ஆண்டு ஊழியங்கள்

Yearly Ministries

சிறப்பு கொண்டாட்டங்கள்

 1. CPM சபை ஆண்டுவிழா

கோயில் திருவிழா

ஆதி ஆவிக்குரிய சபையில், தொடக்க காலங்களில், யூத கிறிஸ்தவர்கள், மிகுந்திருந்தனர். எனவே, ஆவிக்குரிய திருச்சபைக்குள், யூத உணர்வுகளும், மிகுந்திருந்தன. எருசலேம் தேவாலயம், ஜெபக்கூடங்கள் என, தாங்கள் கூடி கடவுளை வழிபட, ஓர் இடத்தை, இவர்கள் கொண்டிருந்தார்கள். அங்கே, தேவப்பிரசன்னத்தை, அவர்கள் உணர்ந்தனர்.

A. பைபிளில் கடவுளும் - கோயிலும்

1. நடமாடும் கோயில்

ஆதியில், ஆங்காங்கே பலிபீடங்களைக் கட்டி, முன்னோர் கடவுளைத் தொழுதனர். ஆபிரகாம் - தொ.நூ 12:7, ஈசாக்கு - தொ.நூ 26:25, யாக்கோபு - தொ.நூ 35:1. அங்கே அவர்கள், கடவுளை வழிபட்டதோடு, அந்த இடங்களில், அவருடைய பிரசன்னத்தையும் அனுபவித்தனர்.

இஸ்ராயேல் மக்களுடைய, விடுதலைப் பயணத்தின் போது, சீனாய் மலையில், முதன் முதலில், மக்கள், கடவுளுடைய பிரசன்னத்தை சந்தித்தனர் - வி.ப 19:18. தனக்கென்று, மண்ணால் பீடம் அமைத்து, அங்கே தன்னை வெளிப்படுத்த, கடவுள் இசைந்தார் - வி.ப 20:24. பின்பு, உடன்படிக்கைப் பேழையில், கடவுள் பிரசன்னமானார் - வி.ப 25:21,22. மேலும், அந்தப் பேழையில் வைக்கப்பட்டிருந்த சந்திப்புக் கூடாரத்தில், கடவுள் தம் பிரசன்னத்தை வெளிப்படுத்தினார் - வி.ப 33:9-11.

2. நிரந்தர கோயில்

கானான் தேசத்துக்கு, இஸ்ராயேல் மக்கள் வந்த பின்பு, அரசர்களுடைய ஆட்சி காலம் தொடங்கியது. அப்போது, தாவீதுக்கு மன உறுத்தல் ஒன்று உண்டாயிற்று. அவர் அரண்மனையில் வாழும்போது, கடவுளுடைய பேழை, கூடாரத்தில் இருப்பதை, தாவீது அரசன் விரும்பவில்லை. எனவே அவர், கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட விரும்பினார் - தி.பா 132:1-8. அதை தாவீது, கடவுளுக்கு வெளிப்படுத்தினர். கடவுளும், அதற்கு மனமிசைந்து, தனக்கான ஆலயத்தை, சாலமோன் கட்டட்டும் என்றார் - 2சாமு 7:1-16.

சாலமோன் கட்டிய கோயிலில், கடவுள் தங்கி இருப்பதாக, வாக்குறுதி கொடுத்தார் - 1அர 9:3. அது மட்டுமல்லாது, அந்தக் கோயிலை, கனம் செய்ய வேண்டுமென்றும், அங்கு தங்கியிருக்கும் கடவுளை, இஸ்ராயேல் மக்கள், ஆண்டுக்கு மூன்று முறை வந்து சந்திக்க வேண்டுமென்றும், தனக்கு பல்வேறு திருவிழாக்கள் எடுக்க வேண்டுமென்றும், கடவுள் கட்டளையிட்டார் - வி.ப 23:14-19.

