்றுக்கொள்வது வேறு. அதை கற்றுக் கொள்ளும் போது, நாம் “மீட்பிலும்”, “அருட்பொழிவிலும்” வளர்கிறோம். எனவே, ஆவிக்குரிய வாழ்வில், வாழ,வளர, ஒருவர் திருமறையை கற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தகப்பன் தன் பிள்ளைக்கு, திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது, வேதவிதி - இ.ச 6:6; 11:18-21.

ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியில், திருமறையை கற்றுக்கொள்வதும் ஒன்றே. ஏனெனில், ஆவியானவரோடுள்ள உறவு, நம்மில் வளர, வளர, அவரே நமக்கு எல்லாம் கற்றுத் தருவார் - 1யோவா 2:20,27. வளர்ச்சியில், நிறைவான உண்மையை நோக்கி, அவர் நம்மை வழிநடத்துவார் - யோவா 16:12-14.

1. நாம் எதற்காக, திருமறையை கற்றுக்கொள்ள வேண்டும்?

 • எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும், தவறான கருத்துக்களை நீக்க - மாற் 12:24.
 • போதிக்க - 2திமொ 3:16,17.
 • கண்டிக்க - 2திமொ 3:16,17.
 • சீர்திருத்த - 2திமொ 3:16,17.
 • இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில், மக்களைப் பயிற்றுவிக்க - 2திமொ 3:16,17.
 • திறமை நிரம்ப பெற - 2திமொ 3:16,17.
 • எல்லா நற்செயல்களையும் செய்யும் தகுதி பெற - 2திமொ 3:16,17.
 • நன்மையானதை தேர்ந்து தெளிய - உரோ 2:18.
 • கற்க, கடைபிடிக்க, கற்பிக்க - எஸ்றா 7:10, நாம் திருமறையை கற்றுக் கொள்ள வேண்டும்.

2. திருமறையை எப்படி கற்க வேண்டும்?

 • பைபிளை ஒருவரின் துணையோடு கற்க வேண்டும் - தி.ப 8 :30,31.
 • பொருள் திரித்துக் கூறுபவர்களிடம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - 2பேது 3 :16.
 • தன் சொந்த விளக்கம் கொடுப்பவரோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - 2பேது 1:20.
 • ஆவிக்குரிய மனிதர்களால், பைபிளுக்கு விளக்கம் பெற வேண்டும் - 2பேது 1:21.
 • விசுவாசியிடமிருந்து பைபிளை கற்றுக் கொள்ள வேண்டும் - உரோ 1:16.
 • தேர்ச்சி மிக்கவரிடம் பைபிளை கற்றுக் கொள்ள வேண்டும் - தி.ப 22:3.
 • குழந்தைப் பருவத்திலேயே, பைபிளைக் கற்க வேண்டும் - 2திமொ 3:15.

ஆம் அருமையானவர்களே! திருமறையை எப்படி கற்க வேண்டுமென்று கண்டோம். இப்போது, அவை ஒவ்வொன்றையும், விளக்கமாகக் காண்போம்.


I. பைபிளை ஒருவரின் துணையோடு கற்க வேண்டும்:

பைபிள் - பல புத்தகங்கள் :

 • பைபிள் ஒரு புத்தகம் அல்ல, பல புத்தகங்களின் கோர்வை.
 • பைபிளில் எல்லாப் புத்தகங்களிலும், ஒரு வெளிப்படையான தொடர்ச்சியைக் காண முடியாது.
 • பல தலைப்புகளின் கீழ், பைபிளைப் பிரித்துக் காண்கிறோம். (உ.ம்) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, அதற்குள்ளேயே சரித்திரப்புத்தகங்கள், இறைவாக்கு புத்தகங்கள், உபதேசப் புத்தகங்கள் போன்றவை.
 • ஒவ்வொரு பிரிவுக்கும், ஒரு தனிப்பட்ட பாடம் உண்டு.
 • அந்த பாடத்தை அறியாமல், அந்த பிரிவின் கீழ் வரும், புத்தகங்களின் விளக்கம் அறிய முடியாது.

பைபிள் - பல காலங்களாக எழுதப்பட்டது :

 • பைபிள் புத்தகங்கள் பல காலங்களில், பல ஆசிரியர்களால், பல சரித்திரப் பின்னணியில், எழுதப்பட்டவை.
 • இவை ஒவ்வொன்றைப்பற்றியப் பாடத்தையும் அறியாமல், எழுதப்பட்டதன் விளக்கம் தெரியாது.
 • பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வழக்கத்திலிருந்த, எபிரேய, கிரேக்க, அராமேய, மொழிகளில் எழுதப்பட்டவை.
 • அந்த மொழிகளைப் பற்றிய தெளிவான, அறிவு இல்லாவிடில், சரியான விளக்கம் கூறுவது கடினம்.

