ஆண்டு ஊழியங்கள்

Yearly Ministries

சிறப்பு திருவிழாக்கள்

CPM சபையில், ஆண்டுக்கு ஒருமுறை, பல சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

 1. புத்தாண்டுப் பெருவிழா - ஜனுவரி 1

ஆண்டு முழுவதும், உமது நலத்தால் முடிசூட்டுகிறீர் - தி.பா 65:11, என்று தாவீது கூறுவார். இயேசு புதிய ஆண்டைப் பற்றி கூறும் போது, சுற்றிலும் கொத்தி எருபோடும் ஆண்டு என்றார் - லூக் 13:8.

எனவே, ஆண்டு முழுவதும், ஆசீர்வாதமாக இருக்கும்படியாக, புத்தாண்டில், சிறப்பு ஆராதனைகளைச் செய்கிறோம். அனைத்து CPM குடும்பங்களையும், ஒன்று சேர்த்து, இதை ஒரு குடும்ப விழாவாகவே நடத்துகிறோம்.

அந்த ஆண்டு முழுவதற்கும், ஆண்டவரின் “வாக்குத்தத்தம்” என்ன; அந்த வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்ள, கடைபிடிக்க வேண்டிய, கடவுளின் “கட்டளை” என்ன, என்பதைக் கண்டறிந்து, அதனை, “வாக்குத்தத்த அட்டை”களாக, ஆராதனையில் பங்குகொள்ளும் ஒவ்வொருவருக்கும், அளிக்கிறோம். இவ்வாறு, CPM சபையில், புத்தாண்டு, ஆசீர்வாதமாக ஆரம்பமாகிறது.

 2. விபூதி புதன் :

நினிவே மக்கள், அரசன் முதல் குடிகள் வரை, தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக, நோன்பிருந்து ஜெபித்தார்கள் - யோனா 3:6-9. இவ்வாறு, ஆண்டுக்கு ஒருமுறை, விசுவாசிகள் நோன்பிருந்து, பாவக்கடன் தீர்க்கும் வழக்கம், பைபிள் திருச்சபையில், தொடங்கியது - தி.ப 27:9.

உண்ணா நோன்புக்கென, நாட்களைக் குறித்து, சாம்பல் பூசி, கோணி உடுத்தி, நோன்பை ஆரம்பிக்க, யோவேல் இறைவாக்கினர் பணித்தார் - யோவே 1:13,14. விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்வுக்கு, இடையூறாக இருக்கும், அலகையின் எல்லா வஞ்சகத் தந்திரங்களை முறியடிக்க - மாற் 9:29, CPM சபையில், நாற்பது நாட்கள், நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அந்த நோன்பு காலத்தில், அதற்குரிய சிறப்பு வழிபாடுகள், நடைபெறுகின்றன.

 3. பரிசுத்த வாரம்

இயேசு எருசலேமை நோக்கி சென்ற, இறுதிப்பயணம் தொடங்கி - மத் 21:1-11, அவருடைய பாடுகள், மரணம் - மத் 26:36-27:61, இயேசுவின் உயிர்ப்பு – மத் 27:62-28:20 என, அனைத்தின் மீட்பின் நிகழ்ச்சிகளையும், ஒன்றாக நினைவுகூர்ந்து, கொண்டாடுவது தான், பரிசுத்த வாரம்.

1. குருத்து ஞாயிறு ஆராதனை:

நாற்பது நாட்கள் நோன்பு முடிகின்ற அன்று, ஞாயிற்றுக்கிழமை, குருத்து ஞாயிறை கொண்டாடுகின்றோம். காலையில் ஒன்பது மணிக்கு, விசுவாசிகள் கூடி, குருத்து ஞாயிறு பவனி நடைபெறும். முடிவில், மறை உரை, பலிவிருந்து என, அனைத்து வழிபாடுகளும், விமரிசையாக நடத்தப்படும். “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” - யோவா 11:16, எனும் வசனத்தை தியானித்து, பரிசுத்த வாரம் ஆரம்பமாகும்.