B. இஸ்ராயேலர் வாழ்வில் இறை இல்லத்தின் மகிமை:

சங்கீதக்காரர், இந்த சத்தியத்தை, வெகு சிறப்பாக வெளிப்படுத்தினார். பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற் காவலனாய் இருப்பதே இனிமையானது - தி.பா 84:10. வேறு இடங்களில் வாழும், ஆயிரம் நாட்களிலும், உம் கோயில் முற்றங்களில், தங்கும் நாளே, போதுமானது - தி.பா 84:10. என் ஆன்மா, ஆண்டவரின் கோயில் முற்றங்களுக்காக, ஏங்கித் தவிக்கின்றது - தி.பா 84:2. ஆண்டவரின் கோயிலில் உள்ளவர்களே! நம் கடவுளின் கோயில் முற்றங்களில் உள்ளவர்களே! ஆண்டவரைப் புகழுங்கள் - தி.பா 135:2,3.

C. இயேசுவும் கோயிலும்:

குழந்தை இயேசுவை, பெற்றோர் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்; - லூக் 2:22-24. கோயிலில் தான், இயேசு மெசியா என்று, முதன் முறையாக வெளிப்படுத்தப்பட்டது - லூக் 2:25-35, 36-38. இயேசு ஆண்டுதோறும், எருசலேம் தேவாலயத்தில், பாஸ்கா விழாவுக்கு சென்றார் - லூக் 2:41.

இயேசுவை தேடிய பெற்றோர், அவரைக் கோயிலில் கண்டார்கள் - லூக் 2:46. இயேசு கோயிலில் சென்று, கற்பித்துக் கொண்டிருந்தார் - மத் 21:23. மக்கள் கோயிலில் இயேசுவைத் தேடினார்கள் - யோவா 11:56. எல்லா மக்களும், கோயிலில் இயேசு சொல்வதைக் கேட்க, காலையிலேயே அவரிடம் வருவார்கள் - லூக் 21:38. கோயிலின் தூய்மையை களங்கப்படுத்தியவர்களை, இயேசு கடிந்து கொண்டதோடு, “என் வீடு ஜெப வீடு” என்று நினைவூட்டினார் - மத் 21:12,13.

D. திருத்தூதரும் கோயிலும்:

ஆவிக்காக காத்திருந்த சீடர்கள், கோயிலில் இடைவிடாமல், கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டிருந்தனர் - லூக் 24:53. பெந்தக்கோஸ்து பெருநாளின் நிகழ்ச்சி, கோயிலில் தான் நடந்திருக்க வேண்டும் என்று, வேத அறிஞர்கள் கூறுவர். “இடம்”, “வீடு” - தி.ப 2:1,2 என்று குறிப்பிட்டிருப்பது, கோயிலிலேயே ஒரு பகுதியாகவும், குருக்கள் தங்குமிடமாகவும் கூட இருக்கலாம். காரணம், ஆவியைப் பொழிகின்ற நிகழ்ச்சி, கடவுளுடைய அனாதியின் திட்டம். இந்நிகழ்ச்சி நிறைவேறுவது, ஆலயத்தில் என்றால், அது அதிக கனம் செய்யப்படுகின்றது. அதோடு, உலகெங்கிலுமிருந்து வந்த யூதர்கள், ஆலயத்தில் தான், கூடியிருப்பார்கள். எனவே, பெந்தக்கோஸ்து பொழிதலும், கோயிலில் தான் நடந்திருக்க வேண்டும்.

பேதுருவின் முதல் பெந்தக்கோஸ்து பேருரை, கோயிலில் நடந்தது - தி.ப 2:14-41. பெந்தக்கோஸ்து பொழிதலுக்குப் பின், யோவானும் பேதுருவும், இறை வேண்டலுக்காக, கோயிலுக்குச் சென்றனர் - தி.ப 3:1. கோயிலின் சாலமோன் மண்டபத்தில், பேதுரு அருளுரை ஆற்றினார் - தி.ப 3:11,12. சிறையில் அடைக்கப்பட்ட பேதுரு, கோயிலில் நின்று, மக்களுக்கு கற்பித்தார் - தி.ப 5:25. கோயிலில் ஜெபித்துக்கொண்டிருந்த போது, பவுல் பரவசமானார் - தி.ப 22:17. திருத்தூதர்கள், நாள்தோறும் கோயிலிலும், வீடுகளிலும், தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை, அறிவித்து வந்தார்கள் - தி.ப 5:42.