நம்முடைய பைபிள் மொழிபெயர்ப்பே:

 • இன்று, நம் கைகளில் இருப்பவை, பைபிள் மொழிபெயர்ப்புக்களே.
 • மொழிபெயர்ப்புகள், மூலமொழியின் அர்த்தத்தை முழுமையாகத் தராது.
 • மொழிபெயர்ப்புக்களிலும், மொழிக்கு மொழி வித்தியாசம் இருக்கின்றன.
 • மொழிபெயர்ப்பாளர்கள், சரியாக இல்லையேல், மொழிபெயர்ப்புகளில், பிழை வர இடமுண்டு.
 • கடவுளின் ஆவியானவர், மனிதரின் உதவி கொண்டு எழுதிய பைபிளுக்கு, வெறும் மனித அறிவால் மட்டும், மொழிபெயர்ப்பு செய்வதில் ஆபத்து உண்டு.

பைபிள் - எழுதப்பட்டதன் நோக்கம்:

 • பைபிள் எழுதப்பட்டதன் நோக்கம் அறியாமல், பைபிளை முழுமையாக கற்றல், கடினமானது.
 • பைபிளில், எதைப் படிக்க வேண்டும்? எதை தேட வேண்டும்? எதை தேடக் கூடாது? என்ற வரையறை தெரியாதிருந்தால், “சாறை விட்டு சக்கையைப் பிடிக்கும்” நிலை உண்டாகும்.
 • மேலும், பைபிள் உருவான சரித்திரத்தையும், புத்தகங்களின் எண்ணிக்கைப் பற்றிய அறிவும், போதிய அளவுக்கு இல்லையேல், பைபிள் என்ற பெயரில்; பல நூற்கள் நம்மை ஏமாற்றலாம்.
 • இதற்கெல்லாம், பைபிளைப்பற்றி, நன்கு அறிந்தவர்களின் துணை, நமக்கு நிச்சயம் வேண்டும்.

II.பைபிளை பொருள் திரித்துக் கூறுபவர்களிடம் எச்சரிக்கை:

பைபிளை பொருள் திரித்துக் கூறுதல் என்றால் அர்த்தம் என்ன?

 • இருக்கும் பொருளை விட்டு, வேறு பொருளைக் கூறுதல்.
 • ஆத்மீக பொருளை விட்டு, லௌகீக பொருளை கூறுதல்.
 • விசுவாசத்தைக் குறைக்கச் செய்யும், பொருளைக் கூறுதல்.
 • ஆத்மீகத்தை பின்னடையச் செய்யும் பொருளைக் கூறுதல்.
 • அதாவது, தங்களுடைய சுயநலங்களையும், கொள்கைகளையும், புகுத்தி, கேட்பவரை தங்கள் வசப்படுத்தும் பொருள் திரிப்போர் பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

III.பைபிளுக்கு தம் சொந்த விளக்கம் அளிப்பவரோடு எச்சரிக்கை:

 • சிலர், அவரவருடைய சொந்த கருத்தை, நல்ல எண்ணத்தோடேயே கொடுப்பார்கள்.
 • ஆனால், பைபிளுக்கு முழு விளக்கமும் அதில் இருக்காது.
 • மேலும், அந்த விளக்கங்கள், அவரவர் கண்ணோட்டத்தில் மட்டும் கொடுக்கிற, விளக்கமாகவும் இருக்கும்.
 • சிலவேளை, தங்களுடைய சொந்த ஆத்மீக நலனுக்கு மட்டும், பயன்பட்ட விளக்கமாக கூட இருக்கலாம்.
 • நோக்கம் நல்லதாக இருந்தாலும், விளக்கம் முழுமையாக இருக்காது.
 • சிலரது “ஆத்மீக சிந்தனைகளை”, பைபிளின் “முழு விளக்கம்”என்று எடுத்துக்கொள்ள முடியாது.

IV.ஆவிக்குரிய மனிதர்களால் விளக்கம் பெற வேண்டும்:

 • பைபிள் ஆவிக்குரிய மனிதர்களால் எழுதப்பட்டது.
 • எனவே வெறும் படிப்பறிவு, போதிய விளக்கத்தை தராது.
 • ஆவியானவர் எழுதிய புத்தகத்துக்கு, ஆவியானவரே, விளக்கம் கொடுக்க வேண்டும்.
 • மனிதனுடைய சொந்த அறிவுக்கு மேற்பட்ட தெய்வீக ஞானம், பைபிளில் நிறைந்திருக்கிறது.
 • எனவே அந்த ஞானத்தோடு தொடர்புடையவர்க்கே பைபிளின் முழு விளக்கத்தையும் தர முடியும்.