2. புனித வியாழன்:

பாதம் கழுவும் அன்பை வெளிப்படுத்திய இயேசு, அதையே தம்முடைய சீடரும் செய்ய வேண்டுமென்று, கட்டளையிட்டார் - யோவா 13:14,15. இது, புனித வியாழனின் முதல் கட்டளை. நான் உங்களுக்கு அன்பு செய்ததுபோல, நீங்களும், ஒருவர் மற்றவரிடம், அன்பு கூருங்கள் - யோவா 13:34. இது, புனித வியாழனின் இரண்டாவது கட்டளை. சோதனைக்கு உட்படாதபடி, விழித்திருந்து ஜெபியுங்கள் - மத் 26:41. இது, புனித வியாழனின் மூன்றாவது கட்டளை. இதைப் பெற்று உண்ணுங்கள், இதை வாங்கிப் பருகுங்கள் - மத் 26:26,27. இது புனித வியாழனின் நான்காவது கட்டளை. எழுந்திருங்கள், இவ்விடத்தை விட்டுப்போவோம் - மத் 26:46. இது புனித வியாழனின் ஐந்தாவது கட்டளை.

இந்த சத்தியங்களைக் கருத்தில் கொண்டு, புனித வியாழனின் சடங்குகள் நடைபெறும். பெரிய வியாழன் மாலையில், 1. பாதம் கழுவும் சடங்கு 2. பலிவிருந்து, 3. நற்கருணை ஸ்தாபித்தல், 4. முழு இரவு ஜெபம் என, அனைத்து ஆராதனையிலும், விசுவாசிகளை ஈடுபட வைத்து, அவர்களை புனித வெள்ளி ஆராதனைக்கு, ஆயத்தப்படுத்துகிறோம்.

3. புனித வெள்ளி:

இயேசுவுக்கு ஓசான்னா என்று பாடி, எருசலேமுக்குள் அவரை வரவேற்ற மக்கள் கூட்டம் - மத் 21:1-11; எங்களுக்குப் பரபாஸ் போதும், இயேசுவை சிலுவையில் அறையுங்கள் என்று கூக்குரலிட்டது - மத் 27:21,22. மூன்று முறை, இயேசு குற்றமற்றவர் என்று, பிலாத்து கூறினான் - யோவா 18:38, 19:4,6. இறுதியில், அவனே இயேசுவை சிலுவையில் அறையத் தீர்ப்பிட்டான் - யோவா 19:16. சிலுவையின் பாதையெங்கும், இயேசுவின் அன்பு மொழிகளும், உபதேச மொழிகளும், தூவப்பட்டன - லூக் 23:27-31.

சிலுவையின் ஏழு பொன்மொழிகள், மீட்பரின் இறுதி ஆசீராயின. 1. என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர் - மத் 27:46; 2. தந்தையே இவர்களை மன்னியும் - லூக் 23:34; 3. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் - லூக் 23:43; 4. அம்மா! இதோ உம் மகன் - யோவா 19:26,27; 5. தாகமாயிருக்கிறது - யோவா 19:28; 6. எல்லாம் நிறைவேறிற்று - யோவா 19:30; 7. தந்தையே! உம் கையில், என் உயிரை ஒப்படைக்கிறேன் - லூக் 23:46.

இவ்வாறு, இயேசுவின் புனித மரணத்தை, CPM சபை தியானிக்கின்றது. 1. பவனி வரல், 2. தாழ்பணிந்து தொழல், 3. பாடுகளின் சிறப்பு வாசகம், 4. மறை உரை, 5. விசுவாசிகளின் மன்றாட்டு, 6. திருச்சிலுவை ஆராதனை, 7. நற்கருணைப் பந்தி என, CPM சபையில், புனித வெள்ளி ஆராதனைகள் நடந்தேறுகின்றன.

4. சிறப்பு சிலுவைப்பாதை :

இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தப் பாடுகளை, நினைவுகூரும் இறுதிச்சடங்காக, ஆலய வளாகத்தில், இயேசுவுடைய சிலுவையின் பாதையில், பதினான்கு இடங்களை, விசுவாசிகள் பவனி வந்து தியானிப்பார்கள். இந்த பாரம்பரிய வழிபாடு, “விடுதலையின் சிலுவைப்பாதை” என்று வழங்கப்படுகிறது. எசா 53 - ஆம் அதிகாரத்தை மையமாக வைத்து, இயேசு நம் பாவத்தையும், பாடுகளையும், சுமந்து தீர்த்தார் - எசா 53:4,12 என்றும், நம்மை விடுவிக்க, அவர் தண்டிக்கப்பட்டார் - எசா 53:5, என்றும் கூறி, இந்த சிலுவைப்பாதை வழிபாடுகளால், விசுவாசிகள், பாவ மற்றும் பாடுகளின் கட்டுக்களினின்று விடுதலை அடைகின்றனர்.