E. ஆதி ஆவிக்குரிய விசுவாசிகளும், கோயிலும்:

ஆதி ஆவிக்குரிய யூதர்கள், புனிதமாகக் கருதிய எருசலேம் கோயில், கி.பி 70-ல் அழிக்கப்பட்டது. அந்நாட்களிலிருந்து அவர்கள், கடவுளின் பிரசன்னத்தை, விசுவாசிகளின் கூடுகையில் தான், கண்டுணர்ந்தார்கள் - மத் 18:20, தி.ப 4:24-31. எனவே, ஆலயமில்லா ஆதி ஆவிக்குரிய யூதர்களுக்கு, கடவுளை ஆவியிலும், உண்மையிலும் தொழ - யோவா 4:24, திருத்தூதர்கள் கற்றுத் தந்தார்கள்.

தங்களுக்குள்ளே வாசம் செய்யும், தூய ஆவியாரை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். உங்கள் உடல், தூய ஆவி தங்கும் கோயில் - 1கொரி 6:19. வாழும் கடவுளின் கோயில் நாமே - 2கொரி 6:16. கடவுளின் கோயில் தூயது. நீங்களே அக்கோயில் - 1கொரி 3:17. கட்டடம் முழுவதும், இசைவாய் பொருத்தி, ஆண்டவருக்கென்று, தூய கோயிலாக வளர்ச்சி பெறுகிறது - எபே 2:21. ஆக, ஒவ்வொரு ஆவிக்குரிய விசுவாசியும், கடவுளின் கோயில் என்றும், விசுவாசிகளின் கூட்டமே, கடவுளின் கோயில் என்றும், ஆதிசபை உபதேசித்தது.

F. CPM சபையில் - கோயில் திருவிழா:

விசுவாசிகளுக்குள் வாசம் செய்யும், கடவுளை நினைவுகூருவதும், கொண்டாடுவதுமே, CPM பரிசுத்த ஆவி பேராலய விழாவின் நோக்கம்.

விசுவாசிகளுக்கு உள்ளே, வாசம் செய்யும் கடவுளை, வெளியே கண்டு, ஆராதிக்கப் பழகுவதே, கோயில் திருவிழாவின் நிகழ்ச்சிகள். எனவே தான், CPM கோயிலின் பெயர், “பரிசுத்த ஆவி பேராலயம்” என்று அழைக்கப்படுகிறது.

கோயில் விழா நிகழ்ச்சிகள் :

கோயில் ஆண்டு விழா, பத்து நாட்கள் நடைபெறும். பெந்தக்கோஸ்து நாளன்று முடியும் வண்ணமாய், பத்து நாள் ஆவிக்காக காத்திருக்கும் நோக்கத்தோடு, இந்த பத்து நாட்கள் விழா கொண்டாடுகிறோம்.

முதல் இரண்டு நாட்கள், உலக விடுதலை அளிக்கும் இயேசுவை, அனுபவிக்கும் ஆராதனைகள் நடைபெறும். இதில், இருபத்து நான்கு மணி நேர, நற்கருணை ஆராதனையும் அடங்கும்.

தொடர்ந்து ஐந்து நாட்கள், ஆவிக்குரிய வாழ்வை, மையமாகக் கொண்ட, மாபெரும் எழுப்புதல் கன்வென்ஷன் நடைபெறும். இதில், ஆழமான செய்திகள், அற்புத விடுதலை அனுபவங்கள், இறை பிரசன்ன வழிநடத்தல், போன்றவை சிறப்பாக வழங்கப்படும். இவை அனைத்தும், விசுவாசிகள், தங்களுக்குள் வாசம் செய்யும், கடவுளை உணர்ந்து அனுபவிக்கச் செய்வதாய் அமையும்.

ஓன்பதாம் நாள், ஆவிக்குரிய விசுவாசிகளின் “குடும்ப விழா” நடைபெறும். உறவுகளை உருவாக்கி, வளர்க்கும், பல்வேறு சமூக நிகழ்ச்சிகள், இந்நாளில் நடைபெறும். பத்தாம் நாள், பெந்தக்கோஸ்து நாள் அன்று, அற்புத பொழிதல் - ஆராதனை அனுபவங்களோடு, விழா முடிவடையும்.