V.பைபிளை விசுவாசியிடமிருந்து, கற்றுகொள்ள வேண்டும்:

 • பைபிள் விசுவாசிகளால் எழுதப்பட்டது.
  • பரிசுத்த ஆவியால் தூண்டப்பெற்று, கடவுளின் ஏவுதலின் படி செயல்படுகிறவன் விசுவாசி.
  • அனைத்திலும், கடவுளுடைய கரத்தை, காண முடிந்தவன் விசுவாசி.
  • இத்தகைய விசுவாசிகளால், பைபிள் எழுதப்பட்டது - 2திமொ 1:14.
 • பைபிள் விசுவாசிகளுக்காக, எழுதப்பட்டது.
  • விசுவசிக்கும் ஒவ்வொருவனுக்கும் பைபிள் மீட்பளிக்க, கடவுளின் வல்லமையாகும் - உரோ 1:16.
  • எனவே பைபிள் விசுவாசிகளுக்காக, எழுதப்பட்டது.
  • விசுவசிக்க நம்மை அழைப்பது, பைபிள்.
  • விசுவசிக்க நம்மை தூண்டுவது பைபிள்.
  • எனவே, பைபிளை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழும் விசுவாசியே, பைபிளுக்கு முழுமையான விளக்கம் தர முடியும்.

VI.தேர்ச்சி மிக்கவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்:

 • தேர்ச்சி என்று சொல்லும்போது,
 • பைபிளின் மொழி 2. பைபிளின் கால சரித்திரம் பைபிளின் எழுத்து முறை 4. பைபிள் உருவான வரலாறு, போன்றவற்றைப் பற்றிய போதிய அறிவு படைத்தவராக, இருக்க வேண்டும்.
 • அத்தகையோராலேயே பைபிளைப் பற்றி, பொதுவாக எழுகின்ற ஐயப்பாடுகளை நீக்க முடியும்.
 • விஞ்ஞான உலகில், வெறும் மனித அறிவால் மட்டும், பைபிளை ஆய்ந்து பார்ப்பவர்கள், எழுப்பும் ஐயப்பாடுகளை நீக்க, தேர்ச்சி மிக்கவர்களாலேயே முடியும்.
 • விசுவாசம் அறிவுக்கு முரண்பட்டதல்ல. மாறாக மேற்பட்டது.
 • அறிவால் புரிந்து, விளக்கம் தர முடியாத மறைபொருட்களுக்கு, விசுவாசிகளால் விளக்கம் தர முடியும்.

VII.பைபிளை குழந்தைப் பருவத்திலேயே கற்க வேண்டும்:

 • குழந்தைப் பருவம் என்பது, உலக தீட்டுப்படாத அல்லது, மாசுபடாத பருவம்.
 • அந்த பருவத்தில் வேத சத்தியங்கள் உள்ளே நுழைக்கப்பட்டால், வளரும் பருவத்தில் உண்டாகும், தவறான போதனைகள் அவர்களுக்கு உள்ளே புக முடியாது.
 • வளர்ச்சியில் தான், ஒரு மனிதர் உருவாக்கப்படுகிறார்.
 • பகுத்தறியும் காலம் வரும்போது, தீய போதனைகள் தாமாகவே நுழையும். எனவே வெகு சீக்கிரத்தில், ஒருவர் தீய வழியிலே உருமாறுகிறார்;
 • ஆனால் ஏற்கெனவே வேத அறிவால் நிறைந்த ஒருவர், பகுத்தறியும் பருவம் வரும்போது, தாமாகவே வேத வழியில் உருமாறுகிறார்.
 • தீய உபதேசங்கள், உட்புகவிடாமல், வேத உபதேசம் தடுத்து விடுகிறது.
 • எனவே தான், சிறு குழந்தையிலேயே, வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்; என்று, நாம் சொல்கிறோம்.

அன்பரே! இந்தப் பகுதியைப் படித்தீர்கள். மேலும் வேதபாடத்தை தொடர்ந்து இந்தப் பகுதியில் காணலாம். “வகுப்பறைக்கு” உங்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் கற்றுக்கொள்ளும் வேதபாடம், உங்களுக்கும், உங்கள் தலைமுறைக்கும், ஆயிரம் காலம் பயன் தரும் தேவ கிருபையாயிருக்கும்.

“ஆதி ஆவிக்குரிய சபையில், விசுவாசிகள், இறைவார்த்தையை, மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, திருத்தூதர்கள் போதிப்பது, மறை நூலுடன் ஒத்துள்ளதா என்று, நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர்” – தி.ப 17:11.

 

My status
 பைபிள் விளக்கம்


 பைபிள் திருச்சபை


..........


 கி.மு கி.பி நல்லவரோடு கடவுள்


கோயிலில் மறைநூலைப் போதித்த பாலன் இயேசு – லூக் 2:46
......ஆவிக்குரிய இயேசு, ஆலயத்தில் போதித்தார் - லூக் 4:18,19.
......இயேசுவின் மலைப்பொழிவு – மத் 5,6,7 அதிகாரங்கள்
......இயேசு உவமைகளால் போதித்தார் - மத் 13 –ம் அதிகாரம்“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15
......நல்ல சமாரியன் உவமை – லூக் 10:25-37 மாத ஊழியங்கள்

 சாட்சிகள்


My status
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com