5. இயேசுவின் உயிர்ப்பு:

இறை விருப்பத்தை மீறியதால், “பாவம்” உண்டானது - 1யோவா 3:4. அந்த பாவத்தின் விளைவு “சாவு” - தொ.நூ 2:17. பாவத்தின் சம்பளம் “மரணம்” - உரோ 6:23.

இயேசு, “பாவங்களைப் போக்கும்” தேவ ஆட்டுக்குட்டி - யோவா 1:29. இயேசு தம் சிலுவை மரணத்தால், நம்மை பாவங்களிலிருந்து மீட்டார் - மத் 20:28; 1திமொ 1:15. இயேசு, நம் பாவங்களைப் போக்கும் பரிகார பலி - 1யோவா 2:2.

இயேசு, தம் மரணத்தால், பாவங்களைப் போக்கி, மரணத்தை அழித்தார் - 1கொரி 15:26. மரணம் அழியும் போது, “உயிர்ப்பு” தாமாக வருகிறது. நம் பாவ இயல்புகளை, நாம் இயேசுவோடு சிலுவையில் அறையும் போது, “நாமும் அவரோடு இறக்கிறோம்”. நாம் அவரோடு இறந்தால், அவரோடு உயிர்ப்போம் - உரோ 6:5,6. உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே. என்னிடம் “விசுவாசம்” கொள்பவர், இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது, என்னிடம் விசுவாசம் கொள்ளும் எவரும், என்றுமே சாகார் - யோவா 11:25,26.

“பாவத்துக்கு இறப்பது”, “விசுவாசம்”, ஆகிய இரண்டும், உயிர்த்த வாழ்வுக்கு வழி எனும் சத்தியத்தை வலியுறுத்தி, CPM சபை, உயிர்ப்பு விழாவைக் கொண்டாடுகிறது.

உயிர்ப்பு ஞாயிறன்று, காலையில் ஒன்பது மணிக்கு, உயிர்ப்பு பாடல் ஆராதனையோடு, வழிபாடுகள் ஆரம்பமாகி, உயிர்ப்பு பலிவிருந்தோடு, விழா முடிவடையும்.

 4. பெந்தக்கோஸ்து பெருவிழா:

ஆதியில், மனிதனைக் கடவுள் உண்டாக்கி, அவனுக்குள் தன் ஆவியைப் பொழிந்தார் - தொ.நூ 1:2, 2:7. அந்த ஆவியை, அவன் தனக்குள் தக்க வைத்துக் கொள்ள, கடவுள், தன்னுடைய விருப்பங்களின்படி வாழ வேண்டுமென்று, அவனுக்கு கட்டளையிட்டார் - தொ.நூ 2:16,17. ஆனால், அந்தக் கட்டளையை மனிதன் மீறினான் - தொ.நூ 3:5,6. கட்டளையை மீறுதலே பாவம் - 1யோவா 3:4. இவ்வாறு, ஒரு மனிதனால், பாவம் இவ்வுலகுக்குள் வந்தது - உரோ 5:12. பாவம் செய்த மனிதனிடமிருந்து, கடவுள் தம் ஆவியை, திரும்ப பெற்றுக் கொண்டார் - தொ.நூ 6:3. ஆனால், என்றேனும் உலகின் பாவம் போக்கப்படும் நாளில், மீண்டும் அந்த ஆவியை, மனிதனுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று, கடவுள் திட்டம் கொண்டார் - தொ.நூ 3:15.

எனவே, தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, “பாவம் போக்கும்” பரிகார பலியாக, கடவுள் அனுப்ப திட்டமிட்டார் - எசா 53. அவர் வந்து, பாவம் போக்கும், பாவத்தின் இறுதி நாளில் - யோவே 2:29, மாந்தர் யாவர் மேலும், மீண்டும் தன் ஆவியைப் பொழிவேன் என்று, கடவுள் வாக்களித்தார் - யோவே 2:28,29.