ஆவிக்குரிய விசுவாசிகளையும், மற்றவர்களையும், ஆண்டுக்கொரு முறை, புதுப்பித்து, புத்துயிர் ஊட்டும் வண்ணம், இவ்விழா நடைபெறுகிறது.

 2. பெற்றோர் தினம் - நவம்பர் 22.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு, இறைவார்த்தையை கற்றுக்கொடுக்க வேண்டும் - இ.ச 6:7. திருச்சட்டத்தை, அவர்கள் பிள்ளைகளுக்கு விளக்கி கொடுக்க வேண்டும் - இ.ச 6:20. நல்வழியில் நடக்க, பெற்றொர் பிள்ளைகளை, பழக்க வேண்டும் - நீமொ 22:6. பெற்றோர் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும் - புல 2:19. பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல், அவர்களை கண்டித்து திருத்தி, வளர்க்க வேண்டும் - எபே 6:4. பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், ஆண்டவரைப் பற்றி, எடுத்துக்கூற வேண்டும் - இ.ச 4:9, 11:19. அறியாத பிள்ளைகளுக்கு, பால்குடி மறக்கும் பருவத்திலிருந்தே, புத்தி சொல்ல வேண்டும் - எசா 28:9, இ.ச 31:13.

பெற்றோருக்கு பிள்ளைகளோ, கடவுள் கருணையுடன் அருளிய கொடை - தொ.நூ 33:5. பிள்ளைகள் பெற்றோருக்கு, வீரனின் கையிலுள்ள அம்புக்கு ஒப்பானவர்கள் - தி.பா 127:4,5. இறையாட்சி, சிறுபிள்ளைகளுக்கு உரியது - மத் 18:4. பிள்ளைகள், தாய் தந்தையை போற்ற வேண்டும் - வி.ப 20:12. பெற்றோரின் நற்பயிற்சியை, பிள்ளைகள் தள்ளிவிடக் கூடாது - நீ.மொ 1:8.

தந்தையை மதிக்கும் பிள்ளைகள், தம் பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொள்கின்றனர் - சீரா 3:3. அன்னையரை மேன்மைப்படுத்துவோர், செல்வம் திரட்டி வைத்திருப்போருக்கு ஒப்பாவார் - சீரா 3:4.

இவ்வாறு, பெற்றோர் - பிள்ளைகள் உறவை, வேதம் போற்றுகின்றது. எனவே, CPM சபையில், ஆவிக்குரிய பெற்றோர் - பிள்ளைகள் உறவை வளர்க்கும், பல ஐக்கிய கூட்டங்களும், பயிற்சிகளும், வழங்கப்படுகின்றன. மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, பெற்றோர் பிள்ளைகளுக்கான, சிறப்பு வழிபாடுகளை நடத்துகிறோம். அவர்களுக்கு, வளர்ச்சிக்கான, வேத சத்தியங்களை அன்று எடுத்துக் கூறி, சபையிலுள்ள ஆவிக்குரிய பெற்றோர் - பிள்ளைகளை, வேதபாதையில் வளர்க்கிறோம்.

மேலும், ஆண்டுக்கு ஒருமுறை, நவம்பர் 22-ம் நாளை, பெற்றோர் - பிள்ளைகள் தினமாக, CPM சபை கொண்டாடுகின்றது.

 3. கிறிஸ்மஸ் மனமகிழ் கீதங்கள்

கிறிஸ்மஸ் கேரல்ஸ்:

கிறிஸ்மசை முன்னிட்டு, பைபிளில் காணும், முதல் கேரல்ஸ், வானவர் பாடியது - லூக் 2:13,14. இந்த முதல் கேரல்சின் நோக்கம், “அமைதியை” கொண்டாடுவது - லூக் 2:14. மீட்பு வரும் பின்னே; அமைதி வரும் முன்னே. இந்த அமைதி யாருக்கு என்றால், கடவுளுக்கு உகந்தவர்களுக்கே - லூக் 2:14. கடவுளுக்கு உகந்தவர்கள் யார் என்றால், கடவுளின் விருப்பத்தின்படி, வாழ்பவர்கள் - தி.ப 13:22.