அவ்வண்ணமே, இயேசு உலகின் பாவங்களைப் போக்க வந்தார் - 1திமொ 1:15. அவர் சிந்திய இரத்தத்தால், உலகத்துக்கு பாவ மன்னிப்புக் கொடுத்தார் - எபி 9:22. இயேசு, உலகின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, தம்மைத் தாமே, பலியாகக் கொடுத்தார் - எபி 9:28.

இவ்வாறு, பாவம் போக்கப்பட்டபின், தந்தை வாக்களித்த ஆவியை அனுப்பி வைப்பேன் என்று, இயேசு கூறினார் - யோவா 14:26; 15:26; 16:7. இயேசு இறந்து, உயிர்த்து, விண்ணுக்குச் செல்லுமுன், தம் சீடர்களை, ஆவிக்காக காத்திருக்கச் சொன்னார் - லூக் 24:49; தி.ப 1:4. அவ்வண்ணமே, சீடர்களும், தந்தை வாக்களித்த ஆவிக்காக, காத்திருந்தார்கள் - லூக் 24:53; தி.ப 1:14.

யூதர்களின் “பெந்தக்கோஸ்து” எனும் நாள் வந்த போது, திடீரென்று, கொடுங்காற்று வீசுவது போன்று, ஓர் இரைச்சல், வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும், நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள், ஒவ்வொருவர் மேலும், வந்து அமர்ந்ததை, அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் - தி.ப 2:1-4.

ஏதேன் தோட்டத்தில், கீழ்படியாமையால் இழந்த ஆவியை - தொ.நூ 6:3, கடவுள், தமக்கு கீழ்படிபவர்களுக்கு, மீண்டும் அளிக்கிறார் - தி.ப 5:32; கலா 3:14; லூக் 11:13.

இந்த பாஸ்கா திருநிகழ்வை, CPM விசுவாசிகள் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் பொருட்டு, உயிர்ப்பு நாள் தொடங்கி, பெந்தக்கோஸ்து நாள் வரையிலான, பாஸ்கா காலத்தில், விசுவாசிகள், தூய ஆவியைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகிறார்கள். மனம் மாறி, பாவ மன்னிப்பு பெற்று, தூய ஆவியைப் பெறும், பேதுருவின் கட்டளையை - தி.ப 2:38, CPM சபை, கடைபிடிக்கிறது.

பாஸ்கா காலத்தில், மனம் திரும்புதல், பாவமன்னிப்பின் அனுபவங்களைப் புதுப்பிக்கும் வழிநடத்தலை, விசுவாசிகளுக்கு, CPM சபை தருகிறது. இவ்வாறு, தங்கள் “மீட்பை” புதுப்பித்துக்கொண்ட விசுவாசிகள், பெந்தக்கோஸ்து நாளன்று, தாங்கள் பெற்றுக்கொண்ட, “அபிஷேகத்தையும்”, புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆண்டுதோறும் இவ்விழா, CPM சபையில், அதிக சிறப்போடு கொண்டாடப்படுகிறது.

 5. மரியன்னை பெருவிழா - ஆகஸ்ட் 15

வேதம் போற்றும், அன்னை மரியாளை, CPM சபையும் போற்றுகிறது. மரியன்னை பக்தியை, நாம் வளர்ப்பதில்லை. ஆனால், நம் ஆவிக்குரிய வாழ்வுக்கு, அன்னைமரியை ஒரு முன்மாதிரியாக, விசுவாசிகளுக்கு காட்டுகிறோம்.

CPM விசுவாசிகள், அன்னைமரியாளோடு வைத்துக்கொள்ள வேண்டிய உறவு: 1. கானாவூர் திருமண வீட்டில், விருந்தினர், மரியாளோடு வைத்திருந்த உறவு - யோவா 2:1-10; 2. திருமுழுக்கு யோவானின் அன்னை எலிசபெத், மரியாளோடு வைத்திருந்த உறவு - லூக் 1:39-45; 3. மீட்பர் இயேசுவைப் பெற்று, வளர்க்க, யோசேப்பு மரியாளோடு கொண்டிருந்த உறவு - மத் 1:18-25; 4. கல்வாரியில், இயேசுவின் சீடரான யோவான், மரியாளோடு கொண்ட உறவு - யோவா 19:26-27.