மக்களுக்கு “மீட்பை” கொடுப்பதற்கு முன்னால், அவர்கள் உள்ளங்களுக்கும், இல்லங்களுக்கும், “அமைதியை” கொடுக்க வேண்டும். வீடு வீடாய் சென்று, இந்த கிறிஸ்மசின் அமைதியை அளிக்க, இயேசு தம் சீடருக்கு கட்டளையிட்டார் - மத் 10:12,13; லூக் 10:5,6.

கடவுள், தேடி வந்து மீட்கிறவர் - வி.ப 3:7,8. இயேசு, சக்கேயுவினுடைய வீட்டைத் தேடி வந்து மீட்டார் - லூக் 19:10. அவ்வண்ணமே, உயிர்த்த இயேசுவும், கலக்கத்தோடும், அச்சத்தோடும் இருந்த சீடரைத் தேடிச் சென்று, “அமைதி” அளித்தார் - யோவா 20:19,26.

அமைதியைக் “கொடுப்பவர்” யார் என்றால், 1. கடவுள் அமைதியைக் கொடுக்கிறார் - பிலி 4:7,9. 2. உயிர்த்த இயேசு, அமைதியை அளிக்கிறார் - யோவா 20:19,26. 3. வானதூதர் அமைதியை அளிக்கிறார் - லூக் 2:13,14. 4. இயேசுவின் ஊழியர்கள், அமைதியை அளிக்கிறார்கள் - லூக் 10:5,6.

எனவே, “கேரல்ஸ் – அமைதியை” ஏந்திச் செல்பவர்கள், கடவுளைப்போல, இயேசுவைப் போல, வானதூதரைப் போல, இயேசுவின் உண்மையான சீடரைப் போல, இறை அமைதியால் நிறைந்து, அதை சுமந்து செல்பவராய் இருக்க வேண்டும்.

கடவுள், கேரல்ஸ் மூலமாக அருளும், இந்த அமைதியை பெற்றுக்கொளபவர் யார்? 1. கடவுளுடைய விருப்பப்படி வாழ்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் இருப்பவர் - தி.ப 13:22 ; 2. அன்றாட பாவ-துன்ப சோதனைகளை வென்று, இறை அன்புக்கு, நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டவர்கள் - மத் 10:13, யாக் 1:12, 3. பவுலின் கருத்துப்படி, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவர்கள் - பிலி 4:7,9.

இந்தக் கருத்தோடு, CPM சபையில், கிறிஸ்மஸ் கேரல்ஸ் அதாவது, கிறிஸ்மஸ் மனமகிழ் கீதங்கள் நடைபெறுகின்றன. CPM சபையின் மூன்று குழுக்கள், இந்த ஊழியத்தை செய்வார்கள். கிறிஸ்மசுக்கும் ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு முன், இந்த கேரல்ஸ் நடைபெறும்.

கிறிஸ்மஸ் கேரல்ஸ்க்கு செல்பவர்களுக்கு, மேற்சொன்ன கருத்துப்படி, பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியைப் பெற்றுக்கொண்டவர்கள், குறிப்பிட்ட நாளிலிருந்து, மாலை சுமார் மூன்று மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவில், கேரல்ஸை முடிப்பார்கள். இந்த கேரல்ஸ் ஏறக்குறைய இருபது நாட்கள் நடைபெறும். இவ்வாறு, CPM சபையார், இறை அமைதியோடு, ஆண்டை முடித்து, கிறிஸ்மஸின் மகிழ்ச்சியோடு, “புத்தாண்டை” ஆரம்பிக்கிறார்கள்.

 4. கிறிஸ்மஸ் வாரக் கொண்டாட்டங்கள்:

பைபிளில், மூன்று கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைக் காண்கிறோம். 1. வானதூதர் கொண்டாடிய, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - லூக் 2:13,14. 2. ஆட்டிடையர் கொண்டாடிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - லூக் 2:20. 3. மூன்று ஞானிகள் கொண்டாடிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - மத் 2:9-11.