இந்த உறவை வளர்க்கும் வண்ணமாக, ஆண்டின் எல்லா ஆகஸ்ட் மாதமும், பதினைந்தாம் நாளன்று, அன்னை மரியாளின் விழாவை CPM சபை, மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றது.

 6. இறந்த ஆத்துமாக்கள் விழா - நவம்பர் 2

பைபிள் கூறும், “நரகம்” தான், நாம் கூறும் உத்தரிக்கும் ஸ்தலம். திருமறை கூறும், நரகத்தில் நாம் காண்பது, 1. அணையா நெருப்பு - மத் 25:41; 2. அழுகையும் பற்கடிப்பும் - மத் 25:30; 3. புடமிடுதல் - தானி 12:2-10; 4. தண்டனை - மத் 23:33.

இவற்றின் பொருள் வேதத்தில் என்ன: 1. நெருப்பு - பரிசுத்தப்படுத்த - எசா 48:10; 2. துன்பமும் பரிசுத்தப்படுத்த - எபி 12:7-10; 3. புடமிடுதல் - அழுக்கைப் போக்க - எசா 1:25; 4. தண்டனை - திருத்த - எபி 12:7, நீ.மொ 3:11,12.

இப்படிப் பார்க்கும் போது, நரகம் என்பது, மனிதனுக்கு நம்பிக்கை இழந்த ஒரு இடமல்ல. அங்கே, இன்னும் மீட்பின் நம்பிக்கை உள்ளது. நரக தண்டனை, குற்றம் செய்த மனிதனை திருத்தி மீட்பதற்கே. எனவே, நரகம் என்பது, இறக்கும் போது, பாவத்தில் இறக்கும் ஒருவர், தன் பாவங்களுக்காக, தண்டனை பெற்று திருந்தி, மீண்டும் மீட்பை பெறும் இடமே.

எனவே, இவ்வுலகில் பாவக்கட்டில் இருப்பவர்களுக்காக, ஜெபிக்கும் நாம், இறந்தவர்கள் பாவக்கட்டினின்று விடுதலை அடையவும், ஜெபிக்க வேண்டும். பாவி சாக வேண்டுமென்பதல்ல, அவன் மனம் திரும்பி வாழ வேண்டுமென்பதே, கடவுளின் விருப்பம் - எசே 18:23. எனவே, உத்தரிக்கும் ஸ்தலத்தில் தங்கியிருந்து, பாவக்கடன் தீர்த்து, பாவி விடுதலை அடைய, நம்முடைய ஜெப உதவி தேவை. CPM சபை, இந்த விசுவாச சத்தியத்தை, இந்நாட்களில் போதித்து, விசுவாசிகளை, இறந்த ஆத்துமாக்களுக்காக, ஜெபிக்கத் தூண்டுகிறது.

 7. கிறிஸ்து பிறப்பு விழா - டிசம்பர் 25.

பைபிளில், கிறிஸ்து பிறப்பு விழாவை, மூன்று கட்டங்களாக பார்க்கிறோம். 1. கிறிஸ்து பிறப்புக்கு முன், 2. கிறிஸ்து பிறப்பின் வேளையில், 3. கிறிஸ்து பிறப்புக்கு பின். இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் சேர்த்தே, நாம் கிறிஸ்மஸ் விழா என்கிறோம். இதை பைபிளில், “கிறிஸ்து பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள்” - மத் 1:18, என்று காண்கிறோம்.

A. கிறிஸ்து பிறப்புக்கு முன் நிகழ்வுகள்:

  • I. 1. மரியாவுக்கும், யோசேப்புக்கும், மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்ததால், யோசேப்பு கலக்கமுறல் - மத் 1:18,19; 2. வானதூதர் வந்து, யோசேப்பின் ஐயப்பாட்டைத் தீர்த்ததால், யோசேப்பு மரியாளை ஏற்றுக்கொள்கிறார் - மத் 1:24; 3. மரியாளிடம் பிறக்கப்போகும் குழந்தை, மீட்பராகிய மெசியா என்று, அவருக்கு அறிவிக்கப்பட்டது - மத் 1:20-23.
  • II. 1. இயேசுவின் பிறப்பைப் பற்றி, மரியாளுக்கு வானதூதர் அறிவிக்கிறார் - லூக் 1:28-38; 2. எலிசபெத்துக்கும், அவருடைய வயிற்றிலிருந்த குழந்தை யோவானுக்கும், மரியாளின் வாழத்தால், ஆவியின் அருட்பொழிவு கிடைக்கிறது - லூக் 1:39-45; 3. தனக்குள் மீட்பர் வளர்கிறார் என்ற உணர்வோடு, மரியாள் பாடுகிறார் - லூக் 1:46-55.
  • III. 1. உரோமையர் ஆட்சியின், உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின் காரணமாக, கலிலேயாவில் வாழ்ந்த யோசேப்பும், நிறை கர்ப்பிணியான மரியாளும், யூதேயாவிலுள்ள, பெத்லேகேமுக்கு வருகிறார்கள் - லூக் 2:1-5. a. முதல் நிகழ்ச்சியில் இடம் பெற்ற ஆட்கள் - வானதூதர், மரியாள், யோசேப்பு, எலிசபெத், திருமுழுக்கு யோவான் ஆகியோர். b. முதல் நிகழ்ச்சி நடைபெற்ற இடங்கள் : 1. கலிலேயாவிலுள்ள நாசரேத்து, 2. யூதேயாவிலுள்ள பெத்லேகேம், 3. கடந்து வந்த வழிகள்.

B. கிறிஸ்து பிறப்பின் நிகழ்வு:

1. அங்கே, மரியாளுக்கு பேறுகாலம் வந்தது - லூக் 2:6; 2. மரியாள், தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்; 3. குழந்தையை மாட்டுத்தொழுவிலுள்ள, தீவனத் தொட்டியில் கிடத்தினர்; 4. ஏனெனில், அவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை - லூக் 2:7.

a. இரண்டாவது நிகழ்ச்சியில் இடம் பெற்ற ஆட்கள் - மரியாள், யோசேப்பு. b. இரண்டாவது நிகழ்ச்சி நடைபெற்ற இடங்கள் : 1. யூதேயாவிலுள்ள பெத்லேகேம், 2. மாட்டுத்தொழுவம், 3. இடம் கிடைக்காத விடுதி.

C. கிறிஸ்து பிறப்புக்கு பின் நிகழ்வுகள்:

a. மாட்டுத்தொழுவில்:

  • I. 1. அப்பகுதியில், இடையர்கள் தங்கி, இரவெல்லாம், தங்கள் இடைக்கு காவல் காத்துக் கொண்டிருந்தனர் - லூக் 2:8; 2. வானதூதர் அவர்களுக்குத் தோன்றினார்கள், 3. அப்போது, ஆண்டவரின் மாட்சி, அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது, 4. மிகுந்த அச்சம், அவர்களை ஆட்கொண்டது - லூக் 2:9.
  • II. 1. வானதூதர் அவர்களிடம் பேசினர் - மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் - லூக் 2:10; 2. மெசியா எனும் மீட்பர், தாவீதின் ஊரில் பிறந்துள்ளார் - லூக் 2:11; 3. குழந்தையை தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பர் - லூக் 2:12.
  • III. 1. வானதூதர் பேரணி, கடவுளைப் புகழ்ந்து பாடியது, 2. உன்னதத்தில், கடவுளுக்கு மாட்சி உண்டாகட்டும், 3. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகட்டும் - லூக் 2:13,14.
  • IV. 1. வானதூதர் விண்ணகம் சென்ற பின்பு, ஆட்டிடையர் தமக்கு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியை, பெத்லேகேமுக்குப் பார்க்கப் போவோம் என்றனர் - லூக் 2:15. 2. அங்கே, மரியாவையும் யோசேப்பையும், தீவனத்தொட்டியில் குழந்தையையும் கண்டார்கள் - லூக் 2:16.
  • V. 1. பின்பு இடையர், குழந்தையைப் பற்றி, தங்களுக்கு சொல்லப்பட்டதை, எல்லாருக்கும் அறிவித்தனர் - லூக் 2:17; 2. அதைக்கேட்ட அனைவரும், வியப்படைந்தனர் - லூக் 2:18. 3. ஆனால், மரியாள் இவற்றை உள்ளத்தில் இருத்தி, சிந்தித்தார் - லூக் 2:19; 4. தாங்கள் கண்டவை, கேட்டவைக் குறித்து, இடையர், கடவுளைப் போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே, திரும்பிச் சென்றனர் - லூக் 2:20.