 1. வானதூதரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - லூக் 2:13,14.

1. கடவுளை துதித்து ஆராதிப்பது, 2. அமைதி அளிப்பது, 3. யாருக்கு அமைதி என்று, நற்செய்தி அறிவிப்பது, ஆகிய மூன்று அம்சங்கள், இந்தக் கொண்டாட்டத்தில் இருந்தன.

 2. இடையர்களின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - லூக் 2:20.

1. கடவுளை துதித்து ஆராதிப்பது, 2. கேட்ட, கண்டவற்றுக்கு சான்று பகர்வது, 3. பாடுவது, ஆகிய மூன்று நிகழ்ச்சிகளை, இவர்களுடைய கொண்டாட்டத்தில் காண்கிறோம்.

 3. மூன்று ஞானிகளின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் - மத் 2:9-11.

1. தெண்டனிட்டு ஆராதிப்பது, 2. விண்மீன் வழிகாட்டுதல், 3. காணிக்கை வழிபாடு, 4. மட்டில்லா மகிழ்ச்சி.

பைபிளில், நாம் காணம் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில், ஸ்தோத்திர ஆராதனை, அமைதி, மகிழ்ச்சி, நற்செய்தி, சாட்சி, காணிக்கை, பாடல், விண்ணின் வழிகாட்டல், போன்றவை நிறைந்திருந்தன.

அவ்வண்ணமே, CPM கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும், மேற்சொன்ன அத்தனை காரியங்களையும், நிறைவாகத் தருகிறோம். கிறிஸ்மஸ் கொண்டாட்டம், ஐந்து நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளையும், ஒரு குழு பொறுப்பேற்று நடத்தும். இந்த குழு, இரண்டு மாதங்களுக்கு முன்னே, பணி செய்ய ஆரம்பிக்கும். இந்தக் குழுவில், இயேசுவின் நண்பர் சபையினர், வாலிபர் ஐக்கியங்கள், பீடச்சிறுவர் பேரணி, மிஷன் மேய்ப்பர்கள், போன்றோர், இணைந்து செயலாற்றுவர்.

பொதுக்கூட்டம், செய்திகள் வழங்கல், கலை நிகழ்ச்சிகள், கிறிஸ்மஸ் லேலச்சந்தை, கிறிஸ்மஸ் குலுக்கல் பரிசு, கிறிஸ்மஸ் சிற்றுண்டி, போன்ற பல நிகழ்ச்சிகள், இதில் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், மேற்சொன்ன குழுக்களே. இங்கே, கிறிஸ்மஸ் அன்பு, ஐக்கியம், மகிழ்ச்சி, ஈடுபாடு என, எல்லா ஆவிக்குரிய தன்மைகளும், ஒருங்கே செயலாற்றுவதைக் காணலாம். இந்த கிறிஸ்மஸ் காலத்தின், ஐந்து நாட்கள் கொண்டாட்டத்தில், எல்லா நாட்களிலும், CPM விசுவாசிகள், குடும்பங்களாக வந்து, பங்கு கொள்வார்கள்.

நாள் : கிறிஸ்மஸ் முடிந்து, ஐந்து நாட்கள்.

இடம் : CPM பரிசுத்த ஆவி பேராலயம்

நேரம் : மாலை 5 - இரவு 9 மணி.


 

My status









......

 தாபோர் தியானம்


 சீனாய் மலை தியானம்








மனம் திரும்புதலுக்கான அழைப்பு


.....


பாவமன்னிப்பின் வழிநடத்தல்


பாவ பொறுத்தல் வேண்டி ஜெபம்


 சபை வரலாறு


 திருவருட்சாதனங்கள்


அபிஷேகத்திற்கான அழைப்பு


.....



அபிஷேக ஜெபம் - 1


 பைபிள் விளக்கம்


 நல்லவரோடு கடவுள்


“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29




......



அபிஷேக ஜெபம் - 2


.....




......




 கி.மு கி.பி



 ஆவிக்குரிய திருமணம்


அனைவருடைய மீட்புக்கும் ஈடாக, இயேசு தம் உயிரைக் கொடுத்தார் - மத் 20:28

.....



.....










My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com