a. மாட்டுத்தொழுவில் நடந்த மூன்றாம் நிகழ்ச்சியில், இடம் பெற்ற ஆட்கள் - ஆட்டிடையர், வானதூதர், மரியாள், யோசேப்பு, இயேசு குழந்தை, மற்றவர். b. இந்நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் : வெட்டவெளி, பெத்லகேம், மாட்டுத்தொழுவம்.

b. வீட்டில்:

  • I. 1. கிழக்கிலிருந்து, மூன்று ஞானிகள், யூதேயாவுக்கு ஏரோது அரசனிடம் வந்தார்கள் - மத் 2:1; 2. யூதரின் அரசன் பிறந்திருப்பதை, விண்மீன் மூலமாக அறிந்தோம் என்று, அவர்கள் அரசனிடம் கூறினர் - மத் 2:2; 3. ஏரோதும், எருசலேம் மக்களும் கலங்கினர் - மத் 2:3; 4. மெசியா எங்கே பிறப்பார் என்று, ஏரோது விசாரித்தான் - மத் 2:4; 5. யூதேயாவிலுள்ள பெத்லேகேமில் பிறப்பார் என்று, மறைநூல் அறிஞர் கூறினர் - மத் 2:5; 6. பின்னர், ஏரோது ஞானிகளிடம், குழந்தையைப் பார்த்துவிட்டு வந்து கூறும்படி சொன்னான் - மத் 2:7,8.
  • II. 1. விண்மீன் வழிகாட்ட, ஞானிகள் தொடர்ந்து சென்றனர் - மத் 2:9,10; 2. இயேசுவின் வீட்டிற்குள் போய், குழந்தையை அதன் தாய் மரியாள் வைத்திருப்பதை அவர்கள் கண்டார்கள் - மத் 2:11; 3. ஞானிகள் குழந்தையை ஆராதித்து, காணிக்கைகள் செலுத்தினர் - மத் 2:11.

a. வீட்டில் நடந்த மூன்றாம் நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்கள் - 1. மூன்று ஞானிகள், 2.ஏரோது மன்னன், 3. எருசலேம் வாழ் மக்கள், 4. மறைநூல் வல்லுநர்கள், 5. இயேசு குழந்தை, 6. தாய் மரியாள் b. முக்கியமான இடங்கள் : கீழ்த்திசை, ஏரோதின் அரண்மனை, மரியாளின் வீடு.

CPM சபையில், கிறிஸ்மஸ் விழா, கிறிஸ்மஸ் அன்றும், முந்திய இரவும் நடைபெறும். மேற்கண்ட கருத்துக்களை தியானிப்பதாக, கிறிஸ்மஸ் விழா அமையும். ஆலயத்தின் ஒரு பகுதியில், பெரிய குடில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மற்றொரு புறத்தில், கிறிஸ்மஸ் மரம், ஒன்றும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

விசுவாசிகள் கிறிஸ்மஸ் ஆராதனையில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு, ஒருவர் ஒருவருக்கு, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள். ஆலயத்தைச் சுற்றி, நட்சத்திர வடிவ விளக்குகளும், தோரணங்களாலான அலங்காரங்களும் இருக்கும். கிறிஸ்மஸ் பலிவிருந்தின் முடிவில், கிறிஸ்மஸ் கேக் வழங்கி, எல்லாரும் தேனீர் அருந்துவர். CPM விசுவாசிகளின் இல்லங்களிலும், இதே அக்களிப்பும், மகிழ்ச்சியும் காணலாம்.

 

My status
இரட்சிப்பு அபிஷேகத் தியானங்கள்
......

புத்தாண்டுப் பெருவிழா - ஜனுவரி 1


 பைபிள் திருச்சபை


 இன்று - சபை


விபூதி புதன்.....குருத்து ஞாயிறு ஆராதனை
......

 திருமறை வகுப்புக்கள்


 சாட்சிகள்


 தின ஊழியங்கள்......புனித வியாழன்..........புனித வெள்ளி.....சிறப்பு சிலுவைப்பாதை


இறந்த ஆத்துமாக்கள் விழா - நவம்பர் 2.....அனைவருடைய மீட்புக்கும் ஈடாக, இயேசு தம் உயிரைக் கொடுத்தார் - மத் 20:28
.....கிறிஸ்து பிறப்பு விழா - டிசம்பர் 25
...........My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com